எம். மணிகண்டனின் ’காக்கா முட்டை’ வித்தியாசமான முயற்சி என்பதால் சற்று ஆர்வத்துடனேயே ‘குற்றமே தண்டனை’க்குச் சென்றேன். நிச்சயமாக இதுவும் மற்ற தமிழ்ப் படங்களிலிருந்து விலகிச் செல்லும் வித்தியாசமான முயற்சிதான். அதில் சந்தேகமில்லை. படம் சுவாரசியமாகவே இருந்தது. ஒரு இடத்திலும் அலுப்புத் தட்டவில்லை. ஆனாலும் இந்தப் படம் தரும் ஒட்டு மொத்த அனுபவம் என்னவென்று பார்த்தால், ஏதோ ஒன்று குறைகிறது. இது, இந்தப் படத்தைப் பற்றிய பொதுவான அபிப்பிராயம். ஆனால் யாருக்கும் என்ன குறைகிறது என்று தெரியவில்லை. ஏதோ குறைகிறது. அது என்ன என்று என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்ததால் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
சினிமாவை மசாலா சினிமா, மாற்று சினிமா என்று பிரிக்கலாம் என்றால், அந்த இரண்டுக்குமே ஒரு பொதுத் தன்மை இருக்கிறது. தர்க்கம். மசாலா சினிமாவில் தர்க்கம் ஏது? பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஐந்தடி உயர வேலியை எகிறிக் குதித்து இந்திய எல்லையில் உள்ள குளத்தில் விழுந்து சரோஜாதேவியோடு டூயட் பாடிய எம்ஜியார், அதே பாகிஸ்தான் எல்லைக்குப் போய் பாகிஸ்தான் தீவிரவாதிகளை (பாகிஸ்தானில் வாழும் அத்தனை பேருமே தீவிரவாதிகள்தான் என்று அப்போது நினைத்துக் கொண்டிருந்தேன்) தன் சுண்டு விரலால் பந்தாடிய விஜயகாந்த், தன்னை நோக்கி வரும் துப்பாக்கிக் குண்டுகளை டான்ஸ் ஆடிக் கொண்டே பற்களால் கவ்வும் இளைய தளபதி விஜய் போன்றவர்களின் மசாலா சினிமாவில் தர்க்கம் எங்கே என்று நீங்கள் ஐயுறலாம். தர்க்கமே இல்லை என்பதுதான் அந்தப் படங்களின் தர்க்கம். அதே சமயம் மாற்று சினிமாவின் தர்க்கம் என்ன என்றால் அதில் தர்க்கம் இருக்க வேண்டும் என்பதுதான். மசாலா சினிமாவின் இலக்கணத்தை எடுத்துக் கொண்டு மாற்று சினிமா செய்ய முடியாது. அதைச் செய்ததால்தான் குற்றமே தண்டனையில் ஏதோ குறைகிறது; ஏதோ இடிக்கிறது.
மணிகண்டன் ’குற்றமே தண்டனை’யை ஐரோப்பிய சினிமா பாணியில் எடுத்திருக்கிறார். அந்தத் துணிச்சலுக்காக அவர் பாராட்டுக்குரியவர்தான் என்றாலும், வெறும் வடிவமும் தொழில்நுட்பத் திறனும் மட்டுமே ஒரு படத்துக்குப் போதாதே? ஒரு மசாலா சினிமாவுக்குக் கூட இந்த இரண்டும் மட்டும் போதாதே? படத்தின் கதையிலேயே மிகப் பெரிய தவறு இருக்கிறது. குற்றமே தண்டனை ஒரு த்ரில்லர். த்ரில்லரின் பொதுவான தேவை, படத்தின் முடிவில் ஒரு திடீர்த் திருப்பம். யாருமே எதிர்பார்க்காத திருப்பம். துப்பறியும் கதைகளின் பாணி அது. அதே பாணியைத்தான் கையாண்டிருக்கிறார் மணிகண்டன். ஆனால் அதே பாணிதான் கதையோடு யாரும் ஒன்ற முடியாமல் செய்து விடுகிறது. மசாலா படங்களுக்குப் போகும் போது சொல்வார்கள், மூளையைக் கழற்றி வைத்து விட்டுப் போக வேண்டும். அதேபோல் மாற்று சினிமாவைப் பார்க்க முடியாது அல்லவா? கதையில் அநேக தர்க்கப் பிழைகள். குற்றமே செய்யாத ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கும் அளவுக்கு நம்முடைய சட்டம் அவ்வளவு மோசமாக இல்லை. அதுவும் அவன் பணம் படைத்தவன். படத்தில் வரும் இளைஞனின் கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்படுகிறது. எப்படி நிரூபிக்கப்பட்டது என்ற விளக்கம் படத்தில் இல்லை. அதே சமயம், கொலை செய்தவன் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தப்பி விடுகிறான். அவன் பேச்சைத்தான் போலீஸ் நம்புகிறது. போலீஸ் துறை என்ன அவ்வளவு வெளக்கெண்ணையா? இதெல்லாம் படத்தில் திடீர்த் திருப்பம் கொடுப்பதற்காகச் செய்யப்படும் செயற்கை நிகழ்வுகளாக மாறுகின்றன.
இதையெல்லாம் விட பெரிய சிக்கல் என்னவென்றால், நாயகனின் பாத்திரப் படைப்பு படு மோசம். அதனால்தான் யாராலும் படத்தோடு ஒன்ற முடியவில்லை. எம்ஜியார் படங்களில் கடைசி சீனில் நம்பியார் நல்லவனாவது மாதிரி பாத்திரங்கள் சடார் சடாரென்று குட்டிக் கரணம் போடுகின்றன. ஒரே விதிவிலக்கு, பூஜா தேவரியா.
மசாலா சினிமாவில் கேரக்டர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் குற்றமே தண்டனை ஆரம்பத்திலிருந்து இயல்பான (realistic) தொனியிலேயே கதையை சொல்லிச் செல்கிறது. இயல்பான மனிதர்கள், இயல்பான லொகேஷன், நாம் அன்றாடம் பார்க்கும், அனுபவிக்கும், வாழும் வாழ்க்கை. கொஞ்சம் கூட சினிமாத்தனம் இல்லாமல் சொல்கிறது படம். அப்படியிருக்கும் போது கதாபாத்திரம் மட்டும் இயல்புக்கு வெளியே போக முடியுமா? அப்படிப் போகிறது என்றால் அதற்கான காரணிகளில் படம் கவனம் செலுத்த வேண்டாமா? மாற்று சினிமாவுக்கு நம்பகத்தன்மைதான் அடிப்படை பலம். அந்த அடிப்படை குற்றமே தண்டனையில் இல்லாததால்தான் பார்வையாளர்கள் சலனமற்று வெளியே வருகிறார்கள்.
எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட காக்கா முட்டையிலும் இதே பிரச்சினைதான் இருந்தது என்பதால் மணிகண்டனை அதிகமாக விமர்சிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர் ஏழ்மையின் அரசியலை விட்டு விட்டு ஏழைகளை romanticise செய்திருந்தார். அதுதான் மத்தியதர வர்க்கத்துப் பார்வையாளர்களைக் குதூகலிக்க வைத்தது. ஏழைகள் நல்லவர்கள் என்றால்தான் மத்தியதர வர்க்கத்தினரின் குற்ற உணர்ச்சியிலிருந்து அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். அந்த விடுதலையை காக்கா முட்டையில் கொடுத்ததால்தான் அந்தப் படம் மத்தியதர வர்க்கத்தினரால் கொண்டாடப்பட்டது. மற்றபடி அந்தப் படத்தில் அவர் சேரிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் வன்முறையைக் காண்பிக்கவே இல்லை. காண்பித்திருந்தால் மத்தியதர வர்க்கம் அந்தப் படத்தைப் புறக்கணித்திருக்கும். உதாரணமாக, பீட்ஸா சாப்பிடுவதற்காக ஆசைப்படும் ஏழைச் சிறுவர்கள் பணக்காரச் சிறுவன் கொடுக்கும் பீட்ஸாவை மறுத்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நிலக்கரியைத் திருடி விற்று கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து தாங்கள் ‘உழைத்த’ பணத்தில் பீட்ஸா வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால் அப்படித்தான் ஏழைகள் தாங்களே ’சுயகௌரவத்தோடு’ பணம் சேர்த்து நல்லவர்களாக வாழ்வார்கள் என்று ஆசைப்படுகிறது மத்தியதர வர்க்கம். அப்போதுதான் அவர்களால் படத்தில் வரும் ஏழைகள் சுயகௌரவத்தோடு வாங்கிச் சாப்பிட்ட பீட்ஸாவைப் பார்த்த பரவசத்தோடு வெளியே போய் நிம்மதியாகப் பீட்ஸா வாங்கிச் சாப்பிட முடியும்.
குற்றமே தண்டனையின் மற்றொரு பெரிய குறை, இசை. மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்த்த பிறகு நானும் மற்ற தமிழர்களைப் போல் இளையராஜாவின் தீவிர ரசிகனாகி விட்டேன். ஆனால் அப்படிப்பட்ட இசையை அவரிடமிருந்து வரவழைக்க ஒரு மிஷ்கின் தேவை என்று குற்றமே தண்டனையைப் பார்க்கும் போது தெரிகிறது. ஏதோ தியேட்டரில் கோளாறா என்றார் நண்பர். டமடமவென்று செவிச் சவ்வுகளைக் கிழித்தது இசை. தியேட்டர் மல்ட்டிப்ளெக்ஸ் ஹால். இசையில்தான் பிரச்சினை. இவ்வளவு மெதுவாக நகரும் படத்துக்கு நம்மால் ஆன உதவியைச் செய்வோம் என நினைத்திருக்கலாம் இளையராஜா. ஆனால் இந்த genreஇல் எடுக்கப்படும் படங்களுக்கு மிக மெலிதான இசைதான் தோதாக இருக்கும். உதாரணமாக, The Turin Horse படத்தின் இசையைச் சொல்லலாம். இது போன்ற மாற்று சினிமாவில் இயக்குனர் இசையை இசையமைப்பாளரின் பொறுப்பில் விட்டு விட்டுக் கை கட்டி அமர்ந்து விட முடியாது என்பதற்கு ஓநாயும் ஆட்டுக் குட்டியும் ஒரு உதாரணம். அந்த த்ரில்லரை ஓர் உலகத் தரமான படமாக மாற்றியதற்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம். அது குற்றமே தண்டனையில் இல்லை. இல்லை என்பதை விட அதற்கு எதிர்த் திசையில் போயிருக்கிறது இசை. உதாரணமாக, பட்டினியாய்க் கிடக்கும் கிளிகளுக்கு ரவி உணவு கொடுக்கும்போது கேட்கும் இசை, இதோ எப்படி நடிக்கிறேன் பாருங்கள், என்னைப் போல் நடிகன் உண்டா இப்பூவுலகில் என்று கேட்பது போல் நடிக்கும் கமல்ஹாசனின் நடிப்பை நினைவூட்டுகிறது. அந்தக் காட்சியில் தேவைப்பட்டது subtle ஆன இசை. ஆனால் கிடைத்திருப்பது, இதோ பாருங்கள் எப்பேர்ப்பட்ட அன்பு, எப்பேர்ப்பட்ட அன்பு என்ற ஆரவார இசை.
மணிகண்டன் வடிவத்தை விட்டு விட்டு சினிமாவின் அழகியலுக்கு உள்ளே நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் கபாலி – 3 அவருக்காகக் காத்துக் கிடக்கிறார்.