தேவலோகத்து மங்கையும் சில பாடல்களும்…

நேற்றைய ரஷ்யன் செண்டர் கூட்டத்தில் நான் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை.  300 பேர் கொள்ளளவு உள்ள அரங்கில் 100-125 பேர் தான் வந்திருந்தனர்.  போதாது.  அதிலும் லா.ச.ரா.வுக்குப் போதாது.  சரியான விளம்பரம் இல்லையோ என்னவோ.  நான் விளம்பர வேலைகளில் ஈடுபடவில்லை.  நான் ஒரு 50 நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தால் 40 பேராவது வந்திருப்பார்கள்.  எனக்கு அதற்கு நேரம் இல்லாமல் போய் விட்டது.  காரணம், திருப்பூர் கிருஷ்ணன்.  திருப்பூர் கிருஷ்ணன் பேசும் கூட்டத்தில் என்னை சிறப்புப் பேச்சாளர் என்று போட்டு விட்டதால் டென்ஷனாகி விட்டேன்.  அவரெல்லாம் தங்குதடையில்லாமல் மணிக்கணக்கில் பேசுவார்.  நான் அவர் பேச்சில் சொக்கியிருக்கிறேன்.  அதிலும் ரொம்ப விஷயத்தோடு பேசுவார்.  பொதுவாக எனக்கு யாராவது சுத்தத் தமிழில் பேசினால் பிடிக்காது.  ஆனால் திருப்பூர் கிருஷ்ணன் சுத்தத் தமிழில்தான் பேசுவார்.  ஆனால் கேட்கும் போது அது சுத்தத் தமிழாகவே தோன்றாது.  தென்றலில் திளைப்பது போல் இருக்கும்.

நேற்று வேறு அவந்திகாவுக்குக் கடும் ஜுரம்.  நாள் முழுதும் வீட்டு வேலை நொக்கியெடுத்து விட்டது.  கூட்டத்துக்குக் கிளம்பும் போது கூட மருந்துக் கடைக்குப் போய் மருந்து வாங்கிக் கொடுத்து விட்டே வந்தேன்.  கூட்டத்தில் அமர்ந்திருக்கும் போதே ஐந்தாறு மிஸ்ட் கால்.  கூட்டம் முடிந்து விழுந்தடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்ததும் பார்த்தால் பிரகாசமாக இருந்தாள்.  நிலவேம்பு குடித்தாளாம்.  கடவுளே!  பிறகு முன்பே எழுதி வைத்திருந்த தி.ஜா. கட்டுரையைச் செப்பனிட்டு அனுப்பி விட்டுத் தூங்குவதற்கு நள்ளிரவு ஆகி விட்டது.  இதெல்லாம் எனக்கு ஆகாது.  எந்நேரமானாலும் பத்தரைக்குப் படுக்கையில் விழுந்து விட வேண்டும்.  இல்லாவிட்டால் எல்லாம் குழப்பமாகி விடும்.  இன்று எழுந்து கொள்ளும் போது காலை மணி எட்டு.  நடைப் பயிற்சி போயிற்று.  மக்களெல்லாம் எப்படித்தான் இரவு பனிரண்டுக்குப் படுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

நேற்று ஓரளவு 40 மதிப்பெண் பெற்றுத் தேர்வாகி விட்டேன் என்றே நினைக்கிறேன்.  மூளையிலிருந்து பேசவில்லை.  இதயத்திலிருந்து பேசினேன்.  ஜனனி கதையை என் பதின்பருவத்தில் படித்த அந்த உணர்வைத் திரும்பக் கொண்டு வந்தேன்.  ஆனால் இந்த 62 வயதில் அவள் எனக்கு மகளாகத் தோன்றினாள்.  கண்ணீர் வந்து விட்டது.

கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று இன்று முழுவதும் இசை கேட்டேன்.  நாகூரில் வளர்ந்ததாலோ என்னவோ சூஃபி இசை கலந்த இசைதான் ரொம்பப் பிடிக்கிறது.  ஸஜ்ஜத் அலி என்ற இந்தப் பாகிஸ்தானியப் பாடகரைக் கேட்டேன்.  கனம் இல்லாத ஒருவித பெண்மை கலந்த அவர் குரல் என்னை அசத்தி விட்டது.  உடன் பாடும் ஃபரீஹா பர்வேஸும் (ஆஹா, என்ன ஒரு பெயர்!) அருமை.   ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  கோக் ஸ்டுடியோவின் இந்திய இசை நிகழ்ச்சிகளை விட அதன் பாகிஸ்தான் இசை நிகழ்ச்சிகள் அபாரமாக இருக்கின்றன.

ஃபரீஹா பர்வேஸின் ஒரு அபாரமான பாடலை சென்ற ஆண்டு இதே மாதம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தேன்.  அந்தப் பாடல் (ஜோகி) ஒரு அதிசயம்:

பர்வீன் சுல்தானா.  கேட்கவே வேண்டாம்.  என் இளம் வயதிலிருந்தே என் தேகத்தில் ஓடும் குருதி அவர் இசை.

பின்வருவது பர்வீன் சுல்தானாவும் ராஹத் ஃபத்தே அலி கானும்.  ராஹத்தின் தீவிர ரசிகன் நான்.  இருவரும் சேர்ந்த அற்புதம்.  இறைவனை நேரிலேயே பார்த்துப் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது.

திரும்பவும் ஸஜ்ஜத் அலி.  ஈடு இணையில்லாத குரல்.  இத்தனை நாள் இவரை எப்படிக் கேட்காமல் போனேன் என்று தெரியவில்லை.  பின்னணி குரல் கொடுக்கும் இரண்டு பெண்களில் வலது ஓரத்தில் நிற்கும் பெண் பேரழகியாகத் தெரிகிறார்.  அபூர்வமான அழகு.

இவர் நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

குன்ரா (Gunrra) என்ற பஷ்ட்டு இனத்துப் பாடகியைக் கேட்டேன்.  தேவலோகப் பெண் போல் இருக்கிறார்.  ஆனால் குரல் நன்றாக இல்லை.  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

timthumb