தலைப்பை இன்னும் லயத்துடன், தீவிரவாதியிலிருந்து தீர்க்கதரிசி வரை என்றும் மாற்றி வாசிக்கலாம். என்ன விஷயம்? Tag centre சம்பவம் பற்றி மனுஷ்ய புத்திரன் முகநூலில் இப்படி எழுதியிருக்கிறார்:
”சாருவின் நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்கள் நேற்று டாக் செண்டரில் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்த பதிவைப் படித்தேன். குறிப்பிட்ட நபர்களுக்கே டிபன் காஃபி ஏற்பாடு செய்யபட்டிருந்ததால் அழைப்பிதழில் இல்லாதவர்கள் தடுக்கப்பட்டார்கள் என்று சாருவின் பதிவின் மூலம் அறிகிறேன். உயிர்மையின் சார்பில் நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். சில நேரங்களில் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருக்கிறோம். சில நேரங்களில் காஃபி கொடுக்க முடிந்ததில்லை. முன்னூறு பேர் வரும் கூட்டத்திற்கு 200 காஃபி ஏற்பாடு செய்தால் 150 காஃபிதான் செலவாகும். இலக்கியக் கூட்டம் கேட்க வருகிறவர்கள் தற்கொலைப் படை மாதிரி. துறவு மனப்பான்மையுடன் ஏதோ சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வருகிறவர்கள். அவர்கள் நாம் கொடுக்கிற காஃபிகாகவா வருகிறார்கள்? அதிலும் சாருவின் வாசகர்கள் ஏசுவின் சீடர்களைபோன்றவர்கள். பொருத்தமில்லாத இடத்தில் உரலில் தலையை சாரு கொடுத்திருக்கக் கூடாது. டாக் செண்டரில் கூட்டம் நடத்துகிறவர்களும் அங்கு வரும் வாசகர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும்படியான எழுத்தாளரை அழைக்கும் முன் சற்றே யோசிக வேண்டும். இலக்கிய ஆர்வம் நல்லதுதான். ஆனால் எல்லா நேரத்திலும் அல்ல,
கலாச்சார வித்தியாசங்கள் படு பயங்கரமானவை.”
மனுஷுக்கு நன்றி. எனக்கும் என் வாசகர்களுக்கும் ப்ரமோஷன் கொடுத்தது பற்றி. முன்பெல்லாம் என் வாசகர்களை பின் லாடனின் தற்கொலைப் படையோடு ஒப்பிட்டுக் கொண்டிருப்பார். இப்போது யேசுவின் சீடர்கள் என்று சொல்கிறார். நிச்சயமாக இது ஒரு மகத்தான முன்னேற்றம்தான். என் வாசகர்களுக்கு இதை விட வேறு என்ன சான்றிதழ் வேண்டும்? ஒரு முன்னணிக் கவிஞனால் இப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள். மறந்து விடாதீர்கள்.
உரலில் தலை கொடுத்தது பற்றி ஒரு விளக்கம். அந்த மையத்தின் நான்கு முக்கியஸ்தர்களில் ரவி தமிழ்வாணனும் ஒருவர். அவர் என் குடும்பத்தில் ஒருவரைப் போல. கொஞ்சம் சுற்றி வளைத்து அவர் எனக்கு முக்கியமானவர். அதாவது, ரமேஷின் உயிர் நண்பர் லேனா. ரமேஷ் என்னுடைய உயிர். புரிகிறதா? ஆனால் என்னை விட மனுஷுக்குத்தான் ரவி மிகவும் நெருங்கியவர். மனுஷ் பதினோரு வயதாக இருக்கும் போதே அவர் எழுதிய கவிதைத் தொகுதியை வெளியிட்டவர் ரவி.
அடுத்த கூட்டம் டாக் செண்டரில் அநேகமாக மனுஷ் தான் என்று நினைக்கிறேன். ஒரே பெண்கள் கூட்டம் அள்ளும். தாத்தாக்கள் என்ன செய்யப் போகிறார்களோ!