நா. முத்துக்குமாரின் மரணம் தொடர்பாக…

ஒவ்வொரு கவிஞனும் அகால மரணம் அடையும் போது சில சமூக ஆர்வலர்கள், பொதுநல விரும்பிகள் குடிப்பதன் தீமைகள் பற்றி உபதேசம் செய்கிறார்கள்.  கலை, இலக்கியம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாத அந்த மூடர்களுக்கு நண்பர் கார்ல் மார்க்ஸ் சொல்லியிருக்கும் பதிலை கீழே தருகிறேன்.  இதனால் எல்லா கவிஞர்களும், எழுத்தாளர்களும் குடித்து அழியுங்கள் என்று நான் சொல்லவில்லை.  ஆனாலும் அளவும் நிதானமும் வேண்டும் என்று நினைக்கிறேன்.  அது வேறு; பொதுநல விரும்பிச் சராசரி மொண்ணைகளின் உபதேசம் வேறு.  மேலும், எந்தக் கவிஞனையும் ஒரு கவிதை கூட எழுதியறியாவர்கள் புரிந்து கொள்ளவே இயலாது.  கார்ல் மார்க்ஸின் விளக்கம் மிகத் தெளிவாக இருக்கிறது.  இன்னொரு முக்கிய தகவல், ஒரு மூத்த சினிமா இயக்குனர் என்னிடம் சொன்னது, பாடலாசிரியர்களுக்கு சரியாகப் பணமே தருவதில்லை.  முத்துக்குமாருக்கு வழங்கப்பட்ட பல காசோலைகள் அவருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தன.
கீழே வருவது கார்ல் மார்க்ஸ்:
நா. முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி, குடிப்பழக்கம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நமது சூழலில் கலைஞனாக இருப்பது என்பது அவமானகரமான ஒன்று. பரிவு என்ற போர்வைக்குப் பின்னால் தங்களது அற்பத்தனங்களையும் பத்தாம்பசலித் தனங்களையும் மறைத்துக்கொள்கிற ஒரு மக்கள் திரளில் முன்னால் அவன் அம்மணமாக நிற்க நேரிடும். அதற்கு கலைஞனின் உயிரற்ற உடலும்கூட தப்பமுடியாது என்பதுதான் முத்துக்குமாரின் விஷயத்தில் நாம் புரிந்துகொள்வது.

‘எங்களுக்கு உதவுகிறோம் என்று எங்களை சங்கடப்படுத்தாதீர்கள்’ என அவரது தம்பி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு பொதுபுத்தியின் அத்துமீறல் தறிகெட்டுப் போயிருக்கிறது. அந்த அறிக்கை இல்லாவிட்டாலும் கூட இதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும் என்பதுதான் நிலைமை. இங்கு பொதுபுத்தி என்று சொல்வது பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் தன்னை சராசரி என்று உணராத தனி மனிதர்களின் தொகுப்பைத்தான். அத்தனை மூர்க்கமாக இருக்கிறது அது.

முதலில், குடிப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட தேர்வு. அதன் வழியே நடப்பதும், இருப்பதும், இறப்பதும் கூட எவரது அங்கீகாரத்தையும் கோராத அவனது மிடுக்கு. அவன்தான் இங்கு படைப்பாளி. அவனே கவிஞன். சராசரி புத்தியைக்கொண்டு ஒரு கவிஞனை, அவனது படைப்பு மனதை அளவிடும் அறிவீனத்தை சகித்துக்கொள்ள இயலாது. நீங்கள் சிலாகிக்கும் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் அந்த உருவாக்கத்தின் படைப்பு வாதை இருக்கிறது என்பதை அறிவுரை சொல்ல தலைப்படும் ஒவ்வொரு பொறுக்கியும் புரிந்துகொள்ளவேண்டும். படைப்புருவாக்கம் என்பது வேலை அல்ல. அதுவொரு நிலைமாற்றம்.

கவிதை என்பது இயந்திரங்களில் உருவாக்கப்படும் பொருள் அல்ல. கவிஞன் உருவாக்கும் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், அவன் இந்த வாழ்வில் பிணைந்தது இருக்கிறது, விலகியது இருக்கிறது, வெறுத்தது இருக்கிறது, தழுவியது இருக்கிறது. மேலாக, குடியை விரும்பிய ஒரு கவிஞனின் மூச்சுக்காற்றில் மிதக்கும் சாராயத்தின் நெடிகூட அந்த கவிதை வரிகளில் இருக்கிறது. ஒரு கவிதையை ரசிக்கிற எவனுக்கும் அல்லது எவளுக்கும், தனது உடலைப் பணயம் வைக்கும் ஒரு படைப்பாளி மீது புகார் தெரிவிக்கவோ, அறிவுரை சொல்லவோ, அவனது மரணத்தை வைத்து சமூகத்துக்கு வெற்று செய்தி சொல்லவோ எந்த தார்மீகத் தகுதியும் கிடையாது.

படைப்பு மனம் என்பது இந்த மவுடீகத்தைக் கடந்தது. கடந்த நான்கு நாட்களாக, குடி என்பதையும், உடல் நலன் என்பதையும் முன்னிட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு கவிஞனின் ஆன்மாவை அவமதித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரிய வேண்டுமானால், படைப்பு என்றால் என்னவென்று முதலில் புரியவேண்டும்.

ஏனெனில் இங்கு கொட்டப்படும் அறிவுரைகளுக்குப் பின்னால், படைப்பு என்பது என்ன, படைப்பு மனதின் அலைக்கழிப்புகள் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத மூர்க்கம் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரு கவிதையில் தான் விரும்பும் அல்லது தான் கரைந்துபோகும் கவித்துவ கணங்களை அடைய ஒரு கவி எதையும் கைவிடத்தயாராக இருக்கிறான். சிறுதும் பெரிதுமான மரணங்களை எதிர்கொண்டே அவன் கவிதைகளை உருவாக்கி நம்முன் வைக்கிறான். அந்த வகையில் அவன் சராசரிகளின் முன்னால் மிக உயரத்தில் நிற்கிறான். அவனைப் புரிந்துகொள்வது என்பது ஒரு நாகரீக சமூகம் தன்னைப் புரிந்துகொள்வதுதான்.

கவிஞனின் மரணம் என்பது, அவன் இனி புதிய கவிதைகளை எழுதப்போவதில்லை என்ற அளவில் மட்டுமே அது இழப்பு. அந்த இழப்பை வெளிப்படுத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு பண்பு இருக்கிறது. பிரத்யேக குணநலன் இருக்கிறது. அது அவனது செயல்களைக் குறை சொல்லாது. அவனை விசாரிக்காது. அவனது உடலைப் பிரித்து ஆராயாது. மாறாக அவனைத் தழுவிக்கொள்ளும். தனது கண்ணீரின் மூலம் கட்டற்ற நன்றியை வெளிப்படுத்தும், அந்த ஈரத்தில் காலமெல்லாம் தவித்துக்கிடந்த கவியின் ஆன்மாவை ஆற்றுப்படுத்த முயலும்.

இவை எதுவுமில்லாமல் ஒரு சமூகம் தனது லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் என்பதே பொருள். தனது அபத்தங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் அச்சமூகம் இருக்கிறது என்று பொருள். கைவிட முடியாத தனது கீழ்மைகளை ஒரு மக்கள் திரள், பரிவு எனும் கத்தியில் அதைப் படிய வைத்துக்கொள்ளுமெனில், படைப்பாளி என்பவன் நகைத்தபடி அதன் விளிம்பை நோக்கி தனது கழுத்தைக் கொணர்ந்தபடியே இருப்பான். படைப்புச் செயல்பாடு என்பது அதுதான்.

மேலே உள்ள பதிவுக்கு திருநாவுக்கரசு தினா  எழுதியிருக்கும் எதிர்வினை:

படைப்பாளி என்பவன் இலேசில் உருவாகிவிடுவதில்லை. ஒரு சுபயோக தினத்தில் காலை விழித்தெழுந்தவுடன் சடாரெனக் கலைஞனாக மாறிவிடுவதில்லை. அதற்காக பல வருடங்கள் அவன் உழைக்க வேண்டியிருக்கிறது. அதுவும் கவிஞனாக மாறுவதென்பது மிக எளிதான காரியமில்லை.

கவிஞன் என்பவன் எப்போதும் உணர்வுகளின் பிடியில் இருப்பவன். தெரிந்தோ தெரியாமலோ உவகை, மன அழுத்தம், விரக்தி, காதல், தத்துவம், சாந்தம், துயரம் என எல்லாவிதமான நுண்ணர்வுகளுக்கும் தன்னை ஆழப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கும். எப்போதுமே தன்னை உன்மத்த நிலையில் தக்கவைத்துக்கொள்ளும் வித்தையை பழகியிருக்க வேண்டும். சுயநினைவிலிருந்து பிரக்ஞையுடன் விலகியிருக்க வேண்டும். குடும்பம், குழந்தை, சொந்தங்கள் என எல்லாவற்றிடமிருந்தும் சற்று மறைந்திருக்க வேண்டும்.

சிலருக்கு நள்ளிரவின் தனிமை, சிலருக்கு புகை, சிலருக்கு காடு, சிலருக்கு மது, சிலருக்கு பனி, சிலருக்கு பயணம், சிலருக்கு பட்டினி, சிலருக்கு புறக்கணிப்பு, சிலருக்கு வலி, சிலருக்கு வெறுமை என படைப்பாற்றலுக்கு ஏதோவொரு பிடிமானம் தேவைப்படுகிறது.

தன் உயிரைச் சிறிதுசிறிதாக உருக்கியபடியே படைப்புகளை ஜனிக்கச் செய்பவன் கவிஞன். தயைகூர்ந்து, ஓர் படைப்பாளனை தராசுத்தட்டில் வைக்காதீர்கள். பொத்தாம்பொதுவாக ‘ஜட்ஜ்’ செய்துவிட்டு அகலாதீர்கள். அவரவர் இடத்தில் நின்று பார்த்தால்தானே அவரவர் உலகம் புரியும். நான் எதையும் நியாப்படுத்த முற்படவில்ல. கலைஞனை அவன் போக்கில் வாழவிடுங்கள்; இறக்க விடுங்கள். அவன் இயல்புதான் நமக்கெல்லாம் ‘படைப்பு’ என்பதை மறந்துவிடாதீர்கள்.

அப்படியும் உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையெனில், இறந்தவனுக்கு அறிவுரை வழங்குவதை விட்டுவிட்டு அவன் குடும்பத்திற்கு ஒரு லட்சம் காசோலை அனுப்புங்கள். கலைஞனின் குடும்பமாவது வாழ்ந்துவிட்டு போகட்டும்.