நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

Amazon மூலம் kindle edition ஆக ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள என்னுடைய சிறுகதைத் தொகுதி Morgue Keeper-இன் மொழிபெயர்ப்பு படு மோசம் என்பதாக ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.  இதை நான் விமர்சனமாக, ஒரு அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், morgue keeper கதை ப்ரீதம் சக்ரவர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு தெஹல்காவில் வெளிவந்தது.  அதுவும் தெஹல்காவின் சிறப்பு மலரில்.  மொழி நன்றாக இல்லாவிட்டால் தெஹல்காவில் வரும் சாத்தியம் இல்லை.  திர்லோக்புரி கதையும் ப்ரீதம் சக்ரவர்த்தியால்தான் மொழிபெயர்க்கப்பட்டது.  அவர்தான் ஸீரோ டிகிரியையும் மொழிபெயர்த்தவர்.   ஸீரோ டிகிரியின் மொழிபெயர்ப்பு எல்லோராலும் கொண்டாடப் படுகிறது.  தொகுப்பில் உள்ள Message Bearers from the Stars and Necrophilia மற்றும் Nano-வை மொழிபெயர்த்தது ராஜேஷ்.  அந்த இரண்டு கதையையும் யாராலுமே மொழிபெயர்க்க முடியாது என்று நினைத்தேன்.  நேநோ the four quarters magazine இல் வெளிவந்த போது அதன் மொழிபெயர்ப்பு மிக இயல்பாகவும், மொழிபெயர்ப்பு என்றே தெரியாதபடியும் இருந்ததாகப் பலராலும் சிலாகிக்கப்பட்டது.  இப்போது ராஜேஷ் கர்னாடக முரசு கதையை மூன்று மாதமாக வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்.  ஆமாம்.  ஒருநாள் நான் அது பற்றி விசாரித்த போது “நரகத்தில் அமர்ந்து கத்தியால் உடம்பைக் கிழித்துக் கொண்டு ரத்தத்தை நக்கிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது” என்றார்.  கர்னாடக முரசுவை மொழிபெயர்ப்பது அப்படி இருக்கிறதாம். Transgressive writing ஐ மொழிபெயர்ப்பது அப்படித்தான் இருக்கும்.

எழுதுவதோ மொழிபெயர்ப்பதோ ஒரு masochist வேலைதான்.  அதனால்தான் நான் கணினியில் எழுத்துக்களைத் தட்டினாலும் என் தசையையும் ரத்தத்தையுமே எரித்து எழுதுவது போல் தோன்றுகிறது.  அப்பேர்ப்பட்ட வலி தரும் வேலை இது.  அதனால்தான் அவ்வப்போது குடிக்கவும் வேண்டியிருக்கிறது.  ஆனால் இதையே ஒரு வாசகன் படிக்கும் போது அவனுக்கு அது இன்பம். அந்த வகையில் ஒரு வாசகன் sadist-ஆகத்தான் இருக்க முடியும்.  என் துன்பம் அவனுக்கு இன்பம். அதனால்தான் எழுத்தையும் வாசிப்பையும் sado-masochist act என்று சொல்வார்கள்.

நிலைமை இப்படி இருக்க போகிற போக்கில் மொழிபெயர்ப்பு மோசம் என்றால் அதை எப்படி நான் அபிப்பிராயமாக எடுத்துக் கொள்ள முடியும்.  அது ஒரு அவதூறு அவ்வளவுதான்.  அவதூறு செய்பவர்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.  எனவே இதை விட்டு விட்டு இன்னொரு காமெண்டுக்கு வருவோம்.  என் நண்பரும் என் மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவருமான கண்ணன் ”Translation could have been better for some stories..” என்று எழுதியிருக்கிறார்.  இதை அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில்தான் சொல்லி இருக்க வேண்டும்.  இப்படி ஒரு பொதுமேடையில் எழுதியிருக்கக் கூடாது.  ஏனென்றால், என்னுடைய ஒரு குறுநாவலை எக்ஸ் என்ற நண்பர் மொழிபெயர்த்தார்.  இதை நான் கண்ணனிடம் கொடுத்து எடிட் செய்து தரச் சொன்னேன்.  உடனே கண்ணன் “மொழிபெயர்ப்பு சரியில்லை” என்று சொல்லி தானே மொழிபெயர்த்தார்.  ஆனால் எக்ஸின் மொழிபெயர்ப்பை விட கண்ணனின் மொழிபெயர்ப்பு சிறந்தது என்று சொல்ல முடியாததாக இருந்தது.  எக்ஸுக்கு 50 மதிப்பெண் என்றால் கண்ணனுக்கும் 50 தான் கொடுக்கலாம்.  எக்ஸின் மொழிபெயர்ப்பில் சில இடங்கள் தட்டையாக இருந்தது என்றால் கண்ணனின் மொழிபெயர்ப்பிலும் சில இடங்கள் தட்டையாக இருந்தன.  நான் இரண்டையுமே ஒரு கலவையாகச் சேர்த்து உருவாக்கி அனுப்பினேன்.  இப்படி இரண்டையும் கலந்தது எனக்கு மிகப் பெரிய பளுவாகி விட்டது.  இதற்குப் பேசாமல் எக்ஸின் மொழிபெயர்ப்பை நானே எடிட் செய்திருக்கலாம்.  கண்ணனிடம் கொடுத்ததால் இரட்டிப்பு வேலை ஆகி விட்டது.  ஒரு மொழிபெயர்ப்பு சரியில்லை என்று சொல்பவர் அதை விட நன்றாக அல்லவா செய்ய வேண்டும்?

Morgue Keeper மொழிபெயர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்றால் ஆங்கிலம் மிக நன்றாகத் தெரிந்த கண்ணனே என்னுடைய ஏதேனும் ஒரு நாவலை எடுத்துச் செய்திருக்கலாமே?

ஆனால், மாறாக, எனக்குக் கண்ணன் கொடுத்தது மன உளைச்சலைத்தான்.  கண்ணனின் ஆங்கிலத்தைப் பார்த்துத் திருப்தி கொண்ட நான், ராஸ லீலாவை மொழிபெயர்க்கிறீர்களா என்று கேட்டேன். சரி என்றார்.  ராஸ லீலா ஒரு பிரதியை வாங்கி 5000 ரூ. செலவு செய்து குரியரில் அனுப்பினேன். இப்படி மொழிபெயர்ப்பாளர்களுக்குப் புத்தகம் வாங்கிக் கொடுப்பதற்கென்று எனக்கு ஒரு தோழி இருக்கிறார்.  இப்போது கூட தேகம் மூன்று பிரதிகள், ராஸ லீலா மூன்று பிரதிகள் வேண்டும் என்று தோழியிடம் கேட்டிருக்கிறேன்.  அவர்தான் ஆர்டர் கொடுத்து எனக்கு வாங்கிக் கொடுப்பார்.  ப்ளூடார்ட்டில் அனுப்பினால் ஓரிரு தினங்களில் கிடைத்து விடும்.  ஆனால் ஒரு புத்தகத்துக்கே மூவாயிரம் நாலாயிரம் என்று செலவாகும். கண்ணனிடமிருந்து புத்தகம் கிடைத்தது என்ற செய்தி வந்தது.  அவ்வளவுதான்.  அதற்குப் பிறகு கிணற்றில் போட்ட கல்.  மொழிபெயர்ப்பு நடக்கிறதா இல்லையா என்று ஒரு தகவலும் இல்லை.  மாதங்கள் கடந்தன.

ஏற்கனவே ஒரு நண்பர் ராஸ லீலாவை மொழிபெயர்க்கிறேன் என்று இரண்டு ஆண்டுகளைக் கடத்தினார்.  இரண்டு ஆண்டுகளில் நடந்தது 70 பக்கம்.  பிறகு இரண்டு ஆண்டுகள் எதுவுமே நடக்காமல் கழிந்தன.  பிறகுதான் கண்ணன்.  அவரிடமிருந்தோ மாதக் கணக்கில் தகவலே இல்லை.  காத்திருந்து பார்த்துப் பொறுமையிழந்த நான் ஒருநாள் “நாவலை வேறு யாரிடமேனும் கொடுத்து விடவா?” என்று கேட்டு எழுதினேன்.

இங்கே என்னுடைய நிலையையும் நீங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும்.  என் கால் தூசு பெறாத நாவல்கள் எல்லாம் ஏஷியன் மேன் புக்கர் நாவலைப் பெற்றுக் கொண்டு போகின்றன.  நோபல் பரிசு பெற்ற Elfriede Jelinek-இன் நான்கு நாவல்களை நான் படித்திருக்கிறேன்.  அந்த நான்குமே ராஸ லீலாவின் பக்கத்தில் கூட வர முடியாது.  சமீபத்தில் சீனாவில் மூன்று கோடி பிரதிகள் விற்ற, ஏஷியன் மேன் புக்கர் பரிசு பெற்ற wolf totem நாவலைப் படித்தேன்.  சுமார் 1000 பக்கங்கள்.  ஒரே வாரத்தில் வேறு எந்த வேலையும் செய்யாமல் படிக்க வைத்த நாவலாக இருந்தாலும் அதை நான் நாவல் என்ற பிரிவிலேயே சேர்க்க மாட்டேன்.  ஓநாய்களைப் பற்றிய ஒரு சுவாரசியமான ஆய்வு.  நேஷனல் ஜியாக்ரஃபிக் பார்த்தது போல் இருந்ததே தவிர அந்த நாவல் இலக்கிய அனுபவம் எதையும் நல்கவில்லை.  அதோடு, அதில் இருந்த ஃபாஸிஸமும் இனவாதமும் வேறு சகிக்க முடியவில்லை.  சீன இனமே முட்டாள் இனம்; அடிமை இனம்.  மங்கோலிய இனம் தான் உலகிலேயே உசந்த இனம்; இத்யாதி, இத்யாதி.  இப்படி நான் ஒரு நீண்ட பட்டியலைத் தர முடியும்.  இப்படி சராசரியான நாவல்கள் எல்லாம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் போது தமிழில் எழுதும் ஒரே காரணத்துக்காக ஆயிரம் பேருக்குள்ளேயே அடங்க வேண்டுமா என்பதுதான் என் ஆதங்கம்.  அதனால்தான் நான் மொழிபெயர்ப்பாளர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்.

இப்போது மீண்டும் கண்ணனுக்கு வருவோம்.  வேறு யாரிடமாவது கொடுத்து விடவா என்று கேட்டவுடன் இந்த வார முடிவுக்குள் ஒரு அத்தியாயம் அனுப்பி விடுகிறேன் என்ற பதில் வந்தது.  எனக்கு மிகவும் சோர்வாகவும் அலுப்பாகவும் இருந்தது.  அந்தப் புத்தகமோ 650 இருக்கிறது.  இப்படி நாலு பக்கம் வாங்குவதற்குள் என் நாக்கில் நுரை தள்ள வைக்கிறாரே, காரியம் ஆகுமா என்ற சம்சயமும் பதற்றமும் ஏற்பட்டது எனக்கு.  அந்த வார இறுதியில் அத்தியாயத்தில் பாதி வந்தது. மீதியை ஓரிரு நாளில் அனுப்புவதாக எழுதியிருந்தார்.  அதற்கு மேல் எனக்கு நம்பிக்கை போய் விட்டது.  மொழிபெயர்ப்பு நடக்கிறதோ இல்லையோ, எனக்குத் தகவல் தெரிய வேண்டாமா?  வேலை எந்த நிலையில் இருக்கிறது, உங்களால் முடியுமா முடியாதா, வேலை நடக்குமா இல்லையா?  எதுவுமே தெரியாமல் நான் எத்தனை மாதம் காத்திருப்பது?  தகவல் பரிமாற்றத்தில் பூஜ்யமாக இருந்தால் ஒருவருக்கொருவர் எப்படி இணைந்து வேலை செய்வது?

அதற்குப் பிறகு நான் கண்ணனை மறந்து போனேன்.  சில மாதங்கள் கழிந்தன.  இடையில் ஐரோப்பாவிலிருந்து சென்னை வந்து போனார். என்னையும் சந்தித்தார் கண்ணன்.  எனக்கு மிக மிக மலிவான ஒரு சாக்லெட் பாக்கெட் கொடுத்தார். (அதை நான் என் வீட்டுப் பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டேன்).  அவ்வளவு மலிவான சரக்குகளை நான் உண்பதில்லை.  சற்று எரிச்சல் அடைந்தேன்.  கையை வீசிக் கொண்டு என்னை வந்து சந்திக்கலாம்.  எந்தப் பிரச்சினையும் இல்லை.  இப்படி யாரும் என்னை மலினப்படுத்தலாகாது.  “இதோ உங்களுக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லி யாரும் ஒரு குவார்ட்டர் ஓல்ட் மாங்க் பாட்டிலை எனக்குத் தருவீர்களா?  அதிலும் ஐரோப்பாவிலிருந்து வந்து?  முன்பெல்லாம் என்னை சந்திக்கும் நண்பர்கள் ஜானி வாக்கர் விஸ்கியை லண்டனிலிருந்து வாங்கி வந்து கொடுப்பார்கள்.  அடக் கடவுளே என்று நினைத்துக் கொள்வேன்.  இங்கே ஜெமினி காம்ப்ளெக்ஸில் 1000 ரூபாயை விட்டெறிந்தால் ஜானி வாக்கர் கிடைக்கும்.  பிறகு ஜானி வாக்கர் கொடுத்தால் மறுக்க ஆரம்பித்தேன்.  இப்போது ஜானி வாக்கர் பிரச்சினை இல்லை.  சாக்லெட் ஆரம்பித்துள்ளது.

பெரியவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ, நம் பிரியத்துக்குரியவர்களுக்கோ இஷ்டப் பொருட்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்று சொல்லும் முட்டாள் அல்ல நான்.  நல்லதாக வாங்கிக் கொடுங்கள் என்கிறேன்.  விமான நிலையங்களின் duty free கடைகளைப் பார்த்தால் சொர்க்க லோகம் போல் இருக்கிறது.  சாக்லெட்டுகளிலேயே நூறு ரகம்.  மதுபானங்களில் ஆயிரம் ரகம்.  ஒரு சாக்லெட்டில் அதன் உள்ளேயே ஆல்கஹால் இருக்கிறது.  Bailey’s என்று ஒரு அற்புதமான மதுவகை.  சீனத்துத் தேனீர்ப் பைகள்.  ஆயிரம் ஆயிரம்.

சரி.  விஷயத்துக்கு வருகிறேன்.  கண்ணனுடன் மீண்டும் ராஸ லீலா பற்றிப் பேச்சு.  அவரோடு அவர் மனைவியும் சேர்ந்து மொழிபெயர்ப்பு செய்வதால் இன்னொரு ராஸ லீலா பிரதியை வாங்கிக் கொடுத்தேன்.  மீண்டும் தோழி தான் வாங்கிக் கொடுத்தார்.  ஊருக்குப் போனார் கண்ணன்.

முடிந்தது கதை.  மீண்டும் அதே விதமாக ஒரு தகவலும் இல்லை.  ஐந்து மாதமா, நான்கு மாதமா நினைவில்லை.  கண்ணனிடமிருந்து ஒரு தகவலும் இல்லை.  அப்போதுதான் நான் என் மொழிபெயர்ப்பாளர்களின் காலில் விழுகிறேன் என்று எழுதினேன்.  அப்படியும் தகவலே இல்லை.  நானும் வீராப்பாக விட்டு விட்டேன்.  ஆனால் இப்படியே போனால் அந்த அற்புதமான நாவலை யார்தான் மொழிபெயர்ப்பது?  ஆண்டுகள் போனால் ஏஷியன் மேன் புக்கருக்கோ அல்லது வேறு இடங்களுக்கோ அனுப்பவே முடியாது.  இப்போது ஸீரோ டிகிரியை அனுப்ப முடியாததைப் போல.  கண்ணனை இனி மறந்து விடலாம் என்று முடிவு செய்தேன்.  அதே நேரத்தில் டாக்டர் ராமானுஜம் தேகம் நாவலை முடித்திருந்தார்.  அவரை சந்தித்து ராஸ லீலா முடியுமா என்று கேட்டேன்.  பெரிய நாவல்.  மெதுவாகச் செய்யுங்கள்; ஆனால் நீண்ட இடைவெளி இல்லாமல் ரெகுலராகச் செய்தால் ஒரு ஆண்டில் அல்லது ஒன்றரை ஆண்டில் செய்து விடலாம் என்றேன்.  ஒப்புக் கொண்டார்.  எதற்கும் கண்ணனையும் கேட்டு விடலாம் என்று கடிதம் எழுதினேன்.

பணி நிமித்தமாக வேறு தேசத்துக்குப் போய் விட்டதால் மொழிபெயர்ப்பு செய்ய முடியவில்லை.  மார்ச்சில் ஆரம்பித்து விடலாம் என்று பதில் வந்தது.  உண்மையில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லை.  இந்தத் தகவலை அவராக அல்லவா அனுப்பி இருக்க வேண்டும்?  அந்தப் பொறுப்பு கூட ஒருவருக்கு இல்லையா?  சின்ன வயதில் என் குப்பத்தில் பொது இடத்தில்தான் மலம் கழிக்க வேண்டும்.  நாம் முக்கி முக்கிப் போடும் மலத்துக்காக நம் குண்டிக்குப் பின்னாலேயே பசி வெறியுடன் நின்று கொண்டிருக்கும் பன்றியைப் போல் ஒரு எழுத்தாளனை ஆக்கலாமா?  நீங்களாக அல்லவா நிலைமையை எனக்குத் தெரிவிக்க வேண்டும்?  அப்போதும் நான் கண்ணனுடன் கோபம் காண்பிக்கவில்லை.  கிடைப்பது தானம். பல்லைப் பார்க்கக் கூடாது.  அவரிடம் விஷயத்தைச் சொல்லி நீங்கள் இரண்டாம் பாகத்தைச் செய்யுங்கள் என்றேன்;  அவர் செய்ய மாட்டார் என்ற தைரியத்துடன்.

இப்படிப்பட்டவர்தான் morgue keeper மொழிபெயர்ப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்கிறார்.  சரி கண்ணன்.  நீங்கள் சொல்வது முழுக்க சரி.  ஆனால் இதை நீங்கள் பொது வெளியில் எழுதலாமா?  ஆயிரம் பேர் படிக்கும் இடம் அது.  அதிலும் நான் எங்கே சென்றாலும் அங்கே போய் என்னைப் பற்றி அவதூறு எழுத ஒரு டஜன் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட இடத்தில் போய் நீங்கள் உண்மை விளம்பலாமா?  நீங்களே இப்படி எழுதினால் பிறகு யார் என்னை மொழிபெயர்க்க வருவார்கள்?  ஏற்கனவே எல்லோரும் “என் ஆங்கிலம் ஒன்றும் அவ்வளவு நன்றாக இருக்காது” என்ற அதைர்யத்துடன் வருகிறார்கள்.  அவர்களைப் போய் மிரட்டினால் யார் மொழிபெயர்க்கத் துணிவார்கள், சொல்லுங்கள்?

இதை நீங்கள் வெளியே, பொது இடத்தில் எழுதியதால்தான் நானும் பொது இடத்தில் எழுத நேர்ந்தது.

என் நாவல்களின் மொழிபெயர்ப்பு ஆகா ஓகோ என்று இருக்காது.  ஆனால் நிச்சயமாக மோசமாக இருக்காது.  சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு எவ்வளவு மொக்கையாக இருந்தது என்று எழுதியிருந்தேன். மொழிபெயர்த்தவர் பெரிய ஆங்கிலப் பேராசிரியர்.  ஆனால் படைப்பாளி அல்ல.  மேலும், சு.ரா. அதைப் படித்திருக்க மாட்டார். பெரும்பாலான தமிழ் நாவல்களின் மொழிபெயர்ப்பு அப்படித்தான் உள்ளது.  அதனால்தான் சமகாலத் தமிழ் இலக்கியம் உலக அரங்கில் தோற்றுக் கொண்டிருக்கிறது.  ஒலிம்பிக்ஸில் நாம் வாங்கும் ஒரே ஒரு வெண்கல மெடலை விடக் கேவலமாக இருக்கிறது தமிழ் இலக்கியத்தின் சர்வதேச சாதனை!

என் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்னார்.  அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி என்று யாரையுமே மொழிபெயர்ப்பில் படிக்க முடியவில்லை என்றார்.  ஒரே விதிவிலக்கு ஆதவன்.  அப்படியானால் நான்? என்றேன் பதற்றத்துடன்.  ”உங்களை நான் தமிழ் எழுத்தாளராகவே நினைக்கவில்லையே?” என்ற பதிலைக் கேட்டதும்தான் நிம்மதி அடைந்தேன்.

இதுதான் நிலைமை.  என்னுடைய மொழிபெயர்ப்பாளர்கள் யாரும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றுபவர்கள் அல்ல.  ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் நண்பர்கள் அவர்கள்.  என் எழுத்தின் மீது உள்ள அபிமானத்தால் மட்டுமே தங்களின் நேரத்தை எனக்கு தானமாகத் தருகிறார்கள்.  ஒரு நண்பர் மிக அமைதியாக காமரூப கதைகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.  இன்னொரு நண்பர்… அவரோடு நான் போனில் கூடப் பேச முடியாது. எந்நேரமும் வேலை.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்.  வீட்டுக்கே ஒன்பது மணிக்குப் போய் இரவு ஒரு மணி வரை மொழிபெயர்க்கிறார்.  ஷிவா என்று பெயர்.  எக்ஸைலை முடிக்க ஒரு கால அட்டவணையே போட்டு இருக்கிறார்.  அதன்படி மார்ச் 31-ஆம் தேதி எக்ஸைல் மொழிபெயர்ப்பு முடியும்.  சீராக ஒவ்வொரு வாரமும் ஷெட்யூலில் உள்ள பக்கங்களை விட அதிகமாகவே அனுப்புகிறார்.  அவருக்கும் குடும்பம் இருக்கிறது; குழந்தை இருக்கிறது.  உறவினர்கள் இருக்கிறார்கள்.  கல்யாணம் காட்சி இருக்கிறது.  இவ்வளவு குடும்பக் கடமைகளோடு கூடவே தான் மொழிபெயர்ப்பும் நடக்கிறது.  என் எழுத்தின் மீது உள்ள அபிமானம் மட்டுமே காரணம்.

ஸாம் என்று ஒரு வாசகர்.  தேகம் நாவலை என்னிடம் சொல்லாமலேயே ஒரே மாதத்தில் மொழிபெயர்த்து முடித்து விட்டார்.  இப்போது டாக்டர் ராமானுஜத்தின் பிரதியையும் ஸாம் பிரதியையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் காயத்ரி.  அவருக்கும் ஆயிரம் வேலை.  சமையல் வேலை, கல்லூரி வேலை, கணவர் வேலை, குழந்தை வளர்ப்பு, இத்யாதி இத்யாதி.

ஓரான் பாமுக் துருக்கி மொழியில்தானே எழுதுகிறார்?  மொழிபெயர்ப்புக்கு அவர் இப்படியா நக்கிக் கொண்டிருக்கிறார்?  மரியோ பர்கஸ் யோசா 15 நாவல்களை எழுதி விட்டார்.  ஒவ்வொன்றும் 500 பக்கம்; 1000 பக்கம்.  மொத்தம் 20,000 பக்கங்கள் இருக்கும்.  என்ன அற்புதமான மொழிபெயர்ப்பு தெரியுமா?  இரண்டு காரணங்கள்.  யோசாவின் புத்தகங்கள் கோடிக் கணக்கில் விற்பதால் அவர் ஒரு மில்லியனராக இருக்கிறார்.  இரண்டு, அங்கே ஆங்கிலமும் ஸ்பானிஷும் தெரிந்தவர்களுக்கு இலக்கியமும் தெரிந்திருக்கிறது.  அதனால் தொழில்முறையில் மொழிபெயர்ப்பு நடக்கிறது.  ஸாஃப்ட்வேர் துறையில் பணியாற்றிக் கொண்டே யாரும் அவரை நள்ளிரவில் கண் விழித்து மொழிபெயர்க்கவில்லை.  ஓரான் பாமுக்கின் Snow படித்தேன்.  அற்புதமான மொழிபெயர்ப்பு.  அம்மாதிரியான மொழிபெயர்ப்பை நான் எப்படி எதிர்பார்க்க முடியும்?  அங்கே அதற்காக பதிப்பகமே லட்சக் கணக்கில் செலவழிக்கிறது.  எந்த எழுத்தாளனும் தன் மொழிபெயர்ப்புக்குத் தானே ஏற்பாடு செய்வதில்லை.  இது அவலம்தான்.  ஆனால் இந்த அவலத்துக்குக் காரணம், நானோ என் மொழிபெயர்ப்பாளர்களோ அல்ல.  தமிழ்ச் சூழல்தான் காரணம்.  இங்கே ஆங்கிலம் தெரிந்த பலருக்கும் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலமும் தமிழும் தெரிந்தவர்களுக்கு இலக்கியமே தெரியவில்லை.  இலக்கியம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; என் எழுத்தில் கூட பரிச்சயம் இல்லை.  என் எழுத்தில் கூடப் பரிச்சயம் இல்லாமல், அசோகமித்திரன் ஆதவன் என்ற பெயர்கள் கூடத் தெரியாமல் எப்படி மொழிபெயர்க்க முடியும்?  பிரமாதமாக ஆங்கிலம் எழுதுகிறார்கள். ஆனால் என்னுடைய ஒரு பத்தியைக் கொடுத்து செய்யச் சொன்னால் படு கேவலமாக இருக்கிறது.  அதனால்தான் ஆங்கிலம் தெரிந்த என் வாசகர்களே இந்தப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம்.  என் மொழிபெயர்ப்புகளில் தவறுகளே இருக்காது.  ஒவ்வொரு வார்த்தையாக நான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதனால்தான் சாருஆன்லைனில் அதிக எழுத முடியவில்லை.  இப்போது தேகத்தில் கூட ஒரு பிழை பார்த்தேன்.  தமிழில் வர்க்க எதிரிகள் என்று ஒரு வார்த்தை வருகிறது.  அது ஒரு மார்க்ஸீய சித்தாந்த வார்த்தை.  ஆங்கில மொழிபெயர்ப்பில் தவறாக இருந்தது.  நான் அதை class enemies என்று மாற்றினேன்.  மொழிபெயர்ப்பாளர்களுக்கு மார்க்ஸீய சித்தாந்தம் சார்ந்த terminology தெரியவில்லை.  நானே ஒவ்வொரு வார்த்தையாகப் பார்த்துக் கொண்டிருப்பதால் இது ஒன்றும் பிரச்சினை இல்லை.

இவ்வளவுக்கும் இடையில் இன்னொரு பிரச்சினை என்ன தெரியுமா?  ஒருவரின் மொழிபெயர்ப்பைப் படித்தால் இன்னொரு மொழிபெயர்ப்பாளருக்கு வாந்தி வருவது போல் இருக்கிறது.  இவருக்கோ ஆங்கிலமே தெரியவில்லை என்கிறார் முன்னவர்.  இப்படி ஒருவரின் மொழிபெயர்ப்பு இன்னொருவருக்குப் பிடிக்கவில்லை.  இந்த ரெண்டு பேருமே டோட்டல் வேஸ்ட் என்பது கண்ணனின் கருத்து.  என்ன செய்வது கண்ணன்?  இப்படி நொட்டு நொள்ளை சொல்லிக் கொண்டிருந்தால் காரியம் ஆகாதே?  நான் கூட இருந்து செய்யும் வரை எந்த மொழிபெயர்ப்பும் சோடை போகாது என்பது என் கருத்து.  அந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலம் தெரியும்.

சமீபத்தில் நான் ஹைதராபாத் சென்றிருந்தேன்.  ஓய்வுக்கு என்று சொல்லி விட்டு அங்கே போய் கோணல் பக்கங்களைத்தான் ப்ரூஃப் ரீடிங் செய்து கொண்டிருந்தேன்.  அப்போது என் நண்பரும் மலையாள மொழிபெயர்ப்பாளருமான ஜெயேஷை சந்தித்தேன்.

எக்ஸைல் வெளிவந்து ஒரு ஆண்டு நிறைவடைகிறது.  அவர் அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து ஆறு மாதம் ஆகிறது.  அடுத்த இரண்டு மாதங்களில் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் மொழிபெயர்ப்பை முடித்து விட்டார்.  அவர் ஒரு வாக்கியம் சொன்னார்.  என்னவென்றால்… எக்ஸைல் என்னுடைய சமீபத்திய ஆக்கம்.  என் 57-ஆவது வயதில் எழுதியது.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என் முதல் நாவல்.  என் 27-ஆவது வயதில் எழுதியது.  முப்பது ஆண்டுகளின் இடையே கால எந்திரத்தில் போய் வந்தது போல் இருக்கிறது என்றார் ஜெயேஷ்.  யோசித்துப் பாருங்கள் இதை.  முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதையும் இப்போது எழுதியதையும் ஒருவர் ஒரே சமயத்தில் மொழிபெயர்ப்பதன் அனுபவம் எப்படி இருக்கும்?

இது ஒரு மனிதரால் சாத்தியமா?  மொத்தம் 600 பக்கங்கள்.  எட்டு மாதங்கள்.  அவருக்கு இரவு நேரப் பணி.  பணி முடிந்து காலையில் ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவார்.  மொழிபெயர்ப்பைத் துவங்குவார்.  பக்கத்தில் மதுக் கோப்பை.  சாப்பாடு கூட இல்லாமல் மதியம் வரை மொழிபெயர்த்து விட்டு, அதற்கு மேல் சமைத்து சாப்பிட்டு விட்டு, சிறிது தூங்கி விட்டு, இரவு வேலைக்குக் கிளம்பி விடுவார்.  ஜெயேஷ் அடிக்கடி புகைக்கும் பழக்கம் உள்ளவர்.  ஜெயேஷோடு கூட வந்த நண்பர் சொன்னார் என்னிடம்.  ”மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கும் போது “சிகரெட் தீர்ந்து விட்டது; வா, வெளியே போய் சிகரெட் வாங்கி வரலாம்” என்று கூப்பிட்டால் கூட வர மாட்டார் இவர்” என்றார் அவர்.  அந்த அளவுக்கு ஒரு வெறியோடு முடித்திருக்கிறார் ஜெயேஷ்.

ஜெயேஷை அடுத்த நாளும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன்.  கோணல் பக்கங்கள் வேலையில் மூழ்கி விட்டதால் சொன்னபடி போய் சந்திக்க முடியவில்லை.  மறுநாளும் அப்படியே.  “என்னைத் தவிர்க்கிறீர்களா?’ என்று கேட்டு ஜெயேஷிடமிருந்து குறுஞ்செய்தி.  அவரைப் போலவே நானும் வெறித்தனமாக வேலை செய்வேன்.  அதுதான் காரணம் ஜெயேஷ்.  தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம்.  இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?  இலக்கிய வரலாறு இவர்களின் பெயரைச் சொல்லும்.

எனவே,

இனி என்ன எழுத?  என் மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிக் குறைவாகச் சொன்னதால் எனக்குக் கோபம் இல்லை.  அதைப் பொதுவெளியில் சொன்னதால்தான் இதை எழுதினேன்.  கூபாவில் புரட்சி முடிந்த கையோடு பல எதிர்ப்புரட்சியாளர்கள் அரசை அமெரிக்க ஆதரவோடு விமர்சித்த போது ஃபிடல் சொன்னார்.  புரட்சிக்கு உள்ளே – everything; புரட்சிக்கு வெளியே – nothing என்று.  அதாவது, நமக்குள்ளே எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள்; வெளியே போய் சொன்னால் உள்ளே தள்ளி விடுவேன் என்று பொருள்பட அப்படிச் சொன்னார்.  அது உண்மையும் கூட. தொமாஸ் அலியாவின் ஒரு படத்தில் ஃபிடலை நேரடியாகப் பெயர் சொல்லி ஃபிடல் ஒரு முட்டாள் என்பாள் ஒரு பெண்.  தணிக்கையில் அதை வெட்டவில்லை.  எனவே, கண்ணன் இந்த விஷயத்தை உள்ளே சொல்லி இருக்க வேண்டும்.

மேலும்,

இன்று corpus வேலையை முடித்து விட்டு கண நேர இளைப்பாறலின் போது நாட்டு நடப்பு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக உத்தமத் தமிழ் எழுத்தாளனின் ப்ளாகைத் திறந்த போது அதிர்ந்து போனேன்.  தமிழில் ஒரு எழுத்தாளன் என்றால் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?  தேவதேவனுக்கு விருது.  விருது வழங்குபவர் இளையராஜா.  இளையராஜாவை வரவழைக்க அவரோடு நட்பு.  சென்னை வரும் போது அவரோடு சந்திப்பு.  சிரிப்பு. கும்பிடு.  தேவதேவனைப் பற்றிய ஒரு மதிப்புரை நூல் எழுதி அதையும் வெளியிட வேண்டும்.  பகவானே!  ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை, பணியை, சேவையை ஒரே ஒரு எழுத்தாளன் செய்து கொண்டிருக்கிறான்.  என்னால் இதைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.  Corpus வெளியீட்டு நிகழ்வுக்கு ப்ரியங்கா சோப்ராவை அழைக்கலாமா என்றார் அராத்து.  ஆளை விடுங்கள் என்று தவிர்த்து விட்டேன்.  ஏஷியன் ஏஜில் எழுதுவதால் மும்பை சினிமா ஆட்கள் என்னை நேரடியாக அறிவர்.  ஃபோனிலும் தொடர்பு கொள்வர்.  நீங்கள் இன்று மும்பையில் இருந்தால் இன்றைய காக்டெயிலில் கலந்து கொள்ளுங்களேன் என்று கூட அடிக்கடி மெஸேஜ் வரும்.  ஆனால் என்னால் முடியாது.  எனக்குத் தொழில் எழுத்து மட்டுமே.  கூட்டம் கூட்டுவது அல்ல.  முடிந்தால் நீங்கள் கூட்டுங்கள்; நான் வந்து கலந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன்.  காரணம் என்ன தெரியுமா?  நான் இப்போது எக்ஸைல் மொழிபெயர்ப்பின் பிரதியில் உட்கார வேண்டும்.  ஷிவா அதிகம் வேலை வைக்க மாட்டார்.  இருந்தாலும்…

எதற்குச் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளன் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள வேண்டுமானால் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.  சினிமா விமர்சனம், அரசியல் விமர்சனம், இசை விமர்சனம், இந்திய வரலாற்றுப் பாடங்கள், மார்க்ஸீயம் எக்ஸிஸ்டென்ஷியலிஸம் பற்றிய கோனார் நோட்ஸ்கள், சினிமா வசனம், இலக்கியத் திறனாய்வு, தத்துவப் பாடங்கள் இதிலெல்லாம் எக்ஸ்பர்ட்டாக இருந்தால்தான் தமிழ்நாட்டில் எழுத்தாளனாகத் தாக்குப் பிடிக்க முடியும்.  அப்போதுதான் 100 காப்பி புத்தகம் விற்கும்.  நான் மலேஷியா போயிருந்த போது கெடா மாநிலத்தில் தொல்பொருள் ஆய்வகம் கண்டுபிடித்திருந்த பழைய சோழர் காலத்துக் கோவிலின் சிதிலங்கள் இருந்த இடத்துக்குச் சென்றிருந்தேன்.  இங்கே வந்த ஜெ. இதை பௌத்த கோவில் என்றார்; சில ஆதாரங்களையும் காண்பித்தார் என்றார் கூட வந்த பாலமுருகன்.  பயத்தில் எனக்கு ஒன்றுக்கே வந்து விட்டது.  தொல்பொருள் ஆராய்ச்சியிலுமா?  நம்மால் ஆகாது சாமி என்று ஓடி வந்து விட்டேன்.  ஒரு எழுத்தாளன் எதிலெல்லாம் எக்ஸ்பர்ட்டாக இருக்க வேண்டியிருக்கிறது பாருங்கள்!

வருஷாவருஷம் புத்தக விழாவின் போது ஒரு நாவலைக் கொண்டு வந்தால்தான் உங்களை ஞாபகம் வைத்திருப்பார்கள் என்றார் அராத்து.  ப. சிங்காரம்னா யாருன்னு கேக்குறான்; இவனுங்க ந்யாபகம் வச்சுக்கிட்டு இருந்தா என்னா, இல்லாட்டி என்னா என்று கேட்டேன்.  என்னுடைய இலக்கு வேறு நண்பர்களே…

கண்ணன், உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்.  அது என் நோக்கம் அல்ல.  நாம் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறோம்; எந்தச் சூழ்நிலையில் அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டவே இதை எழுதினேன்.  நான் ஜெ.யைக் கிண்டல் செய்வதற்காக மேற்கண்ட பத்தியை எழுதவில்லை.  இங்கே ஒரு எழுத்தாளன் literary activist ஆக இருக்க வேண்டியிருக்கிறது.  நானும் அதை வேறொரு தளத்தில் செய்து கொண்டிருக்கிறேன்.  எனவே மாளிகைகளில் அமர்ந்து கொண்டு எங்களை விமர்சிக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்.

charu.nivedita.india@gmail.com

 

 

 

 

 

Comments are closed.