லிங்காத்தாள் குட்டை சந்திப்பு (2)

இது பற்றி நான் முன்பு எழுதியிருந்ததில் பண விஷயம் பற்றியும் குறிப்பிட்டிருந்ததால் அதுவே பிரதான விஷயமாக மாறி விட்டது.  இப்படி மாறும் என்று எதிர்பார்த்தே அதை எழுதலாமா விடலாமா என்று நீண்ட நேரம் யோசித்தேன்.  பிரதான விஷயம் அதுவல்ல.  நான் என்றுமே பணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் அல்ல என்பதை நண்பர்கள் அறிவர்.  எல்லோரும் அறிய வேண்டும் என நான் எதிர்பார்த்தது என்னவெனில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் என்னிடம் வந்து விவாதித்து விட முடியும் என்ற அராஜக மனப்போக்கு பற்றித்தான்.  அந்த இளைஞர் என்னிடம் வந்து தாறுமாறாக உளறிக் கொட்டிக் கொண்டிருந்த சமயத்தில் விஜயராகவன் அவ்விடத்தில் இல்லை.  ஒரு இயற்பியல் விஞ்ஞானியிடம் போய் அஞ்சாங்கிளாஸ் மாணவன் ஒருவன் சரிசமமாக அமர்ந்து இயற்பியல் குறித்து விவாதிப்பானா?  தன் சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெறலாமே ஒழிய விவாதம் செய்ய அமரலாமா?  அதுவும் அது பற்றி நான் எழுதியவற்றை எதுவும் படிக்காமல்?  இந்த அசட்டுத் துணிச்சல் அந்த இளைஞனுக்கு ஜெயமோகனிடம் வருமா?  அவரிடம் மட்டும் போய் முன்னாலும் பின்னாலும் பொத்திக் கொண்டு அவர் பேசுவதைக் கேட்கிறீர்கள் அல்லவா? இதனால் ஜெயமோகனிடம் விவாதமே சாத்தியமில்லை என்று நான் சொல்லவில்லை.  ஒரு துறை பற்றி ஆய்வு செய்திருக்கும் அறிஞனிடம் போய் உங்கள் அசட்டுப் பேச்சை வைத்து விவாதம் செய்வீர்களா என்பதை மட்டுமே முன்வைத்தேன்.  மேலும், இது சம்பந்தமாக அந்த இளைஞர் மீது எந்தத் தவறும் இல்லை.  இவர்களிடம் போய் பேச அமர்ந்தது என் தவறு மட்டுமே.  நீங்களெல்லாம் மகாபாரதம் படித்து ரசித்து ருசிக்க மட்டுமே தகுதி உடையவர்கள்.  மற்றபடி எந்த ஒரு சிறிய விஷயத்தைப் பற்றிக் கூட உங்களால் உங்கள் சுயசிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்து முடிவு செய்யக் கூடிய அறிதிறனோ புத்தியோ இது போன்ற ஆட்டு மந்தை இளைஞர்களிடம் கிடையாது.  நான் விஜயராகவன் போன்ற மூத்த படிப்பாளிகளைப் பற்றிப் பேசவில்லை.  ஒரு எழுத்தாளனை வெறும் பீட்ஸா செய்பவனாக மட்டுமே கண்டு அவனிடமிருந்து எந்த ஞானத்தையும், அறிதல் முறையையும் கற்றுக் கொள்ளாமல் வெறும் நுகர்வோனாக மட்டுமே ஆகி விடும் அந்த இளைஞரைப் போன்றவர்களையே இங்கே குறிப்பிடுகிறேன்.  அப்படிப்பட்டவர்களுக்கு மஹாபாரதம் வெறும் பீட்ஸா மட்டுமே.  நல்ல ருசியான பீட்ஸா.

ஒருவகையில் லிங்காத்தாள் குட்டை சந்திப்பு என் வாழ்நாளில் மறக்க இயலாதது.  யார் யாரோ எந்தெந்த இடங்களிலிருந்தோ என் எழுத்தை வெகு சிரத்தையுடன் வாசித்து வருகிறார்கள் என்பதை அந்தச் சந்திப்பின் மூலமாக மட்டுமே அறிந்தேன்.  சில வாசகர்கள் கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்தார்கள்.  மற்றும் ஒரே ஊரிலிருந்து பத்து இளைஞர்கள் வந்திருந்தார்கள்.  அவர்களுடனான உரையாடல் எனக்கு மிகுந்த மனவெழுச்சியை ஏற்படுத்தியது.   யார் மனதையும் நோகச் செய்வது என் நோக்கம் அல்ல.  விஜயராகவன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறேன்.  கண்டபடி உளறுவதற்கெல்லாம் சாருவா கிடைத்தான்?  அரை மணி நேரம் அந்த இளைஞரின் உளறலுக்குப் பதில் சொல்லி கடுமையாக விவாதம் செய்ததால் எனக்கு நெஞ்சு வலி வந்தது என்பதாலேயே இதை எழுதினேன்.

இனிமேல் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களைத் தவிர வேறு யாரையும் சந்தித்து உரையாட மாட்டேன். கவனிக்கவும்.  சந்தித்து உரையாட மாட்டேன்.   காரணம் வேறொன்றுமில்லை.   என் உடலில் அதற்கான வலு இல்லை.    இன்னொரு காரணம், இது போன்ற ஆட்களுடன் உரையாடும் போது நீங்களும் உங்கள் இடத்திலிருந்து ஒரு மில்லி மீட்டர் கூட நகர்ந்திருக்க மாட்டீர்கள்.  அதே நிலையில்தான் அவரும் ஒரு மில்லி மீட்டர் கூட நகர்ந்திருக்க மாட்டார்.  அப்புறம் என்ன வெங்காயத்துக்கு அந்த உரையாடல்?