தீபாவளி

இப்போது நான் கடுமையான வேலை நெருக்கடியில் இருக்கிறேன்.  எந்தக் காரணத்தைக் கொண்டும் இப்படியெல்லாம் குறிப்புகள் எழுதவே கூடாது.  அத்தனை வேலை குவிந்து கிடக்கிறது.  இருந்தாலும் இந்த விஷயம் மனதை நெருடிக் கொண்டிருந்ததால் எழுதத் துணிந்தேன்.

தீபாவளிக் கொண்டாட்டம் எனக்குப் பிடிக்காது.  காரணம், மற்ற ஜீவராசிகள் வெடிச் சத்தத்தால் படும் தாங்கொணாத் துன்பம்.  நேற்று மாலையிலிருந்தே காகங்கள் பதற்றத்திலும் பீதியிலும் கதறிக் கொண்டிருக்கின்றன.  வீட்டைச் சுற்றியிருக்கும் நானாவிதமான மரங்களிலும் நூற்றுக் கணக்கான காகங்கள் குடியிருக்கின்றன.  அவற்றின் இடைவிடாத பயக் கூச்சல் நெஞ்சைப் பிழிகிறது.  அதை அடுத்து, நாய்களும் பூனைகளும் படும் துன்பம்.  அவற்றின் செவிகள் மிகவும் நுண்மையானவை.  நமக்குக் கேட்கும் வெடிச் சத்தம் அவைகளுக்கு நூறு மடங்கு அதிகமாகக் கேட்கும்.  ச்சிண்ட்டூவுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் தெரிகிறது.  அது பிறந்து இது அதற்கு முதல் தீபாவளி என்பதால் வெடிச் சத்தம் புதிது என்பதாலும் பீதியில் அங்குமிங்கும் அலைகிறது.  நாய்களைக் குறித்து சொல்லவே வேண்டாம்.

இப்படியெல்லாம் மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ள ஜீவராசிகளை சற்றும் கருணையின்றி ஹிம்சை செய்யும் தீபாவளியை எப்படி என்னால் ரசிக்க முடியும்?  இது தவிர, பண்டிகை தினங்களில் கிடக்க வேண்டிய பட்டினி இன்னொரு துன்பம்.  எல்லா இந்துப் பண்டிகைகளிலும் எனக்கு இந்தத் துன்பம் உண்டு.   விதவிதமாக எவ்வளவு பண்ணினாலும் பூஜைக்குப் பிறகுதான் சாப்பிட முடியும்.  பூஜை முடிய மதியம் மூன்று மூன்றரை ஆகும்.  எனக்கோ பனிரண்டரைக்கே பசிக்க ஆரம்பித்து விடும்.  மூன்று மணி நேரம் பசியில் துடிக்க வேண்டும்.  வாழைப்பழம், பாதாம்பருப்பு என்று கண்டது கடியதையும் போட்டாலும் அதெல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொறி.  இது பற்றி சென்ற ஆண்டு அவந்திகாவிடம் கலந்து பேசி ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம்.  அதாவது, பூஜையை இரண்டு மணிக்குள் முடித்துக் கொள்வதாக ஒப்பந்தம்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பணிப்பெண் இல்லை.  இரண்டு பேர் உள்ள வீட்டுக்குப் பணிப்பெண்ணே தேவையில்லை.  ஆனால் எங்களுடைய இரண்டு நாய்களும் இருபது குழந்தைகளுக்குச் சமமாயிற்றே?  நான் பாத்திரம் தேய்க்கிறேன் என்று முன்வந்தால் அவந்திகா சண்டைக்கு வந்து விடுவாள்.  துணிகளையும் வாஷிங் மெஷினில் போட மாட்டாள்.  கையாலேயே துவைப்பாள்.  பலருடைய வீடுகளில் ட்ரெட் மில் துணி காய வைக்கப் பயன்படுவது போல் எங்கள் இல்லத்தில் வாஷிங் மெஷின் எந்தப் பயனும் இன்றித் தூங்குகிறது.  55 வயதில் ஒரு மூட்டை துணியைக் கையால் துவைத்து விட்டு, பாத்திரத்தையும் தேய்த்து விட்டு… இதற்கு மேல்தான் இருக்கிறது பெரிய பிரச்சினை.  வீடு பூராவும் கூட்டிப் பெருக்கி, ஈரத் துணியால் துடைக்க வேண்டும்.  தாவு தீர்ந்து விடும்.  தரைத் தளம்; முதல் தளம்.  இரண்டு தளங்கள்.  இத்தனை ஆடம்பரமும் ஸோரோ என்ற க்ரேட் டேனுக்காக.  லேப்ரடார் என்றால் ஏதாவது ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் போய் விடலாம். குதிரைக் குட்டி போல் இருக்கும் க்ரேட் டேனை வைத்துக் கொண்டு எப்படி அடுக்குமாடிக் குடியிருப்புக்குப் போவது?  நினைத்துப் பார்ப்பதும் சாத்தியமில்லை.

அப்போதே சொன்னேன் இல்லையா என்று சொன்னால் சிலருக்குக் கோபம் வரும்.  ஆனால் என்ன செய்ய?  நான் அப்போதே அவந்திகாவிடம் சொன்னேன், இதற்கெல்லாம் நமக்கு ஆள் பலமும் பண பலமும் வேண்டும்; வளர்க்க வேண்டாம்; பப்பு (லாப்ரடார்) மட்டும் போதும்.  ம்ஹும்.  அவந்திகா கேட்கவில்லை.  புத்திசாலியான கார்த்திக்கிடம் சொன்னேன்.  ஒரு நாய் போதும்; ஸோரோவைத் திருப்பிக் கொடுத்து விடு என்றேன்.  வீட்டுக்கு எடுத்து வந்த போதே சொன்னேன்.  மிகச் சிறிய குட்டி அது.  என் பேச்சைக் கேட்கவில்லை.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.  ஆனால் நான் இன்னும் கொஞ்சம் கடுமையாக இருந்திருக்க வேண்டும்.  அதிகாரத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.  முட்டாள்தனமான காரியத்தை எக்காரணம் கொண்டும் அனுமதித்திருக்கக் கூடாது.  இப்போது ஸோரோவின் உணவுக்காக மாதாமாதம் நான் ஒவ்வொரு நண்பரிடமும் பிச்சை வாங்க வேண்டியிருக்கிறது. அது போக, அவந்திகா ஒவ்வொரு நாளும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாள்.  மனிதருக்கு மனிதர் இடையேயுள்ள கலாச்சார வித்தியாசங்களும் சமயங்களில் என்னை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விடும் போல் இருக்கிறது.  துணிகளை வாஷிங் மெஷினில் போட்டால் என்ன ஐயா?  கையால்தான் துவைப்பேன் என்கிறது ஒரு கலாச்சாரம்.  பாத்திரங்களை நான் தேய்த்தால் என்ன?  ஆண் மகன் பாத்திரம் தேய்க்கக் கூடாது என்கிறது கலாச்சாரம்.  இப்படி ஒரு பெண் ரத்தக் கண்ணீர் விடுவதையும் தினம் தினம் மூன்றரை மணிக்கு மதிய உணவு சாப்பிடுவதையும் அனுபவிக்கலாம்.  நேற்று அவந்திகா, கடவுளே, என் வாழ்க்கையை நான் எப்போதுதான் வாழ்வது?  எனக்கு இந்தத் துன்பத்திலிருந்து விடுதலையே கிடையாதா என்று அரற்றுகிறாள்.  மாதச் சம்பளம் பத்தாயிரம் தருகிறேன் என்றாலும் இந்தப் பணக்கார ஏரியாவில் ஆட்கள் கிடைக்கவில்லை.  சமையலுக்கு மட்டுமாவது ஆள் போடலாம் என்றால் அங்கேயும் கலாச்சார அனாச்சாரம்.  பிராமணப் பெண்கள் நான் வாங்கி வரும் மீனைக் கண்டு அலறி ஓடுகிறார்கள். சரி, அப்பிராமணப் பெண்ணை அமர்த்தலாம் என்றால் அவர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்து அவந்திகா அலறி ஓடுகிறாள்.  சமைக்கும் போதே மூக்கு சிந்தினால் என்ன சாரு செய்வது?  மிளகாய் நெடியில் மூக்கிலிருந்து ஜலம் ஓடியிருக்கும் அம்மு என்பேன்.  அது சரி சாரு, கையை உடனே சோப்புப் போட்டுக் கழுவ வேண்டாமா?  அப்படியே புடவையில் சிந்தி விட்டு அதே கையால் சமைப்பதா?  ஆள் அந்த க்ஷணமே டிஸ்மிஸ்.

காலை ஆகாரம் எனக்கு வெளியேதான்.  சாயி மெஸ், மகா முத்ரா, மாரிஸ் ஓட்டல், டேவிட் இட்லி கடை, இத்யாதி இத்யாதி.  சில விடுமுறை தினங்களில் நண்பர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள்.  இரவு பழ உணவு.  மதியத்துக்கு மட்டுமே வீட்டுச் சமையல்.  அதற்குத்தான் இத்தனை தடங்கல்.  இன்று நண்பர்கள் யாரும் பார்க்குக்கு வரவில்லை. ஃபோன் செய்த நண்பர் ஒருவர் தன் வீட்டுக்கு அழைத்தார்.  போகலாம்.  ஆனால் அவர் வீட்டில் அவருடைய மாமனார், மாமியார், பெற்றோர் என்று ஒரு கூட்டமே வந்திருந்தது.  மேலும், அவர்கள் புத்தாடை அணிந்து கொண்டிருக்கும் போது நான் வேர்க்க விறுவிறுக்க போய் நின்றால் சரியாக இருக்காது.  தனியாகவே சாயி மெஸ் போனேன்.  பூட்டியிருந்தது.  போயிருக்கக் கூடாது.  தீபாவளி.  எக்காரணம் கொண்டும் சரவண பவன் செல்வதில்லை.  மகா முத்ரா போய்ப் பார்க்கத் தெம்பு இல்லை.  டேவிட் இட்லி கடை இருக்கும்.  அவர் கிறிஸ்தவர்.  ஏதோ யோசனையில் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து விட்டேன்.  அவந்திகா மும்முரமாக துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.  மணி ஒன்பதரை.  பசியில் கண்கள் இருட்டியது.  தோசை போட்டு மிளகாய்ப் பொடி தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன்.  கேவலமாக இருந்தது.  சட்னி அரைக்க மனம் இல்லை.

சென்னையிலிருந்து சுமார் ஐந்து லட்சம் பேர் தீபாவளியை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்குப் போயிருப்பதாக தினசரியில் செய்தி.  கார்த்திக் முந்தாநாள் சென்னை வருவதற்கு விமானத்தில் முன்பதிவு செய்திருந்தான்.  ஓரிரு மாதங்களுக்கு முன்பே.  ஆனால் முந்தாநாள் அவன் நிறுவனத்தில் ஒரு முக்கியமான வேலை.  திடீர் வேலை.  நேற்று கிளம்பலாம் என்றால் விமான டிக்கட் இருபதாயிரம் ரூபாய்.  அதனால் முந்தாநாள் மாலை நான்கு மணிக்கு மும்பையிலிருந்து காரில் கிளம்பி நேற்று முன்மதியத்தில் வீடு வந்து சேர்ந்தான்.  எங்கள் இருவரிடமும் சொல்லவில்லை.  வந்த பிறகே செய்தி தெரியும்.  முன்பே சொல்லியிருந்தால் நான் போலீஸில் புகார் செய்து அவனுடைய கார் பயணத்தை ரத்து செய்திருப்பேன்.  என்னிடம் சொல்லாமல் அம்மாவிடம் மட்டும் சொல்லியிருந்தால் அவள் அவனை பயமுறுத்தியே நிலைகுலையச் செய்திருப்பாள்.  இல்லாவிட்டால் முந்தாநாள் இரவு முழுவதும் ஒரு நிமிடமும் உறங்காமல் இருந்திருப்பாள்.  இந்தப் பயணம் எதற்கு?  இந்திய வாழ்க்கையில் குடும்பம் ஒரு அடிப்படை சக்தியாக விளங்குகிறது.  நான் பதினேழு வயதிலிருந்தே குடும்பத் தளைகளைத் துறந்தவன்.  இன்றைக்கும் எனக்குக் குடும்பத் தளை இல்லை.  அந்த விஷயத்தில் நான் ஒரு ஐரோப்பியனைப் போலவே வாழ்கிறேன்.  அதனால்தான் இந்தத் தனிமை.  குடும்பத் தளை இருந்திருந்தால் 29 வயது ஆன என் மகனுக்கு நான் பெண் பார்த்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  நான் ஐரோப்பிய மனோபாவம் கொண்டவன்.  மகனுக்குத் திருமணம் செய்வது என் கடமை அல்ல.  எனக்கும் என் தந்தை திருமணம் செய்து வைக்க நான் அனுமதிக்கவில்லை.  இரண்டு முறையும் நானே தான் திருமணம் செய்து கொண்டேன்.  ஒரு விவாக ரத்தும் நானே தான் செய்து கொண்டேன்.  ஆனால் கார்த்திக் எனக்கு நேர் எதிர்.  அம்மாவைப் பார்ப்பதற்காக 20 மணி நேரம் கார் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறான்.  அம்மாவைப் பார்க்க என்று மட்டும் அல்ல; தீபாவளித் திருநாளில் அம்மாவுடன் இருக்க.  இதற்காகத்தான் ஐந்து லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர் போயிருக்கிறார்கள்.

தீபாவளி தினத்தில் மட்டும் எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வரும்.  பலவிதமான பலகாரங்களும் சுடச் சுட இட்லியும் மிளகாய்ச் சட்னியும் கிடைக்கும்.  இட்லியும் சட்லியும் தினமும் உண்டு என்றாலும் தீபாவளி நாளில் பலகாரங்கள் கூடுதல் சந்தோஷம்.  நானே தோசை போட்டு எனக்குப் பிடிக்காத மிளகாய்ப் பொடி போட்டுத் தின்னும் போது அம்மாவின் ஞாபகம் வந்தது.  அவந்திகா துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.

மதியச் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கி வைத்தேன்.  குக்கரில் அரிசியும் துவரம் பருப்பும் வைத்து ஏற்றினேன்.  மீதி சமையலுக்கு வந்து சேர்ந்தாள் அவந்திகா.

பனிரண்டைக்குப் பசி.  பட்சணங்களுக்கு ஒரு இடத்தில் சொல்லி வைத்திருந்தேன்.  அங்கே இயற்கை முறையில் செய்து தருகிறார்கள்.  அப்படியென்றால், சீனிக்குப் பதிலாக பனஞ்சர்க்கரை என்பது போல.  எல்லா ஆர்கானிக் இடங்களையும் போல் விலை இரண்டு மடங்கு அல்ல; மற்ற இடங்களை விடப் பாதி விலை.  வீட்டில் செய்வதால் கட்டுப்படி ஆகிறது போலும்.  சுவை முதல் தரம்.  அற்புதம்.  அந்த பட்சணங்களை எடுக்கப் போனேன்.  அதை வைத்துத்தான் பூஜை செய்ய வேண்டும்; எடுக்காதே.  அடடா, இன்றும் பட்டினியா என்று நொந்து கொண்ட போது பிரபு காளிதாஸிடமிருந்து ஃபோன்.  சாரு, வாசலில் நிற்கிறேன்.  அவர் மனைவியே செய்தது.  (வழக்கம் போல் அவர் பெயரை மறந்து விட்டேன்.) ரஸ குல்லா மிதமான இனிப்பில் பிரமாதம்.  இரண்டு வித முறுக்குகளும் பிரமாதம்.  ரவா லாடு, பொருவிளங்காய் உருண்டை என் அம்மாவை ஞாபகப்படுத்தியது.  வாழ்த்தியபடி உண்டேன்.

நேற்று நண்பர் ஜேகே (ஓவியர்) கொண்டு வந்து கொடுத்த திரட்டுப் பால் அதியற்புதமாக இருந்தது.  அதையும் கொஞ்சம் போட்டுப் பசியாறினேன்.

நாய்கள் இல்லாமல் இருந்திருந்தால் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிப்பெண்களின் தேவையின்றி வாழலாம்.  இந்த வயதில் பணியாட்களும் இல்லாமல் இரண்டு மாபெரும் நாய்களை வளர்ப்பது 90 வயதில் குழந்தை பெற்று வளர்ப்பது போல் இருக்கிறது.  நாய்கள் இல்லாத வாழ்க்கைக்காக மனம் ஏங்குகிறது.