இரண்டிலுமே மனுஷ்ய புத்திரன் வருகிறார். கொடுங்கனா என்றால் மனுஷ் இல்லாமலா?
கொடுங்கனா ஒன்று:
முதல் கனவு வந்த போது தேர்தல் சமயம். மனுஷ்ய புத்திரன் போலீஸ் மந்திரியாகி ஏதோ பொய்க் கேசில் என்னை உள்ளே தள்ளி விடுவதைப் போல. கனவுதானே, என்ன லாஜிக் இருக்கப் போகிறது என்று விட்டு விட முடியவில்லை. ஏனென்றால், படு காட்டமாக என்னைத் தாக்கி முகநூலில் எழுதிக் கொண்டிருந்தார். அதனால் ஏற்பட்ட பயமாக இருக்கலாம். ஆனாலும் என் உயிர் உள்ளளவும் மனுஷ்ய புத்திரனை இந்த நூற்றாண்டின் மகத்தான கவிகளில் ஒருவர் என்று நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். இன்று காலை (7.8.2016) எழுந்ததும் என் அலைபேசிக்கு அவர் எழுதிய கவிதை ஒன்றை அனுப்பியிருந்தார். ஒரு கவிஞன் எழுதிய கவிதையை முதல் வாசகனாகப் படிப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றெல்லாம் மனுஷ்ய புத்திரன் விஷயத்தில் எழுத முடியாது. அயோக்கியன் தன்னுடைய எல்லா சினேகிதிகளுக்கும் அனுப்பி விட்டுத்தான் எனக்கு அனுப்பியிருப்பான்.
ரத்த ருசி
…..
என் சொல்லே
என் சொல்லே
நீ எப்போதும்
ஒரு குறுவாளாய்தான்
என் கைகளுக்கு வர வேண்டுமா?
உன்னை
முனைமழுங்க வைக்கத்தானே
எங்கெங்கோ மண்டியிட்டு அழுதேன்
யார் யாரிடமோ சமரசங்கள் செய்தேன்
இருந்தும் உன் பளபளக்கும் கூர் நுனி
தீட்டப்படாத நாளே இல்லை
ஒரு பசும்புல்தரைபோல
தம் சொல்லை வளர்த்து
மாடுகள் மேயவும்
இடையர்கள்
இளைப்பாறவும்
தருபவர்கள்
இல்லாமல் இல்லை
ஒரு நாளேனும்
ரத்தருசி இல்லாமல்
நீ திரும்பினால்தான் என்ன
என் நேசத்திற்குரிய ஒருவரின் கழுத்தில்
நீ வேறெதையும் நினைக்காமல்
இறங்குகையில்
ரத்தம் சிந்துபவர் எவரும்
அதிர்ச்சி அடைவதில்லை
நான் தானா அது
என்று அவர்கள்
வியந்து நோக்குகையில்
நான் தனியனாகிறேன்
என் குறுவாளே
என் குறுவாளே
எப்போது நான் உன்னை
ஒரு கிணற்றில் எறிந்துவிட்டு
என் வழியே செல்வேன்?
மனுஷ்ய புத்திரன்
6.8.2016
இரவு 11.33
இரண்டாம் கனா:
இது இன்று மதியம் அரைத்தூக்கத்தில் கண்ட கொடுங்கனா. மனுஷ் அரசியலில் குதித்தது பற்றி என் மனதில் பட்டதைச் சொல்லியிருந்தேன். டைம்ஸ் ஆஃப் இந்தியா. பெயர் குறிப்பிடாமல் சொல்லியும் எல்லோருக்கும் அது மனுஷ் என்று தெரிந்து விட்டது போல. இந்தக் கிசுகிசு எழுத்தாளர்கள் மேல் பொறாமையே உண்டாகிறது. எப்படித்தான் எதுவுமே கண்டு பிடிக்க முடியாமல் எழுதுகிறார்களோ! நான் அந்தக் கட்டுரையாளரிடம் தெரிவித்த கருத்துக்கு மனுஷ் மறுப்பு மாதிரி ஒன்றை எழுதியிருக்கிறார். மாதிரி இல்லை. மறுப்புதான். (எதுக்கு வம்பு?) அதில் அவர் தெரிவித்திருந்த ஒரு கருத்து பிரமாதமாக இருந்தது. ”அரசியலில் குதித்த பிறகுதான் மிக அதிக அளவில் எழுதுகிறேன்.” உண்மைதான். ஒரு கவிஞன் தன் வாழ்நாள் முழுவதும் எழுதக் கூடிய கவிதைகளை மனுஷ் ஆறு மாதங்களில் எழுதுகிறார். ஒன்றுமே சோடை போகவில்லை. வீரியம் கூடிக் கொண்டேதான் போகிறது.
என்ன இது? எப்படிப் புரிந்து கொள்வது இதை? மிகவும் எளிது. நான் கண்ட கொடுங்கனாவைச் சொல்கிறேன். இடம் தில்லி விமான நிலையம். பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் மனுஷ் வாரம் ஒருமுறை தில்லி செல்ல வேண்டியிருக்கிறது. அப்படிச் செல்லும் போது ஒருநாள். தில்லி விமான நிலையம். மனுஷின் விமானத்திலேயே வந்து இறங்குகிறார் சசிகலா புஷ்பா. கொஞ்ச நேரத்தில் விமான நிலையத்தில் களேபரம். சசிகலாவின் குரலுக்கு மேலாக எகிறி அடிக்கிறது மனுஷின் குரல். எப்படி நீங்க என்னை அடிக்கலாம். உங்களை சும்மா விட மாட்டேன். இன்றைக்கே பத்து கவிதை எழுதுகிறேனா இல்லையா பாருங்கள். வாணிஸ்ரீ கவிதையை விட சசிகலா புஷ்பா கவிதை எப்படிப் போகிறது என்று பாருங்கள். இதைக் கேட்கும் சசிகலா புஷ்பா ஏதோ மனுஷ் தன்னை மிக மோசமாகத் திட்டி விட்டது போல் அதிர்ச்சியாகிப் பார்க்கிறார்.
இந்தக் கனவுதான் என் இன்றைய மதியத் தூக்கத்தில் வந்தது. நிச்சயமாகக் கொடுங்கனா தான் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
கனா முடிந்ததும் முன்பு கேட்ட குழப்பத்திற்கும் விடை கிடைத்து விட்டது. எப்பேர்ப்பட்ட பைத்தியக்காரத்தனமான சூழல் பாருங்கள். இங்கே மனுஷோடு சண்டை போட ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும். அங்கே அரசியலில் சண்டை போட சசிகலா புஷ்பா. இந்த madness-ஐ ஒரு கவிஞன் எப்படிக் கடப்பான் என்று தயவுசெய்து சொல்லுங்கள். கவிதை எழுதி கவிதை எழுதி கவிதை எழுதி கவிதை எழுதித் தானே இந்தப் பைத்தியக்காரத்தனத்தைத் தீர்க்க முடியும்? வேறு எந்த வகையில் தீர்ப்பது?
என்னை நீங்கள் வலுக்கட்டாயமாக பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போடுங்கள். மனுஷை விட அதிக அளவில் அதே வீர்யத்தில் கவிதை எழுதிக் காட்டுகிறேன். கவிதை எழுதாவிட்டால் நானும் அங்கேயுள்ள பைத்தியங்களில் ஒரு பைத்தியமாக ஆகி விட மாட்டேனா? கவிதைதானே ஐயா நம்மையெல்லாம் காப்பாற்றுகிறது?
புரிகிறதா, இதை விட விளக்கமாகச் சொல்ல வேண்டுமா?