இமயம் (9)

தினசரிகள் படிப்பதில்லை.  தொலைக்காட்சியும் இல்லை.  காலையில் வாக்கிங் சென்று வருவதோடு வெளியுலகத் தொடர்புக்கு முற்றுப் புள்ளி.  அதுவும் மழை பெய்தால் அறையிலேயே எட்டுப் போடுவதோடு சரி. எட்டுப் போடுவது என்றால் என்ன என்று பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு எக்ஸைல் வேலையில் முழுமூச்சாக இருக்கிறேன்.  எக்ஸைலை திருத்தி எழுதும் வேலை இன்னும் முடியவில்லை.  ஆனால் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலை.  இதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.  காமரூப கதைகள் காலத்து களப்பணி அல்ல.  இது வேறு.  ஒரு உதாரணம்.  இமயமலைக்குப் போயும் மரங்களைப் பற்றித்தான் ஆய்வு செய்து கொண்டிருந்தேன்.  நாவலின் இடையே பெண்கள் காணாமல் போய் அந்த இடத்தை மரங்கள் பிடித்துக் கொள்கின்றன.  

இந்த நிலையில், நேற்றைக்கு முந்தின தினம் ஒரு ஃபோன்.  சார், ——– ரேடியோவிலிருந்து ———————- பேசுகிறேன்.  சுதந்திர தினத்துக்காக ஒரு பைட் வேணும்.  நேயர்களுக்கு என்ன செய்தி சொல்லுகிறீர்கள்? 

நான்: என்னது, சுதந்திர தினமா?  எப்போ?

ஆர்.ஜே. (அதிர்ச்சியுடன்)  சார்???  நாளைக்கு சுதந்திர தினம் சார்?  நேயர்களுக்கு சுதந்திர தினம் சம்பந்தமா ஏதாவது செய்து சொன்னீங்கன்னா ரெக்கார்ட் செஞ்சுக்குவோம்…

நான்: அறத்தையும், மதிப்பீடுகளையும் முழுசாகத் தொலைத்து விட்ட ஒரு சமூகத்துக்கு நான் என்ன சுதந்திர தின செய்தியைச் சொல்ல முடியும்?

ஆர்.ஜே.: சார், புரியற மாதிரி சொன்னீங்கன்னா யூஸ்ஃபுல்லா இருக்கும்.

நான்: அப்படியா?  தாராளமாகச் சொல்லலாம்.  சாய்ங்காலம் போன் பண்ணுங்க…

ஆர்.ஜே. ஓகே சார்.

மாலையில் ஏதேதோ தொலைபேசி அழைப்புகள் வந்தன.  தெரியாத எண் எதையும் எடுக்கவில்லை. 

எக்ஸைலும் இப்போது ஸீரோ டிகிரியைப் போலவே கடவுளுடன் ஒரு உரையாடலாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.  கடவுளோடு உரையாட ஒரு கருவி இசை.  ஒரு நாளில் பத்து மணி நேரத்துக்கு மேல் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.  எங்கள் தெருமுனையில் ஆடி வெள்ளிக்கு அடித்துப் பாடிக் கொண்டிருக்கும் எல்லார் ஈஸ்வரி அல்ல.  இது வேறு வித இசை.  தெய்வீக இசை.  இந்த இசையைக் கேட்டால் எப்படி ஒரு மனிதனுக்குக் கோபம் வரும்?  பேராசை வரும்?  பணத்தின் மீது பற்று வரும்? 

பாங்கோங் ஏரியில் இரண்டு தினங்கள் இருந்தோம் என்று எழுதினேன் அல்லவா?  அந்த ஏரியின் எதிரில் அமர்ந்து இருக்கும் போதும் ஏரிக் கரையில் இருந்த கூடாரத்தில் தங்கி இருந்த போதும் ஏற்பட்ட அற்புதமான மனநிலை இந்த இசையைக் கேட்கும் போதும் என்னிடம் வந்து தங்கிக் கொள்கிறது.

இமயமலைக்குச் செல்வதற்கு முன் ஷங்கர் ராமசுப்ரமணியன் பயணத்துக்கு வாழ்த்து சொல்லி, நான் கொடுக்கும் இசை இணைப்புகள் விசேஷமாக இருப்பதாக எழுதியிருந்தார்.  அப்போதுதான் நான் கொடுக்கும் இணைப்புகளைக் கேட்டு ரசிப்பதற்கும் ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்றே எனக்குத் தெரிந்தது.  சென்னை வாசகர் வட்ட நண்பர்கள் அதையெல்லாம் கேட்கிறார்களா என்று எனக்கு இதுவரை தகவல் வந்ததில்லை. 

உங்களுக்கு உள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது நதி என்று ஒரு பாடல் இந்த இணைப்பில் உண்டு.  அவசியம் கேளுங்கள். இந்த இணைப்பு வேலை செய்யவில்லை எனில் நீங்களே Yiruma என்று போட்டுப் பாருங்கள்.  தென் கொரிய பியானோ கலைஞர். 

http://www.youtube.com/watch?v=1y3dt8_OcE4

http://www.youtube.com/watch?v=oo8NPFIf1Mg

Comments are closed.