நான் ரங்கராஜ் பாண்டேயின் ரசிகன் (2)

ராஜ் சிவா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவருடைய முகநூலில் கண்டுள்ள பின்வரும் விவாதம் உங்கள் பார்வைக்கு.

ராஜ் சிவா:

நேற்று ஆபாச இணையத்தளங்களத் தடைசெய்வதுபற்றித் தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் சாரு நிவேதிதா கலந்து கொண்டார். அவர் தனது கருத்துகளைச் சொல்லும்போது, ஐரோப்பிய நாடுகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆபாச வலைத்தளங்களைப் பார்க்கவே முடியாது. அதற்கான தொழில்நுட்பங்கள் அங்கு நடைமுறையில் உள்ளன. அதுபோல ஒரு தொழில்நுட்பத்தை இங்கும் கொண்டுவரலாம் என்றார்.

சாரு சொன்னது நூறுசதவீதம் சரியான தகவல்தான். ஐரோப்பாவில் ஆபாசத் தளங்களைச் சிறுவர்கள் பார்ப்பதற்கு வலிமையான தடைகள் இங்கிருக்கின்றன. ஆனால், சாரு முன்வைத்த கருத்துகளை எதிர்ப்பதற்காக ரங்கராஜன் பாண்டே வைத்த ஒரு கருத்து மிகவும் பலவீனமானதாக இருந்தது. அவர் சொன்னது இதுதான்.”இப்போதெல்லாம் நம் மொபைல் ஃபோன்களூடாக இணையத்தளங்களுக்குச் செல்லும் வசதிகள் உள்ளன. அந்த மொபைல் ஃபோன்களைச் சிறுவர்களான எங்கள் பிள்ளைகள் எடுத்துப் பயன்படுத்துகிறார்கள். அப்போது அவர்கள் இந்த ஆபாசத் தளங்களுக்குச் செல்லும் அபாயம் உண்டு அல்லவா?” என்றார் ரங்கராஜ் பாண்டே.அதற்குச் சாரு, “மொபைல் ஃபோன்களைக் குழந்தைகளிடம் ஏன் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பது தப்பு” என்று பல தடவைகள் சொல்லியும் பாண்டே அதை ஏற்றுக்கொள்ளவேயில்லை. கொடுப்பதுதான் சரி. கொடுக்க வேண்டியது நம் கடமை என்பதுபோலப் பேசிக்கொண்டிருந்தார்.

பாண்டே மட்டுமல்ல, நம்மிடத்தில் பெரும்பாண்மையான பெற்றோர்களிடம் குழந்தைகளிடம் மொபைல் ஃபோன்களைக் கொடுப்பது தப்பேயில்லை என்ற எண்ணமுண்டு. சில பெற்றோர்கள் ஒருபடி மேலே போய், “தங்கள் குழந்தைகள் மொபைல் ஃபோனைப் பயன்படுத்தும் லாகவத்தைக் கண்டு, தங்களுக்கு அப்துல் கலாம் போன்று ஒரு எஞ்சினியர் பிறந்துவிட்டான் என்று பெருமைப்படுவதும் உண்டு.

உண்மையில் சிறுவர்கள் கைகளில் கொடுக்கப்படவே கூடாத பொருள் இந்த ஸ்மார்ட்ஃபோன். ஒரு பேச்சுக்கு பாண்டே சொன்னதுபோல, ஆபாசத் தளங்களையெல்லாம் நீக்கிவிட்டால், குழந்தைகளிடம் இணையத்தளம் உள்ள மொபைல்ஃபோனைக் கொடுக்கலாமா? கட்டுப்படுத்தப்படாத இணையத்தளத்துக்கு சிறுவர்கள் செல்வது எவ்வளவு அபாயம் தெரியுமா? ஆபாசம் மட்டும்தான் குழந்தைகளுக்கு ஆபத்தானதா?

யூட்யூப்பில் மனிதனின் கழுத்தைக் கத்தியால், கோழியை அறுப்பதுபோல அறுக்கும் காட்சிகள் எத்தனை இருக்கின்றன தெரியுமா? அவற்றை அந்தச் சிறுவன் பார்ப்பது, ஆபாசத்தளதைப் பார்ப்பதைவிடக் கொடூரமானது.

பெற்றோர்களே! உங்கள் வீட்டுக் கணணியில் கூட, குழந்தைகள் சிறுவர் கார்ட்டூன்களைத் தானாகவே யூட்யூப்பைக் கிளிக் செய்து சமர்த்தாப் பார்க்கிறது என்று மற்றவர்களிடம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். குழந்தைகள் இளவயதில் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வது நல்லதுதான். ஆனால் அந்த வேளைகளில் எப்போதும் பெரியவர்களில் யாராவது ஒருவர் கண்காணித்துக்கொண்டிருப்பது மிகமுக்கியம். அல்லது உங்கள் கணணியை 16 வயதுக்கு மேற்படாதவர்கள் செல்லக் கூடாத இணையத்தளங்களுக்கு, புக முடியாதபடி தடையமைப்புப் போட்டு வைத்திருங்கள்.

……………..

கணேஷ் காஞ்சி: 18 வயது நிரம்பியவன் என்று எப்படி நிருபிக்க முடியும்? If you under18னு கேள்வி வந்தா noனு போட்டுட்டு போய்ட்டே இருப்பாங்க…வேறு ஏதாவது வழி இருக்கா ஐயா

Raj Siva: அந்தக் கேள்வியுடன் அது முடிந்துவிடுவதில்லை. அதை no என்று போட்டு அதன்பின்னர் உங்கள் ஐபி அட்ரஸ் அவர்களால் குறித்து வைக்கப்படும். அவர்களிடமிருந்து தொடர்ச்சியாக ஈமெயில்களுடன் அழைப்புகள் வர ஆரம்பிக்கும்.
கணேஷ் காஞ்சி: சார் மெயில் ஐடி கேடகாத வெப்சைட்டுகள் தான் நிறைய …இன்னும் சொல்லப்போனால் if you under 18 கேள்வியை கேட்காத வெப்சைட்டுகள் இன்னும் அதிகம்.
Raj Siva: தம்பி, அப்படிக் கேட்காத தளங்களைக் கேட்க வைக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதுதானே கோரிக்கையே! தடையைவிட ஒரு கட்டுப்பாட்டுகுள் கொண்டுவரும் முறை.
…………..

Jega Jegatheesan: Child lock செய்து பாஸ்வேர்ட் ப்ரொடக்ட் ஆக டேப்ளட் தந்திருக்கிறேன். தற்றதுக்கு முன்னாடி எல்லா வழியிலும் செக் பண்ணி பாத்துட்டேன். தேவையெல்லாம் தனிப்பட்ட ரெஸ்பான்ஸிபிளிட்டிதான்

Raj Siva: இதுதான் முறை.
…………………

அ.மார்க்ஸ்: நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இணைய வசதி மட்டும்தான் மொபைல் போனா? வேறு பல வசதிகளும் அதில் இருக்கின்றன. ஆபாசப் படங்கள் தவிர அந்த அளவிற்கு ஆபத்தில்லாத வேறு பல கவர்ச்சிகரமான அம்சங்களும் வசதிகளும் அதில் உள்ளன. நாம் அருகில் அமர்ந்து அதைப் பயன் படுத்துகிறோம். இப்போதெல்லாம் பள்ளிகளில் ‘home work’ என்ன என்பதை செல்போனில் மெசேஜாகத்தான் அனுப்புகின்றனர். எப்படிப் பிள்ளைகளை இதன் அருகாமையிலிருந்து அகற்றுவது? நான் ஆபாச வெப் சைட் தடையை ஆதரிக்கவில்லை. உங்களின் பதிவு மிகவும் பொறுப்புடன் பதியப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கிறேன். இருந்தாலும் இந்த நடைமுறைச் சிக்கல்களும் உள்ளன என்பதுதான்..

நிச்சயமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இப்படியான ஆபாசப் படங்கள், காட்சிகளைப் பார்ப்பதை ஏற்க முடியாது. இது குறித்து நாம் மிகவும் ஆழமாக யோசிக்க வேண்டும். குழந்தைகளுக்கும் செல் போன்களுக்கும் உள்ள அணுக்கத்தை பெற்றோர்கள் மட்டுமே முன்நின்று தடுத்துவிட முடியுமா? கடந்த 20 ஆண்டுகளில் உலகம் பெரிய அளவில் மாறிவிட்டது. பிள்ளைகள் ப்ராஜெக்ட் ஒர்க் நிறையச் செய்ய வேண்டி இருக்கு. இணையங்களை அவர்கள் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டியிருக்கு. ஆனால் நிச்சயமாக் இவற்றின் ஆபத்துகளைக் கருதி இவற்றைக் கட்டுப்படுத்தும் , அதாவது தடை செய்யும் அதிகாரத்தை நாம் அரசுக்குத் தரவே முடியாது. ஒரே ஒரு வகையில் நாம் திருப்திப் படுத்திக் கொள்ல வேண்டியதுதான். இன்றைய ஸ்மார்ட் போன்களை நம்மைக் காட்டிலும் நமது பிள்ளைகள். பேரக் குழந்தைகள் மிகவும் லாவகமாகக் கையாளுகிறார்கள். ஏனெனில் நமது மூளையும் செயல்திறனும் பழைய லாஜிக்கிற்குப் பழக்கப்பட்டவை. அவை இன்றைய புதிய இந்த ‘டச்’ லாஜிக்கிற்கு முரணானவை. நமது பழைய சுமை இந்தப் புதிய டச் லாஜிக்கைப் பயன்படுத்தும்போது சற்று சிக்கல்கிளை ஏற்படுத்துகிறது. இன்றைய குழந்தைகள் பிறக்கும்போதே டச் லாஜிக்குக்குப் பழக்கமாகி விடுகிறார்கள். இதன் சிக்கல்களி நம்மைக் காட்டிலும் திறமையாக எதிர் கொள்கின்றனர். இதை இன்னொரு தளத்திலும் பொருத்திப் பார்க்கலாம். புதிய சூழல்களால் உருவாகும் வாழ்க்கைச் சிக்கல்களையும் நம்முடைய தலைமுறையைக் காட்டிலும் நமக்கு அடுத்தடுத்த தலை முறைகள் இன்னும் பக்குவமாகக் கையாள்வர். எடுத்துக்காட்டாகக் காதல் தோல்வி என்பதை முந்தைய தலைமுறைகள் எதிர்கொண்டதற்கும் இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்வதற்கும் நிறைய வேறுபாடுகல் உள்ளன. நம்முடைய தலைமுறையினர் இது குறித்துக் கொண்ட அச்சத்தின் அடிப்படியிலேயே இதை நாம் எதிர்கொள்ளத் தேவையில்லை. இன்றைய தலைமுறையினர் காதல் தோல்வி அல்லது முறிந்த திருமணங்கள் முதலானவற்றை இன்னும் தைரியமாகவும், திறமையாகவும் எதிர்கொள்பவர்களாக வே உள்ளனர்.அதற்காக நாம் இது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை என்கிற பொருளில் இதை நான் சொல்லவில்லை. ஆனால் இதையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

இன்னொன்றையும்நாம் கவனிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை வெறுமனே செல்போன் அல்லது வெப் சைட் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் இதை ஒரு adolescent பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும். இந்த வயதில் இப்படி நடக்கும்தான். எங்கள் காலத்தில் இது செக்ஸ் புக் என்கிற மட்டதில் இருந்தது. கல்லூரி விடுதிகளில் சர்வ சாதாரணமாக இந்தப் புத்தகங்கள் சுற்றில் இருக்கும். பிட் ப்[ஓடும் திரைப்படங்கள் இப்படியெல்லாம் இருக்கத்தான் செய்தன. இன்றைக்கு அதன் சாத்தியங்கள் கூடுதலாக உள்ளது என்பதை மறுப் பதற்கில்லை. ஆனால் இப்படித் தடை செய்வது என்பதெல்லாம் அதற்கு வழிமுறைகள் அல்ல. ‘ஆபாசம்’ என்பதற்கு முறையான வரையறை இல்லாதபோது அரசு இதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும். செல்போன்களை 18 வயது வரை பயன்படுத்தக்கூடாது எனப் பிள்ளைகளைத் தடுப்பதும் நடைமுறைச் சாத்தியமில்லை என்றுதான் கருதுகிறேன். இது குறித்த விழிப்புணர்வை பெரிய அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்துவது, பள்ளி கல்லூரிகளில் பாலியல் கல்வி சொல்லித் தருவது ஆகிய திசையில்தான் நாம் சிந்தித்தாக வேண்டும்.

Raj Siva: உங்கள் ஆழமான பார்வையுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி சார். Marx Anthonisamy

அ.மார்க்ஸ்: போர்ன் வெப் சைட்களைத் தடை செய்வது குறித்து முழு விவரங்களும் தெளிவாகத் தெரியவில்லை. குழந்தைகளைப் பயன்படுத்தும் ஆபாசப் படங்களைத் தடை செய்வது என்பதாக மட்டும் உள்ளதா, இல்லைஎந்த வரையறைகளும் இல்லாமல் ‘ஆபாசப் படங்கள்’ எனச் சொல்கிறார்களா என்பதையும் நுணுக்கமாகப் பார்க்க வேண்டி இருக்கிறது.