மேலும் ஒருவர் பற்றி முகநூலில் ஜெகா பின்வரும் குறிப்பை அள்ளி விட்டிருக்கிறார். ஏற்கனவே சொன்னேன் அவர் ஒரு philanthropist என்று. அது இந்தக் குறிப்பிலும் தெரிகிறது. ரொம்பவே அடக்கமானவரும் கூட. அவருடைய காமெண்ட் இது:
”அளவுக்கதிகமான அன்பினால் இதை எல்லாம் சொல்றீங்க சாரு. நான் இதுக்கு தகுதியானவனான்னு தெரியல. ஆனா, என் பொருட்டு ஏதாச்சும் நடந்திருந்தா அதற்கான உரம் குருநாதர்களான நீங்கள்தான்.”
ஜெகாவுக்கும் மற்றவர்களுக்குமான அறிவிப்பு: ”என்னைக் கத்தியால் குத்திக் கொல்ல வரும்போதும் ’இந்த உலகின் மகத்தான கவி நீ’ என்று சொல்லி விட்டுத்தான் குத்துவார்” என்று மனுஷ்ய புத்திரன் என்னைப் பற்றி எழுதியிருந்ததாக ஸ்ரீராம் சொன்னார். மனுஷ்ய புத்திரனை unfriend பண்ணித் தொலைத்து விட்டதால் அவருடைய பதிவுகள் எதையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் ஃப்ரெண்ட் பண்ணிக் கொள்ளலாம் என்று பார்த்தால் அந்தப் பட்டியலில் அவர் பெயரையே காணோம். சரி, விஷயத்துக்கு வருகிறேன். கத்தி, குத்து போன்ற வன்முறை கலந்த வார்த்தைகள் மனுஷின் அகராதியில் மலரே, மானே, தேனே என்று பொருள். அவர் தன் காதலியைக் கூட குருதிக் குமிழே, வாளின் முனையே என்றுதான் கொஞ்சுவது வழக்கம் என்று அவருடைய முன்னாள் காதலி ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். எனவே அந்த வன்முறையை நீக்கி விட்டு, அவர் சொன்னதன் உட்பொருளை கவனியுங்கள்.
என்னுடைய உலகில் அன்புக்காக இலக்கியத்தில் இட ஒதுக்கீடு எல்லாம் கொடுப்பது கிடையாது. 100 மார்க், அல்லது 99.9 மார்க் எடுத்திருந்தால் மட்டுமே என் இலக்கிய உலகில் அட்மிஷன் கிடைக்கும். உறவினர் என்றோ, என்னைக் கொல்ல வந்தவன் என்றோ பார்ப்பது கிடையாது. ஜெயமோகனும் நானும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த காலத்திலேயே கூட அவர் எழுதிய நான் கடவுள் வசனங்களை வானளாவப் புகழ்ந்தவன் நான். ஜெகாவின் மீது அன்பு அதிகமாகப் போனால் Chanel 5 perfume வாங்கிக் கொடுங்கள் என்று வேண்டுகோள் அனுப்புவேனே தவிர இந்த மாதிரி நீங்கள் எழுதியிருப்பது சூப்பர் என்றெல்லாம் மொக்கை போட மாட்டேன். இதுவரை வாழ்நாளில் போட்டதும் இல்லை. இலக்கியம் எனக்கு நெருப்பு மாதிரி. ஜெகாவின் எழுத்தில் நெருப்புப் பொறி தெரிகிறது. அரிசிப் பொரி அல்ல.