எங்கள் பொம்மையைப் பறித்து வீசி விடாதீர்கள் மிஸ்டர் கமல்ஹாசன்!!!

கங்கையில் மிதக்கும் பிரேதங்களைப் போல் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.  இந்தத் துயரமான வேளையில் கமல்ஹாசனின் செய்தி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

எப்போதுமே எனக்கு ஒரு சம்சயம் உண்டு.  தமிழ்நாட்டில் மட்டும் இலக்கியம் படித்தவர்கள் ஏன் கொஞ்சமும் சுரணை உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்?  படிக்காதவர்களே தேவலாம் என்கிற அளவுக்கு இருக்கிறது படித்தவர்களின் பேச்சும் நடத்தையும்.  மழைக்கு முன்பு நடந்த ஒரு சினிமா விழாவில் கலந்து கொள்ள நேர்ந்தது.  பொதுவாக சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள தூரம் நமக்குத் தெரியும்.  பேசியவர்கள் அத்தனை பேரும் சினிமாவில் பெரும் சாதனை புரிந்தவர்கள்.  அவர்களுடைய பேச்சு ஒரு நல்ல மங்கல விழாவில் நம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பேசும் ஆசீர்வாதத்தைப் போல் அமைந்திருந்தது.  பலரும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைப் படு சுவாரசியமாகச் சொன்னார்கள்.  அப்போது இலக்கியமும் உலக சினிமாவும் அறிந்த ஒரு சினிமா கலைஞர் எழுந்து (கமல்ஹாசன் அல்ல) பேசினார்.  அரங்கமே மயான அமைதி ஆனது.  அவர் பேசியது யாருக்குமே புரியவில்லை.  அப்படி ஒன்றும் தத்துவ சமாச்சாரமும் அல்ல.  ஏன் புரியவில்லை என்றால் அந்தச் சொற்களில் எந்த சாரமும் இல்லை.  என்ன பேசுகிறோம் என்ற பிரக்ஞை அவருக்கே இல்லாத போது பார்வையாளர்களுக்கு என்ன புரியும்?  அப்போது முகத்தில் ஈயாடாமல் என் அருகில் அமர்ந்திருந்த என் நண்பரிடம் சொன்னேன், படித்தவர்களுக்குத்தான் சுரணை உணர்வு இல்லாமல் போகிறது என்று.

இப்போது கமல்ஹாசனின் செய்தியைப் படித்த போது அந்தச் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது.  “ஒரு பாதுகாப்பான அறையில் இருந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் இன்னல்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு இது வெட்கமாக இருக்கிறது.”  முதலில் இப்படிப் பேட்டி கொடுப்பதற்குத்தான் ஒருவர் வெட்கப்பட வேண்டும்.  பட்டினியால் துயருறும் ஒருவனிடம் சென்று நான் வடை பாயசத்தோடு விருந்து சாப்பிட்டேன்; அது பற்றி வெட்கப்படுகிறேன் என்று சொன்னால் அது எப்படி இருக்கும்?  நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்; பேசாமல் வாயை மூடிக் கொண்டிருந்தால் அதுவே பெரிய உபகாரம் என்று சொல்லத் தோன்றுகிறது.

அதோடு மட்டும் நிறுத்தவில்லை உலக நாயகர்.  மேலும் ஏற்றுகிறார் தார்க்குச்சியை.  “எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது” என்கிறார்.  உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பதா இப்போதைய பிரச்சினை?  உங்களுடைய பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்ய இதுவா நேரம்?  அவரவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மொட்டைமாடியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.  என் வீட்டுக்கு எதிரே உள்ள நொச்சிக் குப்பத்தில் நேற்று மூன்று மாதக் குழந்தை ஒன்றின் பிரேதம் கடல் அலைகளில் அடித்துக் கொண்டு வந்து கிடந்தது.  இந்த நிலையிலும் நொச்சிக்குப்பம் மீன் சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருக்கிறார்கள் மீனவப் பெண்கள்.  ஒரு சகோதரி சொன்னாள், கடலுக்குப் போன ஐந்து பேரில் நான்கு பேர் தான் திரும்பினார்கள் என்று.

நான்கு மாடிகள் வெள்ளத்தில் மூழ்கி ஐந்தாவது மாடியில் கைக்குழந்தையோடு நின்று கொண்டிருக்கும் மக்களிடம் போய் எனக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று சொல்வது அராஜகம்.  மற்றவர்களுக்குக் கைக்குழந்தை.  எனக்கு இரண்டு பெரிய நாய்கள்.  எட்டடி உயரமும் நான்கடி நீளமும் கொண்ட க்ரேட் டேன் நாயை வைத்துக் கொண்டு நான் எந்தப் படகில் ஏறுவது?  பார்க் ஷெரட்டனில் ஒரு வாரத்துக்கு ரூம் போட்டுத் தருகிறேன் என்று என் நண்பர் வெள்ளம் ஆரம்பித்ததுமே சொன்னார்.  க்ரேட் டேன் நாயை வைத்துக் கொண்டு எங்கே போவது நான்?  நேற்று அவந்திகா பக்கத்து வீட்டு வாட்ச்மேனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.  வீட்டுக்குள் வெள்ளம் இடுப்பளவுக்கு வந்து விட்டால் நாங்கள் பப்பு, ஸோரோவோடு உங்கள் வீட்டுக்கு வந்து விடுகிறோம்; இடம் கொடுப்பீர்களா என்று.  பக்கத்து வீடு அடுக்குமாடிக் குடியிருப்பு.  ஐந்து மாடி.  வாட்ச்மேனும் அன்புடன் வாங்கம்மா வாங்கம்மா என்றார்.  வாட்ச்மேனுக்கே வீடு கிடையாது.  குடியிருப்பின் மாடிப்படிக்கட்டுக்குக் கீழே படுத்துக் கிடப்பார்.  மனம் பெரிது.  வாங்கம்மா என்கிறார்.  அப்படியே போனாலும் கிலியில் ஸோரோ பார்ப்பவரையெல்லாம் கடித்து விடும்.  ஸோரோ தான் க்ரேட் டேன்.  வீட்டுக்குள் வெள்ளம் வந்தால் எனக்கு சாவதைத் தவிர வேறு வழியில்லை.  ஸோரோ படகில் ஏறாது.  இந்த நிலையில் எனக்குக் கடவுளைத் தவிர வேறு வழியில்லை.

என்னை விடுங்கள்.  சென்னையின் மொட்டைமாடிகளில் நின்று கொண்டிருக்கும் ஆயிரக் கணக்கான மனிதர்களுக்கும் குழந்தைகளுக்கும் ராணுவமும் மாநில அரசுத் துறையினரும் மருத்துவர்களும் அரசு ஊழியர்களும் முக்கியமாக போலீஸும் தங்கள் உயிரையும் மதிக்காமல் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்.  ஊடக நண்பர்களையும் பாராட்ட வேண்டும்.  உயிரை மதிக்காமல் செய்திகளைச் சேகரிக்கிறார்கள்.  இருந்தாலும் மொட்டை மாடியில் உணவுப் பொட்டலங்களை எதிர்பார்த்து, நாளை உயிரோடு இருப்போமா என்ற அவலத்தில் இருக்கும் மனித ஜீவன்களுக்குக் கடவுள் என்ற ஒரே ஒரு வார்த்தைதான் ஆறுதல் ஐயா… ஐயா கமல்ஹாசன் அவர்களே… கடவுள் இருக்கிறாரோ இல்லையோ எனக்குத் தெரியாது… ஆனால் கடவுள் என்ற ஒரே ஒரு வார்த்தை தான் இவர்களையெல்லாம் உயிரோடு தக்க வைத்திருக்கிறது.

மகாநதியில் ஒரு குழந்தையைப் பார்த்து கதறினீர்களே, அந்தக் கதறல் வெறும் நடிப்புதானா?  நாங்களெல்லாம் இப்போது குழந்தைகள்… எங்கள் கையிலிருக்கும் கடவுள் என்ற பொம்மையைப் பறித்து வீசி விடாதீர்கள்.  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்…