பொதுவாக மனிதர்களிடம் காணப்படும் அடிப்படை உணர்வுகள் சில என்னிடம் இல்லை என்பதை என் வாழ்நாளில் ஆச்சரியத்துடன் கவனித்து வருகிறேன். உருகி உருகி நான் அன்பு செலுத்திக் கொண்டாடிய மகள் பிரிந்தாள். ஒரு குட் பை சொன்னதோடு முடிந்தது. பத்து ஆண்டுகள் என் மீது உயிரையே வைத்திருந்த ஒரு பெண் “உன்னைப் பிரிகிறேன்” என்றாள். ஸலூட். நைனா காலைல இறந்துட்டாங்கண்ணெ… என்றான் தம்பி. ”அப்படியா, ஒரு பத்திரிகைக்கு (உயிர்மை) அவசரமா கட்டுரை எழுதிக்கிட்டிருக்கேன்… முடிஞ்சதும் கிளம்பி வந்துர்றேன். அதுக்குள்ள நேரமாயிருச்சுன்னா பாடிய எடுத்திருங்க, எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்.” உயிருக்குயிராய்ப் பழகிய நண்பனோடு இலக்கியம் தொடர்பாக பிணக்கு வந்தது. வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஒரு சினிமா இயக்குனர் “இப்போது தமிழில் என்ன முக்கியமான நாவல்?” என்று என் நண்பனைக் கேட்டிருக்கிறார். இவன் எஸ். ராமகிருஷ்ணனின் யாமம் படித்துப் பாருங்கள் என்றான். ”ஏன் என்னுடைய நாவலையும் சொல்லவில்லை; இனிமேல் உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. குட்பை.” என்னைப் பொறுத்தவரை அந்தப் பிரிவுக்கு அதுதான் காரணம். இப்படி எத்தனையோ பிரிவுகள்; உறவுகள், நட்புகள். எல்லாவற்றுக்கும் அடிப்படை இலக்கியம் மட்டுமே. என்னைப் பொறுத்தவரை. இலக்கியத்துக்கு வெளியிலான உறவுகள் என்னைப் பொறுத்தவரை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதவை.
30 ஆண்டுகளுக்கு முன்பு என் நைனாவிடம் அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தேன். ஓரிரு பக்கங்களைப் படித்து விட்டு, ”புக்கா இது, உனக்கு
அறிவழகன்னு பேர் வச்சது தப்பு போல்ருக்கே” என்று சிரித்தபடி அதைத் திருப்பிக் கொடுத்து விட்டார். அசோகமித்திரன் தான் நவீனத்துவத்தின் உச்சபட்ச வெளிப்பாடு என்பதை நான் கடந்த 25 ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அவருக்கு என் எழுத்து பிடிக்காது என்பதும் எனக்குத் தெரியும். இது ஒரு பக்கம்.
வெங்கட் சாமிநாதன் எனக்கு என் தந்தையைப் போன்றவர். தில்லியில் நான் அனாதையாகக் கிடந்த போது எனக்குத் தன் வீட்டில் இடம் கொடுத்துப் பாதுகாத்தவர். தில்லி குளிரை எப்படிச் சமாளிப்பது என்பதிலிருந்து தில்லியின் சிறந்த உணவகங்கள் எவை என்பது வரை தில்லியை எனக்கு அறிமுகப்படுத்தியவர். என் நைனாவுக்குப் பிறகு என்னை போஷித்த ஒரு ஆண் வெ.சா. தான். ஆனால் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், க.நா.சு. போன்றவர்களை போலி என்று தன் வாழ்நாள் பூராவும் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்காக நான் வெ.சா.வை வெறுக்கவில்லை. என் தந்தையை வெறுத்தேனா? எனக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் எந்த உறவு உரசலும் இல்லை. என்னுடைய உயிர் மூச்சாக இருப்பது அவருக்கு அசிங்கமாக இருந்தது. அவ்வளவுதான். எனக்கும் என் தந்தைக்குமான உறவு எப்படியோ அப்படித்தான் வெ.சா.வுக்கும் எனக்குமான உறவு. இப்படிப்பட்ட லௌகீக உறவுகளில் எனக்கு மரியாதையோ அக்கறையோ கவனமோ கிடையாது. எனவேதான் வெ.சா. பற்றி அவரது மறைவு தினத்தில் எதுவும் எழுதவில்லை. அசோகமித்திரனையும் ஞானக்கூத்தனையும் க.நா.சு.வையும் மதிக்க அறியாதவர்களோடு எனக்கு என்னவிதமான பிணைப்பு இருக்க முடியும்? எனவே அழகிய சிங்கர் வெங்கட் சாமிநாதன் இரங்கல் கூட்டத்துக்கு அழைத்த போது அன்புடன் மறுத்து விட்டேன். மற்றபடி வெ.சா. பற்றி ஜெயமோகன் எழுதியிருந்த நான்கு கட்டுரைகளை என்னுடைய கருத்தாகவே நீங்கள் கொள்ளலாம். ஒரு காலகட்டத்தின் எதிர்ப்புக் குரல் வெங்கட் சாமிநாதன். அவ்வளவுதான். அதாவது கருணாநிதி, அண்ணாதுரை போன்றவர்களுக்கு எதிரான குரல் அது. எனக்குக் கருணாநிதியே யார் என்று தெரியாத போது அதற்கு எதிர்க்குரலை வைத்து நான் என்ன செய்வது?
அசோகமித்திரனின் படைப்புகள் பற்றி பனுவலில் வரும் சனிக்கிழமை மாலை 6.30க்கு பேசுகிறேன். மது அருந்துவதை நிறுத்திய பிறகு பேச்சு என்பது ஐப்பசி மழை போல் அடித்துக் கொண்டு வருகிறது. உணர்வுகள் கூர்மை அடைந்து விட்டன என்று நினைக்கிறேன். வாசகர் வட்ட நண்பர்கள் சாக்கு போக்கு சொல்லாமல் வந்து விட வேண்டுகிறேன். நாள் 24. சனிக்கிழமை. மாலை ஆறரை. பனுவல் புத்தக நிலையம், 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர்.
(திருவான்மியூர் சிக்னல் , திருவான்மியூர் பேருந்து நிலையம் மற்றும் BOMBAY DYEING SHOW ROOM அருகில்) |