ஒருநாள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு நானும் நண்பரும் காரில் சென்று கொண்டிருந்தோம். காரில் என்று எழுதியதும் ஜெயமோகன் ஞாபகம் வருகிறது. சே… தம்பி ஞாபகம் இல்லாமல் ஒரு வார்த்தை எழுத முடியவில்லையே, என்னைக் காப்பாற்று இறைவா! சரி, விஷயம். கோபிக்குச் சென்று அங்கே உள்ள நந்தினி உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்தான் பயணத்தின் காரணம்.
என்னென்ன சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் சங்க காலத் தமிழர்கள் இப்படித்தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது. இப்படி ஒரு சாப்பாடு தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் இல்லை. என்னதான் குளிரூட்டப்பட்ட காரில் போனாலும் ஒரு சாப்பாட்டுக்காக இவ்வளவு தூரம் போக வேண்டுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் சாப்பிட்ட போது தான் தெரிந்தது அதன் அருமை. பொதுவாக இயற்கை உணவு நாம் சாப்பிடும் ஆபாச உணவை விட ருசி கம்மியாக இருக்கும் அல்லவா? ஆனால் கோபியில் இருக்கும் நந்தினி உணவகத்தின் உணவின் ருசி ஒப்பிட முடியாத அளவுக்கு அற்புதமாக இருந்தது. சைவம். இந்த உணவைச் சாப்பிட்டால் நோயின்றி வாழலாம் என்பது திண்ணம். தண்ணீர் கூட மூலிகைத் தண்ணீர்தான்.
சாப்பிட்டு விட்டுத் திரும்பும் போது வழியில் கவுந்தப்பாடி. ஆஹா, நம்முடைய கௌதம சித்தார்த்தன் ஊராயிற்றே! நிறுத்துங்கள் வண்டியை என்று சொல்லி விட்டு சித்தார்த்தனுக்கு ஃபோன் போட்டேன். எடுத்த எடுப்பில் யோவ், உமக்கும் எனக்கும்தான் ஜென்மப் பகை ஆயிற்றே, நீர் எதற்கு எனக்கு ஃபோன் செய்கிறீர் என்று கேட்டார் சித்தார்த்தன். ”அடப்பாவி, எவன்யா அப்படிச் சொன்னது, எதாவது உமக்குப் பைத்தியம் கிய்த்தியம் பிடித்து விட்டதா?” என்று நான். “நான் தான் சொல்கிறேன். என் பெயரை நீர் என்றைக்காவது சொன்னது உண்டா?”
“அட லூசு… பெயரைச் சொன்னால்தானா? எனக்குப் பிடித்த எத்தனையோ எழுத்தாளர்களின் பெயரை நான் சொன்னதில்லையே? தேவிபாரதியின் எழுத்து கூட எனக்குப் பிடிக்கும். பெயரைச் சொன்னால் அவருடைய நிறுவனத்தில் அவருக்கு வேலை போய் விடுமே?” என்று கேட்டேன். சித்தார்த்தனின் வெடிச் சிரிப்பு.
ஒவ்வொரு எழுத்தாளனும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவது பற்றி எத்தனை விரக்தியில் இருக்கிறான் என்று அந்தக் கணம் எனக்கு ஒரு கைப்பு உணர்வு ஏற்பட்டது. கௌதம சித்தார்த்தன் தமிழில் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கோணங்கி சென்ற புதைகுழிப் பாதைக்கு சற்று அருகேதான் சித்தார்த்தனின் பாதை இருந்தது. கோணங்கியின் பாதை அலங்காரமானது. அந்த அலங்காரத்தை நம்பி சித்தார்த்தன் பாதை மாறாமல் தன்னுடைய பாதையிலேயே சென்றார். இன்று அவர் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு குரல்.
கௌதம சித்தார்த்தனின் ப்ளாக்:
http://gouthamasiddarthan.blogspot.in/
அதேபோல் நான் பெயர் சொல்லாத எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நா. விச்வநாதன். தஞ்சாவூர். அவர் ஒரு நாவல் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல்.
எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா. நீண்ட நாள் ஆயிற்றே, என்ன சத்தமே இல்லை என்று இன்று ஃபோன் செய்தால் விபத்தில் மாட்டி மருத்துவமனையில் இருந்தேன் என்றார். ஒன்றரை மாதம் ஆயிற்றாம். மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து போயிருக்கிறார். தலையில் பலத்த அடி. ஹெல்மெட்? என்றேன். பின்னால்தானே அமர்ந்திருந்தேன் என்றார். கடவுளே, பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவருக்குத்தான் அதிக ஆபத்து உள்ளது. இனிமேல் பின்னால் அமர்ந்தாலும் ஹெல்மெட் அணியுங்கள். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்றேன். ஜாகிர் சொன்னதைக் கேட்டு பேசவே முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்தேன். தி.க.வில் இருந்த என் அருமை நண்பர் சாக்ரடீஸின் நினைவு வந்தது. இளைஞர். அன்பே உருவானவர். பைக்கில் சென்ற போது விபத்து. மரணம். ஜாகிர் பிழைத்தது இறைவனின் அருள். விரைவில் அவர் எழுதத் துவங்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.