செப்டெம்பர் 25, 2016
ஒருத்தன் இன்னொருத்தனைத் தேடி வந்தான். இன்னொருத்தன் தன் பூனைக்கு தோட்டத்தில் வைத்து மீன் போட்டுக் கொண்டிருந்தான். ரெண்டு கையிலும் மீன். பூனை சாப்பிட நேரமாயிற்று. அவனோடு கொஞ்சிக் கொண்டும் மிஞ்சிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஊடே ஊடே ஏதாவது பெரிய மிருகம் வந்து தன் வாயிலிருக்கும் மீனைப் பிடுங்கிக் கொள்ளுமோ என்ற சந்தேகத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளவும் செய்தது. தனக்குப் பிரியமான இந்த மனிதன் நிற்கும் போது எந்த மிருகமும் குறுக்கே வர ஏலாது என்று அந்தப் பூனை தனக்குத்தானே சமாதானமும் சொல்லிக் கொண்டது. இப்படியாக பூனை சாப்பிட்டு முடிக்க அரை மணி ஆயிற்று. இடையில் இரண்டு தடவை அவனுடைய தொலைபேசி அடித்தது. ரெண்டு கையிலும் மீன். உள்ளே போய் தொலைபேசியை எடுக்கும் நேரத்தில் அனாதையாய் அலையும் பெரிய பூனைகள் இந்தப் பூனையை விரட்டி விட்டு மீனைத் தூக்கிக் கொண்டு போய் விடலாம். தொலைபேசி அடிக்கட்டும்; போய் எடுத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.
எல்லாம் முடிந்து உள்ளே வந்து தொலைபேசியில் எடுத்துப் பேசினான். ”உங்கள் வீட்டுக்கு வந்து இருபது நிமிடம் வெளியே காத்திருந்தேன். போன் பண்ணினேன். நீங்கள் எடுக்கவில்லை. வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.”
”அடப் பாவி. கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்திருக்கலாமே?”
“தோட்டத்தில் ஸோரோ இருக்குமே?”
“அது கடிக்காதே?”
”போன வாரம்தான் வீட்டுக்குள் வந்த ஒரு ஆளைக் கடித்துக் குதறிப் போட்டு விட்டது என்று சொன்னீர்கள்?”
”ஓ, ஆமாம், மறந்து விட்டேன்.”
முதல் ஆள் பிரபு காளிதாஸ், ரெண்டாம் ஆள் சாரு, பூனை : ச்சிண்ட்டூ.