ஜெயமோகனின் தீவிர விசிறி என்றாலும் அமிர்தம் சூர்யாவை எனக்குப் பல காரணங்களால் பிடிக்கும். அடிக்கடி சம்ஸ்கிருத காவியங்களிலிருந்தும் வேதத்திலிருந்தும் எடுத்துக்காட்டுகள் சொல்வார். மேடையில் பிரமாதமாகப் பேசுவார். பழகுவதற்கு இனிமையானவர். நல்ல கவிஞர். ஆனால் கொஞ்சம் வெகுளி என்பதால் மேடையில் எப்போதாவது ஏடாகூடமாகப் பேசி வைத்து விடுவார். (பிரபு காளிதாஸ் கூட்டம்) நானும் அப்படித்தானே என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அவருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அடியேனும் கலந்து கொள்கிறேன். அது சம்பந்தமாக என்னைத் தனிப்பட்ட முறையில் அழைக்க வேண்டி கடிதம் எழுதியவர் கடிதத்தை இப்படி ஆரம்பிக்கிறார்:
”என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எழுத்தாளர் சாருவுக்கு…”
இது பற்றி என் கருத்தை ஒரு தனிக்கடிதம் மூலம் சூர்யாவுக்குத் தெரிவித்திருக்க முடியும். ஆனால் எல்லோருமே இப்படித்தான் எழுதுகிறார்கள் என்பதால் இதைப் பொதுவாக எழுத நினைத்தேன். அழைப்பிதழிலும் இதே கதைதான். எழுத்தாளர் சாரு நிவேதிதா. இது ஒரு ஆட்சேபகரமான விஷயம் என்று ஏன் யாருக்குமே புரியவில்லை. நீங்கள் ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம் எழுதுகிறீர்கள் என்றால், ’என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நடிகர் ரஜினிகாந்துக்கு…’ என்றுதான் எழுதுவீர்களா? ஆமாம் என்றால் எனக்கும் உங்களுக்கும் உரையாடல் சாத்தியமில்லை. சரி, நாம் எல்லோரும் மனிதர்கள் இல்லையா? நான் உங்களுக்கு எழுதும் கடிதத்தில், அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மனிதர் சிங்காரவேலனுக்கு… என்று எழுத முடியுமா? ஒன்றுமில்லை, பப்புவையும் ஸோரோவையும் நாய் என விளித்தால், சொன்னால், கடுப்பாகிக் கத்த ஆரம்பித்து விடும். நாய் வளர்க்கும் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். dogs என்றாலும் கத்தும். இந்த இரண்டு ஒலிகளும் ஆட்சேபகரமானவை என்று அதுகளுக்குத் தெரிந்திருக்கிறது. நாய்கள்தான். ஆனாலும் பெயர் சொல்வதே மரியாதை. பெயருக்கு முன்னால் அடைமொழிகள் நிச்சயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவை.
இதை சூர்யாவின் மீதான அன்பினால் சொன்னேன் – கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில்.