விழா பதிவுகள் – 7

பெரும்பத்திரிகைகளில் எழுதாத, உயிர்மை, அந்திமழை போன்ற சிறுபத்திரிகளிலும் ப்ளாகிலும் எழுதும் ஒரு எழுத்தாளனான அடியேனின் புத்தக வெளியீட்டு விழா பிரம்மாண்டமான காமராஜர் அரங்கிலும் ராஜா அண்ணாமலை மன்றத்திலும் தொடர்ந்து ஏழெட்டு ஆண்டுகளாக நடந்து வருவதற்குக் காரணம் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள்தான்.  வெளியிலிருந்து பார்த்தால் புத்தக வெளியீடா, அரசியல் மாநாடா என்று சந்தேகமாக உள்ளது.  அநேகமாக இப்படிப்பட்ட ஒரு புத்தக வெளியீடு இத்தனை பெரிய அரங்கங்களில் நடப்பது உலக அளவிலேயே நம்முடைய வாசகர் வட்டத்தின் மூலமாக சென்னையில் மட்டுமே நடக்கிறது என்று நினைக்கிறேன்.  ஐரோப்பிய நகரங்களில் கூட புத்தக வெளியீடு என்றால் சிறிய பார்களிலும் நூலக அறைகளிலும் மட்டுமே நடக்கும்.  ஆனால் ஒரு வித்தியாசம்.  அங்கே சிறிய அறைகளில் நடந்தாலும் புத்தகம் லட்சக் கணக்கில் விற்கும்.  இங்கே நேரு ஸ்டேடியத்தில் நடத்தினாலும் கூட 3000 பிரதிகள்தான் விற்கும். ஆனாலும் இப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான புத்தக வெளியீட்டு விழாவை சாத்தியப்படுத்திய வாசகர் வட்ட நண்பர்களுக்கு நன்றி.  குறிப்பாக, டாக்டர் ஸ்ரீராம், முத்துக்குமார், செல்வா என்று பிரியத்துடன் அழைக்கப்படும் செல்வகுமார்.  மூவரும் ஒரு மாத காலம் ஓயாமல் உழைத்தார்கள்.  அப்படி உழைத்த செல்வகுமாரால் விழாவுக்கு வர முடியவில்லை.  அவர் பணி அப்படி.  விழா முடியும் வரை செல்வாவையே நினைத்துக் கொண்டிருந்தேன்.

IMG_3974