(இந்தச் சிறுகதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படித் தெரிந்தால் அது தற்செயலானதே!)
அசோகமித்திரன் ஏராளமாக எழுதியிருக்கிறார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதுகிறார் அல்லவா? அவ்வளவையும் படிப்பது கொஞ்சம் சிரமம்தான். ஒருநாள் வாசு வீட்டுக்குப் போன போது இன்ஸ்பெக்டர் செண்பகராமன் என்ற குறுநாவல் தொகுப்பைப் பார்த்து விட்டு ஆர்வமாக எடுத்துப் புரட்ட ஆரம்பித்தேன். அவ்வளவுதான். இரும்பும் காந்தமும் போல ஒட்டிக் கொண்டது. முடித்து விட்டே கொடுங்கள் என்றான் வாசு. நாகேஸ்வர ராவ் பூங்காவில் எனக்குப் பழக்கமான என்னுடைய வாசகன். பொதுவாக நான் எந்த வாசகர் வீட்டுக்கும் போவதில்லை. புத்தகப் படிப்பே ஒரு க்ரைம் என்று நினைக்கும் தமிழ்ச் சமூகத்தில் அந்தப் புத்தகங்களை எழுதுபவன் கிரிமினல்தானே? எந்தப் பெண் தன் கணவன் ஒரு கிரிமினலோடு பழகுவதை விரும்புவாள்? ஆனால் வாசு வீடு ஒரு விதிவிலக்கு. வாசுவை விட அவன் மனைவி அபர்ணா என்னுடைய தீவிர வாசகி என்று வாசு வீட்டுக்குப் போன போது தெரிந்தது. அதை விட நான் வாசு வீட்டுக்கு அவன் கூப்பிடும் போதெல்லாம் செல்வதற்கு முக்கியமான காரணம், அபர்ணா போடும் காஃபி.
நான் ஒரு காஃபிப் பைத்தியம். தஞ்சாவூர் மண்ணில் பிறந்த ஆத்மாக்கள் காஃபி பைத்தியமாக இல்லாவிட்டால்தானே ஆச்சரியம்? ஆனால் எனக்குக் காஃபி பிடிக்கும் என்பதாலேயே பல இடங்களில் நான் காஃபி குடிப்பதில்லை என்று சொல்லி விடுகிறேன். காஃபியா குடிக்கிறார்கள், மக்கள்? சே… கழனித்தண்ணிக்கெல்லாம் காஃபி என்று பெயரா? காஃபி என்றால் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? காஃபி பிரியர்களில் பல விதம் உண்டு. பொதுவாக எல்லோருக்கும் பிடித்தது சீனி கம்மி, ஸ்ட்ராங் காஃபி. காஃபி என்றாலே ஸ்ட்ராங் காஃபிதான். லைட், மீடியம் எல்லாம் டீயில்தான். ஆனால் எனக்கு சீனி கம்மியாகவும் டிகாக்ஷன் மீடியமாகவும் இருக்க வேண்டும். அதோடு எனக்குப் பிடித்த காஃபியில் காஃபித் தூள் 65 சதவீதமும் சிக்கரி 45 சதவீதமும் இருக்க வேண்டும். அதுதான் காஃபி. ஆனால் எனக்கு உபசரிக்கப்படும் காஃபி அத்தனையும் ஸ்ட்ராங்காகத்தான் இருக்கும். நான் குடிக்காமல் அப்படியே வைத்து விடுவேன். உயிரே போனாலும் என்னால் ஸ்ட்ராங் காஃபி குடிக்க முடியாது. அவ்வளவுதான். ஆனால் அபர்ணா பிரமாதமாகக் காஃபி போடுவாள்.
பூங்காவில் வாக்கிங் முடித்து விட்டு எப்போதாவது வாசு வீட்டுக்குப் போவேன். அப்படி ஒருநாள் சென்ற போதுதான் இன்ஸ்பெக்டர் செண்பகராமன் கண்ணில் பட்டது. அந்த நேரத்தில்தான் நான் அசோகமித்திரன் பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுத ஆரம்பித்திருந்தேன். அதற்கு இந்த இன்ஸ்பெக்டர் செண்பகராமன் புத்தகம் உதவும் என்று தோன்றியது. அசோகமித்திரன் இளைஞனாக இருந்த போது நடந்த சம்பவங்களைக் கொண்ட கதை. அதிலும் ’இருவர்’ என்ற கதை என் மனதை உலுக்கி விட்டது. அதில் வரும் வாலா என்ற பிராமண இளம் விதவை. நீங்கள் அந்தக் கதையைப் படித்திருக்கிறீர்களோ? உலகில் எந்த எழுத்தாளனுமே அப்படி ஒரு கதையை எழுதி விட முடியாது என்று தோன்றியது. சொன்னால் அசோகமித்திரன் அடிக்க வருவார். அவருக்குப் புகழ்ச்சி ஆகாது. ”எத்தனையோ ஆயிரக் கணக்கான பேர் எழுதறா… அதிலே நாம ஒரு துகள்…” என்பார். எனக்கெல்லாம் அந்த அடக்கம்தான் வர மாட்டேன் என்கிறது. என்ன ஜென்மமோ!
புத்தகம் படிக்கும் போது எனக்கு ஒரு பழக்கம். எனக்குப் பிடித்த வரிகளைக் கோடு போட்டு விடுவேன். முன்பெல்லாம் வரிகளுக்கு அடியிலேயே போடுவேன். இப்போது கொஞ்சம் திருந்தி விட்டபடியால் அடியில் போடுவதில்லை. பக்கவாட்டு மார்ஜினில் மேலிருந்து கீழாக இழுத்து விடுவேன். இந்த இந்த இடங்களெல்லாம் முக்கியம். மேற்கோள் காண்பிக்கப்பட வேண்டியவை. அது போல் வாலாவை அவளுடைய அண்ணா, அவள் தூரமாகி வீட்டுக்கு வெளியே தோட்டத்தில் ஒரு இடத்தில் பதுங்கிக் கிடக்கும் வேளையில் அடிஅடியென்று மாட்டு அடி அடிக்கும் காட்சியையும் அப்போது வாலாவின் மன்னி பேசும் பேச்சையும் மேற்கோள் காண்பிக்க வேண்டும் என்று கோடு போட்டு வைத்திருந்தேன்.
ஆனால் நான் எழுதிய கட்டுரையில் ’இருவர்’ பற்றிப் பேச முடியவில்லை. அதற்குள்ளேயே கட்டுரை முடிவுக்கு வந்து விட்டது. 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கும் ஒருவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம்தான் எழுத வேண்டும். சில மாதங்கள் சென்றன. இதற்கிடையில் வாசுவை பலமுறை அவன் வீட்டிலும் வெளியிலும் சந்தித்திருக்கிறேன். ஒருநாள் அவன் வீட்டுக்குப் போனபோது அபர்ணா ”இன்ஸ்பெக்டர் செண்பகராமன் படித்து விட்டீர்களா சித்தப்பா?” என்று கேட்டாள். ஏன் கேட்டாள் என்று புரியவில்லை. இருந்தாலும் “ஓ, எப்போதோ படித்து விட்டேனே?” என்றேன். அதற்கு அவள் “அப்படியென்றால் அடுத்த முறை வரும் போது கொண்டு வந்து குடுத்துடுங்க சித்தப்பா” என்று சொன்னாள். ஆஹா, இது என்ன விபரீதம் என்று நினைத்தேன். ஏனென்றால், என்னிடம் வரும் புத்தகங்களை நான் திருப்பிக் கொடுக்கும் வழக்கமே கிடையாது. ஏனென்றால், அதில் குறித்து வைத்திருக்கும் பகுதிகளை மேற்கோள் காண்பிக்க வேண்டுமென்றால் என்ன செய்வது? இன்னொரு புத்தகம் வாங்குவது பெரிதில்லை; ஆனால் அதை இன்னொரு முறை அல்லவா படிக்க வேண்டும்? இருந்தாலும் பெண்களிடம் முரண்டு பேசக் கூடாது என்று “சரிம்மா, அடுத்த வாட்டி வரும் போது எடுத்துட்டு வரேன்” என்று சொன்னேன். பெண்களை மட்டும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதிலும் அபர்ணாவிடம் ரொம்பவே ஜாக்கிரதையாக இருப்பேன். இல்லாவிட்டால் காஃபியில் கை வைத்து விடுவாள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கிறது. முதல் விஷயம், நான் தஞ்சாவூர்க்காரன். தஞ்சாவூர்க்காரர்களை காஃபியில் திருப்திப்படுத்துவது ரொம்பக் கஷ்டம். வித்யா எனக்கு பன்றிக்கறி, வாத்துக்கறியெல்லாம் அதியற்புத ருசியாக சமைத்துப் போட்டிருக்கிறாள். ஆனால் காஃபி என்றால் பக்கத்தில் வர மாட்டாள். ”அது மட்டும் என் கிட்ட கேக்காதப்பா.”
காஃபி போடுவது என்பது ஒரு கலை. டிகாக்ஷன் புத்தம் புதிதாக எடுக்க வேண்டும். பாலும் புத்தம் புதிதாகக் காய்ச்ச வேண்டும். இந்த இரண்டில் எது தவறினாலும் அது காஃபி இல்லை, கழனித் தண்ணி. சில வீடுகளில் ‘ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இறக்கிய டிகாக்ஷன் தானே’ என்று நினைத்து எனக்குப் போட்டுக் கொடுத்து விடுவார்கள். கேவலமாக இருக்கும். நான் சீரும் சிறப்புமாக வாழ்ந்த காலத்தில் – அது ஒரு காலம், அதை நினைவு படுத்தாதீர்கள் – காஃபிக் கொட்டையை அப்போதே வறுத்து அரைத்து – அதற்கென்று சிறிதாக, ரொம்பச் சிறிதாக ஒரு அரவை எந்திரம் உள்ளது – பொடி பண்ணி அதிலிருந்து புத்தம் புதிதாக டிகாக்ஷன் எடுத்துக் குடித்துக் கொண்டிருந்தேன். பால் எப்படி? வீட்டு வாசலில் மாட்டை அழைத்துக் கொண்டு வந்து பால் கறந்து கொடுப்பார் பால்காரர். அதெல்லாம் நான் வாழ்ந்த கதை. இப்போது சுதந்திரம் வந்த பிறகு வாழும் மகாராஜாவைப் போல் வாழ்வதால் அந்த லக்ஷூரிக்கெல்லாம் இடமில்லை. இந்த ஒரு காரணத்தினாலேயே எனக்குக் காஃபி போட்டுக் கொடுக்க இசைவு தந்துள்ள பெண் தெய்வங்களை நான் எப்போதுமே பகைத்துக் கொள்வதில்லை. ஆனால் சிலமுறை இதில் சங்கடங்கள் வந்ததுண்டு. ஆரம்ப காலத்தில் அபர்ணா போடும் காஃபி சில சமயம் உயர்தரமாக இருக்கும். சில வேளைகளில் கழனித் தண்ணியாக இருக்கும். குடித்து விட்டு வரும் போது வாந்தி வருவது போல் இருக்கும். அப்புறம்தான் தெரிந்தது, சமயங்களில் பழைய டிகாக்ஷனில் போட்டுக் கொடுத்திருக்கிறாள், எனக்குத் தெரியாது என்று. ’பழைய’ என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் போட்ட டிகாக்ஷன் தான். இருந்தாலும் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதே?
அபர்ணா இன்ஸ்பெக்டர் செண்பகராமனைத் திரும்பக் கேட்ட பிறகு ஒருமுறை வாசுவைப் பார்க்கப் போனேன். அப்போது எனக்கு இன்ஸ்பெக்டர் செண்பகராமனை சற்றும் ஞாபகம் இல்லை. உங்களுக்குப் புரிவதற்காக கால வரிசை கருதி அந்த விஷயத்தைச் சொன்னேன். எனக்குக் காஃபியைக் கொடுத்து விட்டு அபர்ணா ”இன்ஸ்பெக்டர் செண்பகராமனை எடுத்து வந்தீர்களா சித்தப்பா?” என்று கேட்டாள். சந்தர்ப்பவசமாகவோ என்னவோ அபர்ணா இன்ஸ்பெக்டர் செண்பகராமனைப் பற்றிப் பிரஸ்தாபித்த இரண்டு தடவையும் வாசு பக்கத்தில் இல்லை. இல்லாவிட்டால் வாசுவுக்குக் கோபம் வந்து விடும். என்ன இது, நாகரீகமில்லாமல் கொடுத்த பொருளைத் திரும்பக் கேட்கிறாய் என்று சொல்லி விடுவான். அபர்ணா அதோடு விட்டிருந்தால் இந்தக் கதையை எழுதியிருக்கவே மாட்டேன். அபர்ணா மேலும் ஒரு விஷயம் சொன்னாள். “சித்தப்பா… அது என்னவோ சித்தப்பா… பணம் குடுத்தா கூட திரும்பக் கேட்க மாட்டேன். புத்தகம் குடுத்தா அதைத் திரும்ப வாங்கிட்டுதான் மறுவேலை.” ’சரி, கொடுத்தது நீ இல்லையே, வாசு அல்லவா கொடுத்தான்?’ என்று மனதில் தோன்றியது. ம்ஹும். மனதில் தோன்றுவதையெல்லாம் பெண்களிடம் பேசி விடக் கூடாது. அப்படியே சொல்லியிருந்தாலும் அபர்ணாவிடம் அதற்கான பதில் தயாராக இருக்கும். ’வாசுவும் அபர்ணாவும் வேறு வேறு அல்ல!’ (அபர்ணா தன்னைக் குறிக்கும் போது நான் என்று சொல்வதில்லை என்பதை பலமுறை கவனித்திருக்கிறேன்.) ’ஆமாம், அது என்ன சித்தப்பா?’ என்று உங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்திருக்கும். சொல்கிறேன். சிலருக்கு அப்படி ஒரு பழக்கம் உண்டு; யாரையும் முறை வைத்துத்தான் கூப்பிடுவார்கள். நான் மைலாப்பூரில் வசிப்பதால் பலரும் என்னை மாமா என்றே அழைப்பதை கவனித்திருக்கிறேன். தெரிந்தவர்கள் அல்ல; யாரென்றே தெரியாத அந்நியர்கள். நமக்குப் பழக்கமே இல்லாதவர்கள் அப்படி அழைக்கும் போது விநோதமாகத் தோன்றும். ”மாமா, கேசவ பெருமாள் கோவில் எங்கேருக்கு தெரியுமோ?”, ”மாமா, தேவடி தெருவுக்கு இப்பிடியே போலாமோல்யோ?” என்று ரொம்பப் பழகியவர்கள் போல் கேட்பார்கள். இதுவரை ஆண்கள் அப்படி அழைத்ததில்லை. பெண்கள்தான். அதிலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட மாமிகள்.
ஒருநாள் வாசு வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் அவள் வீட்டிலிருந்தபடியே ஜன்னல் வழியாக வாசுவிடம் உடைந்த ஆங்கிலத்தில் ஏதோ கேட்டாள். பதிலுக்கு வாசு ஏதோ குழறிக் குழறி பதில் சொன்னான். அந்தத் தெருவில் இருந்த வீடுகள் அனைத்தும் தனித்தனியாகக் கட்டப்பட்டவை. ஒவ்வொன்றிலும் கீழே ஒரு வீடு. மேலே ஒரு வீடு. வாசு குடியிருப்பது மாடியில். அங்கிருந்து பார்த்தால் பக்கத்து வீடு தெரியும். அந்த வீட்டின் ஜன்னல் எப்போதும் திறந்தே இருக்கும். அங்கே ஒரு தெலுங்குக் குடும்பம் வந்துள்ளது. முன்பு இருந்தது ஒரு அய்யங்கார் குடும்பம். அந்தக் குடும்பத்தைப் பற்றிக் கதைகதையாகச் சொல்லியிருக்கிறான் வாசு. ஒரு கணவன், மனைவி, ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை. எப்போதாவதுதான் அந்த ஆள் வீட்டுக்கு வருவான். வந்ததும் அடி. மாட்டை அடிப்பது போல் பெண்டாட்டியை அடிப்பானாம். இந்தக் காலத்திலுமா? அட, நீங்க வேற சூர்யா, கொலயே வுழுந்துடும்னு நினைப்போம். கடைசி வரைக்கும் அவங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னே தெரியல. இப்போ இல்ல. போய்ட்டாங்க. அந்தப் பொண்ணு ஒருநாள் அவங்கம்மாட்ட சொல்றா… அங்கே தும்மினா கூட இங்கே துல்லியமா கேட்கும். நீ அப்பாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுதான் பெரிய தப்புன்னு. எப்படி இருக்கு பாருங்க… ஆறு வயசுப் பொண்ணு சொல்றா…
இப்போது அங்கே ஒரு தெலுங்குக் குடும்பம் வந்திருக்கிறது. சிலுக்கு ஸ்மிதா போல் ஒரு ஃபிகர். அந்தப் பெண்ணும் அவளுடைய கணவனும் மட்டும்தான். குழந்தை இல்லை. எங்கியும் வேலை பார்க்கிறாளா? ம்ஹும். இல்லை. ஹவுஸ்வைஃப். ஆனா தெலுங்கைத் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது. தட்டுத் தடுமாறி இங்க்லீஷ் பேசுவா.
அவளுக்கு அடிக்கடி வாசுவின் உதவி தேவைப்படுகிறது. அபர்ணா சாஃப்ட்வேர் துறை. வாசு குறும்பட இயக்குனர். அதனால் அவனுக்கு எப்போதாவதுதான் வெளிவேலை இருக்கும். அதனால் அநேக நேரங்களில் வீட்டில்தான் இருப்பான்.
அவ என்ன மாதிரி ஹெல்ப் கேப்பா?
ம்… ஒருநாள் ஏதோ வீட்டுக்குள்ள எலெக்ட்ரிகல் ரிப்பேர் வேலை. அவர்கள் கேட்கும் எதற்கும் இந்தப் பெண்ணால் பதில் சொல்ல முடியாது. நீங்க வந்து கொஞ்சம் பார்த்துக்க முடியுமா அங்கிள்னு கேட்டா.
என்னது அங்கிளா?
அதுதான் சூர்யா கொலவெறியாவுது. அவளுக்கு 25 வயசு இருக்கும். எனக்கு 27 வயசு. என்னப் போய் அங்கிள் அங்கிள்ங்கிறா…
உடனே நான், அபர்ணாவும் வாசுவும் என் வீட்டுக்கு வந்த போது அபர்ணா வித்யாவை வாக்கியத்துக்கு இரண்டு தடவை ஆண்ட்டி ஆண்ட்டி என்று அழைத்து அவளைக் கொலைவெறியாக்கிய கதையைச் சொன்னேன். பொதுவாக நண்பர்கள் யாரையும் என் வீட்டுக்கு அழைத்துச் செல்வது கிடையாது. இருந்தாலும் எப்போதாவது இப்படி சறுக்கி விடும். ஒருநாள் வாசுவும் அபர்ணாவும் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் தையல்காரரைப் பார்க்க வந்த போது உங்கள் வீட்டுக்கு வரலாமா சித்தப்பா என்று அபர்ணா கேட்டதால் ஏமாந்து போனேன்.
அவர்கள் கிளம்பியதுமே வித்யா என்னைப் பிடித்துக் கொண்டு விட்டாள். யார் இந்தப் பெண்? எதற்காக இவள் என்னை ஆண்ட்டி என்றும் உங்களை சித்தப்பா என்றும் கூப்பிடுகிறாள்?
என்னை எத்தனையோ பேர் நாயே பேயே தேவடியாப் பையலேன்னு கூப்பிட்றான். இந்தச் சித்தப்பா தான் ரொம்பப் பெரிய விஷயமா?
அது எப்டியோ போ… என்னை அவ எப்படி ஆண்ட்டின்னு கூப்பிடலாம்? ஏன் டீஸண்ட்டா பேர் சொல்லிக் கூப்டா என்ன?
இதெல்லாம் பரவாயில்லை. என்னுடைய இன்னொரு சிநேகிதன் தன் புதல்வனை மிகவும் வித்தியாசமாக வளர்க்கிறான். பிள்ளைக்கு நாலு வயதுதான் ஆகிறது. அதற்குள் மோடி தாத்தா, ஜெயலலிதா ஆண்ட்டி, கருணாநிதி தாத்தா, கலாம் தாத்தா, நயன் தாரா அக்கா என்று டீவியைப் பார்த்து சொல்ல ஆரம்பித்து விட்டான். எல்லாவற்றையும் விடக் கொடுமை, ஒருமுறை மேயர் சைதை துரைசாமியைப் பார்த்து சைத்தா துர்சாமி பெரிப்பா என்று கத்தினானாம். எப்படியோ இன்னொரு அபர்ணா உருவாகிறது.
சரி, அது இருக்கட்டும். அந்த எலெக்ரிகல் வேலையை வைத்து சில்க் ஸ்மிதா வீட்டுக்குள் நுழைந்தீர்களே? சான்ஸ் கிடைச்சுதா, ஒரு இழுப்பு இழுத்துருக்க வேண்டியதுதானே?
அட நீங்க வேறே சித்தப்பா, இவுராவது இழுக்கிறதாவது. நான் சொல்லிட்டுத்தான் போனேன். முடிஞ்சா பாரு நீயுன்னு. வேற பொண்ணப் பார்த்தா தானே இந்த அபர்ணாவோட அருமை தெரியும்? காலைலேர்ந்து அங்க நின்னுட்டு சாய்ங்காலம் பேயடிச்சா மாதிரி வந்துச்சு அசடு.
ஏன், என்ன நடந்தது?
அது கிட்டயே கேளுங்க. ஏய் சொல்டா என் புருஷா.
வாசு சொல்ல ஆரம்பித்தான். அது வந்து சூர்யா… உள்ளே போனேனா… ஏதோ எலி செத்த நாத்தம். சகிக்க முடியல. ஏதாவது எலி கிலி செத்து கிடக்கான்னு வாயை விட்டே கேட்டுட்டேன். நான் மட்டுமில்ல… வேலை செய்ய வந்த ரெண்டு பசங்களும் மூக்கைப் பிடிச்சுக்கிட்டே வேல செஞ்சானுங்க. கடைசில பார்த்தா அது நாலு நாளா தேய்க்காத பத்துப் பாத்திரம். பாத்திரத்தில புழு நெளிஞ்சு ஓடிச்சு சூர்யா. அங்கங்கே அழுக்குத் துணிங்க… பிரா பேண்டீஸ்லாம் அழுக்கு அழுக்கா மூட்ட மூட்டயா குமிஞ்சு கெடக்கு… வெக்கங்கெட்டவ… அப்படியே பித்துப் புடிச்சாப்ல உக்காந்தே இருந்தேன். மத்தியானம் ரெண்டு மணிக்கு டூ யு லைக் வாட்டர் அங்கிள்னு கேக்குறா நாயி… கொலைப் பட்டினி நான்… வீட்டுக்குப் போய் சாப்பிட்டு வந்துர்றேன்னும் சொல்லிப் பாத்தேன்… இதோ முடிஞ்சுடும் அங்கிள் இதோ முடிஞ்சுடும் அங்கிள்னு சொல்லியே நாலு மணி ஆயிடுச்சு. பச்சைத் தண்ணி குடிக்கலே. அங்க தண்ணி குடிச்சா டிஸண்ட்ரி தான் வந்து சாகணும்…
ஏன், அதான் வாட்டர் வேணுமான்னு கேட்டாளே, வாங்கிக் குடிக்கிறதுதானேடா புருஷா? என்று சந்தோஷமாக கும்மாங்குத்து குத்தினாள் அபர்ணா.
உனக்கு ஏன் வாசு மேல இந்தக் கொலைவெறு அபர்ணா?
பின்னே என்ன சித்தப்பா, வீட்டுல ஒரு தூசி கண்ணுல பட்டா போதும்… உனக்குப் பொறுப்பே இல்லைன்னு நடுராத்திரில கூட விளக்கமாத்தைத் தூக்கிக் கிட்டு அவரே பெருக்க ஆரம்பிச்சுர்ராரு… இப்போ பார்க்கட்டும் அந்த சிலுக்கு ஸ்மித்தாவ…
அடுத்த முறை வாசு வீட்டுக்குப் போன போதும் இன்ஸ்பெக்டர் செண்பகராமனை மறக்காமல் கேட்டாள் அபர்ணா. அப்போதும் வாசு பக்கத்தில் இல்லை என்பதை கவனித்துக் கொண்டேன். ம்ஹும். இனிமேல் இதை வளர விடக் கூடாது என்று யோசித்து, அடுத்த முறை அங்கே போனபோது மறக்காமல் கொண்டு போய்க் கொடுத்து விட்டேன்.
அப்படிக் கொடுத்த போது இப்படி ஒரு இடைஞ்சல் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்த முறை அந்தப் புத்தகம் தேவைப்படுவதற்குள் அதை வாங்கி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதோடு இன்னொரு முறையும் அதைப் படித்துக் கோடு போட வேண்டும். ம்… இதற்குத்தான் யாரிடமும் புத்தகம் ஓசியில் வாங்கக் கூடாது என்று வலுவாக நினைத்துக் கொண்டேன்.
அப்போது தி. ஜானகிராமனைப் பற்றிய கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு உதாரணத்துக்காக இருவர் கதை தேவைப்பட்டது. வாலாவின் மன்னி தன் கணவன் வாலாவை அடித்து விட்டு, தூரமானவளைத் தொட்டு அடித்து விட்டபடியால் தீட்டு நீங்குவதற்காகக் கிணற்றுக்கு அருகில் குளிக்க உட்காரும் போது அவனுக்குத் தண்ணீர் சேந்தி விடும் போது என்ன சொன்னாள்? வெள்ளிக்கிழமை மதியத்துக்குள் கட்டுரையை அனுப்ப வேண்டும். அன்று வியாழன். என்ன செய்வதென்று புரியவில்லை. காலையில் ஏழு மணிக்கே நண்பன் பிரபு காளிதாஸுக்கு ஒரு மெஸேஜைத் தட்டி விட்டேன். அவன் அடையாறில் இருக்கிறான். அவசரத்துக்கு ஓடி வருவான். தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகுவான். ஆனால் இதில் ஒரு பிரச்சினை. இப்படித் தாயாய்ப் பிள்ளையாய்ப் பழகுபவர்கள் எல்லாம் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுகிறார்கள். எத்தனையோ பேர். எத்தனையோ பேர். பலர் காரணம் சொல்லாமல் காணாமல் போவார்கள். சிலர் காரணம் சொல்லி விட்டுப் பிரிவார்கள். எப்படி இருந்தாலும் எனக்குக் காரணம் சொல்லி விட்டுப் பிரிபவர்களையே பிடிக்கும். ஒருத்தன் அடிக்கடி நீங்கள் போன் செய்து டார்ச்சர் செய்கிறீர்கள்; அது எனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருகிறது என்று சொன்னான். சரி, இனிமேல் உன் முகத்திலேயே விழிக்க மாட்டேன் என்று சொல்லி விலகி விட்டேன். அதிலிருந்து நானாக யாருக்கும் ஃபோன் செய்வதில்லை. ஒரு விஷயம் வாசகரே… எனக்கு ஃபோன் அழைப்புகள் வருவது ரொம்பக் கம்மி. ஒரு நாளில் ஒன்றோ இரண்டோ. பல சமயங்களில் அது கூட இராது. நாள் முழுக்கவும் மௌன விரதம்தான்.
அந்த ஃபோன் குற்றச்சாட்டு மட்டும் விழுந்திருக்காவிட்டால் மிகச் சுலபமாக பிரபுவுக்கு ஒரு ஃபோன் போட்டிருப்பேன். செய்ய முடிகிறதோ இல்லையோ, செய்ய முடியுமா இல்லையா என்ற விபரம் தெரிந்திருக்கும். திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செண்பகராமன் இருக்கிறது. ஆனால் நான் ஆட்டோவில் திருவான்மியூர் போய் வருவதற்குள் கட்டுரை கந்தலாகி விடும். புத்தகம் வாங்க அலைந்து கொண்டிருந்தால் கட்டுரையை எப்போது எழுதுவது? பிரபு இருந்தால் அவன் அடையாறிலிருந்து திருவான்மியூர் போய் வாங்க முடியுமா என்று கேட்கலாம். அவன் வாங்கி விட்டால் கூட நான் அடையாறு போய் அவனிடமிருந்து வாங்கிக் கொள்ள முடியும். அவனோ மெஸேஜுக்குப் பதிலே அனுப்பவில்லை. ஒருவேளை பார்க்கவில்லையோ? அல்லது, தூங்குகிறானோ? இல்லையே, நம்மைப் போல் ஒழுங்குமுறையாக வாழ்பவன் ஆயிற்றே? ஒருவேளை மெஸெஜே கிடைக்கவில்லையா? அழைத்துப் பார்க்கலாம் என்றால் இவனும் நீங்கள் ஃபோன் டார்ச்சர் கொடுக்கிறீர்கள், குட் பை என்று சொல்லி விடுவானோ என்று பயம்.
ஆனாலும் இப்போதெல்லாம் யாரைப் பார்த்தாலும் யாரோடு பேசினாலும் இவரோடு இன்னும் எத்தனை நாளோ என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை.
காலை ஒன்பதரை வரை பார்த்து விட்டு திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குப் போய் வரலாம் என்று முடிவு செய்தேன். விலாசத்தில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை என்று போட்டு கதவு எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டு கண்டு பிடிக்க முடியாதே? ஃபோன் செய்தேன். எடுத்து அடையாளம் சொன்னார் ஒரு பெண்மணி. ஐஸ் ஹவுஸுக்கும் ரத்னா கஃபேவுக்கும் இடையில் ஒரு மாடியில் உள்ளது என்று சொன்னார் அவர். நான் இம்மாதிரி இடம் கண்டு பிடிப்பதில் ரொம்ப மோசம். இங்கே மைலாப்பூரிலிருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வழியாகப் போய் திருவல்லிக்கேணியில் நுழைந்தால் ஐஸ் ஹவுஸ் முதலில் வருமா, ரத்னா கஃபே முதலில் வருமா? தெரியவில்லை. ஆட்டோக்காரரிடமே கேட்டுக் கொள்வோம் என்று நினைத்துக் கொண்டு ஓலாவுக்கு ஃபோன் போட்டேன்.
ஓலா ஒரு நரகம். சிஸ்டம் நல்ல அருமையான சிஸ்டம்தான். அதைப் பயன்படுத்தும் ஆட்டோக்காரர்களும் பயணிகளும் சரியாகப் பயன்படுத்தினால்தானே? ஆட்டோக்காரர்களுக்கு ஃபோன் போட்டு வழி சொல்வதற்குள் விழி பிதுங்கி விடும். மிகத் தெளிவாக சாந்தோம் நெடுஞ்சாலையில் லைட் ஹவுஸ் வழியாக வந்தால் எம்ப்ளாய்மெண்ட் எக்ஸ்சேஞ்சை அடுத்து இரண்டாவது ரைட், மேலே அப்பல்லோ மெடிக்கல்ஸ் என்று போர்டு தெரியும்; அதில் உள்ளே நுழைந்தால் வெங்கடசாமி தெரு; அதில் வந்து கொண்டே இருந்தால் உங்கள் இடது பக்கம் எட்டுங்கீழ் பதினைந்து, கறுப்பு கேட், தனி வீடு; வந்ததும் எனக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுங்கள் என்று சொன்னால் சொல்லிப் பத்து நிமிடம் ஆகியும் ஃபோன் வராது. நாமே மறுபடியும் கூப்பிட்டால் ”எங்கே சார் நீங்க சொன்ன வீட்டைக் காணோம்?” என்ற கேள்வி கிடைக்கும்.
நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?
மாதா சர்ச் ரோடுன்னு போட்டுருக்கு சார்.
முடிஞ்சுது கதை. அங்கே ஏன் போனீங்க? அது மூன்றாவது ரைட்டில் திரும்பினால் வரும் ரோடு. இப்போ என்ன பண்ணுங்க, அப்பு ஸ்ட்ரீட் எங்கே இருக்குன்னு கேட்டு அது உள்ளே நுழைங்க. நுழைஞ்சதும் ரெண்டாவது ரைட்ல முனைல ஒரு அம்மன் கோவில் இருக்கும். அதை ஒட்டி அப்பு முதல் தெருன்னு ஒரு பெரிய போர்டு இருக்கும்.
அப்பு முதலி தெரு தானே சார்? தெரியும் தெரியும். வந்துர்றேன்.
சார். அது இல்ல. அப்பு முதலி தெரு இல்ல. அப்பு முதல் தெரு. அப்பு முதல் தெரு. அப்பு ஃபர்ஸ்ட் ஸ்ட்ரீட். அப்பு முதல் தெரு. அது உள்ளே நுழைஞ்சு பத்து வீடு தாண்டி வந்து எனக்கு ஒரு மிஸ்ட் கால் குடுங்க. வெளியே வர்றேன்.
இதற்குள் எனக்கு லேசாக வேர்த்து நெஞ்சு வலி வந்திருக்கும். அப்போதும் அது சுமுகமாக முடிந்திராது. பத்து நிமிடத்துக்கு ஃபோனே இருக்காது. நாமே மறுபடியும் ஃபோனைப் போட்டு ”சார் எங்கே இருக்கீங்க?” என்று கேட்டால் “என்னா சார் இது, பத்து நிமிஷமா வெய்ட் பண்ணிட்டிருக்கேன். நீங்க வரவே இல்ல?” என்று கோபித்துக் கொள்வார்.
இப்படி டார்ச்சர் செய்தாரே என்று பயணம் முடிந்ததும் அவருக்கு நாம் மதிப்பெண் போடும் போது – ஐந்து வட்டங்கள் இருக்கும். ஐந்தில் மூன்றை டிக் செய்தால் ஓட்டுநர் மோசம் என்று பொருள். இரண்டு ஒன்று என்று டிக் செய்தால் ஓலாவிலிருந்து உங்களுக்கு ஃபோன் வரும். ஓட்டுநர் என்ன தவறு செய்தார் என்று கேட்பார்கள். அதன் முதலாளி லண்டனில் படித்து விட்டு வந்த யாரோ ஒரு கோடீஸ்வர இளைஞராக இருக்க வேண்டும்.
காந்தி செய்தது ரொம்ப ரொம்ப சரியான வேலை. யாரோ ஒரு கோடீஸ்வரர் வீட்டுப் பிள்ளை லண்டனோ எங்கேயோ போய் பெரிய படிப்பு படித்து விட்டு வந்திருக்கிறான். பிராமண வீட்டுப் பிள்ளை. மகாத்மாவைச் சந்தித்து இந்த தேசத்துக்காக ஏதாவது செய்ய வேண்டும்; நீங்கள் என்ன செய்ய உத்தவிடுகிறீர்களோ அதைச் செய்கிறேன் என்றானாம். காந்தி உடனே சபர்மதி ஆசிரமத்தில் உள்ள கக்கூஸை தினமும் சுத்தம் செய்யுமாறு பணித்திருக்கிறார். கொஞ்ச நாள் போனது. அவனுக்குக் கக்கூஸ் கழுவுவதில் ஒன்றில் வருத்தம் இல்லை. ஆனால் மிகப் பெரிய படிப்பு படித்திருக்கும் தன்னுடைய திறமையை இன்னும் பெரிதாக இந்த தேசத்துக்குப் பயன்படுத்தலாமே என்று அவனுக்கு சம்சயம். காந்தியிடம் வந்து சொல்லியிருக்கிறான். அப்போது காந்தி சொன்ன பதில்: நீ எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் கீழ் மட்டத்தில் என்ன நடக்கிறது என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
ஓலா முதலாளி ஒருநாள் அல்ல, பல நாட்கள் ஓலாவில் பயணம் செய்து பார்க்க வேண்டும்.
லைட் ஹவுஸிலிருந்து வருவதை விடுங்கள். பட்டினப்பாக்கத்தில் இருக்கிறேன் என்பார்கள். நேராக வந்தால் இடது கைப்பக்கம் மீனாட்சி பவன் ஓட்டல். அதை ஒட்டி ஒரு பஸ் நிறுத்தம். அந்த நிறுத்தத்தை ஒட்டி ஒரு சந்து. அதன் பெயர்தான் வெங்கடசாமி தெரு. இதுவரை ஒரு ஆட்டோக்காரர் கூட சரியாக உள்ளே நுழைந்ததில்லை. மீனாட்சி பவனின் புட்டத்திற்கு அருகில் ஒரு சந்து இருக்கிறது. அதன் உள்ளே புகுந்து மாதா சர்ச் ரோட்டுக்குள் போய் எங்கேயோ செயிண்ட் மேரீஸ் கல்லறைக்குப் போய் விடுவார்கள். இன்னும் கொஞ்சம் போ, உயிர்மை ஆஃபீஸ் வரும். மனுஷ்ய புத்திரனைப் பார்த்துக் கும்பிடு போடு. தீமூகாவில் சேர்த்து விடுவார் என்று நினைத்துக் கொள்வேன்.
இந்த ஆட்டோக்காரரும் இப்படி எல்லா வான வேடிக்கைகளையும் காண்பித்து விட்டு ஒருவழியாக வந்து சேர்ந்தார். நீங்கள் கேட்கலாம், நீ எதற்கு இத்தனை பாடுபட்டு ஓலா ஆட்டோவுக்குப் போகிறாய், தெருவில் வரும் ஆட்டோவைப் பிடியேன் என்று. திருவல்லிக்கேணி போக மீட்டரில் 50 ஆகும் என்றால் ரோடு ஆட்டோவில் 150 ரூபாய் கேட்பவர் மகாத்மா என்பேன். 200 தான் கேட்பார்கள். ஓலா என்றால் மீட்டர்தான். அதற்குத்தான் இத்தனைப் பாடு.
ஆட்டோக்காரரிடம் புத்தகக் கடை பற்றிச் சொல்லி, நாம் இங்கிருந்து போகும் போது ரத்னா கஃபே முதலில் வருமா, ஐஸ் ஹவுஸ் முதலில் வருமா என்று கேட்டேன். ஐஸ் ஹவுஸ் தான் முதலில் வரும். ஆக, அதிலிருந்து ரத்னா கஃபே வருவதற்குள் நம் கடை இருக்கிறது.
போய்க் கொண்டிருக்கும் போது ஷங்கர் ஃபோன் செய்தார். ராஸ லீலா படித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ரொம்பவும் ஆர்ப்பாட்டமாகப் பேசினார். ரயிலில் அலுவலகம் வந்து கொண்டிருக்கும் போது படிப்பதாகச் சொன்னார். கிட்டத்தட்ட 500 பக்கத்தை முடித்து விட்டதாகவும் படு சுவாரசியமாகப் போவதாகவும் இன்னும் பிறவும் சொன்னார். அதுவே பெரிய பாராட்டு தான். இதுவரை என்னை சக எழுத்தாளர்கள் யாரும் பாராட்டியதில்லை, அதுதான் முதல் அனுபவம் என்பதால் ரொம்ப ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அசோகமித்திரனாக இருந்தால் நீங்கள் ஏதோ ஊருக்குப் போவதாகச் சொன்னீர்களே, போய் வந்து விட்டீர்களா என்று எதையாவது கேட்டு பேச்சை மாற்றியிருப்பார். அந்த அடக்கம் நமக்கு இல்லை. பாராட்டுக்காக மனம் ஆலாய்ப் பறக்கிறது.
சார், ரத்னா கஃபே வந்து விட்டது; இறங்குங்கள் என்றார் ஆட்டோக்காரர்.
ஒரு நிமிஷம் பொறுங்கள் என்று ஆட்டோக்காரரிடம் கடுமையான குரலில் சொல்லி விட்டு ஷங்கரிடம் புத்தகம் வாங்க வந்த விஷயத்தைச் சொன்னேன். எங்கே இருக்கிறது அந்தப் புத்தகக் கடை, ஏதாவது விபரம் தெரியுமா, நீங்கள் போயிருக்கிறீர்களா?
“ஐயோ, நீங்க ஏன் இதுக்கெல்லாம் அலைந்து கொண்டு? நான் கௌதமனிடம் சொல்கிறேன். அந்தப் புத்தகக் கடை ஓனர் நம் கௌதமனுக்கு நண்பர்தான். யார் மூலமாகவாவது அந்தப் புத்தகத்தை உங்கள் வீட்டில் சேர்த்து விடுவார்.”
ஷங்கரிடம் விஷயத்தை விளக்கினேன். மதியத்துக்குள் கட்டுரையை முடிக்க வேண்டும்.
சரி, நான் அந்தக் கடை எங்கே இருக்கிறது என்று விசாரித்துச் சொல்கிறேன்.
பிறகு நான் மீண்டும் அந்தக் கடைக்கே ஃபோன் செய்தேன். இப்போது பேசியது ஒரு ஆண். சார், ரத்னா கஃபேவ்லேர்ந்து திரும்பி வந்தீங்கன்னா உங்க இடது கைப்பக்கத்துல ஒரு டாஸ்மாக் இருக்கும். அதோட மாடிதான்.
ஓ, பெண்களால் எப்படி டாஸ்மாக் அடையாளத்தைச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்ஸ்பெக்டர் செண்பகராமன் இருந்தது. வாங்கிக் கொண்டு கூடவே கிருஷ்ணன் நம்பி கதைகள் தொகுப்பும் ஒரு 350 ரூபாய்க்கு வாங்கிக் கொண்டு திரும்பினேன். ஆட்டோவில் வரும் போது ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டேன். மைலாப்பூரில் இருப்பதால் இப்படி நினைத்த சமயத்தில் புத்தகத்தை வாங்க முடிந்தது. இதுவே போரூராகவோ சின்மயா நகராகவோ இருந்தால் முடியுமா? உயிரே போனாலும் சரி, மைலாப்பூரை விட்டு நகரக் கூடாது என்று முடிவு செய்து கொண்டேன். ஏனென்றால், இதுவரை வாழ்க்கையில் நான் வித்யா சொன்ன எந்த விஷயத்துக்கும் எதிர் முடிவு எடுத்ததே இல்லை. இப்போது அவள் ஊரை விட்டு ஒதுக்கமாகப் போய் விடலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். வாடகை கம்மியாம். எல்லாம் மகாபலிபுரம் போகும் வழி. இல்லாவிட்டால் போரூர். நீ வராவிட்டால் போ. நான் போகத்தான் போகிறேன் என்றாள். போய்க் கொள் என்று சொல்லி விட்டேன். வாழ்க்கையில் முதல்முதலாக என் முடிவின்படி வாழப் போகிறேன்.
வீட்டுக்கு வந்து பார்த்தால் ஏற்கனவே வாங்கிய கிருஷ்ணன் நம்பி கதைகள் தொகுப்பு மேஜையின் மேல் இருந்தது. சே. 350 ரூ. போயிற்று.
கதை இன்னும் முடியவில்லை. சொன்னபடி கட்டுரையை எழுதி அனுப்பி விட்டேன். மறுநாள் சனிக்கிழமை அன்று பனுவல் புத்தக நிலையத்தில் அசோகமித்திரன் பற்றி ஒரு பேச்சு. அதற்கும் இன்ஸ்பெக்டர் செண்பகராமன் உதவியாக இருந்தது. டாக்டர் ஸ்ரீராமும் வந்திருந்தார். பேச்சு நன்றாக இருந்தது என்றார். பிரபுவும் வந்திருந்தார். புகைப்படக் கலைஞர். என் மெஸேஜ் பற்றிக் கேட்க நினைத்தேன். பேச்சு முடிந்ததும் கிளம்பி விட்டார். கேட்க முடியவில்லை.
நானும் ஸ்ரீராமும் பக்கத்தில் இருந்த ஹாட் சிப்ஸ் என்ற கடையில் ரொம்பப் பாடாவதியான ஒரு இரவுச் சாப்பாட்டை முடித்தோம். இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டுத் தருகிறேன் என்று கேட்டார் ஸ்ரீராம். ஸ்ரீராம் கேட்டால் என் உயிரையே தர வேண்டும். அந்த அளவுக்கு எனக்காகப் பல வேலைகளை, பல உதவிகளைச் செய்கிறார். கொடுத்து விட்டேன்.
இன்ஸ்பெக்டர் செண்பகராமனுக்கும் எனக்கும் ஏதோ ராசி இல்லை போலிருக்கிறது.
இன்று காலை பிரபு காளிதாஸுக்கு ஃபோன் செய்யலாமா வேண்டாமா என்று சுமார் இரண்டு மணி நேரம் யோசித்து விட்டு ஃபோன் செய்தேன். வழக்கமான கலகலப்பான தொனியில் பேசினார்.
வெள்ளிக்கிழமை என் மெஸேஜ் கிடைத்ததா?
ஓ அதுவா, அது நாம அதுக்கு முந்தின நாள் ஃபோட்டோ செஷனுக்காகப் போனோம் இல்லியா, அன்னிக்கு அனுப்பின மெஸேஜ்னு நினைச்சுட்டேன் சார்.