கோவை புத்தக வெளியீட்டு விழா

கோவையில் உயிர்மை நடத்திய புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.  விழாவில் எக்கச்சக்க கூட்டம்.  பல ஆண்டுகள் கழித்து மலையாள எழுத்தாளர் இந்து மேனனை சந்தித்தேன்.  கவிஞர் புவியரசு, அக்னிபுத்திரன் ஆகிய நண்பர்களைச் சந்தித்தும் ஆண்டுகள் ஆகி விட்டன.  விழாவில் அவர்களைச் சந்தித்ததும் சந்தோஷமாக இருந்தது.

இந்து மேனன்

இந்து மேனன்

 

அக்னிபுத்திரன், புவியரசு

அக்னிபுத்திரன், கவிஞர் புவியரசு

விழா முடிந்த மறுநாள் காலை ஊட்டிக்கு அருகில் உள்ள மசினக் குடி என்ற காட்டுப் பகுதிக்குச் சென்றோம்.  அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.  தனித்தனியாகவும் குடும்பத்துடனும் சுமார் 30 யானைகளையும் மான்களையும் பார்த்தோம்.  திரும்பி வந்து Camp fire அருகே வட்டமாக அமர்ந்து இளையராஜாவை ஆரம்பித்தார்கள்.  ஐயோ சாமி, இதற்கா இவ்வளவு தூரம் வந்தோம் என்று தந்திரமாக பேச்சைத் திருப்பினேன், இலக்கியத்தின் பக்கம். அவ்வளவு நேரம் மென்மையாக இருந்த சூழல் தீயில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.   இரண்டரை மணிக்கு உறங்கச் சென்றேன்.  ஆனால் சரவணனும் கார்ல் மார்க்ஸும் காலை வரை பேசிக் கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன்.  எனக்கு எத்தனை மணிக்கு உறங்கச் சென்றாலும் ஐந்து மணிக்கு விழிப்பு வந்து விடும்.  அதேபோல் ஐந்து மணிக்கே எழுந்து விட்டேன்.

வெளியே அமர்ந்து சி.சு. செல்லப்பாவின் எழுத்து தொகுப்பை படிக்க ஆரம்பித்தேன்.  கொஞ்ச நேரத்தில் மனுஷ்ய புத்திரன் வந்தார்.  முந்தின இரவுச் சூட்டின் சுவடே தெரியாமல் நானும் மனுஷ்ய புத்திரனும் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு, பின்னர் காரில் சென்னை திரும்பும் போது சரவணன் சந்திரன் எங்கள் இருவர் நட்பு பற்றியும் ஒரு கருத்து சொன்னார்.   வள்ளுவர் கூட அப்படிச் சொல்லியிருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.

மசினக்குடியின் அடர்ந்த கானகத்தில் இரவில் செல்வது உயிராபத்து தரக் கூடியதுதான்.   இருந்தாலும் சென்றோம்.  இன்னொரு விஷயத்தையும் கண்டு பிடித்தேன்.  எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தாலும் குழந்தைகளுக்கு என்னைப் பிடிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.  மனுஷ்ய புத்திரனின் மகள் அம்முவும் மகன் மனோஜும் என்னை மற்றவர்களோடு விடாமல் தங்களோடு இரவு வனப் பயணத்துக்கு அழைத்துத் தங்களோடே அமர்த்திக் கொண்டார்கள்.  அப்பனுக்கு என்னைப் பிடிக்காவிட்டாலும் குழந்தைகளுக்குப் பிடிக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன்.  அதிலும் அம்மு அன்பின் மொத்த வடிவமாக இருந்தாள்.  இந்தச் சிறிய வயதிலேயே மற்றவர் நலனின் என்ன ஒரு அக்கறை.  மகாத்மாவுக்கு சைத்தானும் சைத்தானுக்கு மகாத்மாக்களும் பிறப்பது வரலாற்றில் ஒன்றும் புதிதல்லவே?

நிர்மல் காலையில் போனில் அழைத்து தனக்குப் பிறந்த நாள் என்று சொன்னார்.  சரவணன் சந்திரனின் நாவல்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டதாகவும் சொன்னார்.  நாலைந்து பேர் போன் செய்து இன்று உங்கள் நண்பருக்குப் பிறந்த நாள், வாழ்த்து சொன்னீர்களா என்று கேட்டார்கள்.  முதலில் புரியவில்லை.  பொத்தாம் பொதுவாக நண்பர் என்றால் என்ன புரியும்?  புரியாமல் முழித்ததும் மனுஷ்ய புத்திரன் என்றார்கள்.  வழக்கம் போலவே தொலைக்காட்சி லைவ் நிகழ்ச்சியிலேயே போனை எடுத்து என் வாழ்த்தை ஏற்றுக் கொண்டார்.  ஏதோ நினைவில் “வாழ்த்த வயதில்லை…” என்று ஆரம்பித்து பின்னர் திருத்திக் கொண்டேன்.

உங்களுக்கு ஒரு நற்செய்தி.  அடுத்த மாதம் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலும், நான் எழுதிய முதல் புத்தகமான லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற நூலும் உயிர்மை வெளியீடாக வர உள்ளது.  கோவையில் வெளியீட்டு விழா.  கோவை தவிர ஈரோடு, பொள்ளாச்சி, நாமக்கல், சேலம் நண்பர்கள் வந்து விடுங்கள்.  இந்த இரண்டு நூல்களும் பல ஆண்டுகளாக மறுபதிப்பு இல்லாமல் இருக்கின்றன.  இரண்டையும் விரிவாக எழுத வேண்டும் என்ற என் ஆர்வமே காரணம்.  லத்தீன் அமெரிக்க சினிமாவை சற்று விரிவு படுத்தினேன்.  ஃபேன்ஸி பனியனை விரிவு படுத்த முடியவில்லை.

இந்தப் பயணத்தைத் திட்டமிட்டு என்னை கோவை அழைத்துச் சென்ற அத்தனை நண்பர்களுக்கும் நன்றி.  முக்கியமாக உயிர்மைக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் சரவணன் சந்திரனுக்கும்.