முகநூலில் பிரபு காளிதாஸின் செயல்பாடுகள் பற்றிப் பலவிதமான குற்றச்சாட்டுகள். ’பாத்து சூதனமா நடந்துக்க, இப்டியே போனா சாரு மாதிரி ஒன்னும்லாமப் போய்டுவே’ என்று கூட தலைவர் சொன்னதாகச் சொன்னார். ஆனாலும் நடவடிக்கைகளில் ஒன்றும் மாற்றம் இல்லை. யாராவது அவருடைய அட்டையைத் திட்டினால், டாய்ங்… இருடா ஒன்ன வீடு தேடி வந்து போட்றேன்… என்ற மாதிரியான முகநூல் பதிவுகள். ஆனால் நேர்வாழ்வில் அவர் வள்ளலார் மாதிரி ஆள் என்று சொன்னால் ஒரு பயல் நம்ப மாட்டேன் என்கிறான். எல்லோருமே அவரை ரவுடி ரங்கன் என்றே சொல்கிறார்கள். எது எப்படிப் போனாலும் அவர் எழுதும் சிறு சிறு சம்பவத் துணுக்குகள் பிரமாதமாக இருக்கின்றன.
நேற்று ஒரு நண்பர் என்னிடம் பிரபு ஒரு பொறுக்கி என்றார். வருத்தமாக இருந்தது. சொன்னவர் மீது அல்ல. இந்தப் பிரபு ஏன் இப்படி ஒரு பெயரை எடுக்க வேண்டும் என்று.
இன்று காலை இன்குலாப் பற்றி ஒரு நண்பருடன் பேச்சு வந்தது. இன்குலாப் எப்படி என்றார். மகாத்மா என்றேன்.
அப்படியென்றால்?
அப்படி ஒரு நல்லவர். அன்பே வடிவானவர்.
எழுத்து?
நல்லவர் என்று சொல்கிறேன். நல்லவர் எப்படி எழுத்தாளராக இருக்க முடியும்?
ஓ?
ஆமாம். நல்லவர்களால் எழுத்தாளராக இருக்க முடியாது. கொஞ்சம் madness, கொஞ்சம் eccentricity, கொஞ்சம் பொறுக்கித்தனம், கொஞ்சம் நயவஞ்சகம், கொஞ்சம் நம்பிக்கைத் துரோகம் எல்லாம் இருந்தால்தான் எழுத்தாளனாக முடியும். சரி, திருவள்ளுவருக்கு இது எல்லாம் இருந்ததா என்று கேட்டால் என் பதில், தெரியாது.
இதோ பிரபு காளிதாஸின் சமீபத்திய பதிவு:
கல்லூரி நாட்களில் டீ தம் அடிக்க, அப்பாவின் சட்டை பாக்கெட்டிலிருந்து காசு திருடுவேன். லேசான ஒரு குற்ற உணர்வு இருக்கும். “சரி, விடு நம்ம வீட்லேர்ந்துதானே திருடறோம். போனால் போகட்டும்” என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு அவ்வப்போது திருடுவேன்.
சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு திருடும் பழக்கம் ‘டச்’ விட்டுப் போய்விட்டது. இந்த ரூபாய் நோட்டு செல்லாத பஞ்சாயத்தின் பிறகு பத்து இருபதுக்கெல்லாம் திரும்ப டிமாண்ட் அதிகமானதால் என் மனைவியின் பர்ஸிலிருந்து அவ்வப்போது பத்து இருபது நோட்டுகளை அபேஸ் செய்துகொண்டிருந்தேன். அவர் கண்டுபிடித்தாரா இல்லை, “போனால் போகட்டும், சில்லறையா தானே திருடறான்” என்று விட்டுவிட்டாரா என்று இன்னும் கண்டே பிடிக்க முடியவில்லை.
நேற்று மாலை உயிர்மையின் “நீரில் கரையாத நினைவுகள்” விழாவுக்குப் புகைப்படங்கள் எடுக்க நான் முன்னமேயே சென்றுவிட்டேன். டீ, போண்டா அங்கேயே தருவார்கள் என்பதால் நேற்று திருடத் தேவையே இல்லாமல் போயிற்று. என் மனைவியும் மகனும் மழை காரணமாக கொஞ்சம் தாமதமாக வந்தார்கள். வந்த கையோடு என் மனைவி ஒரு குண்டைப் போட்டார். அவரது பர்ஸை எங்கோ வழியில் தொலைத்துவிட்டதாகச் சொன்னார். அவ்வளவுதான். “இனிமேல் சில்லறைத் திருட்டில் கூட ஈடுபட முடியாதா…கிழிஞ்சுது … செத்தோம்” என்று நினைத்தேன்.
விழா முடிந்து வீடு வந்தால் பர்ஸ் இருந்தது. பதட்டத்தில் அவர் எடுத்துக்கொள்ள மறந்து விட்டிருக்கிறார்.
கடவுள் இருக்காண்டா கொமாரு.