Tag Centre நிகழ்ச்சி

நேற்றைய தினம் Tag centre-இல் நடந்த ராஸ லீலா விமர்சனக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்ததாகவே நினைத்தேன்.  ஆனால் அரங்கத்துக்கு வெளியே ஒரு அசிங்கமான சம்பவம் நடந்திருக்கிறது.  அதாவது, சுமார் ஐம்பது வாசகர்கள் – அவர்கள் அனைவரும் வாசக வட்ட நண்பர்கள் – என்னுடைய நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் – மிக மோசமான முறையில் நடத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  நீங்களெல்லாம் யார், உங்களையெல்லாம் யார் அழைத்தது, இன்விடேஷன் இல்லாமல் உங்களையெல்லாம் யார் வரச் சொன்னது என்பது போன்ற அவமானகரமான கேள்விகளால் அவர்களைத் திட்டி திருப்பி அனுப்பியிருக்கின்றனர் அமைப்பாளர்கள்.  சுமார் பத்துப் பதினைந்து வாசகர்கள் என்னைத் தொடர்பு கொண்டு இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.  மேலும், நடந்தது உண்மைதான் என்பதற்கு சான்றாக, விழா அமைப்பாளரான திரு சாரி கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக என்னிடம் வந்து ஆங்கிலத்தில் தன் ஆட்சேபணையைத் தெரிவித்தார்.  அதாவது, ”நீங்கள் ஏன் இந்தக் கூட்டத்தைப் பற்றி உங்கள் ப்ளாகிலும் முகநூலில் போட்டீர்கள்?  அப்படி நீங்கள் போட்டிருக்கக் கூடாது.  நீங்கள் அப்படிப் போட்டு விட்டதால் இப்போது உங்கள் வாசகர்கள் எல்லாரும் வந்து சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்கள்.  எங்களுக்கு வழக்கமாக வரும் நூறு பேரில் பலர் இப்போது சாப்பாடு கிடைக்காமல் ஏமாற வேண்டி வரும்.   நீங்கள் அப்படிப் போட்டிருக்கவே கூடாது.”  முழுக்க ஆங்கிலத்திலேயே இதைத் திருப்பித் திருப்பி மூன்று நான்கு முறை சொன்னார்.  பிறகு முத்தாய்ப்பாக Its my duty to inform you this என்றும் சொன்னார்.  நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் போலிருக்கிறது.

அடக்கடவுளே, மற்றவர்களுக்கு உணவு கொடுப்பது இவ்வளவு பெரிய குற்றமா?  நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன், என் சார்பாக ஐம்பது பேர் வருவார்கள் என்று.  100 பேர் வந்து விட்டார்கள் போல.  50 பேரை உள்ளே அனுப்பி விட்டு, 50 பேரை மேலே குறிப்பிட்டபடி ஏசி, பேசி திருப்பி அனுப்பி விட்டார்கள் போல் தெரிகிறது.  சாப்பாடுதான் பிரச்சினை என்று தெரிந்து தொலைத்திருந்தால் என் நண்பர்கள் யாரும் சாப்பிட வேண்டாம் என்று முன்கூட்டியே சொல்லியிருப்பேனே?  வந்தவர்கள் எல்லாம் ஐந்து இலக்க சம்பளம் வாங்குபவர்கள் ஆயிற்றே?  சாப்பாட்டுக்கு இல்லாமலா வந்தார்கள்?  வந்தவர்களில் இறையன்பு ஐஏஎஸ் கூட உண்டு.  குமரேசன் என்ற நண்பர் அஸிஸ்டெண்ட் கமிஷனர்.  அடக் கஷ்ட காலமே?  ஒரு வடை, ஒரு கேரட் ஹல்வா, ஒரு கிச்சடி, ஒரு காப்பி – இதற்கா இத்தனை லொள்ளு?  வேலை மெனக்கெட்டு எவ்வளவோ தூரத்திலிருந்து வந்தவர்கள் எல்லாம் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

மதிப்பீடுகளின் வீழ்ச்சி என்று இதைத்தான் சொல்கிறேன்.  நான் எழுதிக் கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நாவலில் ஒரு இடம் வருகிறது.  முழுக்கவும் ஸ்ரீவைஷ்ணவ குலத்தினர்தான்.  அதில் ஒரு பெண்மணி இரண்டு தினங்களாகப் பட்டினி.  மூன்றாவது நாள் ஏதோ பெயருக்கு ஒரு தளிகை செய்தார்கள்.  தளிகை என்ன தளிகை.  சாதமும் நீர் மோரும்.  அதுவே ஒருத்தருக்குத்தான் வரும்.  அதில் பாதியை எடுத்து மகளுக்குக் கொடுத்தாள் அம்மா.  மீதியை எடுத்து வாயில் போடும் போது வாசலில் பிச்சைக்காரன்.  அம்மா சாப்பிட்டு மூணு நாளாச்சும்மா… பசில கண்ணு அடைக்குதும்மா.  அவனை உள்ளே கூப்பிட்டு அத்தனை சாதத்தையும் நீர் மோரையும் கொடுக்கிறாள் அந்த அம்மா.  அவன் சாப்பிட்டு விட்டுப் போன பின் மகள் அம்மாவைத் திட்டுகிறாள்.  அதற்கு அந்த அம்மா சொன்னாள்.  நாமாவது ரெண்டு நாள் தாண்டி பட்டினி… அவொ(ங்) மூணு நா பட்டினின்னான்.  அதனாலேதான் கொடுத்தேன்.

எனவே பின்வரும் கடிதத்தில் குறிப்பிட்டபடி  வெறுமனே இதை சாதிப் பிரச்சினையாக மட்டும் நான் பார்க்கவில்லை.  ஒட்டு மொத்தமாகவே சமூகத்தில் மதிப்பீடுகள் வீழ்ந்து கொண்டிருக்கின்றன.  இனி கடிதம்.  கடிதம் எழுதிய நண்பர் தன் பாதுகாப்பு கருதி தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

நேற்று நிகழ்ச்சி முதல் தளத்தில் உள்ள Tag centre -இல் நடந்தது.  நாங்கள் கீழ்த்தளத்திலேயே ஒரு உயரமான தாத்தாவால் தடுத்து நிறுத்தப்பட்டோம்.  உங்களிடம் இன்வைட் உள்ளதா என்று ஆங்கிலத்தில் கேட்டார் அந்தத் தாத்தா.  இதுவரை எந்த இலக்கிய நிகழ்விலும் இப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ளாததால் ஒரு நிமிடம் முழித்தோம்.  பிறகு நான் ஃபேஸ்புக்கில் உள்ள நிகழ்ச்சி அழைப்பிதழை அவரிடம் காட்டினேன்.  அதற்கு அவர் ஃபேஸ்புக்கிலெல்லாம் நாங்கள் அழைக்கவில்லை.  உங்களுக்கு இ-மெயில் வந்ததா என்று கேட்டார்.  எனக்கு தப்பான இடத்துக்கு வந்து விட்டோமோ என்று சந்தேகம் வந்து விட்டது.  “இது சாரு நிவேதிதாவின் ராஸ லீலா விமர்சனக் கூட்டம்தானே?” என்று கேட்டேன்.  “எஸ். ஆனால் இன்வைட் இல்லாமல் நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று கூறினார்.  அந்தத் தாத்தாவுடன் இன்னும் சில தாத்தாக்களும் சேர்ந்து அதையே கூறினர்.  எனக்குக் கோபம் வந்து விட்டது.  “நாங்கள் சாருவின் வாசகர்கள்.  அவர்தான் எங்களுக்கு அழைப்பு விடுத்தார்” என்று சத்தம் போட்டேன்.  கொஞ்ச நேரம் கழித்து எங்களை மேலே அனுப்பினார்கள்.  நிகழ்ச்சி பற்றி ஃபேஸ்புக்கில் அழைப்பு விடுத்த ஸ்ரீராமிடம் இதைப் பற்றிக் கூறினேன்.  அவர் கீழே சென்று விசாரித்தார்.  பிறகுதான் விளங்கியது, இது ஒரு குறிப்பிட்ட அக்ரஹார எலைட் நாதாரிகளுக்காக பணக்காரர்களால் நடத்தப்படும் பொழுதுபோக்கு இலக்கிய நிகழ்வு.  இது ஒரு பிரைவேட் ஈவண்ட் என்பதை சாருவுக்கு சொல்லாமல் விட்டு விட்டனர் என்று நினைக்கிறேன்.  இந்த நிகழ்வுக்குப் பொது அழைப்பு விடுத்ததே தவறு.  பெரிய பிரச்சினை பண்ணலாம் என்று நினைத்தேன்.  ஆனால் சாருவிடமிருந்து நிச்சயமாக ஆதரவு கிடைக்காது என்பதால் ஒன்றும் செய்யவில்லை.  திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடு என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன்.  பயமாக இருக்கிறது.

இரண்டாம் தளத்தில் டிஃபன் கொடுக்கப்பட்டதாம்.  அதற்குப் போய் விடுவார்கள் என்றே வருபவர்களை இப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்று தெரிந்து கொண்டேன்.  ரொம்ப அசிங்கமாக இருந்தது.”

இதுதான் கடிதம்.  நண்பர்களுக்கு சிரமம் தந்ததற்காக வருந்துகிறேன்.  இது போன்ற  காரணங்களினால்தான் நான் பொதுவாக எந்தக் கூட்டங்களுக்கும் வர மாட்டேன் என்று தவிர்த்து வருகிறேன்.  ஒரு முதியவர் ஒரு கலந்துரையாடலில் என்னைப் பார்த்து பொம்பளைப் பொறுக்கி என்று திட்டினார்.  நான் அவரை செருப்பால் அடிப்பேன் என்றேன்.  (அவரிடம் மைக் இல்லை.  என்னிடம் மைக் இருந்தது.) அவர் பேசியது பலருக்கும் தெரியவில்லை.  அந்த முதியவர்  பின்னர் பல ரவுடிகளை அழைத்துக் கொண்டு என்னை அடிக்க வந்து விட்டார்.  என்ன இருந்தாலும் சாரு அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று பத்ரி முகநூலில் எழுதினார்.

என்ன செய்வது, என் கூட்டங்கள் இப்படித்தான் முடிகின்றன.  என்னுடைய பணி எழுத்து.  அதை மட்டுமே இனி செய்வேன்.  இனிமேல் எந்தக் கூட்டங்களுக்கும் வர மாட்டேன்.

கடைசியில் என்ன ஆகும் தெரியுமா, டாக் செண்டரில் சாரு பிரச்சினை செய்து விட்டார்.  அதுதான் கடைசியில் கிடைக்கும் பெயர்!

பின்குறிப்பு: கீழே என்ன பிரச்சினை என்று கேட்கப் போன ஸ்ரீராமையும் மேலே வர அனுமதிக்கவில்லையாம்! பிறகு அவர் ஏகப்பட்ட வாக்குவாதம் செய்துதான் மேலே வந்தாராம்!