ஒரு எதிர்வினை

நவீன தமிழ் இலக்கியத்தில் இரண்டு போக்குகள் உள்ளன.  ஒன்று, வழக்கமாக எழுதப்படும் எழுத்து.  அதை status quo எழுத்தாகவும் கொள்ளலாம்.  பரிசு கிடைக்கும்; விருதுகள் கிடைக்கும்; பெருமையாகப் பேசிக் கொள்ளலாம்.  நான் எழுத்தாளன் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.  இன்னொரு விதமான எழுத்து, transgressive எழுத்து.  இதை எழுதுபவர் தான் ஒரு எழுத்தாளர் என்றே சொல்லிக் கொள்ள முடியாது.  சொந்தக்காரர்கள் மத்தியில் வெறுப்பும் உதாசீனமும் எதிர்வினையாகக் கிடைக்கும்.  Status Quo எழுத்தாளர்கள் உங்களைத் தீண்டத்தகாதவனைப் போல் நடத்துவார்கள். சுமார் நாற்பது ஆண்டுகளாக ஸ்டேடஸ்குவோ கும்பல் என்னை எழுத்தாளனே அல்ல என்றுதான் சொல்லிக் கொண்டே வருகிறார்கள்.  இப்போது அந்தப் பிணக்குவியலிலிருந்து எழுந்து வந்த பிணம் ஒன்று என்னைப் பார்த்து திரும்பவும் சாரு ஒரு எழுத்தாளரே இல்லை; அவருக்கு ஒன்னுமே தெரியாது; கிண்டல் பண்ணினா கூடப் புரியாம முழிப்பார்; நாங்க தான் “உங்களைத்தான் கிண்டல் பண்றோம்” என்று சொல்லுவோம். அப்போதுதான் புரியும்” என்ற ரீதியில் முகநூலில் எழுதியிருக்கிறது.  அந்த சவத்துக்கு கார்ல் மார்க்ஸ் எழுதியிருந்த ஒரு எதிர்வினையைக் கீழே தருகிறேன்.

”சாருவை நிறுவுவது என்பதோ, அவர் எழுத்து குறித்த பிரகடனங்களை பொதுவெளியில் நாங்கள் வெளிப்படுத்துவதோ அவரை அவமதிப்பது போன்ற செயல் என்று நினைக்கிறேன். ஆமாம். நீங்கள் இன்னும் எத்தனை வருடங்கள் தான் சாரு ஒரு எழுத்தாளனே இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? எங்களைப் போல படிக்கவும் எழுதவும் வந்திருக்கிற அடுத்த தலைமுறை ஒன்று அவரைக் கொண்டாடுவதன் அடிப்படையை நீங்கள் எவ்வாறு தான் பிறகு வரையறுப்பீர்கள்?

இது அவர் மீது காலம் காலமாக ஏவப் படுகிற வன்முறை என்றே நான் கருதுகிறேன். இவ்வளவு கடும் நிராகரிப்புக்குப் பிறகும் ஒருவன் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான் என்பதையும், இந்த மூர்க்க வெளியில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைக்கையில், அவன் இலக்கியத்தின் மீது கொண்டுள்ள தீராத பிணைப்பை எண்ணி நாங்கள் பிரமிக்கவே செய்கிறோம்.

ஒரு சீரிய வாசகன் சாருவை எப்படி உணர்கிறான் என்பதோ, அவரைக் கொண்டாடுபவர்கள் எதன் பொருட்டு அதைச் செய்கிறார்கள் என்பதோ ஒன்றும் அறிந்து கொள்ள முடியாத ரகசியம் இல்லை.

ஆனால், சாருவை நிராகரித்துவிட்டு, நிராகரிப்புக்கான காரணங்களை கண்டடைய முயலும் அபத்தம் இங்கு காலம் காலமாக  நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நீங்கள் இங்கு செய்வதும் அதைத்தான். ஆக, இதில் உரையாட ஒன்றுமே இல்லை. நன்றி!”

கார்ல் மார்க்ஸ்