ஜெயமோகனின் அறம்

சாரு,

எம் வி வெங்கட்ராம் குறித்த கட்டுரை அருமை .ஒரு தகவல் விடுபட்டிருந்தது .எம் வி வெங்கட்ராம் தான் ஜெயமோகனின் அறம் சிறுகதையின் நாயகன் என எண்ணுகிறேன் .நீங்கள் எதையும் இருட்டடிப்பு செய்பவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்த விஷயம் உங்கள் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது ஒரு விதமான உயர் உன்மத்த நிலையில் அந்த கட்டுரையை எழுதிய போது விடு பட்டிருக்கலாம் . எனவே தான் இந்த மின்னஞ்சல் .இம்சை செய்யவில்லை என்று எண்ணுகிறேன்.

நன்றி.

அனிஷ் க்ருஷ்ணன் நாயர்.

தற்சமயம் தினமணி இணையத்தில் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்களுக்காக நம்முடைய முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளைத் தவிர வேறு எதையும் படிப்பதில்லை என்று இருக்கிறேன்.  எவ்வளவு படித்தாலும் தீராத பக்கங்களை எழுதியிருக்கிறார்கள்.  இந்த நிலையில் எம்.வி. வெங்கட்ராம் என்றதும் ஜெயமோகனின் அறம் தொகுதியை எடுத்தேன்.  பழுப்பு நிறப் பக்கங்கள் தொடர் முடிந்ததும் முதல் வேலையாகப் படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் நூல்.  அதில் அறம் என்ற முதல் கதையை மட்டும் படித்தேன்.

தமிழ் எழுத்தாளன் எப்படி வாழ்கிறான் என்பது குறித்த ஆவணம்.  எம்.வி. வெங்கட்ராமின் வாழ்க்கைச் சரிதம் பத்துப் பனிரண்டு பக்கங்களில்.  படித்த போது என் கைகால்கள் நடுங்கி விட்டன.  வழக்கமான ஜெயமோகன் எழுத்து அல்ல இது.  இதே கதையைத்தான் நான் பல ஆண்டுகளாக எழுதி வந்திருக்கிறேன்.  ஆனால் என் கதையை நானே சொன்னால் எடுக்காது.  எனக்கும் 85 வயது ஆகி, காது கேளாமல் போய், ஜெயமோகனைப் போல் இன்னொரு வலுவான எழுத்தாளன் வந்து என் கதையைக் கேட்டிருந்தால் இப்படித்தான் சொல்லியிருப்பேன்.  ஊம்பச் சொன்னாலும் ஊம்பியிருப்பேன் என்று ஒரு இடத்தில் சொல்கிறார் பெரியவராக வரும் எம்.வி.வி.  அப்பேர்ப்பட்ட வறுமை.

அதில் ஜெயமோகன் பற்றியும் ஒரு அவதானம் வருகிறது.  பெரியவர் என்னைப் பார்த்துச் சிரித்து, “இவரு வேற மாதிரி ஆளு.  இவருக்குக் கதவெல்லாம் தானாத் தெறக்கும். இல்லேன்னா மனுஷன் ஒடைச்சிருவார்.  சில ஜாதகம் அப்டி” என்றார்.  இது எம்.வி.வி. சொன்னது.  ஜெயமோகன் பற்றி.  கதையில்.

எனக்குப் பணமே தேவையில்லை.  வாசகர் வட்ட நண்பர்களின் உதவி போதும்.  வீட்டு வாடகைக்கு ஒரு நண்பர்.  சட்டை துணிமணிகளுக்கு ஒருவர்.  தொலைபேசிக் கட்டணத்துக்கு ஒருவர்.  புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க ஒருவர்.  மாதாந்திர மாத்திரை செலவுக்கு ஒருவர்.  ஆனால் இதையும் மீறி என் விதி என்னிடம் பப்பு, ஸோரோ என்ற இரண்டு உயர்ஜாதி நாய்களை ஒப்படைத்திருப்பதால் அவ்வப்போது பணக் கஷ்டம்.  பப்புவுக்குக் கால்களில் எலும்பு தேய்ந்து விட்டது.  நடக்க கஷ்டம்.  என் புதல்வன் சொன்னான், ”மீன் குடுங்க டாடி.  நல்லதுன்னு டாக்டர் சொன்னார்.”  கார்த்திக்கோடு நான் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்வதில்லை.  பேசாமல் அமைதி காத்தேன்.

மீனுக்கு மாதம் நாலாயிரம் ஆகிறது.  வாரம் ஆயிரம்.  மீனை வாங்கிக் கழுவி, உப்பு மஞ்சள் பொடி போட்டு ஃப்ரீஸரில் வைத்து ஒவ்வொரு நாளும் நாலு துண்டு எடுத்து அவித்து பெடிக்ரியோடு கலந்து  ஸோரோவுக்குப் போடுவது வழக்கம்.  பப்பு சாது.  மீன் இல்லாமலேயே சாப்பிடும்.  இருந்தாலும் அதற்கு மீனை அவித்த நீரைக் கொடுப்பேன்.  மீன் சூப் என்றால் ஓடி வரும்.  இப்போது நடக்க முடியாமல் தவழ்ந்து வருகிறது.  நாலாயிரமே ஒவ்வொருத்தரிடமும் பிச்சை எடுத்துத்தான் வருகிறது.  இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பட்டப் பெயர் வேறு.  இதற்கும் மேல் பப்புவுக்கும் மீன் கொடுக்க வேண்டுமானால் ஊம்பத்தான் வேண்டும்.  மேலும், இப்போது பப்பு கொழுப்பைக் குறைப்பதற்காக விசேஷ பெடிக்ரி உண்கிறது.  அது சாதா பெடிக்ரியை விட சுவையாக இருக்கும்.  சாதா பெடிக்ரி பத்து கிலோ 2500 ரூ.  ஸ்பெஷல் பெடிக்ரி 5000.  பெடிக்ரிக்கான பணமெல்லாம் கார்த்திக் அவந்திகாவுக்கு அனுப்பும் குடும்பப் பணத்தில் சரியாகி விடும்.  ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவா பணம் அனுப்ப முடியும்?  இதற்கே பலமுறை நான் வீட்டுக்கு பெடிக்ரி கொண்டு வரும் சேகரிடம் கடன் சொல்ல வேண்டி வரும்.  டாக்டர் அருண் அவரது க்ளீனிக்கில் கடன் சொல்லாதீர்கள் என்று போர்டே போட்டு விட்டார்.  சில சமயங்களில் பெடிக்ரி தீர்ந்து போய் வெறும் சோற்றை வடித்து அதில் மீன் கலந்து கொடுத்திருக்கிறேன்.  நாலு நாள் ஆனதும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சேகரை பெடிக்ரி கொண்டு வரச் சொல்லுவேன்.  சேகர் வருவார்.  செக் அம்மா கொண்டு வந்து தருவாங்க சேகர் என்று சொல்லி விட்டு பெடிக்ரியை மட்டும் வாங்கிக் கொண்டு விடுவேன்.  பச்சை அயோக்கியத்தனம்.  வேறு வழியில்லை.  என் ஆறு வயது மகள் ரேஷ்மாவுக்குச் சோறு போட பிக் பாக்கெட் அடித்தேன்; இன்னும் என்னவெல்லாமோ செய்தேன்.  இப்போது 62 வயதில் அதையெல்லாம் செய்ய முடியாதே?  அறம் கதையில் எம்.வி.வி. சொல்கிறார்: பொண்ணாப் பொறந்திருந்தா தாசித் தொழில் செஞ்சிருப்பேன்; எழுத்தாளனாப் பொறந்ததுனால இது… என்று.

நான் ஆண் தாசியாகவும் இருந்திருக்கிறேன்.  இன்று நடந்தது இது:  பப்புவுக்கு மீன் கொடுக்கலாம் டாடி.  இது கார்த்திக்.

நான் பொதுவாக என் வீட்டில் செவிட்டு ஊமையாகவே வாழ்கிறேன்.  ஆனாலும் சமயங்களில் நாக்கில் சனி புகுந்து விடும்.  இன்று புகுந்தது.  கார்த்திக் வெளியே போனதும் அவந்திகாவிடம் “அவன் என்னமோ சொல்லிட்டுப் போய்ட்டான்.  ரெண்டு நாய்க்கும் மீன் போட எவண்ட்ட காசு இருக்கு?” என்றேன்.  “அட என்னப்பா, ஸோரோவுக்குப் போடற போது இதுக்கும் ஒரு துண்டு போடறதுக்கு என்னா?” என்றாள் அவந்திகா.  அப்படிப் போட்டால் ஸோரோ பட்டினி கிடக்க வேண்டும்.  அதாவது, ஒரு நாளைக்கு மூன்று துண்டுதான் ரேஷன்.  காலையில் ரெண்டு துண்டு.  இரவில் ஒரு துண்டு.  ஸோரோவுக்கு.  இதில் ஒரு துண்டை எடுத்து பப்புவுக்குப் போடுவேன், அவ்வப்போது.  இரக்கம்.  தயை.  அன்பு.  மீன் தீர்ந்து விடும்.  மீன் தீர்ந்து ஒரு நாள் ஸோரோ முழுப் பட்டினி.  மீன் தீர்ந்த உடனே என்னால் போய் வாங்க முடியாது.  வாரம் ஆயிரம் ரூபாய் தான் கட்டுப்படியாகும்.  முள் மீன் வாங்க முடியாது.  சுறா மட்டுமே போட முடியும்.  30 ரூபாய்க்கு மத்தி மீன் ஒரு கூடை கிடைக்கும்.  அவந்திகாவுக்கு நாற்றத்தில் வாந்தியே வந்து விடும்.  எனவே சுறா தான்.

”எனக்குப் பப்புவும் ஸோரோவும் ஒன்னுதாம்மா.  காசு இருந்தா ரெண்டுக்கும் மீன் போடலாம்.”

அவந்திகாவுக்கு என்ன தோன்றியதோ, ”அதுதான் தெரியுதே, ரெண்டுக்கும் நீ போட்றது” என்றாள்.  தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு மாதிரி சொல்வார்களே அம்மாதிரி சொல்லி விட்டாள்.   த்வனி தான் முக்கியம்.  அதாவது, ஸோரோவுக்கு ஒரு மாதிரியும் பப்புவுக்கும் ஒரு மாதிரியும் போடுகிறேனாம்.  அடப்பாவி, பணம் இருந்தால் இரண்டுக்கும் மீன் போடுவேன்.  கடுங்கோபம் உச்சி மண்டை ஏறி விட்டது. இப்படிச் சொன்னா நாசமாப் போவீங்க என்றேன்.

இப்படி அச்சான்யமாக என்றுமே பேசியதில்லை.  அவந்திகா கடந்த ஒரு வாரமாக டிஸண்ட்ரி வந்து எலும்பும் தோலுமாய் இருந்தாள்.  மனதில் திராணி இல்லை.  என் சுடுசொல் கேட்டு மனம் நொந்து போனாள்.  மாதுளை ஜூஸ் போட்டுக் கொண்டு போய்க் கொடுத்தேன்.  நீ என்னிடம் சண்டை போடுகிறாய்; நீ என் முன்னால் நிற்காதே; போய் விடு என்று வெறித்த பார்வையோடு சொன்னாள்.  அது அவள் குரல் அல்ல.  அது அவள் பார்வை அல்ல.

புதிய தலைமுறை இதழில் ஆறு மாதங்கள் பத்தி எழுதினேன்.  நான்கு மாதங்கள் ஆகியும் ஒரு பைசா கூட வரவில்லை.  ஆசிரியர் குழுவினருக்கு ஃபோன் செய்தேன்.  இன்று நாளை என்றார்கள்.  மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் போன் செய்தேன்.  ஆசிரியர் குழுவில் உள்ள இன்னொரு நண்பரை அழைத்துப் பேசினேன்.  இதோ அதோ.  செக் வரவில்லை.  இப்படியே ஒரு மாதம் கடந்தது.  மதனைப் பார்த்து உங்களால் ஏதாவது சிபாரிசு செய்ய முடியுமா சார் என்று கேட்டேன்.  ஏனென்றால், அவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நல்ல நிலையில் இருக்கிறார்.  நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் அவர்.   அப்படியா?  அப்படியா? என்று இரண்டு மூன்று முறை கேட்டார்.  மாலனுக்கு ஃபோன் போட்டேன்.  மாலன் தான் புதிய தலைமுறை ஆசிரியர்.  ஒன்றுமே நடக்கவில்லை.

ஐந்தாவது மாதத்திலோ அல்லது ஆறாவது மாதத்திலோ செக் வந்தது.  12 வாரங்களுக்கு.  பின்னர் ஆறு மாதம் முடிந்ததும் தொடர் முடிந்தது.  தொடர் முடிந்து இப்போது ஒன்றரை மாதம் ஆகிறது.  மூன்று முறை மீதிப் பணத்துக்காக ஃபோன் செய்தேன்.  பழைய கதைதான்.  இதோ அதோ.  புதிய தலைமுறை என்ன சி.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகை மாதிரியா?  இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்று புதிய தலைமுறை.  ஆனால் எழுத்தாளனின் நிலை எம்.வி.வி. சொல்வது போல்தான்.  பதிப்பாளரின் காலில் விழுந்து கதறி இருக்கிறார் எம்.வி.வி.  நான் இணையத்தில் பிச்சை எடுக்கிறேன்.  எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுத்தால் நான் ஏன் பிச்சை எடுக்கிறேன்?  இவ்வளவுக்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் 2000 ரூ.  தந்தி டிவியில் போய் பேசினேன் அல்லவா?  அதற்கெல்லாம் பைசா கொடுப்பது இல்லை.  எனக்கு விளம்பரம் கொடுக்கிறார்களே, அதற்கு என்னிடம் கேட்காமல் இருப்பதற்கே நான் நன்றி சொல்ல வேண்டும்.

அறம் கதையில் வரும் பெரியவர் எம்.வி.வி. அல்ல.  அது சாரு நிவேதிதா.