ஜி. கார்ல் மார்க்ஸ் மீண்டும்… விநாயக முருகனும்…

முகநூலில் பார்த்த பதிவு.

ஜி. கார்ல் மார்க்ஸ்:
முந்தைய பதிவில் ‘சராசரி’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தேன். அந்த வார்த்தையை யாரையும் காயப்படுத்தும் நோக்கிலோ அல்லது அவமதிக்கும் நோக்கிலோ சொல்லவில்லை. இதன் பின்னுள்ளது ஒரு சலிப்பு. நமது பொதுபுத்தி, அறிவுஜீவித்தனத்துக்கு எதிராக கொண்டிருக்கிற மூர்க்கத்தின் மீதான எரிச்சல் அது. ஒரு உதாரணத்துடன் இதைப் பார்ப்போம்.

உங்களுக்கு தினமும் காலையில் எழுந்தவுடன் பத்து கிலோமீட்டர் தூரம் ஓடுகிற பழக்கம் இருக்கிறது. நல்ல பழக்கம்தான் அது. அதற்காக உசைன் போல்ட்டைப் பார்த்து, ‘தம்பி நானும்தான் ஓடுகிறேன்… என்ன ஒன்று எனக்கும் பொண்டாட்டி புள்ளைன்னு இல்லாம இருந்திருந்தா… நானும் உன்ன மாதிரி ஆகியிருப்பேன்…’ என்று சொல்வீர்களா? இல்லைதானே? ஏனெனில், ஒரு சமூகமே பிரசவ வார்டில் இருப்பது போல, வயிற்றைத் தள்ளியபடி நடந்துகொண்டிருக்கும்போது நீங்கள் ஓடுவது உங்களுக்கு ஸ்பெஷல். அது உங்களது உடலில் ஏற்படுத்தும் விளைவைக் காணும்போது ஓட்டத்தின் மீது காதல் வரும். அந்த காதல் உசைன் போல்ட்டின் சாதனையை மதிக்கும் மனநிலையை உங்களுக்கு அளிக்கும். அவனைக் கொண்டாடுவதை நோக்கி உங்களை நகர்த்தும். நேர்மறையான ஒரு மனதின் செயல்பாடு அப்படித்தான் இருக்க முடியும்.

இதை அப்படியே எழுத்தின் மீது போட்டு பார்ப்போம். சமூக ஊடகங்கள் வந்தபிறகு, எல்லாருக்கும் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. கவிதையோ, கதையோ, அரசியலோ எது குறித்தும் சுவராஸ்யமாக நான்கு வரி எழுதவந்தால், காலமெல்லாம் லைக்கும் ஷேரும் மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் மத்தியில் எழுதுபவர்களுக்கு ஒரு கெத்து. ஆக இந்த இடத்தில் சொந்த எழுத்தின் மீது காதல் வரும். அவ்வாறு காதலிக்கத் தொடங்குகிறபோது, இயல்பாகவே அது முன்னோர்களின் சாதனை குறித்து பெருமிதம் கொள்ளும் மனநிலைக்கு நகரவேண்டும். இத்தகைய வசதிகள் எதுவும் இல்லாத காலத்திலும், தனது அக நெருப்பை அணையவிடாமல் பார்க் பென்ச்சிலும், ஒண்டுக் குடித்தனத்திலும் உட்கார்ந்துகொண்டு பிரம்மாண்டமான படைப்புகளை எழுதியவர்கள் மீதான பிரமிப்பாக அது மாறவேண்டும்.

ஆனால் இங்கு என்ன நடக்கிறது?

சமூக ஊடகங்களில் நான்கு வரி எழுத வந்தவுடனேயே, எழுத்து என்ன பெரிய கொம்பா, எழுத்தாளன் என்ன பெரிய புளுத்தியா என்ற நினைப்பில் எழுதுபவர்களுக்கு ஷோல்டர் உயர்கிறது. இப்படி தோள் உயர்ந்தால் அகம் தாழ்கிறது என்று பொருள். சிகிச்சை தேவை என்று அர்த்தம்.

இன்னொன்று, சமூக ஊடகங்களில் யாருக்கும் வாசகன் என்ற அடையாளத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லை. மேலும், வாசகனுக்கும் படைப்பாளிக்குமான இடைவெளி என்பது மிகவும் முக்கியமானது. அதை அதிகாரப் படிநிலையோடு போட்டு குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. எழுதுபவன் ஒரு ‘intellectual source’ என்று மதிப்பதற்கு மிகப்பெரிய அறிவெல்லாம் தேவையில்லை. தன்முனைப்பைக் கொஞ்சம் வாசகன் ஒதுக்கி வைத்தாலே போதும். இயல்பான வாஞ்சையும், நன்றியுணர்ச்சியும் இருந்தாலே, எழுத்தாளனின் பங்களிப்புகளை மதிக்கும் நிலைக்கு அது அவனைக் கொண்டு செல்லும். ஆனால் ஷோல்டர் உயர்ந்துவிட்டால் எழுத்தாளனுடன் பொருதும் நிலைக்கே நகர முடியும். இந்த மனநிலைதான் சராசரித்தனத்தின் உச்சம். முத்துக்குமாரின் விஷயத்தில் ஆபாசமாகத் திரிவது பொதுபுத்தியின் இந்த செயல்பாடுதான்.

ஒருவனை மேதை என்று ஏற்றுக்கொள்வதில் சராசரிகளுக்கு இருக்கும் தயக்கம். அவனது சிறப்புகளை விடுத்து, பொதுபுத்தியின் அடிப்படையில் அவனை சிலுவையில் ஏற்றி தங்களது மேதைமையை பறைசாற்ற முயல்வது. அதன் மூலம் தாங்கள் ‘காமன்மேன்கள்’ இல்லை என்று பிரகடனப்படுத்துவது. எழுதுபவன் ஒன்றும் தேவதூதன் கிடையாது, அவனுக்கு ஒன்றும் சிறப்பு சலுகைகள் தேவையில்லை என்று தமது மூடத்தனத்தை பட்டுத் துணிக்குள் பொத்தி வைப்பது. இதெல்லாம்தான் அற்பத்தனம்.

எழுத்து என்பது ஒருவனுக்கு இருந்தே ஆகவேண்டிய தகுதி அல்ல. எல்லோரும் கவிதை எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் ஒன்றும் இல்லை. ஆனால் அதை எழுதுபவன் எப்போதுமே ஸ்பெஷல். இதில் ‘Political Correctness’ பார்வைக்கு இடமே இல்லை. இதேதான் இசை, ஓவியம், நாட்டியம் போன்ற மற்ற கலைகளுக்கும். காமன்மேன்கள் இதில் புழுங்குவதற்கு ஒன்றும் இல்லை. காமன்மேனாக இருப்பது ஒன்றும் சாபம் அல்ல. அது எதற்கும் குறைந்தது அல்ல. ரசிகனாக இருப்பதும் வரம் தான்.

எனது பள்ளிப் பிராயத்தில் எங்களது சித்தப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்கு வருவார். அவர் B lit., படித்திருந்தார். அதாவது புலவர் பட்டம். தூய தமிழில்தான் பேசுவார். உதாரணத்துக்கு, ‘இன்று கொல்லைப்புறம் சென்றபோது, ஒரு முற்றிய நெற்றுத் தேங்காய் கிடந்ததைப் பார்த்தேன்’ என்ற அளவுக்கு. அவர் பேசுவதைக் கேட்க அவ்வளவு ஆசையாக இருக்கும். அவரை எங்கள் வீட்டில் யாரும் கிண்டலடித்து நாங்கள் பார்த்ததில்லை. இத்தனைக்கும் எங்கள் சித்தப்பா பொருளாதாரம் படித்தவர். ஆங்கிலத்தை பாடமாக எடுத்து படித்தவர்களும் அவரது நண்பர்களில் உண்டு.

எங்கள் அம்மாதான் இதில் அட்டகாசம். புலவர் பேசும் தமிழைக் கேட்கும்போது அப்படி ஒரு பெருமிதமாக அவரை நடத்துவார். எங்கள் அம்மாவுக்கும் தமிழ் நன்றாக வரும். அவர் ஏன் புலவர் தூய தமிழில் பேசுவதைக் கொண்டாடினார்? அந்த தூய தமிழ் என்பது ஸ்பெஷல். ஏனெனில் அது பொதுபுத்திக்கு எதிரானது. அதைப் பேசுவதில் அவர் காட்டிய பிடிவாதம் நாம் பின்பற்ற வேண்டிய ஒன்று. அதே சமயம் அம்மா ஏன் புலவரை இமிடேட் செய்யவில்லை? அதுதான் பக்குவம். இதிலிருந்துதான் நிறைந்த போதையில் என் மீது சரிந்து விழும் ஒரு கவிஞனைப் புரிந்துகொள்ளும் தன்மையை என்னுடைய இருபது வயதிலேயே நான் கற்றுக்கொண்டிருக்கக்கூடும். இந்த புரிதலின்மைதான் சமூக ஊடகங்களில் பெரும்பான்மையானவர்கள் சறுக்கும் இடம். அறிவுரை சொல்ல அலையும் அபத்தம் நேர்வது இங்குதான்.

கலையை சுகிப்பது வேறு. அதை இமிடேட் செய்வது வேறு. கலைஞனை எளிமையாக நடத்துவது வேறு. அவனை எளிமையாகப் புரிந்துகொள்வது வேறு. அவனும் இந்த சமூகத்தில் ஒருவன் என்று அங்கீகரிப்பது வேறு. அவனும் இந்த சமூகத்தில் ஒருவன்தானே என்று இடது கையால் நகர்த்துவது வேறு. ஞானத்தை வழங்குபவனிடம் சண்டையிடுவதும் முரணபடுவதும் வேறு. நானும் ஞானிதான் என்று அவன் முன்னால் கூச்சலிடுவது வேறு. முன்னது எளிய மனிதர்களின் வாஞ்சை. பின்னது சராசரிகளின் மூடத்தனம்.

***

விநாயக முருகனின் பின்னூட்டம்:

இதைபற்றி சாரு ஏதோவொரு கட்டுரையில் இரண்டே வரியில் சொல்லியிருப்பார்இப்படி… சின்ன குழந்தைகளுக்கு தூக்கத்தில் குறி விறைக்கும்.. அதை ஆண்மை எழுச்சி என்று எடுத்துக்கொள்ள முடியுமா? எழுதுறதுன்னா எவ்வளவு அனுபவம் வேண்டும்? சும்மாவா?