நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்த்தால் தெரியும், இப்போது அரசாங்க விளம்பரம் மூலம் பரவலாகத் தெரிய வந்திருக்கும் நிலவேம்புக் கஷாயம் பற்றி அப்போதே எழுதியிருப்பேன். (இப்போதைய எழுத்தாளர்களுக்கு இப்படி ஒரு வாக்கியம் கூட எழுதத் தெரியவில்லை என்று இதை எழுதும் போது தோன்றுகிறது!) அது ஏன் இன்று ஞாபகம் வந்ததென்றால், நேற்றைய லா.ச.ரா. கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் என்று போட்டிருந்தும் வாசகர் வட்டத்திலிருந்து ஐந்து பேர் தான் வந்திருந்தனர். அந்த ஐந்தில் நான்கு பேரை நான் தினந்தோறும் சந்திக்கிறேன்; ஐந்தாவது நபர் டாக்டர் ஸ்ரீராம். அவரோடு தினமும் ஐந்து முறை பேசி விடுகிறேன். இந்த ஐந்து ஆத்மாக்களைத் தவிர வேறு ஒருவரும் வரவில்லை. அது மட்டும் அல்ல; நான் பேசும் எந்தக் கூட்டத்துக்குமே வருவதில்லை. இந்த ஐந்து பேர் தான் தவறாமல் ஆஜராகிறார்கள்.
என்னதான் காரணம், ஜனவரி 9-ஆம் தேதி விழாவுக்குப் பணமெல்லாம் கட்டியாயிற்று, அரங்கத்தின் கொள்ளளவு 800, யாரும் வருவார்களா இல்லையா, அல்லது இந்த ஐந்து பேரை மட்டுமே வைத்துக் கொண்டு வெளியீட்டு விழா நடத்துவதா என்று சந்தேகம் வந்து இன்று காலை பத்து வாசகர் வட்ட நண்பர்களுக்கு நானே போன் பண்ணினேன். நம்ப மாட்டீர்கள். பத்து பேருக்கும் ஜுரம்.
திரும்பத் திரும்ப சொல்கிறேன். வாரம் ஒருமுறை காலையில் நிலவேம்புக் கஷாயம் குடித்தால் இப்படி ஜுரம் வராது. நிலவேம்பு வேர் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். அதை வாங்கி வந்து ரெண்டு டம்ளர் தண்ணீரில் போட்டு அதை ஒரு டம்ளராகக் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் வாரம் ஒருமுறை குடித்தால் ஜுரமே வராது. வந்த ஜுரமும் போய் விடும். ஒரு நண்பர் அப்படி குடித்து விட்டு, என்னைக் கொல்லப் பார்க்கிறீர்கள் என்று புகார் செய்தார். அவ்வளவு கசக்கிறதாம். அடப் பாவிகளா, கசப்பு ஒரு ருசி ஐயா!
சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஜனவரி 9-ஆம் தேதி மாலை ஆறரை மணிக்கு என் புத்தக வெளியீட்டு விழா நடக்கும். எடிட்டர் லெனின், மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர் சமஸ் பேசுவார்கள். அடியேனும் பேசுவேன். குறைந்த பட்சம் ஐந்து நூல்கள் வெளியிடப்படும். துக்ளக்கில் 2011-இல் வெளிவந்த கட்டுரைகள், புதிய தலைமுறையில் எழுதிய வேற்றுக்கிரகவாசியின் நாட்குறிப்புகள், அந்திமழையில் வந்த அறம் பொருள் இன்பம் கேள்விபதில், பாலியல் தொழிலாளியாக இருந்து பின்னர் எழுத்தாளராக மாறிய நளினி ஜமீலாவுடன் நான் நடத்திய உரையாடல் (புத்தகத் தலைப்பு: பாலியல்: நளினி ஜமீலாவுடன் ஒரு உரையாடல்), விகடனில் வெளிவந்த மனங்கொத்திப் பறவை, காமரூப கதைகள் (மறுபிரசுரம்), புதிய எக்ஸைல் (பிழை திருத்தப்பட்டது- மறு பிரசுரம்) ஆகிய புத்தகங்கள் வெளிவரும்.
அரங்கத்துக்கு 45,000 ரூபாய் கட்டினேன். இதுவரை நான்கு வாசக நண்பர்கள் ரூ.100, 1000, 5000, 20000 அனுப்பியுள்ளனர். ஒரு நண்பரிடம் 20000 ரூ. கடன் வாங்கி அரங்க வாடகை முழுமையாகக் கட்டி விட்டேன். நான் பொதுவாகக் கடன் வாங்குவதில்லை, திருப்பிக் கொடுக்க முடியாது என்பதால். இன்னும் சுமார் 50000 ரூபாய்க்கு செலவு இருக்கிறது. இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு வெளியீட்டு விழா தேவையா என்று மனதில் தோன்றிக் கொண்டே இருக்கிறது. க்ரியா பதிப்பகம் என்ன வாசகர் விழாவா நடத்துகிறது? அவர்கள் வெளியிட்ட பூமணியின் அஞ்ஞாடி ஏதோ ஒரு பெரிய பரிசு பெறவில்லையா? பரிசு பெறுவதற்கு முன்னாலேயே அந்த நாவல் பிரபலம் ஆயிற்றே? கிழக்கு பதிப்பகமும் ஒன்றும் வெளியீட்டு விழா நடத்துவதில்லையே? உயிர்மை மட்டும்தான் மிக ஆடம்பரமாக, தடபுடலாக வெளியீட்டு விழா நடத்துகிறது. இப்படியெல்லாம் யோசித்தேன். ஆனால் வாசகர் வட்டத்தின் நெருங்கிய நண்பர்கள் விருப்பப்படுவதால் அதை நான் தட்ட முடியவில்லை.
முடிந்தவர்கள் பணம் அனுப்புங்கள்.
A/c holder Name: K. ARIVAZHAGAN
Bank Account Number : 911010057338057
Bank name: Axis Bank
Branch Name: Mylapore
IFSC code : UTIB0000006
MICR code : 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
IFSC CODE ICIC0000212 (5th character is zero)
MICR Code : 600229021