கடுமையான வேலை நெருக்கடிக்கு இடையில் இருந்தேன். பிரபு காளிதாஸ் தான் எழுதியிருந்த நாவலின் மென்பிரதியை அனுப்பியிருந்தார். முழுசாக பிறகு படிப்போம்; இப்போதைக்கு முதல் இரண்டு பக்கங்களைப் படிப்போம் என்று ஆரம்பித்தேன். பாதியில் நிறுத்தவே முடியவில்லை. தமிழில் இப்படி ஒரு நாவலை இதுவரை படித்ததில்லை. இந்த அளவு எழுதுவார் என்று நான் ஒரு சதவிகிதம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், சிறுகதை எழுதுவது சுலபம். நாவல் அப்படி அல்ல. சிறிய நாவல்தான். 25,000 வார்த்தைகள். ஆனால் இந்திய வாழ்க்கையை மற்ற எழுத்தாளர்கள் பலரும் பார்த்திராத கோணத்தில் பார்த்திருக்கிறார் பிரபு. இந்த நாவலை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. இன்னும் தலைப்பு வைக்கவில்லை. பல இடங்களில் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சில திகில் படங்களைப் பார்க்கும் போது அப்படி ஏற்படுவதுண்டு. அதற்காக பேய்க் கதை என்று நினைத்து விடாதீர்கள். நாவலின் கதை பற்றி ஒரு துளிக் கூட சொல்ல மாட்டேன். ஆனால் கொஞ்சமும் சுயசரிதைத் தன்மை இல்லை; தமிழுக்கு இது முற்றிலும் புதிது.