லா.ச.ரா.வின் எழுத்தில் கரைந்த இன்னொரு இதயம்…

மதிப்பிற்குரிய சாரு

நீங்கள் லா.ச.ரா வை பற்றி ஆற்றிய உரையை கண்டேன். உண்மையான உணர்ச்சிகளுடன் ஆத்மார்த்தமாகப் பேசியதாகத் தோன்றியது. எனக்கு மிகவும் பிடித்த என்று சொல்வதைவிட எனக்கு வாசிப்பனுபவத்தின் உன்னதத்தை விளக்கியவர் லா.ச.ரா என்று கூறுவேன். இத்தனைக்கும் எந்த வித முன்னறிமுகமும் இல்லாமல் அவரை வாசிக்கத் தொடங்கியது இன்னும் என் நினைவில் இருக்கிறது.

ஒரு 2 மணி நேர பேருந்து பிரயாணத்தில் நேரம் கடத்துவதற்காக என் அம்மாவின் புத்தக அலமாரியின் மூலையில் இருந்த கழுகு நாவலை படிக்கலாம் என்று உத்தேசித்து அதை எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணி நேரத்தில் நான் படித்தது 10 பக்கங்கள் மட்டுமே. லா.ச.ரா வின் சொல்லாடலில் வீழ்ந்திருந்தேன். என்னால் கடந்து செல்ல முடியவில்லை. மீண்டும் மீண்டும் கழுகை படித்துக் கொண்டே இருந்தேன். 5 மாதங்களுக்குப் பின் அதை முடித்தேன்.

எனக்கு அந்த உணர்வைப் பற்றிய புரிதல் அறவே இல்லை. என்ன நடந்தது என்று என்னால் சரியாக அவதானிக்க முடியவில்லை. உங்கள்  உரையில் அதற்கான விடை கிடைத்தது. நீங்கள் வேதங்களுடன் லா.ச.ரா வின் எழுத்தை ஒப்பிட்டுப் பேசவேண்டிய நிச்சயத்தை எடுத்துக் கூறியபோது வேதங்களின் நிகரற்ற படிமங்களுடன் அவர் எழுத்து ஒத்திருப்பதை உணர்ந்தேன். அவர் எழுத்து மந்திரமாக ஜபிக்கப் பட வேண்டியது என்று தோன்றுகிறது.

அதேபோல் புத்ர படித்து முடித்த பின் வேறெந்த புத்தகத்தையும் என்னால் படிக்க முடியவில்லை (இதில் அசோகமித்திரனின் ஒற்றனும், தி.ஜா வின் நளபாகமும் அடக்கம். 2 மாதங்களுக்குப் பின் இரண்டையும் முடித்தேன்) . அதன் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. இதுவரை 5-6 முறை படித்து விட்டேன். அதன் மொழிபின் மேலும் அமைப்பின் மேலும் எனக்குள்ள மோகம் கூடிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் புத்ர-வை பற்றி கூறியதைத் தாண்டி அதில் மிக முக்கியமான இடமாக நான் கருதிய ஒரு பகுதியை என் வலைப்பூவில் விரிவாக எழுதியிருக்கிறேன் ( http://orukozhiyinkooval.blogspot.in/2015/09/La-sa-ramamritham-books-observations-2.html) . அள்ள அள்ளக் குறையாமல் கொடுக்கும் அக்ஷயப் பாத்திரம் அந்த நாவல். “நுரைக்கு அடியில் இருக்கும் பாலின் கனம்” என்று அவர் எழுதியிருந்ததை மட்டுமே கணக்கில்லாமல் வாசித்தேன்.

லா.ச.ரா வின் எழுத்தை நனவோடை என்று சொல்லாமல் அது psychedelic என்று கூறியிருந்தீர்கள். ஒரு வகையில் அது சரி என்று பொருள் கொள்ளலாம். அனால் psychedelic என்பது ஒரு போதை நிலை மட்டுமே. லா.ச.ரா எனக்குத் தெரிந்து ஒரு surreal படைப்பாளி. நிதர்சனங்களையும் தர்க்கங்களையும் தாண்டி அவர் வேறேதோ ஒரு பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றும். அவர் ஒரு முறை (“சிந்தா நதி” / “விளிம்பில்” என்று  நினைக்கிறேன்) கட்டிலிலிருந்து எழுந்து தான் படுத்திருப்பதை தானே பார்ப்பதாய் சர்வசாதாரணமாக எழுதியிருப்பார். தன்னிலையிலிருந்து பிரிந்து தன்னைத் தானே காணும் ஒரு காட்சி. அது தெய்வக் கிருபை என்ற ரீதியில் எழுதியிருப்பார். அதை நினைவில் காட்சிபடுத்த நினைத்து தோற்று போயிருக்கிறேன். It’s a surreal feeling.

லா.ச.ரா ஒரு குறுகிய வட்டத்தில் மட்டுமே தன் கதையை அமைத்திருக்கிறார் என்று அவரை விமர்சிப்பவர்களுக்கு பதிலாக அமரர் வெ.சா எழுதியதை ஜடாயுவின் கட்டுரையில் கண்டபோது அதை விட ஆகச் சிறந்த ஒரு விளக்கம் இருக்க முடியாது என்று தோன்றியது ( http://www.tamilhindu.com/2012/05/la-sa-ramamirtham-2/) . தாகூரின் கவிதை ஒன்றில் உலகத்தை சுற்றி எல்லாவற்றையும் கண்ட  ஒருவன் வீடு திரும்பியபோது, புல்லில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பனித்துளியை தன் குடிசையின் முன் காண்கிறான். சலனமற்று இருக்கும் அந்தப் பனித்துளியில் உலகத்தின், மனிதத்தின் சீரழிவு எதையும் காண முடியவில்லை. அப்பழுக்கற்று ஸ்படிகமாய் அது மின்னிக் கொண்டிருந்தது. லா.ச.ரா வின் எழுத்து அந்த ஸ்படிகத்தை போன்று தூய்மையானது.

லா.ச.ரா வை பற்றி பேசும்போது மட்டும் சமநிலை இழந்து விடுகிறேன். கிட்டத் தட்ட அவரின் உபாசகர் போல் ஆகிவிடுகிறேன். அதனால்தான் என்னால் அவர் படைப்பை பற்றி நடுநிலையான கருத்துக்களை எடுத்துக் கூற முடியவில்லை. அவரை வெறும் எழுத்தாளராக என்னால் பொருட்படுத்திக் கொள்ள முடியவில்லை. உங்களுக்கு தகப்பன்போல, எனக்கும் ஒரு பாட்டன் ஸ்தானத்திலிருந்து என்னை ஒவ்வொரு நொடியும் வழி நடத்திக் கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் அவரை நான் வாசிக்கத் தொடங்கியபோது அவர் உயிரோடு இல்லை.

Thanks
Jagan K

டியர் ஜகன்

தினமணியில் தி.ஜா. முடிந்ததும் அடுத்து லா.ச.ரா.வையே எடுப்பேன்.  அப்போது உங்கள் கடிதத்தையும் கவனத்தில் கொள்வேன்.  வெ.சா. உதாரணம் படித்தேன்.  அந்தக் கட்டுரையை முன்பே படித்து விட்டேன்.  வெ.சா. தன் வாழ்நாள் முழுவதும் ஆதவன், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் போன்ற பலரையும் போலிகள் என்றும் இன்னும் பலவாறாகத் தூற்றியும் எழுதியவர்.  அதையெல்லாம் படித்தால் ரத்தக் கண்ணீர் வரும்.  கடைசி நாள் வரை அதைச் செய்து கொண்டிருந்தார்.  அவர் கொண்டாடிய, வியந்த இரண்டே பேர் தி.ஜா.வும். லா.ச.ரா.வும்தான்.  மதவாதிகள், என் கடவுள் தான் கடவுள், உன் கடவுள் சைத்தான் என்று சொல்வது போன்ற fanaticism வெ.சா.விடமிருந்தது.  அப்படிப்பட்ட fanatics-இன் வார்த்தைகளை நான் மதிப்பதில்லை.  மதவெறி இலக்கியத்தில் ஆகவே ஆகாது.   உங்களைப் புண்படுத்த வேண்டும் என்று இதை எழுதவில்லை.  நான் எல்லாவற்றையும் சேர்த்து முழுமையாகத்தான் பார்ப்பேன். வெ.சா.வின் உதாரணம் அருமையாக இருந்தது.  ஆனால் அதை நான் படித்த போது வெ.சா. அசோகமித்திரன் பற்றி எழுதிய எல்லாமும் என் நினைவில் வந்து தொலைத்தது.
மற்றபடி உங்கள் கடிதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் என் இதயத்தில் பதிந்து கொண்டேன்.  லாசராவைப் படிக்கும் போது நீங்கள் உணர்ந்த ஒவ்வொரு கணமும் என்னுடையவையும்தான்.  லா.ச.ரா. ஒரு அற்புதம்.  வேத மனோலயத்திலேயே எழுதியவர், வாழ்ந்தவர்.
மிக்க அன்புடன்
சாரு