ஜோக்கர்ஸ் – தமிழ் ஸ்டுடியோஸ் அருண்

ஜோக்கர் பார்க்கவில்லையா என்று சுமார் நூறு பேர் என்னிடம் கேட்டிருப்பார்கள்.  குக்கூவைப் பார்த்த பிறகு இனிமேல் ராஜு முருகன் படங்கள் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.  மேலும் என் மதிப்புக்கு உரிய நண்பர் ஒருவராவது ஒரு படத்தைப் பற்றி ஒரு நல்ல வார்த்தையாவது சொன்னால்தான் தமிழ்ப் படம் பார்ப்பதாக இருக்கிறேன்.  இறைவி, கபாலி போன்ற படங்களால் நான் பட்டது போதும்.  சகாயம் போன்றவர்கள் நல்ல படம் என்று சொல்லி விட்டார்கள்.  இனிமேல் என் கழுத்தில் கத்தி வைத்தாலும் ஜோக்கருக்குப் போக மாட்டேன்.  ஏன் போக மாட்டேன் என்பதைத் தெரிந்து கொள்ள தமிழ் ஸ்டுடியோஸ் அருண் எழுதியுள்ள குறிப்பை இங்கே தருகிறேன்:

அரசியல் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு சினிமாவின் மொழி மீது அதன் வடிவம் மீது, நம்பிக்கையோ, போதிய அறிவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் சினிமாவின் சாத்தியங்களையாவது புரிந்துக்கொள்ளலாமே. நீங்கள் மக்களிடம் ஒன்றை கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினால் அதனை நேர்த்தியான முறையில் சொன்னால் மட்டுமே போய் சேரும். அருமையான கதைக்களம், ஆனால் மோசமான சினிமா உருவாக்கம் என்கிற பாணியில் சமீபத்தில் ஒரு படத்தை பார்த்தேன். கழிவறை பிரச்சனையை அந்த படத்தில் கதையைக் கொண்டே அழகாக, நேர்த்தியான சினிமாவாக எடுத்திருக்கலாம். கர்ப்பமான ஒரு பெண் மழை பெய்துக் கொண்டிருக்கும் இரவில், அவசர நிலை கருதி, , பாதி கட்டி முடிக்கப்பட்டு, ஈரமாக இருக்கும் கழிவறையை பயன்படுத்த எத்தனிக்கிறாள். பயன்படுத்திகிறாள். என்ன ஆனது என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரியும். எவ்வித சினிமா புரிதலும் இல்லாத ஒரு சாதாரண பார்வையாளனால் கூட, அடுத்து என்ன நடக்கும் என்பதை சர்வ சாதாரணமாக கணிக்க முடியும். கணிக்க முடிந்த ஒரு காட்சியை எப்படி படமாக்க வேண்டும் என்பதை மிகுந்த கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். காரணம் என்ன நடக்கும் என்பதை பார்வையாளன் கணித்துவிட்டான். ஆனால் அது எப்படி நடக்கும் என்பதை இயக்குனர்தான் அவனுக்கு சொல்ல வேண்டும். என்ன நடக்கும் என்பதை கணித்து விட்ட ஒரு காட்சியில், எப்படி நடந்தது என்பதை சரியாக சொல்லாமல்போனால், அது பார்வையாளனுக்குள் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால், கணிக்க முடிந்த அந்த காட்சிதான் படத்தின் தன்மையை மாற்றும் காட்சி என்றால் இன்னமும் அதிக அக்கறை கொள்ளவேண்டும். எப்படி சொல்கிறோம் என்பதில் போதிய கவனம் இல்லாவிடில், சினிமா மொழி இன்னொரு சாத்தியத்தை இயக்குனருக்கு கொடுக்கிறது. அது பார்வையாளனால் கணிக்க முடிந்த அந்த காட்சியை அவன் நினைத்ததற்கு மாறாக எப்படி காட்சிப்படுத்துகிறோம் என்பது.

ரமணா என்கிற படத்தில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் கதாநாயகிக்கு என்ன நடந்திருக்கும் என்பதை பார்வையாளன் மிக சுலபமாகவே கணித்திருப்பான். ஆனால் அது பார்வையாளன் நினைத்ததற்கு மாறாக, அதுவரை அவன் பார்த்திராத முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் படமாக்கப்பட்டிருக்கும். கதாநாயகன், கதாநாயகியை தொடும் அந்த வேளையில் சாம்பல் சுக்குநூறாக உடையும் அந்த தருணத்தில் அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா என்கிற தர்க்கங்களை தாண்டி பார்வையாளனும் உடைந்து போகிறான். அந்த காட்சி ஏற்படுத்திய தாக்கமே, பின்னர் கதாநாயகன் மேற்கொள்ளும் சட்டத்திற்கு புறம்பான, பழிவாங்கும் நோக்கிலான கட்சிகளுக்கு பார்வையாளன் மத்தியில் நியாயத்தை உண்டாக்குகிறது.

இன்னமும் சொல்வதென்றால், கழிவறை காட்சியில் கதாநாயாகிக்கு என்ன நடந்தது என்பதை சொல்ல இயக்குனருக்கு ஏன் அத்தனை ஷாட்கள் தேவைப்படுகிறது. இரண்டு ஷாட்களாலேயே அங்கே நடந்த கொடுமையை பார்வையாளன் உணர்ந்து உருகுவதற்கு ஏற்றவாறு சொல்லியிருக்கலாம். நான் முன்னமே சொன்னதுபோலவே, சினிமா பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். சினிமா உங்கள் இலக்காக இல்லாமல் போகலாம். உங்கள் நோக்கம் அரசியல் கருத்துக்களை பரப்புவதாக இருக்கலாம். ஆனால் சினிமா உங்கள் அந்த நோக்கத்திற்கு கொடுத்திருக்கும் பரந்துபட்ட மொழியை கொஞ்சம் உணர்ந்து செயல்பட்டால் உங்கள் நோக்கமும் நிறைவேறும்.

தவிர்த்து திரையரங்கத்திற்கு வரும் பார்வையாளனை, சுதந்திர தினத்திற்கு வரும் குழந்தைகளை போல் பாவித்து, அவர்கள் கையில் கொடுத்து அனுப்பும் இனிப்பு மிட்டாய் போல், பார்வையாளன் பையில் நான்கு அரசியல் வசனங்களை திணித்து அனுப்புவதால் யாதொரு பயனும் இல்லை. இனிப்பு மிட்டாய் சாப்பிட கரைந்து போகும். நீங்கள் கொடுத்தனுப்பிய அரசியலை சாடும் வசனங்கள் திரையரங்கை விட்டு வெளியேறியவுடன் பார்வையாளன் பையில் இருந்து தானாக வெளியேறும். அது அவன் மனதருகே கூட செல்லாது. சுதந்திர தினத்திற்கு வரும் குழந்தைகளை போல், படம் பார்க்க வரும் பார்வையாளனை ஜோக்கராக நினைக்காதீர்கள்.

தமிழ் ஸ்டுடியோஸ் அருண்