கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?

எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  இருந்தாலும் இந்த சனியன் பிடித்த விஷயத்தை எழுதாவிட்டால் என் மண்டை வெடித்து விடும்.  எனக்கு எதிரிகளால் பிரச்சினையே இல்லை.  ஏனென்றால், நான் யாரையும் எதிரி என்றே நினைப்பது இல்லை.  ஆனால் என்னைத் தங்கள் எதிரி என்று நினைத்து பல அன்பர்கள் ரத்தம் கக்கிக் கொண்டிருப்பதை அறிவேன்.  அவர்கள் என்னைப் பற்றி எழுதும் வசைகள் என்னைப் புண்படுத்துவதே இல்லை.  ஏனென்றால், அன்பைப் போலவே வெறுப்பும் ஒரு மனித குணம்தான்.  அன்பைப் போலவே வெறுப்பையும் நான் நேசிக்கிறேன். நான் யாரையும் வெறுப்பதில்லை என்றாலும் வெறுப்பவர்களின் உரிமையைத் தடுக்க நான் யார்?

ஆனால் எனக்குப் பெரும் மன உளைச்சலைக் கொடுப்பவர்கள் என்னோடு தொடர்பில் இருப்பவர்கள்.  என்னுடைய தொலைபேசி எண் தெரிந்தவர்கள்.  என்னோடு உணவு உண்பவர்கள்.  என் வீட்டுக்கு வரும் அளவுக்கு உரிமை உள்ளவர்கள்.  இவர்களால்தான் எனக்குப் பெரும் சிக்கல் உண்டாகிறது.  இது பற்றி ஆயிரம் முறை எழுதி விட்டேன்.  என் வீட்டில் நான் மட்டும் இல்லை.  அவந்திகாவும் இருக்கிறாள் என்பது கூட இந்த மூடர்களுக்கு ஏன் தெரிய மாட்டேன் என்கிறது?  ஒரு பெண்ணுக்கு நீங்கள் மன உளைச்சல் கொடுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  என்ன ———- என் வீட்டுக்கு வந்து என்னோடு வாழும் ஒரு பெண்ணுக்கு மன உளைச்சல் கொடுக்கிறீர்கள்?

ஒரு ஆள் கேட்டார்.  ஏன் சாரு, நீங்கள் gay-வாக இருந்திருக்கிறீர்கள்?  இப்போது bi-sexual.  அந்த அனுபவங்களையெல்லாம் கொஞ்சம் சொல்லுங்களேன்?

ரொம்ப சத்தமாகக் கேட்டார்.  உள்ளேயிருந்து அவந்திகாவின் குரலும் சத்தமாகக் கேட்டது.  சாரு, கொஞ்சம் இங்கே வாயேன்.

உள்ளே போனேன்.  அந்த ஆளைக் கொஞ்சம் வெளியே போகச் சொல்கிறாயா?

நான் கொஞ்சமும் நாசுக்கு பார்க்கவில்லை.  நாம் பிறகு சந்திக்கலாம்.  இப்போது கிளம்புங்கள்.

அவரும் கிளம்பி விட்டார்.

இதையும் நான் சாருஆன்லைனில் வி-ள-க்-க-மா-க எழுதியிருந்தேன்.  இது போல் இன்னும் பலப் பல சம்பவங்களை எழுதியிருந்தேன்.  இந்த எழவுக்குத்தான் நான் ஒரு ஆளையும் வீட்டில் சந்திப்பதில்லை.  ஏன்யா, நான் என்ன மகாபாரதமா எழுதிக் கொண்டிருக்கிறேன், ட்ராயிங் ரூமில் அமர்ந்து ஜல்லி அடிப்பதற்கு?  கொஞ்சமாவது அறிவு வேண்டாமா?

இன்று ஒரு இளைஞர் ஒரு இலக்கிய விழாவுக்குப் பத்திரிகை கொடுக்க வேண்டும், நேரில் வரவா என்று கேட்டார்.  இந்த இளைஞர் எனக்குக் கொடுத்த அன்பு டார்ச்சர் பற்றி ஏற்கனவே பல பக்கங்கள் எழுதியிருக்கிறேன்.  அந்த அன்பு டார்ச்சர் அத்தனையுமே அறியாமல் செய்தவைதான்.  அவர் மிக மிக மிக நல்லவர்.  ஆனாலும் அவரால் ஒரு தற்கொலை கூட நிகழும் அளவுக்கு அறிவு கெட்டத்தனமான வேலைகளைத் தொடர்ந்து செய்யாவிட்டாலும் அவ்வப்போது செய்து வருகிறார்.

நேரில் வருகிறேன் என்றதுமே நான் உஷாராகி இருக்க வேண்டும்.  எனக்கும் புத்தி இல்லை.  ஆனால் எனக்கு புத்தி இல்லை என்பதற்காக மற்றவர்களின் உயிரை எடுக்க மாட்டேன்.  என்னுடைய பதுங்கு குழியிலேயே பதுங்கி விடுவேன்.  ஆனால் இந்த இளைஞர் அப்படி இல்லை.  விழா அழைப்பிதழ் கொடுக்க வருகிறேன் என்றார்.  வாருங்கள் என்றேன்.  மதியம் இரண்டு மணி வெயிலில் வந்தார்.  அதுவே எனக்குக் கொடுமையாக இருந்தது.  அவர் கஷ்டப்பட்டாலும் அதைப் பார்க்கின்ற நமக்கும் வருத்தம் வராதா?

பத்திரிகையைக் கொடுத்தார்.  அவர் பக்கத்தில் ஒரு பெண்.  இந்தப் பெண், சாரு, நீங்கள் எக்ஸைலில் எழுதியிருந்தீர்களே அஞ்சலி என்ற பெண்ணைப் பற்றி…  அந்த மாதிரி அனுபவங்களை அடைந்தவர்…

பழுக்கக் காய்ச்சிய சூட்டுக் கோலால் என் தொடையில் இழுத்தது போல் இருந்தது.  குற்றம் உள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும், உனக்கு என்ன என்று கேட்பவர்களை சைத்தான் தான் கவனிக்க வேண்டும்.  நான் எழுதும் எல்லாமே பல அன்பர்கள் சொல்வதைக் கேட்டுத்தான்.  எனக்கு நடந்ததாகத்தான் எழுதுவேன்.  மற்றவர்களிடம் கேட்டு எழுதும் போது அவர்களையே மாட்டி விடுவது போல் எழுத முடியாது.  அவர்கள் அந்தக் கதைகளைச் சொல்வதே பெரிய விஷயம்.  அதை எனக்கு நடந்ததாக எழுதுவதுதான் கதை சொன்னவர்களுக்கு நான் தரும் குறைந்த பட்ச பாதுகாப்பு.

The Story of My Assassins நாவலில் வரும் நாயகனுக்கு ஒரு மனைவி, ஒரு காதலி.  அந்தக் கதை தருண் தேஜ்பாலின் வாழ்வின் ஒரு காலகட்டத்தைப் பற்றிய கதை.  தருணைக் கொல்வதற்கு பாகிஸ்தான் ஒரு கொலைகாரக் கூட்டத்தை அனுப்பியது.  நடந்தது.  உண்மை.  வாஜ்பாயி பிரதம மந்திரி.  தருண் பிஜேபிக்கு எதிராகப் பயங்கரமாக எழுதிக் கொண்டும் ஸ்டிங் ஆபரேஷனும் செய்து கொண்டிருந்த நேரம்.  பிஜேபி கட்சியின் அகில இந்தியச் செயலாளரே தருணின் ஸ்டிங் ஆபரேஷனால் ராஜினாமா செய்து விட்டார்.  தருணைக் கொலை செய்து பழியை பிஜேபி மீது போட்டு விட – அதன் மூலம் பிஜேபி ஆட்சியைக் கவிழ்க்க பாகிஸ்தான் செய்த சதி தான் அது.  தருணுக்குப் பத்தாண்டுகள் Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.  கழிப்பறைக்குக் கூட தனியாகப் போக முடியாது.  வீட்டைச் சுற்றிலும் மணல் மூட்டைகளுக்குப் பின்னே துப்பாக்கி ஏந்திய காவலர்.  பத்து ஆண்டுகள் இப்படி.  இது நிஜமாக நடந்தது.  தருணின் அந்த நாவல் இந்தக் கதையைத்தான் சொல்கிறது.  கதைசொல்லியின் பெயரே இருக்காது. நான் நான் என்றுதான் போகும்.  அதில் கதைசொல்லிக்கு மனைவி தவிர ஒரு காதலி வருவாள்.  பெரிய புரட்சிக்காரி.  ஆதிவாசிகளின் மீது அக்கறை கொண்டு பல செயல்களைச் செய்வாள்.  இப்படி இப்படி.  தருணின் வாழ்வில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது எனக்கு நன்கு தெரியும்.  அதை அந்த நாவலில் அவர் சேர்த்திருந்தார்.  என் மனைவி அது யார் அது யார் என்று பிடித்துக் கொண்டு விட்டார் என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருந்தார் தருண்.

பத்திரிகை கொடுக்க வந்த அன்பரை அனுப்பி விட்டு உள்ளே வந்தேன்.  சாரு, எக்ஸைல் பற்றி என்னவோ கேட்டாரே அந்தப் பையன், அது என்ன?  என்று கேட்டாள் அவந்திகா.

எக்ஸைல் எங்கே கிடைக்கும் என்று கேட்கிறான் லூசுக் கம்மனாட்டி என்று சொல்லி விட்டு அவசரமாக பாத்ரூமுக்குள் நுழைந்தேன்.

இனிமேல் யாராக இருந்தாலும் என் வீட்டில் சந்திப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.  பத்திரிகை hair-ஐ தபாலில் அனுப்பி வையுங்கள்.