சாரு நிவேதிதா பள்ளியிலிருந்து வெளிவந்தவர்கள் என இதுவரை கருந்தேள் ராஜேஷ், அராத்து, கணேஷ் அன்பு, பிரபு காளிதாஸ் என்று பலரைச் சொல்லலாம். கார்ல் மார்க்ஸ், சரவணன் சந்திரன் ஆகியோரிடம் சாருவின் தாக்கத்தை அதிகம் காணலாம் என்றாலும் அவர்களை நான் வளர்க்கவில்லை. தூரத்தில் இருந்து பார்த்து அனுபவித்து வளர்ந்தவர்கள். நான் உரிமை கொண்டாட முடியாது. மேலும் ஒருவர் இருக்கிறார். அதகளம் செய்யக் கூடியவர். விரைவில் வெளிவருவார். நேரில் பழகினால் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று இருக்கும்.
இவர்கள் தவிர, இன்னொருவரைச் சொல்ல வேண்டும். ஜெகா என்பது அவர் நாமம். Philanthropist. அதாவது, தமிழ்நாட்டில் எங்காவது வெள்ளம் வந்தால் கடல் கடந்து வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவார். மகாத்மா சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு துண்டைக் கட்டிக் கொண்டதும் இந்திய விவசாயிகள் அத்தனை பேருக்கும் சட்டை கிடைத்து விட்டது அல்லவா, அந்த மேஜிகல் மொமெண்ட்டைப் பார்த்து விட்டுத்தான் ஜெகாவும் philanthropist ஆனது.
“உங்களுடைய முகநூல் பதிவுகளைத் தொகுப்பாகக் கொண்டு வாரங்கள்” என்று அவரிடம் நீண்ட நாளாகச் சொல்லி வருகிறேன். எப்போது செய்வார் என்று தெரியவில்லை. சமீபத்தில் முகநூலில் அவர் எழுதியிருந்த பதிவு இது. அவருக்கு மிக நன்றாகத் தமிழ் எழுதத் தெரியும். ஆனாலும் இந்தச் சிதைவை அவர் வேண்டுமென்றே தான் செய்கிறார். தெலுங்கு அவர் தாய்மொழி என்பது கூடுதல் தகவல். அதனால் என்ன, கன்னடம் என்றால்தானே பயப்பட வேண்டும்? பிரபு காளிதாஸின் தாய்மொழி மராட்டி. அதனால் விமலாதித்த மாமல்லனிடம் பேசும் போது நீங்கள் மராட்டியிலேயே பேசுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். ஒருமுறை மாமல்லன் அவருடைய அம்மாவிடம் மராட்டியில் பேசுவதைக் கேட்ட போது (30 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்; மாமல்லனுக்குத்தான் தேதியெல்லாம் ஞாபகம் இருக்கும்) மராட்டி போன்ற இனிமையான மொழி உலகில் வேறேதும் இல்லை என்று நினைத்தேன்.
இனி ஜெகா:
ஒரு நண்பர் இருக்கிறார். அவர் சமீபத்தில் சொன்ன கதய். நேரம் இருப்பவைங்கள் படிக்கவும்.
மலைக்குறவர், நாடோடிக்குறவர் தவிற்த்து நகரச் சுத்தி செய்யும் குறவர் என்கிற சமூகம் நம்மிடையே உண்டும். 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தையை அந்த நண்பருக்குத் தெரியும். அந்தப் பிள்ளையும் தாய் தகப்பனோடு சேர்ந்து நகரச் சுத்தி வேலையில் ஏதேச்சயாகப் பார்த்ததும் அழைத்து விசாரித்ததில் ‘மேற்படிப்புக்கு காசு கூட ஏற்பாடு செய்துருவோம் சாமி, ஆனா இவ போகமாட்டேங்குறா’ என்று சொல்ல ஒரு நண்பர் கூப்பிட்டு விசாரித்ததில் “அண்ணா, ரெம்ப கிண்டல் பன்றாங்கண்ணா. நா இந்த ஊர்ல 12ங்க்ளாஸ் படிக்கிறப்பவே “இதுக்கு ‘ஸ’ வராது, இவங்க நகர சுத்தி செய்யும் சாதிய சேர்ந்தவங்க” இப்டி நிறைய பேச்ச கேட்டுட்டண்ணா, வெளிய காலேஜுக்கும் போய் இனியும் என்னால இப்டி அவமானப் படமுடியாதுண்ணா” என சொன்னாள்.
ஒரு நண்பர் அந்தப் பிள்ளையையும் பெற்றோர்களையும் தேத்தி, இதுவரை இல்லாத வழமையாக அந்தப் பிள்ளையை மரைன் இன்ஜினியரிங்கில் சேர்த்தான். நான்கு வருடம் புஷ் சென போக அந்தப் பிள்ளை எல்லா ஹராஸ்மண்ட்டையும் தாண்டி படிப்பு முடித்து இப்போது கமர்சியல் ஷிப் இல் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். ஆறு மாதம் வேலை முடிந்து அமேரிக்கக் கண்டத்திலிருந்து ஊருக்கு வரும்போது, ஏற்பாடு போலவே கத்தாரிலிருந்து ஒரு நண்பர் கூட்டிக் கொண்டு சென்னை வரும் வழியில் அவருடைய பணி சூழ்நிலைகளை விசாரித்தார். குறிப்பு : ஒரு நண்பவரை அந்தப் பிள்ளை அப்பா என்று அழைக்கும்
“எப்படி வேலை, எத்தனை பேருடன் வேலை செய்றீங்கள்”
“செம்ம ஜாலியாக இருக்கு அப்பா, 18 பேர் கொண்ட க்ரூ வில் நான் ஒரே ஒரு பெண்”
“மரைன் வேலை ஆண்களுக்கே படுபயங்கரம். ஏகப்பட்ட செக்சுவல் ஹராஸ்மண்ட் விசயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். பல மாதங்கள் பயணப்படும் வேலையில் ஒரே ஒரு பெண்ணாக எப்படி சமாளிக்கிறீங்கள்”
“அதெல்லாம் ஒன்றும் இல்லை அப்பா, நான் யார், நீங்கள் யார் என உணர்த்திவிட்டால் அங்கு எந்த டிஸ்கிரிமினேசனும் சாத்தியமில்லை அப்பா”
“எல, ங்கொய்யால, பெரிய விஷயத்த சாதாரணமா சொல்ற. கொஞ்சம் விளக்கமாக சொல்லேன்”
“நான் பெண் என்று எங்குமே கோருவதில்லை, அதனால் அவர்களும் ஆண் என்கிற கோருதலுடன் என்னை அணுகவில்லை. வாடா மாமு மச்சி என்று கலந்தால் ஆண் பையன்கள் கேசுவலாக மாறிவிடுகிறார்கள் அப்பா. its really easy you know”
“இதை மட்டும் தமிழ்நாட்டு பெண்ணியவாதிகள் கேட்டால் உன்னை பெட்றோல் ஊத்தி கொழுத்திடுவாங்கலே. ஓக்கே ஷிப் வேலையென்றாலே கட்டுப்பாடில்லாத செக்ஸ் என்றுதான் சொல்றாய்ங்கள். ஒரு ஊருக்கு கப்பல் அடைந்ததும் கரையிலேயே மங்கையர் காத்திருப்பார்கள். இறங்கி மறுபடியும் ஏறுவது வரை மது மாது செக்ஸ் என்று சொல்கிறார்களே, அதைப் பற்றி”
“ஹாஹாஹா இதை நான் சொல்லக்கூடாது, ஆனால் இது எல்லாமே மோடி ஆட்சிக்கு வர உதவிய ஃபோட்டோஷாப் போன்ற இட்டுக்கட்டிய ஜிகினா வேலைகளப்பா. ஒரு ஊரில் கப்பல் நின்றதும் எங்களுக்குக் கிடைக்கும் காலம் மூன்று நாட்கள். கப்பலின் ஓய்வுப் பணி, பின் போக வேண்டிய தூரத்துக்காண ஆய்வுப்பணி என அனைவருமே ரெம்ப டயர்டாக வேலை செய்து கொண்டிருபார்கள். நீங்கள் கற்பனை செய்தது போலெல்லாம் இருந்தால் என் ஆண் நண்பர்கள் சேர்த்து எனக்கும் ஜாலிதான். ஒரு வெள்ளைக்காரன் எனக்காக ஜெட்டியில் காத்திருந்து நான் இறங்கியதும் என்னைக் காவி முத்தம் கொடுக்கிறான் என்று நினைக்கும் போது குதூகலமாகத்தான் இருக்கிறது”
“ரேஸ்கல். ஒக்கே. இந்தியாவில் இறங்கி விட்டாய். இங்கு எல்லாமே சாதிதான். நாளை நீ ஒரு கப்பல் கேப்டனாக ஆகிவிட்டாலும் இங்கு உன் சாதி துரத்தும்தானே? இந்தியருக்கு வாழ்நாள் சாதனை என்றால் கல்யாணம்தான். நீ கப்பல் வேலையில் வேறு இருக்கிறார். உன் சாதி ஆண் இல்லையென்றாலும், ஒரு இந்தியனைத் திருமணம் முடிக்கும் போது இந்த விஷயங்கள் எல்லாம் மனதில் வரும்தானே, நீ என்ன மாதிரியான தயரிப்பில் இருக்கிறாய்?”
“அப்பா, நீங்கள் என்னிடம் முன்பு கதையாய் சொன்னீர்களே, அதைப் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். தாய்லாந்த் பட்டாயாவில் இருக்கும் ‘மெட்ராஸ் ரெஸ்டாரண்ட்டில் இருபது வயதுக்குக் குறைவான பெண்களே வேலை செய்கிறார்கள். அவர்களை வேலைக்கு வைத்த அண்ணன் அதற்குண்டான காரணத்தையும் சொன்னீர்கள்தானே, அதையே என் வாழ்க்கை வழிமுறையாகவும் எடுத்துக் கொள்கிறேன்”
“ஞாபகம் இல்லை, நா போதைல சொல்லியிருப்பேன். நல்லா இருலே, கடைசியாக சொல்லு, இந்த வாழ்க்கைக்கு யாருக்கு நன்றி சொல்லனும்னு நெனைக்கிற”
“தந்தை பெரியாருக்கு”
“அப்ப எனக்கு?”
“வெட்டி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த உங்களை உருவாக்கிய தந்தை பெரியாருக்கு”
“வெக்கேசன்ல என்னலே செய்யப்போற”
“என் சம்பாத்தியம் எல்லாம் சேர்த்து பிள்ளைங்கள படிக்க வைக்க போறேன் அப்பா”