நண்பர்களே… ஜனவரி 9-ஆம் தேதி என்னுடைய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெறும். அந்திமழையில் வெளிவந்த அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பைப் படித்துப் பார்த்தேன். அருமையாக வந்திருக்கிறது என்று சொன்னால் தற்பெருமை பேசுகிறேன் என்பார்கள். என் நெருங்கிய நண்பர்களே அடிக்கடி புகார் சொல்கிறார்கள், என் தற்பெருமைப் பேச்சுக்கள் பற்றி. என்ன கருமமோ தெரியவில்லை, எனக்கு அது தற்பெருமையாகவே தெரியவில்லை. கால்சராய் எடுக்கப் போகும் போது உங்கள் இடுப்பு அளவு என்ன என்று கேட்கிறார்கள் அல்லவா, அப்போது நீங்கள் உள்ளதைச் சொன்னால் தற்பெருமையாகி விடும் என்று 15 இஞ்ச் என்றா சொல்கிறீர்கள்? 32, 34 என்று இருப்பதைத்தானே சொல்கிறோம்? அதே மாதிரிதான் அறம் பொருள் இன்பம் ரொம்பப் பிரமாதமா வந்திருக்கு, இதையெல்லாம் நான் தான் எழுதினேனா என்றே ஆச்சரியமா இருக்கு என்று ஒரு நண்பரிடம் சொன்னபோது, ஒருக்கணம் என்னை உற்றுப் பார்த்து, இது ஒன்னுதான் உங்கள்ட்ட பிடிக்காத விஷயம் என்றார். தற்பெருமையாம். அடப்பாவிகளா, இன்ஸ்பெக்டர் செண்பகராமன் தொகுதில அசோகமித்திரன் என்னமா பின்னி எடுத்திருக்கார் என்று சொல்லும் போது எப்படிச் சொல்கிறேனோ அதே மாதிரிதான் என்னுடைய புத்தகங்கள் பற்றியும் சொல்கிறேன். ஏன், நம்முடைய புத்தகங்களை, நம்முடைய எழுத்தை நாமே ரசிக்கக் கூடாதா? அதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா? சரி, விடுங்கள். விஷயம் அது அல்ல. அறம் பொருள் இன்பம் கேள்வி பதில் தொகுதி அந்திமழை பத்திரிகை மூலம் வெளிவருகிறது.
இன்னொன்று, துக்ளக் இதழில் 2010-11 இல் வெளிவந்த என் கட்டுரைகளின் தொகுப்பும் வருகிறது. கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வரும் இத்தொகுப்புக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இன்னும் ஆறு ஏழு புத்தகங்கள் வரும். நியூஸ் சைரன் பத்திரிகையில் வந்த கட்டுரைகள் கூட தொகுப்பாக வரும். அதில் முக்கியமானது, சில ஆண்டுகளுக்கு முன் கேரளத்தின் நளினி ஜமீலாவுடன் நான் பேசிய உரையாடலின் தொகுப்பு. அதில் ஒரு வாக்கியத்தை – இப்போதைய என் கனவான் இமேஜ் காரணமாக எடுத்தேன். ஆனால் மனுஷ்ய புத்திரன் பரவாயில்லை விடுங்கள் என்று சொல்லி விட்டார். அவர் சொன்னதில் ஏதேனும் உள்குத்து இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னபோது ஒத்துக் கொள்ளும்படி தான் இருந்தது. இன்றைய நிலையில் அப்படியெல்லாம் என்னால் வெளிப்படையாகப் பேசியிருக்க முடியாது. அந்த நூல் உயிர்மை மூலம் வருகிறது.
வெளியீட்டு விழா நடத்துவதற்குத் தேவையான பணம் கேட்டு எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விமலாதித்த மாமல்லன் எனக்கே அனுப்பி விடலாம் என்று தோன்றுகிறது என்று எழுதியிருந்தார். ம்… கல்லையும் கரைத்து விட்ட அந்தக் கட்டுரையைப் படித்து இரண்டு பேர் பணம் அனுப்பியிருந்தனர். அதில் ஒருவர் பணம் மட்டுமே அனுப்பியிருந்தார். பெயர் ஊர் எதுவும் தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலாவது நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் போடலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
இடையில் ஜெய்ப்பூர் இலக்கிய விழா செலவு வேறு வந்து விட்டது. ஐந்து நாளைக்கான நுழைவுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாய்; தங்கும் செலவு, விமானச் செலவு என தொகை எகிறி விட்டது. மூன்று நண்பர்கள் அந்தச் செலவைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒருவர் ரொம்பவே மிரண்ட குரலில், இது பற்றி எழுதி விடாதீர்கள் சாரு; ரொம்பப் பெரிய பிரச்சினையாகி விடும் என்றார். சத்தியமாக பெயரைச் சொல்ல மாட்டேன் என்றேன். ஏற்கனவே அப்படி ஒரு அனுபவம் இருக்கிறது. சுமார் பத்தாண்டுகள் முன்பு நியூ ஜெர்ஸியிலிருந்து ஒரு நண்பர் கொஞ்சம் பணம் அனுப்பியிருந்தார். அதுதான் எனக்கு ஒரு வாசகர் அனுப்பிய முதல் பணம். உடனே மிகவும் கடமையுணர்வோடு இணையதளத்தில் அவர் பெயரையும் ஊரையும் அனுப்பிய தொகையையும் போட்டு பெரிதாக நன்றி சொல்லியிருந்தேன். நான் எழுதியது சனிக்கிழமை போலும். ஞாயிற்றுக்கிழமை காலையே நியூ ஜெர்ஸியில் உள்ள அத்தனை தமிழ் அமைப்புகளும், முக்கியமாகக் கோயில் திருப்பணிக் குழுக்களும் அவர் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார்களாம். ஃபோன் செய்து வருத்தப்பட்டு விட்டு, அந்த நண்பர் அதோடு என் தொடர்பையே முறித்துக் கொண்டு விட்டார். அதிலிருந்து இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டேன்.
கல்லையும் கரைத்து விட்ட (சாரு என்னைக் கல் என்று திட்டி விட்டான் என்று என்னைக் காய்ச்சி எடுத்து விடாதே மாமல்லா, நான் பாவம்!) அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி ’இந்து’விலும் வந்திருந்ததால் அது பலரையும் ஏதோ செய்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். ஆனால் காரியம் ஆகவில்லை. இரண்டு பேரைத் தவிர யாரும் பணம் அனுப்பவில்லை. எல்லோருக்கும் பணக் கஷ்டம். பணம் இருப்பவர்கள் என் எழுத்தைப் படிப்பதில்லை. என்ன செய்ய? புரிந்து கொள்கிறேன். இதற்கிடையில் என்னைத் திட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் வேறு இந்தியா பாகிஸ்தான் போருக்கு இடையே மாட்டிக் கொண்டு டூரிஸ்டுகளைப் போல் கன்னாபின்னாவென்று கலவரப் படுகிறார்கள். பாவம். மனிதர்கள் பணத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்று காலையில் 80 வயது முதியவர் ஒருவரிடம் பணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். கஸ்டம்ஸில் பெரிய அதிகாரியாக இருந்தவர். காசு வாங்க மாட்டார். காந்தீயவாதி. ரொம்ப நல்ல விஷயம். ஆனால் நேர்மையாக சம்பாதித்த அனைத்தையும் தான தர்மம் செய்து விட்டார். ஒரே மகள். இப்போது அவருக்கும் அவர் மனைவிக்கும் இருக்க இடமில்லை. வாடகை வீடு. (சம்பாத்தியத்தில் கட்டிய இரண்டு வீடுகளை தர்ம ஸ்தாபனங்களுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்.) ஓய்வு ஊதியத்தில் காலத்தை ஓட்ட மிகவும் சிரமப்படுகிறார். மகளைக் கேட்கவும் தயக்கம். அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்குக் கோபம்தான் வரும், இப்படியுமா இருப்பார்கள் மனிதர்கள் என்று. ஆனால் கவலையெல்லாம் முகத்தில் தெரியாது. எப்போதும் சிரித்த முகம்.
ஆனால் இத்தனை பிரபலமாக இருக்கும் நான் – ஒரு எழுத்தாளன் – பிறரிடம் யாசகம் கேட்க வேண்டியதில்லைதான். ஆனால் இதற்கு முழுமுதல் காரணமும் ஊடகங்கள்தான். விண் டிவியில் உலக சினிமாக்கள் பற்றி 25 வாரம் பேசினேன். ஒரு பைசா தரவில்லை. 25 வாரம் கழித்துத்தான் பணம் என்ற பேச்சை எடுத்தேன். அவர்கள் பணமே கொடுப்பதில்லையாம். நிறுத்திக் கொண்டேன். இப்போது நான் உலக சினிமா பற்றிப் பேசிய குறுந்தகடுகளை ஒவ்வொன்றும் 1000 ரூபாய்க்கு விண் டிவியில் விற்கிறார்கள். அதையெல்லாம் எழுதி புத்தகமாகக் கொண்டு வரலாம் என்று கேட்ட போது ஒரு தகடு 1000 ரூ என்றார்கள். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்! தொலைக்காட்சியில் பிரபலமான நண்பர் ஒருவரிடம் விசாரித்த போது ஒரு நிகழ்ச்சிக்கு அவர்கள் 10000 ரூ கொடுத்திருக்க வேண்டும் என்றார். அந்த அளவுக்கு அதில் நான் உழைத்திருக்கிறேன். வாரத்தில் மூன்று நாள் அதற்கே போய் விடும். அதே வேலையாகத்தான் இருந்தேன்.
சமீபத்தில் நடந்த கரைச்சல் புதிய தலைமுறை இதழில் நடந்தது. இத்தனைக்கும் அதில் பணி புரியும் முக்கியஸ்தர்கள் அனைவரும் என் நெருங்கிய நண்பர்கள். தொடரே நின்று போய் நாலு மாதம் கழித்து கல்லிலிருந்து நார் உரிப்பது போல் உரித்து வாங்கினேன். இவ்வளவுக்கும் புதிய தலைமுறை தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவர் நடத்துவது. அவர்கள் நடத்தும் புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலில் உள்ளே நுழைந்து எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நிகழ்ச்சி முடிந்த அடுத்த வினாடியே பணம் கொடுத்து விடுவார்கள். வேறு எந்தத் தொலைக்காட்சி சேனலும் பணம் கொடுப்பதில்லை. அப்பேர்ப்பட்ட புதிய தலைமுறை நிறுவனத்தில் பத்திரிகையில் எழுதினால் பணம் கிடையாது. ஓசி அல்ல. எப்பவாவது ஒரு மாமாங்கம் கழித்து வரும். நாலு நாட்களுக்கு ஒருமுறை புதிய தலைமுறையில் பணி புரியும் என் நண்பர்களை மாற்றி மாற்றி அழைத்துக் கேட்பேன். ரத்தக் கண்ணீர் ராதா மாதிரிதான் கதறுவேன். பதிலுக்கு நண்பரும் அதே குரலில் கதறுவார். சாரு, இன்னிக்கு எழுந்தவுடனே உங்க நினைப்புதான். வந்ததும் அக்கவுண்ட்ஸ் பிராஞ்ச் தான் போனேன். குடுத்துர்றோம்னு சொல்லி இருக்காங்க சாரு. இப்படியே மாதக் கணக்கில் போய்க் கொண்டிருந்தது. கடைசியில் முதல் எழுத்து இல்லாமல் செக் வந்தது. வங்கியில் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மறுத்தார்கள். இனிமேல் திருப்பி அனுப்பி முதல் எழுத்தைப் போட்டு… அதெல்லாம் ஆகிற கதையா? நினைத்தாலே நெஞ்சு வலித்தது. ”பெயருக்கு முன்னால் ஒரே ஒரு கே தானே, நானே போட்டுக் குடுத்துர்றனே?” என்றேன். ”அதையெல்லாம் நாங்கள் சொல்லக் கூடாதே?” என்றார் இளைஞனான வங்கி அதிகாரி. வெளியே வந்து ஒரு பேனா வாங்கினேன். (என்னிடம் இருந்தது நீல நிற மசி. செக்கில் இருந்ததோ கறுப்பு நிற மசி. அதைக் கொண்டு செக்கில் அறிவழகம் என்று எழுதியிருந்த அதே கோணல்மானலுடன் கே என்று எழுதினேன். ரெண்டு வயசுக் குழந்தை கூட கண்டு பிடித்து விடும் என்ற அழகில் வந்திருந்தது கே. அறிவழகனுக்கும் கே.வுக்கும் சம்பந்தமே இல்லை. அரசு வங்கியாக இருந்தால் துரத்தி அடித்திருப்பார்கள். தனியார் வங்கி என்பதால் வாங்கிக் கொண்டார். பதற்றத்துடன் காத்திருந்தேன். ரெண்டு நாளில் பணம் வந்தது. இனிமேல் எனக்கு முன்பணமாகக் கொடுத்தால்தான் புதிய தலைமுறை பத்திரிகையில் எழுதலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.
இதற்கிடையில் ஒரு பெண் பத்திரிகையாளர் முகநூலில் ”பாருங்க, இப்படியெல்லாம் இருக்காங்க எழுத்தாளனுங்க” என்று ஆரம்பித்து ரொம்பக் கேவலமாக என்னைப் பெயர் சொல்லாமல் திட்டியிருந்தார். ஏன் அம்மா? நீங்கள் வாங்கும் சம்பளம் ஒரு லட்சம். நானோ ஓசியில் மாரடிக்க வேண்டியிருக்கிறது. ஐநூறும் ஆயிரமும் பணம் என்றா நினைக்கிறீர்கள்? ஐந்து லட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகையில் கதை எழுதினால் ஏன் அம்மா ஆயிரம் ரூபாய் அனுப்புகிறார்கள்? அதைக் கேட்க வேண்டியதுதானே நீங்கள்?
சரி, விஷயத்துக்கு வருகிறேன். உண்மையிலேயே இனி பணம் கேட்டு எழுத மாட்டேன். இதுவே கடைசி. விழாச் செலவுக்குப் பணம் வேண்டும். அனுப்ப முடிந்தால் அனுப்புங்கள். அனுப்பாவிட்டாலும் விழா நடக்கும். வாசகர் வட்டத்தின் நண்பர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தொடர்பு கொண்டு கேட்க வேண்டியதுதான். (விலக நினைப்பவர்கள் இப்போதே விலகி விடவும்…)
இதற்கிடையில் இன்னொரு காமெடியையும் எழுத வேண்டும். ஒரு நண்பர் தானாகவே வலிய ஆஜராகி, அரங்கச் செலவை நான் ஏற்கிறேன் என்றார். நான் போய் அவரிடம் கேட்கவில்லை. அவராகவே வந்து சொன்னார். சொல்லி நாலு மாதம் இருக்கும். இப்போது ஃபோன் செய்தால் திருநாளைப்போவார் கதை. எப்போது கேட்டாலும் நாளை நாளை நாளை. ”அட லூசுப் பையா! நானா உன்னிடம் வந்து பணம் கேட்டேன்?” என்று நினைத்துக் கொண்டேன். இனிமேல் தர மாட்டார். சும்மா போகிற போக்கில் அள்ளி விடுவது…
பணம் அனுப்பும் நண்பர்களுக்கு என்னால் பிரதியாகச் செய்ய முடிந்ததெல்லாம், மேடைக்கு அழைத்து புத்தகங்களைத் தரலாம். முதல் பத்து பிரதிகளை முதல் பிரதி, இரண்டாம் பிரதி, மூன்றாம் பிரதி என்று குறிப்பிட்டுக் கையெழுத்திட்டுக் கொடுக்கலாம்.
என் தம்பி சினிமாவில் நன்கு சம்பாதிப்பதால் நாமும் அப்படிச் சம்பாதிக்கலாமே என்று எனக்கு வரும் வாய்ப்புகளுக்கு மறுப்பு சொல்லாமல் சம்மதிக்க ஆரம்பித்தேன். ஆறு மாதம் வேலை வாங்கிக் கொண்டு பட்டை நாமம் சார்த்தி விட்டார் படா இயக்குனர். எனக்குத்தான் 50000 ரூபாய் நஷ்டம். ஆட்டோ செலவு. நேர விரயம் கணக்கில் காட்டவில்லை. இன்னொருவர் ஒரு கதை கேட்டார். புதிய கதை. ஒரு வாரம் அமர்ந்து எழுதிக் கொடுத்தேன். ம்ஹும். ”படம் எடுத்தா குடுத்துருவேன் சார். உங்களை மறப்பேனா?” இதெல்லாம் நடந்து ஒரு வருடம் இருக்கும்.
இப்போது ஒரு நெருங்கிய சினிமா நண்பர் கதை கேட்டிருக்கிறார். முன்பணம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இதெல்லாம் ஆகிற காரியமாகத் தெரியவில்லை. தம்பிக்கு ராசி இருக்கு; எனக்கு இல்லை. அவ்ளோதான். இதில் விசனப்பட பெரிதாக ஏதும் இல்லை.
பணம் அனுப்ப முடிந்தால் அதற்கான வங்கி விபரங்கள்:
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. Chennai
IFSC Code Number: ICIC0006026