முராகாமியின் ‘விநோத நூலகம்’

செப்டெம்பர் 28, 2016

இலக்கிய வாசகர்கள் ஹாருகி முராகாமி (இதுவே சரியான உச்சரிப்பு) பற்றி கேள்விப்படாமல் இருக்கவே முடியாது. நானும் கேள்விப்பட்டேன். ஆனால் ஆர்வமில்லை. கூச்சல் அந்த அளவுக்கு இருந்தது. எங்கே போனாலும் முராகாமி, முராகாமி, முராகாமி. முகச்சுளிப்பே ஏற்பட்டது. நோபல் பரிசு பெறாமலேயே நோபல் பரிசு பெற்றவர்களை விட அதிக அளவு பேசப்பட்டு விட்டார் முராகாமி. அதிக அளவு புகழ் அடைந்தவர்கள் அதிக அளவு கலா சிருஷ்டி இல்லாதவர்கள் என எனக்கு ஒரு எண்ணம். ஹே என்ற ஒரு ஏளனம். சேட்டன் பகத்தின் எழுத்தை என்ன மதிக்கிறோமா, ஆனால் ஊர் பூராவும் அவர் பெயரே கேட்கிறது அல்லவா, அப்படி. ஆனாலும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமே என்று ஒரே ஒரு கதையைப் படித்தேன். ஜி. குப்புசாமியின் மொழிபெயர்ப்புதான். குப்புசாமியின் சிறப்பு என்னவென்றால், மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியாது. மேலும் மற்றவர்களைப் போல் கடினமான பகுதிகளை ஸ்வாஹா செய்ய மாட்டார். தமிழில் எழுதப்பட்டது போலவே இருக்கும். (எனக்குப் பிடித்த கவிஞரான சுகுமாரன் பாப்லோ நெரூதாவின் கவிதைகளில் சில முக்கியமான இடங்களை ஸ்வாஹா செய்திருந்ததை மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு நான் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தேன். அப்போதிருந்து சுகுமாரனின் விரோதத்தையும் சம்பாதித்துக் கொண்டேன். சுகுமாரன் ஸ்வாஹா செய்திருந்த பகுதியை எஸ்.வி. ராஜதுரை மிக அழகாக மொழிபெயர்த்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன். ராஜதுரை ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் மார்க்ஸீயவாதி. நெருதாவின் அந்தக் குறிப்பிட்ட கவிதையை ஒரு மார்க்ஸீயவாதியால்தான் சிறப்பாக மொழிபெயர்க்க முடியும். சுகுமாரன் மார்க்ஸீயவாதி அல்ல. அவரால் அந்தக் கவிதையின் உள்ளேயே நுழைய முடியவில்லை. அதன் முக்கியமான ஒரு பத்தியை அப்படியே விழுங்கி விட்டார். இதை சா. தேவதாஸ் செய்தால் ஒப்புக் கொள்வேன். புரிந்து கொள்வேன். ஒரு சுகுமாரன் செய்யக் கூடாது. முழுமையாக மொழிபெயர்க்க முடியாவிட்டால் அதற்குள்ளேயே போகக் கூடாது. மொழிபெயர்க்காவிட்டால் கொன்று விடுவேன் என்று சுகுமாரனை யாராவது மிரட்டினார்களா? நம்முடைய ஃபேன்ஸிக்காகவெல்லாம் ஒரு மகத்தான கவிஞனை இன்னொரு நல்ல கவிஞன் மொழிபெயர்க்கக் கூடாது. இது நெரூதாவுக்கும் அவமானம், மொழிபெயர்த்தவருக்கும் அவமானம். இது பற்றி விரிவாக முன்பு எழுதியிருந்தேன்.

தமிழில் எனக்குப் பிடித்த மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி. அவருடைய இஸ்தாம்பூலைப் (ஓரான் பாமுக்) படித்து விட்டு துருக்கிக்கே சென்று வந்து விட்டேன். ஓரான் பாமுக்கின் பனி என்ற நாவலையும் குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் படித்தேன். ஓரிரு உச்சரிப்புப் பிழைகளைத் தவிர அதில் ஒரு தப்பு இல்லை; மேலும், அதுவுமே மொழிபெயர்ப்பு போல் தெரியாமல் பாமுக் தமிழிலேயே எழுதியது போல் இருந்தது. அநேகமாக திலகவதியின் மொழிபெயர்ப்புக்குப் பிறகு நான் விரும்பிப் படிக்கும் மொழிபெயர்ப்பு குப்புசாமியினுடையதுதான்.

ஆனால் குப்புசாமியின் மொழிபெயர்ப்பில் முராகாமியின் கதையைப் படித்த பின்னரும் முராகாமியின் மீது எனக்கு எந்த ஈடுபாடும் ஏற்படவில்லை. அந்தக் கதை Man-Eating Cats. கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனாலும் ’அட, இதுக்குப் போயா இப்படிக் கூவுறாங்க’ என்று தோன்றியது. மேலும், எனக்கு எதிலுமே உச்சபட்சமான விஷயங்களில்தான் ஆர்வம். எல்லோரும் கார்ஸியா மார்க்கேஸ் என்று அலைந்து கொண்டிருந்த போது நான் அவருக்கும் அப்பனான அலெஹோ கார்ப்பெந்த்தியரைப் படித்துக் கொண்டிருந்தேன். மரியா பர்கஸ் யோசாவைப் படித்துக் கொண்டிருந்தேன். பெரும்பான்மையோடு சேர்ந்தால் மந்தைத்தனம் வந்து விடும் என்ற நினைப்பு. அதே எண்ணம்தான் முராகாமியின் மீதும் வந்தது. ஒரு புத்தகம் மூணு கோடி பிரதி போகுதாம், முப்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு ஆகிறதாம்; என்னங்கடா இது. சரி, முராகாமி வேண்டாம்.

இந்த நிலையில்தான் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் நாலைந்து முராகாமி நாவல்களை வாங்கி வந்தேன். என்னதான் இருக்கிறது என்று பார்த்து விடுவோமே? அந்த நிலையில்தான் எதிர் பதிப்பகத்தின் நோர்வேஜியன் வுட் தமிழில் கிடைத்தது. தமிழில் என்றால் சீக்கிரம் முடிந்து விடும்.

மை காட், ஒரு அயோக்கியத்தனமான, கயவாளித்தனமான மொழிபெயர்ப்பாக இருந்தும் கூட புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை. மை காட், மை காட். கலைஞன். கலைஞன். மரியா பர்கஸ் யோசாவுக்குப் பிறகு இப்படி ஒரு கதைசொல்லியை இப்போதுதான் படிக்கிறேன். ம்… இடையில் தருண் தேஜ்பால். சந்தேகம் இருந்தால் தருணைப் படித்துப் பாருங்கள்.

இதற்கிடையில் நேற்று ஜி. குப்புசாமி முராகாமியின் விநோத நூலகம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்திருந்தார். அவருடைய மொழிபெயர்ப்பு. கதையைப் படித்துப் பாருங்கள். போர்ஹேஸ் மாதிரி போர்ஹேஸுக்கு முன்பு யாரும் எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இலக்கிய வரலாற்றில் ஒரே ஒரு போர்ஹேஸ்தான் இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்போர் பலர் உண்டு. அதில் நானும் ஒருவன். இப்போது இந்த விநோத நூலகத்தைப் படிக்கும் போது போர்ஹேஸையும் ஒருவர் நெருங்க முடியும் என்று தெரிகிறது. கதை பற்றிய வியாக்கியானம் எல்லாம் வேண்டாம். இந்தக் கதையைப் படித்தால் இந்த உலகில் உங்களுடைய கடைசி நாளின் கடைசி நொடியில் கூட இந்தக் கதை மறக்காது. இந்தக் கதையில் வரும் கிழவனையும் ஆட்டு மனிதனையும் நீங்கள் மறக்க முடியாது. இந்தக் கதையில் ஒரு பெண் வருகிறாள். உங்கள் வாழ்வின் எந்தவொரு அற்ப தருணத்திலும் அற்புதத் தருணத்திலும் அப்படி ஒரு பெண்ணை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இல்லாவிட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து போயிருக்குமே?

ஏன் உலகம் பூராவும் முராகாமி வெறி பிடித்து அலைகிறார்கள் என்று தெரிந்து விட்டது. நானும் அவர்களில் ஒருவனாகி விட்டேன். அவருடைய எல்லா நூல்களையும் படித்து விடலாம் என்று இருக்கிறேன்.

பாமுக்குக்கும் முராகாமிக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. பாமுக் எதார்த்த வாழ்வின் பல்லாயிரம் பரிமாணங்களை நமக்குக் காண்பிக்கிறார். அவர் இல்லையேல் அதையெல்லாம் நாம் கண்டிருக்க மாட்டோம். முராகாமி எதார்த்தத்தில் பொதிந்திருக்கும் அதிசயங்களையும் ரகசியங்களையும் காண்பிக்கிறார். 

குப்புசாமியின் கரங்களுக்கு ஒரு முத்தம் பதிக்கிறேன். 

செப்டெம்பர் மாத கல்குதிரையில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.

கதையைப் படிக்க: http://bit.ly/2f63mOR