எடிட்டிங்

தமிழின் சமகால இலக்கியத்தில் எந்தப் பிரதியுமே செப்பனிடப்படுவதில்லை.  எடிட் செய்யப்படுவதில்லை.  எடிட்டர் என்று ஒரு நபரே இங்கே இல்லை.  எல்லா நாவல்களும் எடிட் செய்யப் படாமலேயே வந்து கொண்டிருக்கின்றன.  மேலும், எடிட் செய்வதைத் தமிழ் எழுத்தாளர்களும் ஏதோ சென்ஸார் செய்வது போல் நினைப்பதால் அது ஒரு தொடப்படாத மர்மப் பிரதேசமாகவே இருக்கிறது.  ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொரு நாவலும் எடிட் செய்யப்பட வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.  ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம்.  எனவே என் நாவல்களை நானே எடிட் செய்ய முயற்சி செய்கிறேன்.  அதில் என்ன பிரச்சினை என்றால், ஒருவர் எழுதுவதை வேறு ஒருவர்தான் எடிட் செய்ய வேண்டும்; எழுதியவரே எடிட் செய்ய முடியாது, கூடாது.  மேலும், இங்கே தொழில் முறை எடிட்டர்களும்  இல்லாததால் என்னுடைய முயற்சி அவ்வளவாக வெற்றி பெறுவதில்லை.  ஆனால் ராஸ லீலா மிகப் பிரமாதமாக எடிட் செய்யப்பட்ட நாவல்.  என் நண்பர் தினமலர் ரமேஷ் (அவர் ஒரு தீவிரமான வாசகர்) அதை ஒவ்வொரு வார்த்தையாகப் படித்துப் பார்த்து எடிட் செய்தார்.  ஒவ்வொரு வாக்கியத்தையும் வாய் விட்டுப் படிப்பார்.  நாவல் முழுவதையும் என் கண்ணெதிரே தான் எடிட் செய்தார்.  இருவரும் விவாதித்த பிறகே ஒரு அத்தியாயத்தின் எடிட்டிங் முடியும்.  ஒரு வாரத்தில் இரண்டு அத்தியாயம் எடிட் செய்வார்.

இப்போது எக்ஸைல் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒருவர் மொழிபெயர்த்துக் கொடுக்க, இன்னொருவரிடம் எடிட் செய்யக் கொடுத்தேன்.  மொழிபெயர்ப்பை விட எடிட் செய்பவர் ரகளை செய்து மிரட்டுகிறார்.  அவர் எடிட் செய்து கொடுக்கக் கொடுக்க, நான் ஒரு வார்த்தை விடாமல் சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  coediting.  வார்த்தைகளை அனாவசியமாக விரயம் செய்யக் கூடாது என்பது எடிட்டிங்கின் முதல் பாடம்.  மிக முக்கியமான பாடம்.  கீழே பாருங்கள்.

If Mead is the only person to be out in a city where no one else is out of doors, doesn’t it mean that he is mad?

இந்த வாக்கியம் எக்ஸைல் தமிழில் 382-ஆம் பக்கம் வருகிறது.  இந்த வாக்கியத்தில் ஒரு பிழையும் இல்லை.  ஆனால் வார்த்தைகள் விரயமாகிக் கிடக்கின்றன.  இப்போது எடிட் செய்யப்பட்ட வாக்கியத்தைப் பாருங்கள்:

Mead is the only person to be out in a city where no one else is out of doors, ergo,  he is mad.

ஒரு சிறிய வாக்கியத்தில் ஆறு வார்த்தைகளை அர்த்தம் பிசகாமல் எடுத்தாகி விட்டது.  இதற்குப் பெயர்தான் எடிட்டிங்.