அன்புடன் சாருவுக்கு!
நான், அக்குறிப்பிலிட்ட « என்னங்க!» என்பதும் மரியாதையாக அழைக்கும் சொல்லே ! அதில் மரியாதை இல்லை எனக் கருத வேண்டாம்.
என்னங்க சார்! , என்றால் பலர் ஏற்றுக் கொள்வார்கள். என்னங்க! சாரு என்றிருந்தால் நீங்களும் ஏற்றிருக்கலாம்.
உங்கள் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும்.
//அப்படிப்பட்ட ஊரில் இருந்து கொண்டு தமிழன் என்று வந்தவுடன் ஏன் இப்படிக் காட்டடி அடிக்கிறீர்கள்?//
ஐயையோ! இது காட்டடி இல்லைங்க! காட்டடி, பேயடி அடிப்பதில் உங்களை அடிக்க ஆள் இல்லை. அந்த அடிபட்டவன் நான்!
‘என்னங்க‘ என்பதும் சற்று நெருக்கமும், சினேகிதமுமான – மரியாதைக்குரிய சொல்லே!
ஈழத்தவர்கள் இப்படி அழைப்பதை அறிந்திருப்பீர்கள்.
மேலும் இந்தியாவில் ஒடியல் கூழ் தெரியாது, ஒடியல் தெரியாது – என்பது இப்போது நீங்கள் சொல்வதன் மூலமே அறிகிறேன்.
//அதற்கு இப்படிப் போட்டு சாத்த வேண்டுமா? // என்னங்க ! சாரு, இது சாத்தலா ! ஆனாலும் என்னை நீங்கள் அநியாயத்துக்குத் தாக்குகிறீர்கள்.
எனினும், பனங்கிழங்கு , ஒடியல், கூழ் தெரியாதவர்களுக்கு , நீங்கள் சொல்வதால் ஆகும் பயன் என்ன ? பொறுத்திருந்து பார்ப்போம்.
அதற்குள் உள்ள பனைகளும் அழிந்துவிடும்.
மற்றும் படி மாசிச் சம்பல் கூட சிங்கள மக்களின் உணவே ! ஈழத் தமிழராகிய நாமும் பழகி விட்டோம்.
மீண்டும் – பாந்தம், பக்குவம் – உங்கள் பதிவுகள் ஒழுங்காகப் படிப்பதால் எனக்குக் குறைந்ததோ ! , ஆனாலும் இனி மேல் மாற்றுவேன்.
தகவலுக்காக- உங்களுக்குக் தெரிந்துமிருக்கலாம். அன்பர் மணி கனிக்ஸ் குறிப்பிட்டுள்ள « குரக்கன் » என்பதை தமிழகத்தில் கேழ்வரகு என்பர்.
மீண்டும் மன்னிக்கவும் !
அன்புடன்
யோகன் பாரிஸ்.
டியர் யோகன்,
’என்னங்க’ என்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சொல்லப் போனால் உங்கள் கடிதத்தின் எந்த வார்த்தையிலும் தப்பான, மரியாதைக் குறைவான எந்தப் பிரயோகமும் இல்லை. ஆனாலும் த்வனி எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால்தான் மணியின் கடிதத்தையும் கொடுத்திருந்தேன். மணியின் கடித த்வனியையும் உங்களின் முந்தைய கடிதத்தையும் பார்க்கவும்.
இது பற்றி அதிகம் வளர்த்த விரும்பவில்லை. ஆக்கபூர்வமான காரியங்களில் ஈடுபடுவோம். எனக்கு ஞாபக சக்தி கம்மி. யோகன் பாரிஸ் என்றால் என் மனதில் ‘நல்ல நண்பராயிற்றே’ என்றுதான் பதிந்திருக்கிறது. எதிர்மறை விஷயங்களை நான் மனதில் வைத்துக் கொள்வதில்லை. வெறுப்பு நம்மை அழித்து விடும். நான் ஒருவரைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டிருக்கிறேன் என்றால் அது எனக்குத்தான் கேடு என்பதை என் உடல்நலத்தைக் கொண்டே தெரிந்து வைத்திருக்கிறேன். எனவே, என் சுயநலத்தைக் கொண்டாவது நான் அஹிம்சையைத்தான் பின்பற்றியாக வேண்டும். அன்றாட வாழ்வில் அதை நான் தீவிரமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.
இரண்டு சம்பவங்கள் மிக நன்றாக ஞாபகம் உள்ளன. ஏற்கனவே எழுதியதுதான். ஒருநாள் பப்புவை நடைப் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற போது என் வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி உள்ள ரோட்டில் – ரோட்டின் நடுவே – மலம் போய் விட்டது பப்பு. அதற்கு அந்த வீட்டுப் பணிப்பெண் “டேய், ஓ(ங்) வூட்டுக்கு முன்னாடி இப்டிப் போனிச்சின்னா சும்மா இருப்பியாடா” (ஒரு அட்சரம் கூட கூடக் குறைச்சல் இல்லை) என்று என்னை நோக்கிக் கத்திய போது அந்தப் பெண்ணுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வந்து விட்டேன். (அந்த வீட்டின் ஓனர் பெண்மணி என்னை எப்போது பார்த்தாலும் வணக்கம் சார் என்று சொல்வார்!) இரண்டாவது சம்பவமும் பப்புவோடு நடைப் பயிற்சி செல்லும் போது நடந்ததுதான். ஒரு வீட்டின் எதிரே – நடு ரோட்டில்தான் – கக்கா போய் விட்டது. பக்கத்தில் கிடந்த தாளை எடுத்து சுத்தம் செய்யப் போனேன். அதற்குள் அந்த வீட்டு இளைஞன் என்னை நோக்கி, வயசாச்சே அறிவு இருக்கா என்று கேட்டான். இந்த முறை நான் சும்மா போகவில்லை. கக்காவைத் தாளால் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அந்த இளைஞனைப் பார்த்துக் கைகளைக் கூப்பி “நீங்கள் எனக்குக் கடவுள்” என்று சொல்லி விட்டு வந்தேன். (அஹிம்சையை அப்பியாசிக்கும் சந்தர்ப்பத்தைக் கொடுத்ததற்காக அந்த இளைஞன் அன்று எனக்குக் கடவுளாகவே தெரிந்தான். கிண்டலாகச் சொல்லவில்லை.) ஆனால் என் பதிலிலிருந்து அவன் நிறைய எடுத்துக் கொண்டான் போலும். எப்போது என்னைப் பார்க்க நேர்ந்தாலும் ரொம்ப பயபக்தியுடன் முகத்தில் மிகுந்த மலர்ச்சியுடன் வணக்கம் சார் என்று பவ்யமாகச் சொல்கிறான். காந்தி பெரிய ஆள்தான் என்று நினைத்துக் கொள்வேன். அஹிம்சையை நாம் ஒரு ’ஹெல்த் டிப்’பாகக் கூட பின்பற்றலாம்.
ஆனால் என் எழுத்து உங்களுக்கு எதிர்மறையான உணர்வுகளைத் தருகிறது என்கிறீர்கள். இன்னமும் அன்பைத் தோய்த்து எழுதப் பழக வேண்டும் என்று உங்கள் வார்த்தை எனக்கு உணர்த்துகிறது. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. என் எழுத்தை நீங்கள் தொடர்ந்து வாசிப்பதுதான் என் எழுத்துக்குக் கிடைக்கும் பெரிய மரியாதை. அதற்கும் நன்றி.
அன்புடன்,
சாரு