காமெடி பீஸ்…

சில தினங்களுக்கு முன்பு விகடனிலிருந்து ஒரு நேர்காணலுக்குக் கேட்டார்கள்.  சரி என்றேன்.  எப்போதுமே ஒரு எழுத்தாளன் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைய விருப்பப்படுவான் தானே?

எனக்கு இப்போது வயது 63.  என் முதல் கதை வெளிவந்த போது என் வயது 23.  சாவி தான் வெளியிட்டார். கதையின் பெயர் கனவுகள் சிதையும்.  சாவி நடத்திய பத்திரிகை. பத்திரிகை பெயர் ஞாபகம் இல்லை. அப்புறம் தில்லி போய் விட்டேன்.  வெகுஜன பத்திரிகைகளில் எழுதும் ஆசை போய் விட்டது. கணையாழியில் என்னுடைய அடுத்த ‘முதல்’ கதை வெளியானது.  முள்.  அதுதான் இப்போதைக்கு என்னுடைய அதிகாரபூர்வமான முதல் கதை.

ஆக,  40 ஆண்டுகளாக  எழுதி வருகிறேன்.  இந்த 40 ஆண்டுகளில் விகடனில் ஒரே ஒரு முறை என்னுடைய பத்தி வெளிவந்தது.  ஆறு மாதம்.  மனம் கொத்திப் பறவை.  ஆக, என்னுடைய 40 ஆண்டு எழுத்து வாழ்க்கையில் விகடனில் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆறு மாதம்.  வெறும் ஆறு மாதம். (ஜெயகாந்தனுக்கும் ஞாநிக்கும் தமிழருவி மணியன் என்ற சிந்தனையாளர் கம் எழுத்தாளருக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கும் பல பல பல பல வருடங்கள்.)

அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் விகடனில் அவ்வப்போது – அதாவது, ஆண்டுக்கு ஒரு முறை – என்னுடைய நேர்காணல் வரும்.  அதில் பவர் ஸ்டார் சீனிவாசனைப் போல் நான் சித்தரிக்கப்பட்டிருப்பேன்.  நான் சொல்லும் வார்த்தைகள்தான்.  ஆனால் வெட்டி ஒட்டிப் போட்டால் சாரு நிவேதிதா பவர் ஸ்டாராக ஆகி விடுவார்.  ஏற்கனவே ஒருமுறை நண்பர் அருள் எழிலன் என் பேட்டியை பவர் ஸ்டார் ரேஞ்ஜில் வெளியிட்டிருந்தார்.  ஒரு பக்கத்தில்.  பிறகு நான் அதற்கு நாலு பக்கம் மறுப்பு எழுதி நேரில் கொண்டு போய் கொடுத்தேன்.  விகடனில் அந்த சுதந்திரம் மட்டும் உண்டு.  நாலு பக்கமும் ஒரு வார்த்தை பிசகாமல் வந்தது.  இப்போதும் என் நேர்காணல் அதே தரத்தில்தான் வந்துள்ளது.  பேட்டி எடுத்தவர் தமிழ்மகன்.  அவர் என் நண்பர், மேலும் இலக்கியவாதி என்பதால் சக இலக்கியவாதியான எனக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்றே நினைத்தேன்.  உரிய மரியாதை என்றால் வெற்றிலைப் பாக்கு ஆடம்பரம் என்று அர்த்தம் அல்ல.  பேட்டி அளித்தவரை காமெடி பீஸாக மாற்றாமல் இருப்பது என்று பொருள்.

நேற்று நான் பேட்டியை ஒரு பார்வை பார்த்து விட்டு தமிழ்மகனுக்கு ‘பேட்டி நன்றாக வந்துள்ளது, நன்றி’ என்று ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.  ஆனால் இன்று அந்தப் பேட்டியை மீண்டும் படித்த போது ரொம்ப நுணுக்கமாக என்னை அவர்கள் காமெடி பீஸாக மாற்றி இருப்பதைப் புரிந்து கொண்டேன்.  உதாரணமாக, என்னை மாற்றிய புத்தகம் என்று ஒரு யோகியின் சுயசரிதை என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு, எழுதியவர் பெயர் மறந்து விட்டது என்றேன்.  அப்படியானால் அந்த நிமிடம் அந்தப் பெயர் மறந்து விட்டது என்று பொருள்.

மேலும் பேட்டி கொடுத்த போது அது எழுத்து ரீதியாக வருவதாக இல்லை.  விகடன் தடம் என்ற இணைய தள இதழுக்கு அளித்த விடியோ பேட்டி அது.  அதில் நான் பேச்சை நிறுத்தி விட்டு பெயரை யோசிக்க முடியாது.  விடியோ பேட்டி முழுமையாக விடியோ பேட்டியாக வந்திருந்தால் காமெடியாக ஆகி இருக்காது. விடியோ பேட்டியாகக் கொடுத்தது எழுத்தாக வரும் போது, அதிலும் 80 சதவிகிதம் வெட்டப்பட்டு 20 சதவிகிதம் இன்னொருவரின் கைவண்ணத்தில் வரும் போது எல்லாம் காமெடியாக மாறி விடுகிறது.

இப்போது எனக்கு என்ன பெயர் வரும் என்றால், “இதற்குத்தான் சொன்னேன், இந்த சாரு நிவேதிதாவோடு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்பது.  இப்போது பாருங்கள், பிரச்சினை பண்ணுகிறார்” என்று கொளுத்திப் போடுவார்கள்.  

என்னுடைய ஆட்சேபணை என்னவென்றால், எனக்கு என்னுடைய ஆளுமை முக்கியம்.  என் புகைப்படம் விகடனில் முழுப்பக்கத்தில் வருகிறது என்பதற்காக நான் ஹி ஹி என்று இளிக்க முடியாது.  என்னுடைய பேச்சு 80 சதவிகிதம் வெட்டப்பட்டு 20 சதவிகிதம் வெளிவருவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.  முழுதும் வரவேண்டும் என்றால் அதற்கு விகடன் முழுசுமே போதாது.  90 சதவிகிதத்தை வெட்டி விட்டு பத்து சதவிகிதம் கூட வெளியிடலாம்.   ஆனால் வெளியிடும் போது பேட்டியாளரின் Tone (த்வனி) மாறக் கூடாது.  பேட்டியாளன் காமெடியனாக மாறக் கூடாது.  ஒன்றுமில்லை; கூகிளைத் தட்டினால் அல்லது எனக்கு ஒரு ஃபோன் போட்டிருந்தால் ஒரு யோகியின் சுயசரிதை எழுதியவர் பெயர் பரமஹம்ஸ யோகானந்தா என்று தெரிந்திருக்கும்.  ஆனால் பேட்டியில் என்னை – பெரியாரிஸ்டாக இருந்த என்னை – கடவுள் நம்பிக்கையாளனாக மாற்றிய புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதை, எழுதியவர் பெயர் மறந்து விட்டேன் என்று வந்துள்ளது.

எனக்கு விகடன் நண்பர்கள் மீதோ தமிழ்மகன் மீதோ வருத்தம் இல்லை.  பொதுவாக, ஊடக நண்பர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  பேச்சு வேறு; எழுத்து வேறு.  பேச்சை எழுத்து வடிவமாக மாற்றும் போது பேட்டி கொடுத்தவரிடம் காண்பித்து விட்டு வெளியிட்டால் இந்தப் பிரச்சினை எழாது.  எனக்காக நான்கு பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்கள்.  அது பெரிய விஷயம்.  ஆனால் அதன் விளைவு, என் சித்திரம் ஒரு காமெடியனாக ஆகி விட்டது.  விகடனுக்கு அந்த நோக்கம் இல்லை என்று எனக்குத் தெரியும். ஆனாலும் விளைவு அப்படித்தான் ஆகியிருக்கிறது இல்லையா?

இதை என் வாசகர் வட்ட நண்பர்களுக்காகவும் இந்தப் பேட்டி மூலமாக மனவருத்தம் அடைந்தவர்களுக்காகவும் மட்டுமே எழுதுகிறேன்.

பின்குறிப்பு:  இந்தப் பேட்டியை காமெடி பீஸாக மாற்றிய ஒரே ஒரு வாக்கியம், பேட்டியின் ஆரம்பத்தில் வரும் ”அய்யய்யோ, இதை என்னான்னு பாருங்க” என்பதுதான்.  இதுதான் ஒட்டு மொத்தமாக பேட்டியையும், என்னையும் காமெடி பீஸாக மாற்றிய வார்த்தை.  ஜெயகாந்தனும்தான் கடைசி காலத்தில் ஜெய ஜெய சங்கர என்று எழுதினார்.  அவரை அப்படிச் சொல்வீர்களா விகடன் நண்பர்களே?  அய்யய்யோ, இதை என்னான்னு பாருங்க என்று ஜெயகாந்தன் பற்றி எழுதுவீர்களா?  ஒரு சிங்கம் காமெடி பீஸாக மாறிய கதை ஜெயகாந்தன் வாழ்க்கை.  அது நான் அல்ல.  ஆனால் சமரசம் என்றால் என்னவென்றே தெரியாமல் சிங்கத்தைப் போல் வாழும் என்னை காமெடி பீஸாக மாற்றுகிறீர்கள் என்றால் நான் தான் ஊருக்கு இளைத்தவனா?