சிங்கப்பூர் விவகாரம்

செப்டெம்பர் 28, 2016

கார்ல் மார்க்ஸிடமும் ஜெயமோகனிடமும் ஒரு சந்தேகம். சூர்ய ரெத்னா போன்ற எதையுமே படிக்காத ஒருவரின் சிறுகதைத் தொகுதிக்கெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து படித்து மதிப்புரை எழுதும் ஜெ. என்னுடைய ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களுக்கு மதிப்புரை எழுத மாட்டாரா? திட்டினாலும் பரவாயில்லை. நான் ஒன்றும் பதிலுக்கு சூர்ய ரெத்னா மாதிரி this guy that guy என்றெல்லாம் எழுத மாட்டேன். எப்படி இருந்தாலும் எனக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதுவார் இல்லையா, அதை முன் கூட்டியே இப்படி நாவல் மதிப்புரையாக எழுதினால் நானும் கொஞ்சம் படித்துவிட்டுப் போவேனே? (இந்தப் போவேனே என்பது மேலே என்று அர்த்தம் அல்ல. குடுத்துட்டா கெளம்புவேன்ல என்ற அர்த்தத்தில் வாசிக்கவும்.) இங்கே கார்ல் மார்க்ஸ் எங்கே வந்தார் என்கிறீர்களா? அவர்தான் இதுவரை என் நாவலுக்கு மதிப்புரை எழுதியவர். மேலும் இந்த சூர்ய ரெத்னா விவகாரத்தை முகநூலில் கொளுத்திப் போட்டிருப்பவர். இந்தப் பதிவை ஜெ. ரசிகர்கள் அவசியம் அவரிடம் சொல்லிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

***

சிங்கப்பூர் விவகாரம் (2)

செப்டெம்பர் 29, 2016

ஒரு குயுக்தியான யோசனை தோன்றியது. இப்போதெல்லாம், அதாவது தண்ணி அடிப்பதை நிறுத்திய பிற்பாடு எப்போதுமே குயுக்தியாகத்தான் தோன்றுகிறது, அது வேறு விஷயம். தமிழ்நாட்டில் யாரும் நாகர்கோவில்காரர்களைப் பற்றி எதுவும் விமர்சனமாக எழுத மாட்டார்கள். ஏனென்றால், நாகர்கோவில்காரர் விமர்சகர் மீது கேஸ் போட்டால் அதற்காக நாம் நாகர்கோவில் ஓட வேண்டும். கேஸில் நாம் ஜெயித்தால் கூட 20 தடவை நாகர்கோவிலுக்கு அலைவதை, செலவை நினைத்துப் பாருங்கள். சரி, இப்போது சிங்கப்பூர் எழுத்தாளர்களைத் திட்டி – இளங்கோவனைத் தவிர – ஒரு கட்டுரை எழுதினால் சிங்கப்பூர் போய்ட்டு வர்லாம் இல்லையா? தங்குவதற்கு ஜெயமோகன் கெஸ்ட் ஹவுஸில் ஒரு அவுட் ஹவுஸ் கிடைக்காதா, என்ன இருந்தாலும் நான் ஒரு உடன்பிறவா சகோதரன். ஆனால், கேஸில் தோற்று சிங்கப்பூர் தண்டனை கொடுத்தால் என்ன பண்ணுவது? ஏதோ முண்டமாகக் குப்புறப் படுக்கப்போட்டு புட்டத்தில் பிரம்பால் அடிப்பார்களாமே? இந்த வயதில் உடம்பு தாங்குமா என்றும் பயமாக இருக்கிறது.

சே, தண்ணி அடிச்சிக்கிட்டிருந்தப்போ நிம்மதியா இருந்தேன்.

***

தம்பி, கருணாநிதி அர்ஜித், சிங்கப்பூர்ல இருந்துகிட்டு என்னய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? இனிமே ஒரு பயபுள்ள சிங்கப்பூர் எழுத்தாளர்கிட்ட வாலாட்டுவானா?

இந்த லட்சணத்துல என்னய வேற டிசம்பர்லயோ என்னமோ சிங்கப்பூர் கூப்பிட்டுருக்காஹ. போய் சிங்கப்பூர் எழுத்தாளர்ங்க கிட்ட லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களே பிச்சை வாங்கோணும்னும் சொல்லிட வேண்டியதுதான்.