சார்வாகன் காலமானார்

சார்வாகன் இன்று மாலை ஆறு மணிக்கு காலமாகிவிட்டார். சாரு வெளியில் இருப்பதால், அவர் சார்பாக நான் இந்தக் கட்டுரையை மீள்பதிவு செய்கிறேன்.

ஆழ்ந்த வருத்தங்களுடன்,
ஸ்ரீராம்.

 

***

 

 

image

 

சார்வாகன்

நவம்பர் 21, 2015

இன்று மாலை நாலரை மணியிலிருந்து ஆறரை வரை சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவரது இல்லத்தில். கால எந்திரத்தில் ஏறி ஏதோ சத்ய யுகத்திலோ அல்லது த்ரேதா யுகத்திலோ போய் விழுந்தது போல் இருந்தது. அந்த இரண்டு மணி நேரத்தையும் என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.  சார்வாகனுடன் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் எழுத்தாளர் ஜாதி இல்லை என்று தெரிந்தது. அதற்கும் மேலே. ரமண மகரிஷியோ, ராமகிருஷ்ண பரமஹம்ஸரோ எழுத்தாளர்களா? அது போன்ற மகான்களோடு பேசிக் கொண்டிருந்தது போல் இருந்தது. அவர் ஒருவரே பேசிக் கொண்டிருக்கவில்லை. நான் பேசுவதையும் சிரத்தையோடு கேட்டார். அந்த சந்திப்பு பற்றி சுமார் முப்பது பக்கங்கள் எழுதலாம். இப்போது நேரமில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் தான் எழுதிய நாவலை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார். அந்த நாவல் வெளியானால் இரண்டு விஷயங்கள் நடக்கும். ஒன்று, புக்கர் விருது கிடைக்கும், அல்லது, அந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்படும். இரண்டு, இந்தியாவில் அந்த நாவல் தடை செய்யப்படும். நாவலாசிரியரின் உயிருக்குப் பங்கம் வராது. அந்த அளவுக்கு அவர் கோபப்படுத்தவில்லை. ஆனால் தடை செய்யப்படும் என்பது உறுதி. அதை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் சார்வாகன் சந்திப்பு பற்றி எழுத முடியாமல் இருக்கிறேன். ஆனால் தி.ஜா. மோகமுள்ளில் எழுதியிருக்கும் ரங்கண்ணாவைப் போன்ற ஒரு மகாத்மாவைச் சந்தித்தேன். ரங்கண்ணாவுக்கு சங்கீதம். சார்வாகனுக்கு மருத்துவம். இலக்கியத்தை விடவும் பெரிய விஷயங்கள் உலகில் இருக்கின்றன என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.

இந்தப் பத்தியை ஒருவேளை சார்வாகன் படிக்க நேர்ந்தால் அவரைப் பற்றி இதில் உள்ள ஒரு வார்த்தையைக் கூட ஒப்புக்கொள்ள மாட்டார்.  எலியை அடித்து விட்டுப் புலியை அடித்ததாக மார்தட்டிக்கொள்ளும் என்னைப் போன்றவர்கள் வாழும் உலகில்தான் சார்வாகன் போன்றவர்களும் வாழ்கிறார்கள்.  நல்லார் ஒருவர் உளரேல்…