மைய நீரோட்டமும் மாற்றுச் சிந்தனையும்…

சாரு,

நெடு நாட்களுக்கு முன்பு உங்களுக்கு மின் கடிதம் எழுதவேண்டுமென்ற ஆசை .ஏதோ ஒரு காரணத்தால் அது தள்ளிப் போய்க்கொண்டு வந்தது .திடீரென்று ஒரு நாள் நீங்கள் உங்களின் சில கதைகளைப் படிக்காவிடில் தொடர்பு கொள்ளவேண்டாம் எனக் கூறி விட்டீர்கள் .ஆகையால் அதை அப்படியே விட்டுவிட்டேன் .ஏனெனில் நேரம் ஒழிய மாட்டேன் என்கிறது .நாவல் படிப்பதை சில மாதங்களாக நிறுத்திவிட்டேன் .உங்களின் கட்டுரைகளை ,மற்ற சிறந்த உலகச் சிறுகதைகள் மட்டும் படிப்பேன். மீதி நேரம் இசைக்கு அளிக்கிறேன். (கிட்டார் , ப்ளுஸ் ஹார்மானிக்கா). அதனால் என்ன ,கட்டுரை இலக்கியமும் ஒரு இலக்கியம் தானே, கட்டுரை இலக்கியம் தொடர்ந்து வளர நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சி நல்ல தொடக்கம் .இணையத்தில் உங்களின் கட்டுரை மட்டும் தான் கட்டுரை இலக்கியம் போன்றது வடிவ, கருத்து அளவைப் பொறுத்து. மற்றவை அனைத்தும் உளறல்கள் மற்றும் உதிரிகள். போதும் ஒரு எழுத்தாளரை அணுகுவதற்கு என நினைத்து உங்களிடம் வருகிறேன் .

உங்களின் எழுத்தைப் பற்றி நிறைய பேச நிறைய படிக்க வேண்டும் .ஆகையால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசுகிறேன். இப்போது சில கேள்விகளுக்கு விடை வேண்டும். இதைச் சொல்லும் சரியான ஆளுமை நீங்கள் தான் எனவே உங்களிடம் கேட்கிறேன். சில பேர் நினைப்பார்கள் .இவன் ஒரு இடத்தில் பொருந்த முடியவில்லை. எனவே எதிரியின் முகாமிற்குச் செல்கிறான் என்று. அதைப் பொருட்படுத்தப் போவதில்லை .

 

சமீபத்தில் ஒரு பிரபலமான எழுத்தாளரின் (நீங்கள் விரும்பினால் அவரின் பெயரை வெளியிட்டுக்கொள்ளலாம்) வலைத்தளத்தில் புதியவர்களின் சிறுகதைகள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன .நானும் சில கதைகள் அனுப்பினேன். நிராகரிக்கப் பட்டது. அது சம்பந்தமாக நான் ஒன்றும் மன உளைச்சலில் இல்லை. ஆனால் அதற்கு அவர் தரும் காரணங்கள் என்னை குழப்பின .எனக்கு தற்கால தமிழ் எழுத்துலகம் புதிது .நான் என்னுடைய வாசிப்பின் பெரும்பாதி ஒ ஹென்றி, மாபசன்ட், ஹெமிங்க்வே என்று கழித்துவிட்டேன் .அதுவும் ஹெமிங்க்வே என்னுடைய முதல் இலக்கிய ஹீரோ . அதற்குப் பிறகு தமிழ் இலக்கியம் பக்கம் தலை காட்டினேன் . என்னைக் கவர்ந்த முதல் எழுத்தாளர் சுந்தர ராமசாமி .அப்புறம் கொஞ்சம் சுஜாதா .கொஞ்சம் தமிழின் முக்கியமான சிறுகதைகளைப் படித்துவிட்டு ஒரு கதையை எழுதி அவருக்கு அனுப்பினேன் .அவர் நிராகரித்தார் .மேலும் ஒரு கதையை அனுப்பினேன் . அதையும் நிராகரித்தார். மூன்றாவதாக ஒரு கதையை அனுப்பினேன் .அதையும் நிராகரித்தார். அப்புறம் சுதாரித்துக் கொண்டேன் .அவரின் விமர்சனப் பார்வையில் ஒரு பின்னடைவு இருக்கிறதென்று .

 

இத்துடன் நான் எழுதிய கதையை இணைத்துள்ளேன் .உங்களின் கருத்தை வெளியிடவும் .

 

ஆனால் அவர் இதை வார இதழ்கள் தான் வெளியிடும் .இலக்கியத் தரமில்லை என்றார். அவர் எப்போதும் நுட்பமான செய்திகளையே இலக்கியம் என்கிறார் .அதிலும் அவர் நுட்பம் என்பதை தப்பான மதிப்பீடுகள் வைத்து அளவிடுகிறார் .இலக்கியத்தில் சமூக நோக்கு வேண்டாமா?வெளிப்படையான கருத்துக்கள் இலக்கியத்தில் இருக்கக் கூடாதா ?அட இலக்கியம் விட்டு விடுவோம், தமிழில் எழுத்தே தேய்ந்து ஓய்ந்து விட்டது .தமிழ் இலக்கியம் அழிந்து போக இருக்கும் தருவாயில் இந்த இறுக்கம் தேவையா ?ஒரு சமயம் அராத்துவின் எழுத்தே போதும் எனத் தோன்றுகிறது , இந்தப் போலிகளைப் பார்க்கும் போது . அவர் வெளியிட்டிருக்கும் சிறுகதைகளுக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் ஏதோ பின்புலம் உள்ளதோ என நினைக்கத் தோன்றுகிறது .

 

நிறைய பேச ,விவாதிக்க இருக்கிறது , மற்றவை உங்களின் பதில் பார்த்த பின்பு .

 

நன்றி

 

ஸ்ரீனி

அன்புள்ள ஸ்ரீனி,

பொதுவான ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.  மைய நீரோட்டம் என்ற ஒரு வெளி இருக்கிறது.  வாரப்பத்திரிகைகள், அரசியல், வர்த்தக சினிமா, பள்ளிக்கூடம், கோவில், மாமனார், மாமியார், மைத்துனர், பக்கத்து வீட்டுக்காரர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், கல்லூரி, லயன்ஸ் க்ளப், டாக்டர் இதுகளெல்லாம் மைய நீரோட்டம் சார்ந்தவை.  இதற்கு மாற்றாக ஒரு வெளி உள்ளது.  அதுதான் இலக்கியம், சீரியஸ் சினிமா, தத்துவம், கோட்பாடு, கலாச்சாரம் போன்ற விஷயங்கள்.  ஜெயமோகன், ஞாநி, மனுஷ்ய புத்திரன், எஸ். ராமகிருஷ்ணன், அடியேன் போன்றவர்கள் அனைவரும் இந்த மாற்று வெளியைச் சேர்ந்தவர்கள். எங்களுக்குள் ஆயிரம் அடிதடிகள் இருக்கும்.  வெட்டுக்குத்து இருக்கும்.  ஆனாலும் நாங்கள் யாவரும் மைய நீரோட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  இந்த மாற்று வெளியைப் பொறுத்தவரை எனக்கும் ஞாநிக்கும் நூற்றுக்கு நூறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருக்கும்.  ஆனால் வர்த்தக சினிமா, வாரப் பத்திரிகை, தொலைக்காட்சி, காமன்மேன் உலகம் போன்ற விஷயங்களில் ஞாநிக்கும் எனக்கும் நூற்றுக்கு நூறு ஒத்துப் போகும்.  சில கருத்தரங்குகளில் என்னையும் ஞாநியையும் அழைக்கும் போது ஞாநி முதலில் பேசுவார்.  சுமார் அரை மணி நேரம்.  அநேகமாக நான் பேச நினைத்திருந்த விஷயங்கள் அனைத்தையும் பேசி முடித்திருப்பார்.  அவர்கள் எங்களுக்குப் போர்த்திய பொன்னாடையைக் கூட விட்டு வைத்திருக்க மாட்டார்.  நான் பேச நினைத்த அனைத்தையும் ஞாநி பேசி விட்டார் என்று சொல்லி விட்டு அமர்ந்து விடுவேன்.  ஆனால் இதுவே மாற்றுக் கலாச்சார வெளி என்றால் நானும் ஞாநியும் எதிரும் புதிரும்தான்.  இங்கே ஞாநி என்ற இடத்தில் நீங்கள் ஜெ.மோ., மனுஷ்ய புத்திரன் என்று யார் பெயரையும் போட்டுக் கொள்ளலாம்.  பொருந்தும்.

பொதுவாக எனக்கு அறிமுகம் இல்லாதவர்களால் அனுப்பப்படும் கதை, கவிதை எதையும் நான் படிப்பதில்லை.  இல்லை; நான் சரியாகச் சொல்லவில்லை.  நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர்களின் எழுத்தைத் தவிர வேறு எதையுமே நான் படிப்பதில்லை.  ஷோபா சக்தியின் சிறுகதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவை சர்வதேசத் தரம் வாய்ந்தவை என்பதால். ஆனால் அவரது நாவல்கள் பிடிக்காது.  சமீபத்தில் வெளியான அவரது கச்சாமி என்ற சிறுகதையை அனுப்பி வைத்திருந்தார்.  அனுப்பிய அடுத்த நிமிடம் படித்தேன்.   ஆனால் அந்தக் கதையைப் பற்றி நீண்ட ஒரு விவாதம் செய்ய வேண்டும்.  நேரமில்லாததால் இணைப்பு கொடுக்கவில்லை.  அந்தக் கதையில் ஒரு ஐரோப்பிய ரேஸிஸம் இருந்தது.  வெள்ளைத் திமிர் என்று சொல்வார்கள்.  அது அந்தக் கதையில் வெளிப்படையாக இருந்தது.  அதோடு, சிங்களர்கள் மீதான வெறுப்பும் கொடுமையாக இருந்தது. ஹிட்லர் யூதர்களையெல்லாம் அடியோடு ஒழித்து விட வேண்டும் என்று நினைத்தது போல்  சிங்களர்களையெல்லாம் இந்த உலகை விட்டுத் தூக்கி விட வேண்டும் என்ற மாதிரியான இனவாதம் அந்தக் கதையில் ஒளிந்துள்ளது.  அப்படிப் பார்த்தால் முஸ்லீம்களை ஒழித்து விட வேண்டும் என்று ஒரு கூட்டம் துடிக்கிறது; யூதர்களே இந்த உலகில் இருக்கக் கூடாது என்று ஒரு கூட்டம் சொல்கிறது; பௌத்தர்களா அடித்துத் துரத்துங்கள் என்று பெரும் கூட்டம் களத்தில் இறங்குகிறது;  இந்துக்களுக்கு எதிரிகளே தேவையில்லை…  இந்துக்களே போதும்…  இப்படியே போனால் இந்த உலகில் மனித இனமே இல்லாமல் போய் விடுமே…

சரி, நான் பிரதான விஷயத்துக்கு வருகிறேன்.  அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் பற்றி அராத்து என்னிடம் ஒரு வார்த்தை சொன்னதில்லை.  எனக்கே தெரிய வந்து படித்துப் பார்த்து திட்டினேன், “என்னிடம் ஏன் இதுநாள் வரை சொல்லவில்லை?” என்று.  அந்தக் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன.  ரொம்பவே பிடித்திருந்தன.  அந்த நம்பிக்கையால், ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று திட்டியதால், அவர் மூன்று மாதங்களுக்கு முன்னால் ஒரு சிறுகதையை அனுப்பியிருந்தார்.  நீங்கள் படித்துச் சொன்ன பிறகுதான் பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.  எனக்கு நேரம் இல்லை.  இன்னொரு காரணம், கதையில் நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தன.  மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் அந்தக் கதை குமுதத்தில் வந்துள்ளது என்றார்.  ஆனால் குமுதத்தில்  அந்தக் கதையின் மூன்றில் ஒரு பகுதிதான் சுருக்கப்பட்டு வந்திருந்தது.  வாரப்பத்திரிகையில் அவ்வளவுதான் இடம் இருக்கும். ”ஏன், உயிர்மைக்கு அனுப்பி இருக்கலாமே?” என்றேன்.  இலக்கிய அடையாளம் எனக்குப் பிடிக்காது என்றார்.  என்னைப் பார்த்து இதைக் கூட கற்றுக் கொள்ளவில்லையானால் அப்புறம் எப்படி?

அதற்குப் பிறகுதான் அந்தக் கதையை – முழுமையாக – படித்துப் பார்த்தேன்.  சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி கதை போல் இருந்தது.  இன்றைய இந்திய இளைய சமூகத்தின் போக்கை, அவர்களின் வாழ்க்கையை அப்படியே, உள்ளது உள்ளபடியே காண்பிக்கும் கதை.  இன்றைய இளைஞனின் angst இந்தக் கதையைப் போல் சமீபத்தில் இவ்வளவு காத்திரமாக வேறு எதிலும் வெளிப்பட்டதில்லை.

இப்படிப்பட்ட நான் – என் நெருங்கிய நண்பரின் கதையைப் படிப்பதற்கே மூன்று மாதம் எடுத்துக் கொண்ட நான் உங்கள் கதையை உடனே படித்து விட்டேன்.  காரணம், ஜெயமோகன் நிராகரித்த கதை என்பதால்.  அதற்கும் காரணம், எனக்குப் பிடித்த எதுவுமே ஜெயமோகனுக்குப் பிடிக்காது.  இந்த உலகத்திலேயே எனக்குப் பிடித்த எழுத்தாளர் மரியோ பர்கஸ் யோசா.  ஆனால் யோசாவை ஜெ.வுக்குப் பிடிக்காது.  இப்போது அந்த இடத்தில் நான் தருண் தேஜ்பாலை வைக்கிறேன்.  தருணையும் ஜெ.வுக்குப் பிடிக்காது என்பது எனக்கு உறுதி, அவர் ஒருவேளை படிக்க நேர்ந்தால்.

நீங்கள் எழுதியதும் நான் இந்த ரீதியில் தான் நினைத்துத் தொலைத்து விட்டேன்.  ஆனால் நாங்கள் முரண்படுவது masters பற்றிய விஷயங்களில், மாற்றுக் கலாச்சார விஷயங்களில் என்பதை மறந்து விட்டேன்.  மற்றபடி வாராந்தரி ராணி, ஆனந்த விகடன், அமுதசுரபி, கருணாநிதி, தொலைக்காட்சி சீரியல் போன்ற விஷயங்களில் எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்பது மறந்து தொலைத்து விட்டேன்.  உங்கள் கதை விகடனில் அல்லது அமுதசுரபியில்தான் வெளியிடப்படும் தகுதி கொண்டதாக இருக்கிறது.

மாற்றம் என்ற உங்கள் கதையைப் படித்ததற்காகவே நான் வெட்கப்படுகிறேன்.  அவமானப்படுகிறேன்.  என்னுடைய வாழ்வில் இது போன்ற கதைகளுக்கு வாசிப்பதற்குக் கூட இடம் இல்லை.  ஆனால் தவறு உங்கள் மீது அல்ல; தவறு முழுமையும் என்னுடையதுதான். உங்கள் கடிதத்தின் வாசகங்களால் நான் ஏமாந்து போனேன்.  நீங்கள் ஒரு சாதாரணமான வர்த்தகப் பத்திரிகைக் கதையை எழுதியிருந்தால் நான் இத்தனை ஆவேசப்பட்டிருக்க மாட்டேன்.  உங்கள் கதையில் விஷம் உள்ளது.  ஆனால் நீங்கள் வெகுளி.  என்ன விஷம் என்று உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.  புகைப்பிடித்தால் புற்று நோய் வரும் என்கிறது உங்கள் கதை.  இதைத்தானே டாக்டர் ராமதாஸ் பல காலமாகச் சொல்லி வருகிறார்?  ரஜினிகாந்த்தின் புகைப்பழக்கத்தையே (சினிமாவில்) மாற்றியவர் ஆயிற்றே டாக்டர் ராமதாஸ்? இதைச் சொல்ல நீங்கள் வேறு ஏன் மெனக்கெட்டு ஒரு கதை எழுத வேண்டும்?

உங்கள் கதையின் விஷம் என்ன என்று இப்போது சொல்கிறேன்.  இந்தியாவில் சரியான சாலைகள் இல்லை.  அதன் காரணமாக, எத்தனையோ ஆயிரக் கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்.  யாருமே ஹெல்மட் போடுவதில்லை.  அதனால் ஆயிரக் கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்.  தினம்தோறும்.  இதையெல்லாம் தடுக்கவோ, ஹெல்மட் போடாதவர்களைத் தண்டிக்கவோ அரசாங்கத்துக்குத் துப்பு இல்லை.  மேலும், வாகனம் ஓட்டத் தெரியாதவர்களுக்கெல்லாம் லைசன்ஸ் கொடுக்கப்படுகிறது.  சாலை விபத்தினால் லட்சக் கணக்கான மக்கள் செத்து மடிகிறார்கள்.  உலகில் எந்த நாட்டிலும் இவ்வளவு சாலை விபத்துகள் நடப்பதில்லை.  இரவு ஒன்பது மணிக்கு மேல் வாகனம் ஓட்டுபவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேல் குடித்து விட்டு ஓட்டுபவர்கள்தான்.  மேலும், இந்தியா முழுவதும் (குஜராத் தவிர) குடிக்கத் தண்ணீர் கிடையாது.  சுகாதார வசதி படு மோசம்.  காற்று முழுவதும் நச்சுக் காற்று.   இப்படி, குடிமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத் தவறிய அரசாங்கம் மக்களை ஏமாற்றுவதற்காக சிகரெட் குடித்தால் புற்றுநோய் வருகிறது என்று ஆயிரம் முறை சொல்லி மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறது.  இது வடிகட்டின ஏமாற்று வேலை.  சிகரட் குடிப்பதால் புற்றுநோய் வருவது உண்மைதான்.  ஆனால் இங்கே உள்ள நச்சுக் காற்றை சுவாசிப்பதால் மக்களின் ஆயுளே 50 என்று அல்லவா ஆகி விட்டது?

சரி, நான் கேட்கிறேன்.  40 வயதைத் தாண்டிய ஒருவர் சர்க்கரை வியாதி, கொழுப்புப் பிரச்சினை, ரத்த அழுத்தம் என்ற மூன்றும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எத்தனை பேரை காட்ட முடியும் உங்களால்?  நூற்றுக்கு ஐந்து பேர் இருப்பார்களா?  ஆனால் கிழக்காசிய நாடுகளான தாய்லாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சினை இல்லாமல் மனிதர்கள் 95 வயது வரை சிகரெட் குடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும் வாழ்கிறார்களே ஏன்?  எப்படி?  காரணம், இந்தியர்கள் ஒரு மனிதனுக்குத் தேவையான அளவில் ஆறு அல்லது ஏழு மடங்கு சர்க்கரையை வாழ்நாள் முழுதும் உட்கொள்கிறான். அதேபோல் தான் உப்பும். மேலும், அவர்கள் சாப்பிடும் எண்ணைய் மன்னிக்கவே முடியாத கொடுமை.  இப்படி, மிக மிக மோசமான முறையில் தங்கள் உடலை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் இந்தியர்கள் தங்கள் உணவுப் பழக்கத்தினாலும் குடிமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிக்காத அரசாங்கத்தின் பொறுப்பின்மையாலும் 50 வயதிலேயே ஹார்ட் அட்டாக் வந்து செத்துத் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி யாருக்குமே கவலை இல்லை.  அதனால்தான் புற்றுநோய் புற்றுநோய் என்று பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லோரும் தான் சிகரெட் குடிக்கிறார்கள்.  அவர்கள் எல்லோருமா புற்றுநோய் வந்து சாகிறார்கள்?

குடித்தால் உடல்நலத்துக்குக் கேடு என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அவ்வளவு முட்டாள்தனமானதுதான் உங்கள் கதை சொல்லும் கருத்தும்.  எனக்குக் குடிக்கும் பழக்கம் உண்டு என்பது  ஊருக்கே தெரியும்.  ஆனால் இமயமலையில் ஆக்ஸிஜன் மிகவும் குறைவாக இருந்த நிலையில் உடல்/மன ரீதியாக ஆரோக்கியமாக இருந்தவர்களில் முதலில் வந்தது  நான்.  அதற்கு அடுத்தது  பழனிவேல்.  பழனிவேல்  வயது 26.  எனக்கு 60.  இது பற்றிப் பிறகு விரிவாக எழுதுவேன்.

சிகரெட் குடித்தால் புற்றுநோய் வரும் என்றால் இந்தியர்கள் அபாயகரமாக எடுத்துக் கொள்ளும் சீனி, எண்ணெய், உப்பு ஆகிய மூன்றினாலும் அவர்கள் 40 வயதிலேயே ஆண்மையை இழந்து 50 வயதில் மாரடைப்பு வந்து செத்துப் போகிறார்கள்.  ஆண்மை ஏன் தொலகிறது என்றால் மேற்கண்ட வியாதிகளுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகள்.

சிகரெட், மது என்று பஜனை பண்ணுகிறீர்களே?  லே (லடாக்) என்ற ஊரில் நூற்றுக் கணக்கான இஸ்ரேலியர்களைப் பார்த்தேன்.  ஆயிரக் கணக்கில் என்றுதான் சொல்ல வேண்டும்.  அந்த ஊரில் லோக்கல் மனிதர்களை விட இஸ்ரேலியர்களே அதிகம்.  ஒவ்வொருத்தனும் 70, 80 வயதில் 25 வயது இளைஞனைப் போல் துள்ளிக் குதித்துக் கொண்டு மது அருந்திக் கொண்டும் கஞ்சா புகைத்துக் கொண்டும் கிடந்ததை என் கண்ணால் பார்த்தேன்.

ராமேஸ்வரத்தில் 80 வயது நீச்சல் காளி ஐந்து நிமிடத்துக்கு ஒரு பீடி புகைக்கிறார்.  பத்து வருடம் முன்னால் வரை ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் கடலில் நீஞ்சியே போய்க் கொண்டிருந்தார்.  அதனால்தான் அந்தப் பெயர் அவருக்கு.

பெண்கள் மாத விலக்கு தினங்களில் அணிகிறார்களே விஸ்பர், அது மக்கி அழிவதற்கு 800 ஆண்டுகள் ஆகும்.  எத்தனை மில்லியன் பெண்கள் அதை அணிகிறார்கள்?  எத்தனை கோடி ஆண்டுகள் ஆகும் அவை அழிவதற்கு?  இந்த பூமியே அதனால் நச்சாகிக் கொண்டிருக்கிறது.  நம் பழைய காலத்துப் பெண்கள் துணியைப் பயன்படுத்தினார்கள்.  அதையே துவைத்து மறுபடியும் பயன்படுத்தினார்கள்.  அதுதான் பூமிக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியம் என்று இப்போது கண்டு பிடித்திருக்கிறார்கள்.  அரவிந்தர் ஆசிரமத்தில் அந்தத் துணி விற்பனைக்கு உள்ளது.  அந்தத் துணியைத் துவைத்துத் துவைத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம்.  ஆசிரமவாசியிடம் ஒரு பெண் கேட்டார்.  வீட்டில் ஆண்களுக்குத் தெரியாமல் அதை எங்கே உலர்த்துவது என்று?

ஆசிரமவாசிக்கும் எனக்குமே புரியவில்லை… ஏன் ஆண்களுக்குத் தெரியக் கூடாது?  ஆண்களின் அண்டர்வேரை அவர்கள் எங்கே உலர்த்துகிறார்கள்?

ஸ்ரீனி, வருந்தாதீர்கள்.  உங்கள் கதை அமுதசுரபியில் வெளியாகும் தகுதி படைத்தது.  இப்படியே ஒரு இருபது ஆண்டுகள் எழுதினால் உங்களுக்குக் கலைமாமணி விருது கூட கிடைக்கலாம்.

ஜெயமோகன் மீது எனக்குத் திடீரென்று மதிப்பு கூடுகிறது.

இவ்வளவு எழுதியிருப்பதால் உங்கள் கதையையும் இதோடு பிரசுரம் செய்கிறேன்.  இல்லாவிட்டால் நான் என்ன சொல்கிறேன் என்று வாசகர்களுக்குப் புரியாது.

இனிவருவது ஸ்ரீனிவாசனின் சிறுகதை

 

மாற்றம்

ஸ்ரீனிவாசன்

 

அடையாறிலுள்ள அந்த மருத்துவமனை வளாகத்தில் நானும் வினோத்தும் நுழையும் போது மணி பகல் பதினொன்றைத் தாண்டி இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் அங்கிருந்த மரங்கள் தரும் நிழல் கூட  நோயாளிக்கு ஒரு விதமான சிகிச்சை போலிருந்தது. ஏற்கனவே நாங்கள் சில முறை வந்திருந்ததால் எங்களுக்கு அந்த சூழ்நிலை பரிச்சயமாக இருந்தது. இன்று அந்த மாற்றம் நிகழும் அல்லது நிகழ்த்தியே விடுவது என தீர்மானித்திருந்தேன் .  கைப்பேசியை எடுத்து சிவாவை அழைத்தேன் .

“சிவா, நாங்க வந்தாச்சு, எந்த ப்ளாக்?” “…………………”

“எப்ப மாத்தினாங்க?” “…………………”

“சரி வந்திட்டிருக்கோம்”.

அவன் சொன்ன பிரிவின் வரவேற்பறைக்கு வந்து சேர்ந்தோம், அவனே அங்கு வந்து எங்களை அழைத்துச் சென்றான் .அந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்ததும் சிவாவின் அம்மா எதிரே வந்தாள். என்னைக் கண்டதும் என் கையைப் பற்றி அழ ஆரம்பித்தாள். எனக்கே சிவாவின் அப்பாவின் நிலையைப் பார்த்ததும் ஒரு மாதிரியாக இருந்தது. வேறு ஒரு மனிதராக உருமாறிக் கொண்டிருந்தார். தலை முடி, புருவத்திலுள்ள மயிர்கள் கொட்ட ஆரம்பித்திருந்தன .ஏற்கனவே ஒடிசலான தேகம் இன்னும் கொஞ்சம் உள்வாங்கி இருந்தது .

“அங்கிள்,எப்டி இருக்கீங்க?”

“என்னத்த சொல்ல, எண்ணிக்கிட்டு இருக்கேன் , இன்னும் எத்தன நாளைக்கு இந்த கொடுமையோ?”.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல அங்கிள், சீக்கிரம் சரியாயிடுவீங்க. ட்ரீட்மென்ட் நடக்குறப்ப கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அப்புறம் எல்லாம் பழைய படிக்கு வந்துரும்”.

அவரிடம் பதில் இல்லை. பேச்சை மாற்ற முயற்சித்தேன் .

“அங்கிள் நீங்க சொன்ன மாதிரியே இந்தியாவும் நியூசிலாந்தும் தான் ஃபைனல்ஸ்”.

“ஆமா, நானும் சிவாவும் நேத்து இங்க ஹால்ல இருக்குற டீவில மேட்ச் பாத்தோம்”.

மேற்கொண்டு சிறிது நேரம் உரையாடிவிட்டு அடுத்த வாரம் வருகிறோம் என்று சொல்லி விடைபெற்றோம். சிவா எங்களுடன் ரிசெப்ஷன் வரை வந்தான்.

“சிவா, இன்னும் எத்தன வாரம் பாக்கி இருக்கு?”, வினோத் கேட்டான்.

“இன்னும் நாலு வாரம் இருக்கு, இதுக்கே அவருக்குத் தாங்க முடில. கீமோதெரபி பண்ணா இதெல்லாம் அனுபவிக்க வேண்டிருக்கு, என்ன செய்ய”.

“ஆமா, ஆனா பின்னாடி முடியெல்லாம் வளந்துரும் சிவா” என்றேன்.

“அவருக்கு எங்கள கஷ்டப் படுத்தறோம்னு தான் கவலை, அம்மா ரொம்ப வருஷமா சொல்லிப் பாத்தாங்க ,அவர் நிப்பாட்டல ,அதான் இப்ப அம்பது வயசுல இப்படி அனுபவிக்க வேண்டிருக்கேன்னு குற்ற உணர்ச்சி”.

இதற்குள் அவனுடைய கைப்பேசி அழைத்தது . எந்த உதவியாக இருந்தாலும் அழைக்கவும் என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்றோம்.

அந்த கட்டிடப் பிரிவின் முகப்பில் ஒரு சிலை இருந்தது.

“கோபி ,அது யாரோட சிலை?” வினோத் கேட்டான் .

 

“அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அவங்க தான் இந்த ஹாஸ்பிட்டல   ஆரம்பிச்சாங்க” என்றேன் .

“வெரி நோபிள் சர்விஸ், எவ்ளோ பேர் இங்க ட்ரீட்மென்ட் எடுக்கறாங்க, உண்மைலேயே பெரிய விஷயம் இது”.

“ஆமா, ஆந்த்ரா ,நார்த் சைடுலேர்ந்து கூட நெறைய பேர் இங்க வந்து ட்ரீட்மென்ட் எடுக்கறாங்க, ஆனா என்ன செய்ய இந்த வியாதி கொடூரமானது, இப்படி காச்சல், சளி மாதிரி வருது இப்ப”.

அப்போது ஒரு பத்து வயதுள்ள சிறுவன் அவன் அம்மாவுடன் எங்களைக் கடந்து சென்றான். அவனுக்கு மொட்டை அடித்திருந்தார்கள். புருவம் முழுவதும் கொட்டியிருந்தது. தொளதொள என்றிருந்த சட்டை அவன் சிகிச்சைக்கு அப்புறம் தான் மெலிந்து விட்டான் என்றது.

“கோபி, அந்த பயனப் பாத்தியா?” என்றான் வினோத்.

“ம், கீமோதெரபி போல”.

“அதில்ல விஷயம், இந்த வயசுல போய் வந்திருக்கு பாரு”.

“பாவம் தான் , என்ன பண்றது, நம்ம சாப்டுற சாப்பாடு, பிளாஸ்டிக்னு ஏகப்பட்ட காரணம் சொல்றாங்க”.

“ஆமா நானும் படிச்சிருக்கேன்”.

“ஆனா இந்த வியாதியையும் தாண்டி நெறைய பேர் தன்னம்பிக்கையோட இருக்காங்க , நம்ம உள்ள ஒரு தாத்தாவப் பாத்தோமே, அவரும் ஒரு சர்வைவர் தான், அவர்ட்ட போன தடவ வந்தப்ப பேசினேன் .அப்பத்தான் இங்க நெறைய சர்வைவர்ஸ் அவங்களே வாலண்டியரா வந்து சேவை செய்யறாங்கனு சொன்னாரு, நா ஒரு முன்னூறு ரூபா டொனேஷன் கொடுத்தேன் ,அவர் உங்கள மாதிரி இளைஞர்கள் நெறைய சர்வீஸ் பண்ணலாம்னு சொன்னாரு”

 

“ரொம்ப பெரிய விஷயம்ல, நம்மளும் ஏதாவது செய்யனும், கோபி ” என்றபடியே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“உன்னால நெறைய விஷயம் செய்ய முடியும், ஆனா அதுக்கு உன்னால இயலாது”.

“ஏன்?”

“ஊருக்கு உபதேசம் பண்றதுக்கு முன்னாடி நம்ம ஒழுங்கா இருக்கனும். இந்தக் கொளந்தைங்க தான் எந்தத் தப்பும் செய்யாம இந்த வேதனைய  அனுபவிக்கிறாங்க, படிச்சவங்க கூட இதோட கொடூரம் தெரியாம இன்ஸ்டால்மெண்ட்ல இந்த வியாதிய வாங்கிட்டு இருக்காங்க, உன்ன மாதிரி”.

அவனிடம் ஒரு கனத்த மௌனம். இது தான் சந்தர்ப்பம் என மீண்டும் ஆரம்பித்தேன் .

“வினோத், உங்க அப்பா ஜெயகாந்தன் விசிறி , நீ படிப்பியா ?

“இல்ல” .

“அவர் ஹிண்டுல கிராஸ்வேர்ட் போடுவாரு, நீ ?

இல்லையென்று தலையாட்டினான் .

“பின்ன அவர்ட்ட இருந்து இந்தப் பழக்கத்த மட்டும் எடுத்துக்கிட்ட?”

அவனிடம் பதிலில்லை.

வினோத் புகையை சாவகாசமாக உள்ளிழுத்துக் கொண்டிருந்தான்.

“இன்னிக்கு நம்ம சிவாவோட அப்பாவப் பாத்தியா?இதுதான் மிஞ்சும் கடைசில”

“…………..”

“சரி, வா போகலாம். இதுக்கு மேல நான் எதுவும் சொல்லப் போறதில்ல, நீ கேக்கப் போறதும் இல்ல”.

 

“இங்கயே இரு நான் பைக் எடுத்திக்கிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் . ஒரு நப்பாசையில் கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்தேன் .அவன் அதைக் கீழே போடவில்லை .எந்த சலனமுமின்றி புகைத்துக் கொண்டிருந்தான் .

நான் பைக்கை அவனருகில் கொண்டு சென்ற போது தான் அவன்  சிகரெட்டை அணைத்தான். அப்போது தான் அதை எதேச்சையாக கவனித்தேன் .அவனுடைய மற்றொரு கை அவன் காலையில் வாங்கிய ஒரு முழு பாக்கெட் சிகரெட்டை நசுக்கிக் கொண்டிருந்தது. அதை அப்படியே பக்கத்திலிருந்த  குப்பைத் தொட்டியில் எறிந்தான் .

பைக்கில் உக்காரும் போது சொன்னான்

“கோபி, நாளைக்கு உன்னோட கேமராவ எடுத்துகிட்டு வா , நாம அடுத்து  ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கப் போறோம். அதோட டைட்டில் “புகை”.

Comments are closed.