ஏன் இந்தக் கொலைவெறி?

என்னங்க! ஒடியற் கூழ் – மரவள்ளி மாவில் காச்சுவதென கவுத்து விட்டீர்களே!  சோபா சக்தி கூழ் காச்சித் தந்தார். ஆனால் எப்படி காச்சுவதென சொல்லவில்லையா?

ஈழத்தில் கூழ் பொதுவாக பனங்கிழங்குப் பச்சை ஒடியல் மாவில் காச்சுவார்கள். அதற்கு கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கும் இருந்தால் போடுவார்கள். ஆனால் மரவள்ளி மா என்பது இல்லை.

ஈழத்தில் மரவள்ளியை  மா வாகச் சேமிக்கப்படுவதில்லை.

பனங்கிழங்குப் பச்சை ஒடியல் என்பது- பனங்கிழங்கை இரண்டாகப் பிளந்து ( நாராய் நாராய் செங்கால் நாராய் பனம்படு கிழங்கின் பிளந்தன  வாய் போல் – சங்க இலக்கியம்) வெய்யிலில் காய வைப்பது, வருடக்கணக்கில் சேமித்து வைக்கலாம். இதை இடித்து அரித்து எடுக்கும் மாவில் கூழ், பிட்டு தயாரிப்பார்கள்.

புழுக்கொடியல் – இது அவித்துத் தோல் சீவிக் காய வைத்த பனங்கிழங்கு – மாலை நேரச் சிற்றுண்டி , தேங்காய்ச் சொட்டுடன் அமிர்தமே !

பனங்கிழக்குத் துவையல் – அவித்துச்  தோல் சீவிய பனங்கிழங்குடன் பச்சைமிளகாய், வெங்காயம் , உள்ளி, மிளகு , உப்பு சேர்த்து உரலில் இடித்து உருண்டையாக்கிச் உண்பது , இதுவும் மாலை உணவே !

பேசப் போகுமுன் கூழைப் பற்றி சற்று மீளாய்வு செய்திருக்கலாம்.

ஜோஹன் அருணாசலம்

 

டியர் ஜோஹன்,

நீங்கள் பாரிஸில் வசிப்பவர் என்று யூகிக்கிறேன்.  அங்கே உங்களிடம் வந்து அடையாள அட்டை கேட்கும் போலீஸ் ஒரு ஸலூட் போட்டு விட்டுத்தானே கேட்கிறார்?  பஸ்ஸில் நீங்கள் டிக்கட் எடுக்கும் போது ஓட்டுநரிடம் Bon jour சொல்லி விட்டுத்தானே டிக்கட் எடுக்கிறீர்கள்?  உணவு விடுதிகளில் சர்வரை அழைக்கும் போது கேரளத்தில் நடப்பது போல் விசில் அடித்தோ அல்லது கை தட்டியோ சொடக்குப் போட்டோ கூப்பிடாமல் ”எக்ஸ்குஸே ம்வா து வூ தேஹோ(ங்)ஷே” என்று சொல்லித்தானே அழைக்கிறீர்கள்?  அப்படிப்பட்ட ஊரில் இருந்து கொண்டு தமிழன் என்று வந்தவுடன் ஏன் இப்படிக் காட்டடி அடிக்கிறீர்கள்?

வாய் தவறி பனங்கிழங்கு என்பதை மரவள்ளிக்கிழங்கு என்று சொல்லி விட்டேன்.  அதற்கு இப்படிப் போட்டு சாத்த வேண்டுமா?  மேலும், நாம் கண்களால் பார்ப்பதுதான் நினைவில் தங்குகிறது.  நான் வசிக்கும் சென்னை நகரில் பனங்கிழங்கு என்றால் அது என்ன என்று கேட்பார்கள்.  நானே அதைப் பார்த்து 40 வருஷம் ஆகிறது.  பனை என்பதையே தமிழ்நாடு தன் கலாச்சாரத்திலிருந்து ரத்து செய்து விட்டது.  போகட்டும்.  ஷோபா சக்தி எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் ஒடியங்கூழ் செய்து கொடுத்து 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.  ஆனாலும் அதன் ருசி இன்னும் மறக்காமல் என் நாவிலும் நினைவிலும் தங்கியிருக்கிறது.

மேலும், நீயா நானா நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.  உலகம் பூராவும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை விட்டு விடலாம்.  அவர்களுக்கு ஒடியங்கூழ் அறிமுகம் தேவையில்லை.  ஆனால் தமிழர்களுக்கு அது பற்றித் தெரியாது.   ஆக, ஒரு கோடித் தமிழர்களுக்கு நான் ஒடியங்கூழை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.  இது பற்றி உங்கள் கடிதத்தில் ஒரு வார்த்தை மகிழ்ச்சி இல்லையே?  ஏன் நாமெல்லாம் இப்படி cynic-ஆக ஆகி விட்டோம்?

என்னைப் பொறுத்தவரை நாகூர் தம்ரூட்டுக்கு ஈடு இணையான ஒரு இனிப்புப் பதார்த்தம் இல்லை.   பாரிஸ் தொலைக்காட்சியில் ஒரு ஈழத் தமிழர் அதன் பெயரைச் சொல்லி – தம்ரூட் – அது ரவாவில் செய்வது என்று சொல்லியிருந்தால் கூட நான் சந்தோஷக் கூத்தாடியிருப்பேன்.  பெயரைச் சொன்னதே பெரிய விஷயம் இல்லையா?

மேலும், என்னுடைய துறை எழுத்து.  ஏற்கனவே பலமுறை ஒடியங்கூழ் பற்றி எழுதியிருக்கிறேன்.  சரியாக.  ஏனென்றால், எழுதும் போது நாம் அதை சரி பார்த்துக் கொள்ளலாம்.  பேச்சில் அந்த வசதி இல்லை.  நான் ஒன்றும் பேராசிரியரோ, மேடைப் பேச்சாளனோ இல்லை.  அவர்களுக்கெல்லாம் பேச்சு தான் வேலை, தொழில்.  நம் தொழில் எழுத்து.  எனவே பேசும் வேளையில் – அதிலும் நம்முடைய எலும்புக்குள்ளே இருக்கும் மஜ்ஜைக்குள் எல்லாம் ஊடுருவும் ஆயிரம் விளக்குகளின் வெளிச்சத்தில் என் பெயரைக் கேட்டாலே வாய் குழறி ஏதாவது சொல்லி விடுவேன்.

ஏதோ மீளாய்வு செய்து விட்டுப் போகச் சொல்லியிருக்கிறீர்கள்.  என்ன மீளாய்வு காளாய்வு செய்தாலும் அங்கே உள்ள மஜ்ஜையை ஊடுருவும் விளக்கு வெளிச்சத்தில் நாக்கு உலர்ந்து விடும்.  அதெல்லாம் சரி, நான் பனங்கிழங்குக்கு மரவள்ளிக் கிழங்கு என்று சொல்லி விட்டேன்.  அதற்கு ஏன் இந்தக் கொலைவெறி?  நான் கருணைக் கிழங்கு என்றோ உருளைக் கிழங்கு என்றோ அல்லது ரவா என்றோ சொல்லியிருந்தால் நீங்கள் இந்த அளவுக்குக் கோபப்படலாம்.  நியாயம்.

இன்னொரு முக்கியமான விஷயம்.  நான் ஒரு விஷயத்தைச் சொல்லியே தீர வேண்டும் என்று 108 முறை மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டு போனேன்.  சுத்தமாக மறந்து விட்டது.  இந்த உலகத்திலேயே எனக்குத் தெரிந்த சுவையான சாப்பாடு, நாகூரில் புது மாப்பிள்ளைகளுக்குப் பெண் வீட்டில் 40 நாள் போடும் மாப்ள சாப்பாடுதான்.  அதில் வேளைக்கு ஒரு அற்புதம் இருக்கும்.  காலையில் ஆப்பம் பாயா என்றால் இரவில் அதற்கு சம்பந்தமே இல்லாத வேறொன்று.  மூன்று வேளையும் மூன்று விதம்.  இப்படியே நாற்பது நாள்.   பத்து மாதத்தில் twins உத்தரவாதம்.  அப்படி இருக்கும் சாப்பாடு.  அதைச் சொல்ல மறந்து போனேன்.

நாளையிலிருந்து வல்லாரை லேகியம் சாப்பிடலாம் என்று இருக்கிறேன்.  மேலும் ஜோஹன், டொரண்டோவிலிருந்து மணி என்ற நண்பரும் இது பற்றி எழுதியிருக்கிறார்.  எவ்வளவு பாந்தமாக எழுதியிருக்கிறார் பாருங்கள்.

ஐயா,

தங்கள் பங்காற்றிய நீயா நானா நிகழ்ச்சி பார்த்தேன்,  ஒரு தகவல் பிழை உள்ளதோ என ஐயமுறுகின்றேன்….

யாழ்ப்பாண மக்களின் ஒடியல் கூழ் பற்றிப் பேசியிருந்தீர்கள்.     ஒடியல் கூழ் செய்வது மரவெள்ளிக் கிழங்கு மாவில் என் கூறியிருந்தீர்கள்..  இது தப்பு எனப்படுகின்றது,

ஒடியல் கூழ் செய்வது ஒடியல் மாவிலிருந்து.  ஒடியல் என்பது காயவைத்த பச்சைப் பனங்கிழங்கு ஆகும்.  அவித்த பனங்கிழங்கை    காய வைத்தால் அது புழுக்கொடியல்.

ஒடியலை அரைத்துச் சலித்து ஒடியல் மா செய்து ஒடியல் கூழ் செய்வார்கள்…

யாழ்ப்பாணத்தில் ஒடியல் கூழ் போல் இன்னும் ஒன்று உணடு.     குரக்கன் கூழ்…  குரக்கன் மாவில் செய்வார்கள்.

நன்றி.

Mani Kanex