ஒரு இரங்கல் கட்டுரை

மரணம் எப்போதும் என்னை பாதிப்பதில்லை.  என்னைப் பொறுத்தவரை காலண்டரில் தேதி கிழிப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.  எனக்கு வரப் போகும் மரணம் உட்பட.  சில இள வயது துர்மரணங்களைத் தவிர வேறு எந்த மரண சம்பவத்தின் போதும் நான் வருந்தியதில்லை.  தி.ஜானகிராமனுக்கோ, லா.ச.ரா.வுக்கோ மரணம் உண்டா?  கலைஞர்களுக்கு மரணம் இல்லை.  உலகம் உள்ளளவும் அவர்களின் கலை வாழும்.  இந்த உலகமே அழிந்தாலும் பீத்தோவனின் இசை வாழும் என்று சொன்னவர் கார்ல் மார்க்ஸ்.  கலைக்கு அத்தகைய குணம் உண்டு.  ஆனாலும் ஒரு மரணம் என்னை சமீபத்தில் வெகுவாக பாதித்து விட்டது.  என் ஆத்மா அழுதது.  மனித உணர்வுகளைக் கடத்தும் ஆற்றல் எழுத்துக்கு இல்லை.  சங்கீதத்துக்கு உண்டு.  நான் சங்கீதக் கலைஞன் இல்லை.  ஒருவேளை கவிஞனாக இருந்தால் கிட்டத்தட்ட சங்கீதம் அளவுக்கு என் துயரத்தை வெளிப்படுத்த முடிந்திருக்கும்.  வெறும் உரைநடை எழுத்தாளன் நான்.  பாரிஸ் இறந்து விட்டது.  இனி முன்பு இருந்த பாரிஸை நாம் பார்க்க முடியாது.  ஐரோப்பாவே முன்பு இருந்தது போல் இனி இருக்காது.  பாரிஸுக்கு ஒரு இரங்கல் செய்தி என்ற கட்டுரையை என் வாழ்நாளில் எழுதிய முக்கியமான கட்டுரையாக நினைக்கிறேன்.  ஏனென்றால், பாரிஸை நான் ஒரு நகரமாக மட்டுமே பார்க்கவில்லை.  மகத்தான நூற்றுக் கணக்கான கலைஞர்களின் ஆன்மா உலவும் நிலவெளி அது.  இன்றைய தி இந்து தமிழ் நாளிதழில் வந்துள்ளது.  படிக்கவும்.  தமிழ் இந்து நண்பர்களுக்கு நன்றி.