ஞானக்கூத்தன்: பாரதிக்குப் பிறகு தோன்றிய மகத்தான கவிஞன்

ஜூலை 23-ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் ஞானக்கூத்தனைப்போய் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.  காரணம் , சில தினங்களுக்கு முன்புதான் அவரிடம் ஒரு சமஸ்கிருத பாடலில் சில சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தேன். அப்போது உங்களைப் பார்க்க  நேரில் வருகிறேன் என்று சொன்னபோது, “இல்லை , இல்லை . நான் உங்களைப் பார்க்க வருகிறேன்,” என்று சொன்னார். இந்த அடக்கம் ஞானக்கூத்தனுக்கே உரிய தனிப்பண்பு . ஆனால் அந்த அடக்கமே ஞானக்கூத்தனை தமிழ் சமூகம் அறிந்து கொள்ளாமல் போனதற்கும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாமோ என சந்தேகமாக இருக்கிறது. சினிமாவின் காரணமாக தமிழ் நாடே ஒரு சப்த நரகமாக (decibel inferno ) மாறி இருக்கும் சூழலில் ஒரு கவிஞனின் மெல்லிய குரலா கேட்கப் போகிறது?

இங்கே காது கிழியும் அளவுக்கு  நம்மைப் பற்றி நாமே கூவிக்கொண்டால்தான் ஏதோ கொஞ்சமாவது திரும்பிப் பார்ப்பார்கள். நான் எப்போது ஞானக்கூத்தனைப் போய் பார்த்து விட வேண்டும் என நினைத்தேனோ அப்போது அவர் தன் கவிதை உலகில் இருந்து விடைபெற்று விட்டார். மறு நாள் காலை எனக்குச் செய்தி தெரிந்தபோது அவரது உடலுக்கு மரியாதை செலுத்த நான் போகவில்லை. அவரது மரணத்தை என்னால் தாங்க முடியாது என்பது ஒரு காரணம்; ஞானக்கூத்தனுக்கு மரணமே கிடையாது என்பது மற்றொரு காரணம்.

சங்க இலக்கியத்தின் நேரடியான இருபதாம் நூற்றாண்டு வாரிசு என ஞானக்கூத்தனைச் சொல்லலாம். நிலத்தைப் பாடினான் சங்கக் கவிஞன். நிலம் என்றால் நிலத்தின் வாழ்க்கை; அதன் கடவுள், மணம், மிருகம், கதை, கற்பு, துயரம், ஆட்டம், பாட்டம் அனைத்தும்.

ஃபிரெஞ்ச் நியூ வேவ் இயக்கம், அதுவரை பேரிலக்கியங்களிலும்  ராஜா ராணி கதைகளிலும் மட்டுமே சஞ்சரித்துக் கொண்டிருந்த சினிமாவை சராசரி மனிதனை நோக்கி இழுத்துக்கொண்டு வந்தது. அதைப்போல ஞானக்கூத்தன் தமிழ்க் கவிதையை தத்துவத்திலிருந்து சாமான்ய மனிதனிடம் அழைத்து வந்தார். அவனுடைய துயரம், கேலி, கிண்டல், அரசியல், மொழி, அன்றாட வாழ்க்கை எல்லாவற்றையும் பாடினார். அந்த வகையில் ஞானக்கூத்தனையே  நவீனத்துவத்தின் தொடக்கப் புள்ளி என்று சொல்லலாம். எப்படி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பாரதியிடம் தமிழ் புத்தெழுச்சி பெற்றதோ அதே போன்றதொரு திருப்பு முனையாக இருந்தவர் ஞானக்கூத்தன்.

அவருக்கு தமிழ் இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம் இரண்டுமே முறையாகத் தெரிந்திருந்தது. பாஸனையும் காளிதாசனையும் சமஸ்கிருதத்திலேயே படித்தவர் ஞானக்கூத்தன். அதேசமயம் மேற்கத்திய இலக்கியத்திலும் பாண்டித்யம் பெற்றிருந்தார். இந்த மூன்றிலுமே அவர் கொண்டிருந்த ஞானம் மிகவும் வியக்கத்தக்கதாக இருந்தது.

தனிப்பட்ட வாழ்வில் மிகவும் மென்மையானவரான ஞானக்கூத்தனின் கவிதைகள் யாவும் கடுமையான கலகத் தன்மை வாய்ந்தவை. மிக முக்கியமாக, திராவிட இயக்க அரசியலின் போலியான தமிழ்ப் பற்றை தொடர்ந்து தன் கவிதைகளால் பகடி செய்தவர் ஞானக்கூத்தன்.

***

எல்லா மொழியும் நன்று

கோவிக்காதீர் நண்பரே

தமிழும் அவற்றில் ஒன்று

***

எனக்கும் தமிழ்தான் மூச்சு

ஆனால் பிறர்மேல் அதை

விட மாட்டேன்

***

“தலைவரார்களேங்…

தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

 

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்

தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்

கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்

காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

 

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

 

“வளமான தாமிழர்கள் வாட லாமா?

கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற

பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?

தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்

கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே

நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்

நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்

தலைவரார்களேங்

பொதுமாக்களேங் நானின்னும்

யிருகூட்டம் பேசயிருப்பதால்

வொடய் பெறுகறேன் வணக்கொம்”

 

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்

அமைதி… அமைதி…’

 

ஞானக்கூத்தனின் பகடிக்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.  திராவிட கட்சிகள் தமிழைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தன. ஆனால் அதே திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழே காணாமல் போய் விட்டது. தமிழே தெரியாமல் தமிழ் நாட்டில் பள்ளி, கல்லூரிக் கல்வி அனைத்தையும் முடித்து விடலாம். அப்படிப்பட்ட ஒரு இளைய தலைமுறை உருவாகி இருக்கிறது. இதை எல்லாம் எழுபதுகளிலேயே பகடி செய்தார் ஞானக்கூத்தன்.

தமிழ் மரபு , சமஸ்கிருத மரபு, ஐரோப்பிய நவீனத்துவம் ஆகிய மூன்றையும் இணைத்தவர் ஞானக்கூத்தன். அவர் கவிதைகளின் மற்றொரு முக்கிய அம்சம், Iconoclasm. அதாவது, புனிதங்களைத் தகர்த்தல். உதாரணமாக, ஞானக்கூத்தனின் இந்த கவிதை:

“ஆடலரசே !

எப்படியாயினும் ஆடு.. உன்

ஆட்டத்தில் திக்குகள் எல்லாம் சிதறட்டும்..

ஆனால் என் எண்ணெய்ப்புட்டி

சிதறிவிடக்கூடாது. அது நடக்காதவரை

உனக்கு என் மேசையில்

இடமுண்டு”

 

தமிழில் நவீனத்துவத்தைத் துவக்கி வைத்த இந்த மகத்தான கவிஞனுக்கு இதுவரை ஒரு சாகித்ய அகாதமி விருதுகூட கொடுக்கப்படவில்லை. அதுமட்டமல்ல; ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது கொடுக்கப்பட்டிருக்காவிட்டால் எந்த விருதுமே வாங்காதவர் என்ற பெயர் கிடைத்திருக்கும்.

மகாஸ்வேதாதேவி என்ற வங்காள எழுத்தாளரின் மரணச்செய்தியை சென்னையின் ஆங்கிலப் பத்திரிகைகள் முதல் பக்கத்திலும் ஞானக்கூத்தனின் மரணச்செய்தியை ஒன்பதாம் பக்கத்திலும் வெளியிட்டன. தமிழின் அவலங்களில் ஒன்று அது.

நன்றி: உயிரெழுத்து, செப்டெம்பர் 2016