எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது எனினும் குழந்தைகளிடம் காணும் ஒரு குணம் என்னிடமும் உண்டு. அதுதான் வன்முறையை ரசிப்பது. நீங்கள் கவனித்திருக்கலாம், எந்தத் தயக்கமும் இல்லாமல் குழந்தைகள் வன்முறையைக் கைகொட்டி ரசிப்பதை. நம்மால் எது முடியவில்லையோ அதைத்தானே ரசிக்கிறோம்? நான் என்னளவில் ஒரு எறும்பைக் கொல்வதைக் கூட பாபம் என எண்ணுபவன். வீட்டில் நுழையும் பூரானைக் கூட அடிக்காமல் தூக்கி வெளியே போட முடியுமா என்றே யோசிப்பேன். அப்படிப்பட்ட எனக்கு வன்முறையில் வாழும் தாதாக்களை ரொம்பப் பிடிக்கும். சின்ன வயதில் சண்டைப் படம் என்றால் மட்டுமே பார்ப்பேன். சண்டை இல்லாவிட்டால் அந்தப் படத்துக்குப் போக மாட்டேன். அதனாலேயே எனக்கு சிவாஜி படம் பிடிக்காது. எம்ஜியார் பிடிக்கும். WWF-ஐயும் ரொம்ப விரும்பியே பார்ப்பேன். வெட்டுக் குத்தில் ஈடுபடும் ரவுடிகள், தாதாக்களின் கதைகளை விரும்பித் தேடிப் படிப்பேன். உயிர்மை, காலச்சுவடுவை விட ஜூனியர் விகடன் என்றால் இஷ்டம்தான். அதில்தானே வெட்டுக் குத்து அதிகம். இப்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகைகள் ரொம்ப ’டல்’லடிக்கின்றன. முன்பெல்லாம் கொல்லிப்பாவையில் இலக்கியவாதிகள் ரவுசு கட்டி அடிப்பார்கள். இப்போது முகநூல்தான் அதையெல்லாம் முன்னெடுத்துச் செல்கிறது என்பதில் எனக்கு சந்தோஷமே.
மேற்கண்ட பின்னணியில்தான் எனக்கு ஊடக தாதாக்களின் மீது ஆர்வம் ஏற்பட்டதும். முன்னாளில் ரபி பெர்னார்ட். பின்னர் அவர் ஒரு அரசியல்வாதியிடம் அடைக்கலம் ஆன பிறகு அவர் மீது ஈடுபாடு போய் விட்டது. தற்சமயம் அர்னாப் கோஸ்வாமி தான் என் ஹீரோ. அவரைப் போன்ற தாதாவை நீங்கள் சினிமாவில் கூடப் பார்க்க முடியாது. ஆனால் ரியல் தாதாக்களுக்கும் இந்த ஊடக தாதாக்களுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் என்னவென்றால், ரியல் தாதா எதிரியின் கழுத்தைக் கத்தியால் அறுத்து குருதியில் குளிப்பான். ஆனால் ஊடக தாதா அப்படியெல்லாம் நேரடி வன்முறையில் இறங்க மாட்டார். பிறகு எப்படிப்பட்ட வன்முறை? ஒரு மணி நேர விவாதத்தில் 95 நிமிடம் தானே பேசிக் கொண்டிருப்பது; எதிராளியின் பலஹீனமான பகுதியில் தாக்கி விட்டு விளம்பர இடைவேளை கொடுப்பது; கன்னாபின்னா என்று உளறி எதிராளியையும் கன்னாபின்னா என்று உளற வைப்பது, இன்னபிற.
இந்த வகையில் அர்னாப் கோஸ்வாமிக்கு நிகரான ஊடக தாதா தமிழ்நாட்டில் யார் எனத் தேடிக் கொண்டிருந்த போதுதான் ரங்கராஜ் பாண்டேயின் பெயர் தென்பட்டது. மூதறிஞர் கி. வீரமணியையே விவாதத்தில் தோற்கடித்தவர் என்றதும் அந்தக் கணமே நான் பாண்டேயின் ரசிகனாகி விட்டேன். இந்த நிலையில்தான் சென்ற வாரம் ஒருநாள் தந்தி டிவியிலிருந்து அழைப்பு வந்தது. ஆபாச இணைய தளங்கள் தடை பற்றி கருத்து கேட்டார்கள். விலாவாரியாக சொன்னேன். பிறகு ஒரு மணி நேரம் கழித்து அன்றைய விவாதத்தில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டார்கள். அப்போதுதான் எனக்கு அதற்கு முன்பு என்னோடு பேசியது ’வேலைக்கு ஆள் எடுக்கும்’ இண்டர்வியூ என்று தெரிந்தது. அதாவது, இந்த ஆள் என்ன பேசுவார், எப்படிப் பேசுவார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நடக்கும் பேச்சு அது. அன்றைய தினம் என் வீட்டில் மரணத்தை விட கொடூரமான ஒரு துக்கம் நிகழ்ந்திருந்தது. (பப்புவின் நான்கு கால்களின் பந்து கிண்ண மூட்டிலும் எலும்புத் தேய்வு. வலது பின்னங்கால் பாம்பைப் போல் வளைந்து நெளிந்து நடக்க முடியாமல் ஆகி விட்டது. மனிதர்கள் என்றால் சக்கர நாற்காலி ஏற்கலாம்; நாய் என்ன செய்யும்? அடா புடா என்று காற்றில் பறந்து கொண்டிருந்த பப்பு படுத்து விட்டது. மலஜலத்துக்குக் கூட தூக்கிக் கொண்டு தான் போக வேண்டும். ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன். நானோ பளு தூக்கக் கூடாது. என்ன செய்வது? அவந்திகாவுக்கு 30, 35 தடவை லூஸ் மோஷன். அதோடு (பப்புவைத் தூக்கும் போது) தேக்கு மர நாற்காலியில் முகம் இடித்து முகம் பூராவும் காயம். ஆனால் தந்தி டிவியிலிருந்து மீண்டும் மீண்டும் அழைப்பு. அதற்கு மேலும் மறுக்க மனம் இடம் தராததற்குக் காரணம், ரங்கராஜ் பாண்டேதான். அவரைப் போலெல்லாம் ஊடக தாதாவாக ஆக முடியாவிட்டாலும், இப்படி அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் தலையைக் காட்டினால் ஒரு லிட்டில் தாதாவாகவாவது ஆக முடியாதா என்ற நப்பாசையில்தான் ஒப்புக் கொண்டேன்.
ம்ஹும். சான்ஸே இல்லை. பாண்டே என்னைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டார். ஒன்றரை மணி நேர விவாதம். முதல் ஒரு மணி நேரத்தில் பத்து நிமிடம் விளம்பரம். ஐம்பது நிமிடத்தில் பாண்டே ஒரு நாற்பது நிமிடம் பேசினார். மீதி பத்தில் நான்கு பேர் ஆளுக்கு இரண்டரை நிமிடம் பேசினர். எல்லாமே காமன்மேன் தளம். ஒரு மணி நேரம் முடிந்து விளம்பரம் வந்ததும் பாண்டே நீங்கள் ஏன் சாரு பேசவே இல்லை என்றார். எனக்கு வாய்ப்பு அளித்தால்தானே பேச முடியும்? மேலும், உங்களைப் பற்றிப் பெரிதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் விவாதம் சராசரிக்கும் கீழாக இருக்கிறது. நான் எதுவும் பேசவில்லை; set property-ஆகவே இருந்து கொள்கிறேன் என்றேன். பாண்டேயின் முகம் சுருங்கியது. விளம்பரம் முடிந்ததும் என்னிடம் உடனே வந்தார் பாண்டே. ஒரு புள்ளி விபரம் சொல்கிறது; இந்தியாவை விட அமெரிக்காவில்தான் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகம். என்ன சொல்கிறீர்கள் என்றார். இதுதான் தாதா அஸால்ட். கழுத்தில் அரிவாளை வைத்து அறுக்காமல் புள்ளி விபரம் என்ற இரும்புத் தடியால் புடுக்கைத் தாக்குவது. நிலைகுலைந்து போனேன். மே மே என்று கத்தினேன். அடுத்த குண்டாந்தடியை இறக்கினார். ”ஒரு பேட்டியில் ’உங்களுக்கு விஸ்கி பிடிக்குமா, பிராந்தி பிடிக்குமா?’ என்று கேட்ட போது ’எனக்கு பிராந்தி பிடிக்கும்’ என்று பதில் சொன்னீர்கள். ஏன் பிராந்தி பிடிக்கும் என்பதற்கு நீங்கள் சொன்ன பதிலை இங்கே பொது இடத்தில் நான் சொல்ல விரும்பவில்லை; பல லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிகையில் இப்படி பதில் சொன்னீர்களே, உங்களுக்கு சமூகப் பொறுப்புணர்ச்சி இருக்கிறதா?” இதுதான் என் இடுப்புக்குக் கீழே பாண்டே போட்ட இரும்புத் தடி அடி. எனக்கு அது ஒன்றும் ஞாபகமே இல்லை. பிராந்தி ஏன் பிடிக்கும்? என்ன உளறுகிறார் இந்த தாதா? நாம் எப்போது அப்படிப் பதில் சொன்னோம்? எல்லாம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும் போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. விகடன் நையாண்டி கேள்வி பதிலில் அப்படி ஒரு கேள்வி கேட்ட போது அப்படிச் சொன்னேன். அடப் பாவி! நையாண்டியாக அப்படிக் கேள்வி கேட்டால் பிறகு எப்படி ஒருத்தன் பதில் சொல்வான்? பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கிண்டலாக சொன்னதை வைத்து அடிக்கிறாரே? சே… தாதா என்றால் அப்படித்தான். அதுவும் நான் அவரை சராசரிக்கும் கீழே என்றும் உங்கள் விவாதம் பாமரத்தனமாக இருக்கிறது என்றும் சொன்னால் அவர் தான் என்ன செய்வார் பாவம்?
இனிமேலும் தந்தி டிவியில் கூப்பிட்டால் போய் செட் ப்ராப்பர்ட்டியாக இருந்து விட்டு வரலாம் என்றுதான் இருக்கிறேன். அப்படியாவது நாம் ஒரு லிட்டில் தாதாவாக ஆக முடிகிறதா என்று பார்ப்போமே?