ஒரு அதிர்ச்சியும் ஒரு அறிவிப்பும்…

இந்தப் பதிவில் ஜெயமோகன் முதலில் பிரபு காளிதாஸ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ‘புகைப்படங்கள்: நன்றி பிரபு காளிதாஸ்’ என்று போடவில்லை. அதற்கு பிரபு காளிதாஸ் கீழே உள்ளதை தன் முகநூலில் எழுதினார்.
***
 

பிரபு காளிதாஸ், முகநூல், 16.2.16


என் பெயரில் ஒரு Photo courtesy credits கூட இல்ல பாத்தீங்களா….? தட் இஸ் ஜெயமோகன்…Attitude matters….புகைப்படங்கள் ஒருபோதும் வானிலிருந்து தேவன் வந்து எடுப்பதில்லை.

நான் புகைப்படங்கள் எடுத்து Photo documentation செய்வது உயிர்மை பதிப்பகத்திற்கு. அது மனுஷ்யபுத்திரன் எனக்குக் கொடுத்திருக்கும் Project Assignment. அன்றைய கவிதை நூல் வெளியீட்டில் வேறு இன்னும் இரண்டு புகைப்படக்காரர்கள் எடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு படங்கள் கூட ஜெயமோகன் தளத்தில் இல்லை. முழுக்க என் படங்கள் தான் உள்ளன.

புகைப்படங்களுக்கான காப்புரிமம் முழுக்க முழுக்க உயிர்மைக்கே. நான் பெயர் வேண்டும் என்று அலையவில்லை. விஷயம் இதுதான். புகைப்படங்களை உபயோக்கிக்கும் பட்சத்தில், அவை யார் எடுத்தது என்று பெயர் போடுதல் அவசியம். அதுதான் அடிப்படை அறம்.

நம்மை ஒருவர் புகைப்படம் எடுக்கிறார் என்றால், காமெராவைப் பார்த்து சிரிக்கும்போது, “இவருக்குக் காசு கொடுப்பவர் யாராக இருக்கும்…?” என்று யோசிக்கவேண்டும். அப்படி இல்லையா …புகைப்படங்கள்: உயிர்மை பதிப்பகம் என்றாவது வந்திருக்கலாம்.

அதனால்தான் சொல்கிறேன், அறம் பற்றிப் பேசத் தகுதியற்றவர் ஜெயமோகன் என்று.

***
அதற்கு ஜெமோ தன் வலைதளத்தில் எழுதிய மன்னிப்புப் பதிவு: http://www.jeyamohan.in/84903#.VsS02fJ97IU
***
இதற்கு மனுஷ்யபுத்திரன் தன் முகநூலில் எழுதிய பதில் பதிவு: 17.2.16

ஒரு இதயபூர்வமான விழாவிற்குபின்னே கசப்பான சொற்கள் பறிமாறிக்கொள்ளப்படுவது ஒரு மரபாகவே மாறிவிட்டது. இது எதிர்காலத்தில் இலக்கிய விழாக்களை நடத்தத்தான் வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

குமரகுருபரனின் நூல்வெளியீட்டு விழா குறித்த ஜெயமோகனின் பதிவில் விழாவில் பிரபு காளிதாஸ் எடுத்த படங்களை பயன்படுத்தியிருந்தார். அந்தப் படங்கள் நிகழ்ச்சி பற்றிய செய்திகளை பரவலாக்குவதற்காக என் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டவையே. அந்தப் படங்கள் தன்னால் எடுக்கப்பட்டவை என்று ஜெயமோகன் குறிப்பிடவில்லை என்பது பிரபுவின் ஆதங்கம். அதற்கு ஒரு மன்னிப்பு ஒன்றை ஜெயமோகன் வெளியிட்டிருக்கிறார். இரண்டுமே மிகுந்த சங்கடம் தருகின்றன. ஜெயமோகன் அப்படி திட்டமிட்டு இருட்டடிப்பு செய்திருப்பாக நான் நினைக்கவில்லை. அப்படி செய்யவேண்டும் என்கிற அவசியமும் அவருக்கு இல்லை. அதே சமயம் பிரபு போன்ற கலைஞர்கள் எதிர்பார்ப்பது தங்கள் வேலைக்கான சிறிய அங்கீகாரம் மட்டுமே. அந்த அங்கீகாரம் தற்செயலான காரணங்களால் கிட்டாமல்போகும்போது மனம் சோர்ந்து போகிறார்கள். இது ஜெயமோகன் அறியாததல்ல. பிரச்சினை மிகச்சிறியது. பிரபு ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் அந்த க்ரெடிட்டை உடனடியாக பதிவு செய்திருப்பார். அதே சமயம் ஜெயமோகனும் இவ்வளவு சங்கடமான மன்னிப்பு அறிக்கையை வெளியிட வேண்டியதில்லை. இணையத்தில் ஆயிரக்கணக்கான செய்திகளும் படங்களும் ஒவ்வொரு கணமும் வெள்ளமாக பாய்ந்துகொண்டிருக்கின்றன. இதில் எது எங்கிருந்து வந்தது என்பதை கவனிக்க யாருக்கும் அவகாசம் இல்லை. இந்த சைபர் வெளி வெள்ளத்தில் நாம் கொஞ்சம் நெகிழ்வான தன்மையுடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

எப்படியென்றாலும் இதுபோன்ற விவகாரங்களில் கடைசியில் பலியிடப்படுவது நானாகவோ அல்லது உயிர்மையாகவோ இருப்போம். ஒருமுறை சாரு ஜெயமோகனின் புத்தகத்தை உயிர்மை மேடையில் கிழித்தார். அதை நான்தான் தூண்டினேன் என்று எந்த நியாயமும் ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்டேன். ஜெயமோகன் உயிர்மையுடனான உறவையே முறித்துக்கொண்டார். பிறகு ஜெயமோகனும் சாருவும் நல்ல நண்பர்களாகிவிட்டார்கள். ஆனால் அந்த சமயத்தில் இருவராலும் உயிர்மைக்கு நிகழ்ந்த சேதம் சரிசெய்யப்படவே இல்லை.

உறவுகளில் கற்பனைகளும் கற்பிதங்களும் பரஸ்பரவெறுப்பின் கூர்முள்களும் ஆழமாக நிரம்பியிருக்கும் இலக்கியச் சூழலில் இணக்கத்திற்காக உருவாக்கும் எந்தச் சூழலும் இரண்டு நாட்கள்கூட நீடிப்பதில்லை. சந்தேகத்தின் வாள்கள் உறையிலிருந்து வெளியே வந்துவிடுகின்றன.

அன்றைய நிகழ்ச்சிக்கு நான் ஒரு சிகிட்சையிலிருந்து பாதியில் பதைக்கப் பதைக்க ஓடிவந்தேன். தலை சுற்றலுடன் என் உரையை நிகழ்த்தினேன். எல்லாம் சொல்லின் வழியே நிகழும் அன்பின் தருணத்திற்காக மட்டுமே.

பிரச்சினைகள் நியாயமானவையாக இருக்கலாம். அவற்றை சரி செய்துகொள்ள எவ்வளவு எளிய வழிகள் இருக்கின்றன! எதற்காக நமக்குள் இவ்வளவு வன்ம நிழல்கள்?

***

மேற்கண்ட விவகாரம் நேற்று சாரு நிவேதிதாவாகிய என் கவனத்துக்கு வந்தது.  இது பற்றிய ஒரு பொது அறிவிப்பு:

என்னுடைய உடலை புகைப்படம் எடுக்கும் உரிமையை இந்த உடல் நடமாடிக் கொண்டிருக்கும் போதும், நடமாட்டத்தை நிறுத்தி விட்ட பிறகும் என் அருமை நண்பர் பிரபு காளிதாஸுக்கு மட்டுமே அளிக்கிறேன்.  எனக்கு மறதி ஜாஸ்தி என்பதால் நான் அவ்வப்போது அதற்கு நன்றி பிரபு காளிதாஸ் என்று போட மறந்து விடுவேன் என்பதால் என் புகைப்படத்தைப் பார்த்தாலே அது பிரபு காளிதாஸின் கலைப்படைப்பு என்றுதான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   எனக்குத் தெரிந்து இப்போதைக்கு என்னை பிரபு அளவுக்கு அழகாகப் புகைப்படம் எடுக்கக் கூடிய ஒருவர் தமிழ்நாட்டில் இல்லை.  மேலும் ஒரு முக்கிய விஷயம்.  என்னை மற்ற நண்பர்கள், அன்பர்கள் புகைப்படம் எடுக்க விரும்பி எடுத்து அதை வெளியிடவும் விரும்பினால் அதை அன்புடன் அனுமதிக்கிறேன்.  அதை என்னுடைய கருணை என்றே அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  என்னைப் புகைப்படம் எடுப்பதற்காக அவர்கள் எனக்குப் பணம் தர வேண்டாம்… எனக்கு படுபயங்கரமான பணத்தேவை இருந்த போதும் புகைப்படக் கலையை நான் மிகவும் மதிப்பதால் இந்த சலுகையை நான் அவர்களுக்கு அளிக்கிறேன்.  ஆனால் அவர்கள் என் உடம்பை எடுக்கும் புகைப்படத்தை அவர்களின் பெயர் போடாமல்தான் பயன்படுத்துவேன்.   திமிரோ மற்ற கெட்ட எண்ணங்களோ எதுவும் இல்லை.  மறதிதான் ஒரே காரணம்.  நான் என் உடம்பை எந்தக் கட்டணமும் இல்லாமல் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது போல் அவர்களும் என் உடம்பை வைத்து உருவாக்கும் கலைப்படைப்பை நான் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படி எழுதுகிறாயே, நீ என்ன பெரிய கொம்பா என்றால் ஆமாம், அமிதாப் பச்சனை விட பெரிய கொம்புதான் நான் என்று அடக்கத்துடன் அறிவித்துக் கொள்கிறேன்.

சாரு

அதிகாலை மணி 4.57