ஒரு நற்செய்தி

சில மாதங்களாகவே சாருஆன்லைனில் அவ்வளவு அதிகமாக நான் எழுதுவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.  இது சம்பந்தமாக கோபக் கடிதங்கள் அவ்வப்போது எனக்கு வருவதுண்டு.  அராத்து, துரோகி போன்ற நண்பர்கள் கூட நேரில் இது பற்றி திட்டுவதுண்டு.  பதிலுக்கு சிரிப்பதோடு சரி.  நான் அமைதியாக இருக்கிறேன் என்றால் ராப்பகலாக வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று பொருள்.

இரண்டு தினங்களாக வாக்கிங் கூட போகாமல் – புயல் அடித்த தினங்களில் கூட வாக்கிங்கை நிறுத்தியதில்லை – கோணல் பக்கங்கள் நூலை ப்ரூஃப் ரீடிங் செய்து கொண்டிருந்தேன்.  என் நூல்களை மற்றவர்கள் ப்ரூஃப் ரீடிங் செய்வது சாத்தியப்படாது.  அந்நிய மொழிச் சொற்கள் அவ்வளவு அதிகமாக இருக்கும்.  அந்த நூலைப் படித்த போது ‘இதை ஒரு மனிதனால் எப்படி எழுத முடிந்தது?’ என்றே நான் ஆச்சரியப்பட்டேன்.  இப்படி எழுதுவதற்காக மன்னியுங்கள்.   10 ஆண்டுகளுக்கு முன் விகடன் இணையதளத்தில் எழுதிய கட்டுரைகள் அவை.  என்னுடைய ஆயுள் கால வாசிப்பு அனுபவத்தையும், பயண அனுபவத்தையும் அப்படியே சாறு பிழிந்து கொடுத்திருக்கிறேன்.  அதில் நீங்கள் பயணம் செய்ய உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது.  ஏன் என்றால் அவ்வளவு நூல்கள், திரைப்படங்கள், இடங்கள் பற்றி எழுதியிருக்கிறேன்.  சிங்கப்பூரிலிருந்து ஒரு மணி நேரம் படகில் போனால் வரும் Bintan தீவைப் பற்றி ஒரு கட்டுரை.  இப்படி ஏராளம் உள்ளது.

நேற்று என்னைச் சந்தித்துப் பேசுவதற்காகவே ஸாஹித்ய ப்ரவர்த்தக கோஆபரேடிவ் ஸொஸைட்டி என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தினர் கோட்டயத்திலிருந்து வந்திருந்தனர்.  மலையாளப் பதிப்பகம்.  எக்ஸைல், எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ஆகிய இரண்டு நூல்களூம் அந்தப் பதிப்பகத்திலிருந்து ஜனவரி முதல் வாரம் வெளி வருகிறது.  Pre paid ராயல்டி என்று கையோடு பணத்தைக் கொடுத்து விட்டார்கள்.  வேறு ஏதேனும் உங்கள் விருப்பம்? என்று கேட்டார்கள்.  எனக்குப் பணத்தின் மீது ஆசை கிடையாது.  இனி புத்தகம் உங்கள் சொத்து; வாசகர்களும் நீங்களும்தான் என்று சொல்லி விட்டேன்.  ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடும் போது ஒரு மாடல் ஒப்பந்தத்தைக் கொடுத்தார்கள்.  பார்த்தால் முல்க் ராஜ் ஆனந்த் 1948-இல் இந்தப் பதிப்பகத்தோடு போட்ட ஒப்பந்தம்.  1945-இல் தொடங்கப்பட்ட பதிப்பகம் இது.  இதுவரை 16,000 புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறார்கள்.

இப்போதுதான் இன்னொரு முக்கிய விஷயத்தைச் சொல்லப் போகிறேன்.  Morgue Keeper என்ற என் புத்தகம் Amazon kindle இல் வெளிவந்துள்ளது.  ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட என்னுடைய சிறுகதைகள் மற்றும் ஒரு பேட்டி.  டிஷானி தோஷி எடுத்த முக்கியமான பேட்டி அது.   தமிழிலிருந்து kindle க்குப் போகும் முதல் அல்லது இரண்டாவது புத்தகம் இது என்று நினைக்கிறேன்.  இதை எடிட் பண்ணுவதற்காக அதிக நாட்கள் செலவு செய்தேன்.  பிறகு காயத்ரி நூல் முழுவதையும் சிறப்பாக எடிட் செய்து கொடுத்தார். பிறகு கிண்டிலில் கொண்டு வரத் தேவையான டெக்னிகல் வேலைகளைச் செய்தவர்கள் ராஜேஷ் மற்றும் சரவண கணேஷ் (கொழந்த).  இதற்காக இவர்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல.  இதற்கு அடுத்து அட்டைப் படம் செய்து கொடுத்த நண்பர் சுப்ரமணியன்.  தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது இதைச் செய்து அனுப்பினார்.

இவ்வளவுக்குப் பிறகும் கிண்டிலில் வரும் சாத்தியம் இல்லாமல் இருந்தது.  ஏகப்பட்ட தொழில்நுட்பக் குழப்பங்கள்.  அதை இரவு பகல் பார்க்காமல் பல தினங்கள் பல மணி நேரம் செலவு செய்து முடித்துக் கொடுத்தவர் ஹாலிவுட் பாலா.  இவர் எனக்கு நேரடி நண்பர் கூட இல்லை.  ஒரு தமிழ் எழுத்தாளனுக்காகச் செய்திருக்கிறார்.  எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த விஷயத்தை செய்து முடித்த  இவர்கள் அனைவருக்கும் என் நெகிழ்ச்சியான நன்றி.   மொழிபெயர்ப்பாளர்கள் ப்ரீதம் சக்ரவர்த்தி, ஜெயக்குமார், ப்ரீத்தி வெங்கடேசன், ராஜேஷ், வைஷ்ணா ராய் ஆகியோருக்கும் என் நன்றி.

பின்வரும் லிங்க்ல் இருந்து அமேசான்.காம் மூலமாக புத்தகத்தை வாங்கலாம். விலை மலிவு தான்.  தமிழர் அல்லாத உங்கள் நண்பர்களுக்கும் நூலை அறிமுகம் செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.  ஸீரோ டிகிரியைத் தவிர என் எழுத்தை ஆங்கிலத்தில் படிக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு நல்ல அறிமுகம்.  என் எழுத்தின் பல்வேறுபட்ட பாணிகளை இதில் காணலாம்.

Comments are closed.