ஹெரால்ட் ப்ளூம், ஜெயமோகன், செவ்வியல் இலக்கியம், பின்நவீனத்துவம்…

20.4.2017

வெள்ளைக்காரன் காலத்துல நாடு எப்படி இருந்துது தெரியுமா என்று சில பெரிசுகள் அங்கலாய்ப்பதை என் சிறு வயதில் கேட்டுக் கேட்டு, எந்தக் காலத்திலும் பழசை நினைத்து வியக்கக் கூடாது என்று சபதமே செய்திருக்கிறேன்.  ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக அதை நானே செய்ய வேண்டியிருக்கிறது.  என் காலத்தில் கல்வி இலவசமாகக் கிடைத்தது.  என் காலத்தில் இத்தனை நோய்நொடிகள் இல்லை.  என் காலத்தில் தண்ணீர் காசுக்கு விற்கப்படவில்லை.  இப்படியே ரெண்டு மூணு பக்கத்துக்கு எழுதிக் கொண்டு போகலாம்.  அதேபோல் எண்பதுகளில் ஒரு எழுத்தாளர் என்றால் அறிவுத்துறையில் விவாதிக்கக் கூடியவராக இருந்தார்.  கம்யூ, சார்த்தர் மட்டும் அல்ல; தெரிதா, ஃபூக்கோ, ரொலான் பார்த், லியோத்தார், ஹெலன் சிஸ்யு போன்றவர்களின் புத்தகங்களைப் படித்து அவர்களையெல்லாம் தமிழில் விவாதிக்கக் கூடிய எழுத்தாளர்கள் இருந்தார்கள்.  கல்லூரிப் பேராசிரியர்களும் அப்படிப்பட்ட அறிஞர்களாக இருந்தார்கள்.  குறிப்பாக திருச்சி செயிண்ட் ஜோஸஃப் கல்லூரி, பாளையங்கோட்டை செயிண்ட் ஸேவியர் கல்லூரி, சென்னை லயோலா என்று சொல்லலாம்.  திருச்சி செயிண்ட் ஜோஸஃப் கல்லூரியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த எம்.டி. முத்துக்குமாரசாமி அப்போது நடத்திக் கொண்டிருந்த பத்திரிகையில் ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதிகளைப் பற்றிய விவாதங்கள் நடந்தன.  பாளையங்கோட்டையிலிருந்து மேலும் என்று ஒரு பத்திரிகை வந்தது.  ஸோர்போன் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையைப் போல் இருந்தது அது.  தமிழவன், நாகார்ச்சுனன், எம்.டி. முத்துக்குமாரசாமி போன்றவர்கள் இவ்விவாதங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தார்கள்.  சுந்தர ராமசாமி, ஞானி போன்ற பெருந்தலைகள் இவ்விவாதங்களை உன்னிப்பாகக் கவனித்தனர்.  நாகர்கோவிலில் சு.ரா.வை சந்தித்தபோது என்னிடம் “நீங்கள் வ்ளதிமீர் நபக்கோவ் பள்ளியைச் சேர்ந்தவர் அல்லவா?” என்று கேட்டார்.  அந்தக் கேள்வியை என்னால் எப்போதும் மறக்க முடியாது.  சு.ரா. மட்டும் அல்ல; அந்தத் தலைமுறையே அப்படித்தான் இருந்தது.  ஆனால் சமீபத்தில் நான் ஜெயமோகனைப் பற்றி ஏதோ எழுதியிருந்தேன்.  உடனே என் நண்பர் சாமிநாதன் ”சாருவுக்கு ஜெயமோகன் பப்பு, ஸோரோ, ச்சிண்ட்டூ மாதிரி ஆகி விட்டார்” என்று எழுதினார்.  எப்போதும் எல்லோரையும் திட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.  பாராட்டினால் போச்சு.  இது ஒரு மனநோய் அல்லவா?  சமீபத்தில் சமஸைப் பாராட்டி எழுதினேன்.  உடனே ஒரு ஆள் முகநூலில் பரஸ்பர ஆதாயத் திட்டம் என்று எழுதினார்.  முற்றிய மனநோய் அன்றி வேறு என்ன இது?  எனக்கு சமஸால் என்ன ஆதாயம் இருக்க முடியும்?  அவருக்கு என்னால் ஆதாயம் இருக்க முடியும்?  இந்த லூசுக் கூமுட்டைகளுக்கு என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லை.  ஆதாயத்தைப் பார்த்து வாழ்ந்திருந்தால் நான் பாபா படத்துக்கே வசனம் எழுதி லௌகீகச் சிக்கலிலிருந்து மீண்டிருப்பேனே?

இப்போது நான் எழுத வந்தது என்னவென்றால், எண்பதுகளில் தொண்ணூறுகளில் இருந்தது போன்ற அறிவார்ந்த சூழல் தமிழில் இப்போது இல்லை.  முன்னை விட எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள்.  புத்தகங்கள் நிறைய எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கின்றன.  பலரும் நன்றாகவே எழுதுகிறார்கள்.  ஆனால் அறிவுத் தளத்தில் பெரிய வெற்றிடம் உள்ளது.  ஹெரால்ட் ப்ளூம் என்று ஒரு விமர்சகர்.  அவரை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றி ஸில்வியாவும் நானும் எண்பதுகளில் கதை எழுதியிருக்கிறோம்.  (ஸில்வியா என்பது எம்.டி.எம்.மின் அப்போதைய பெயர்).  இப்போது ப்ளூம் பற்றியெல்லாம் யாரிடம் பேச?  விவாதிக்க?

இந்த நிலையில் டாக்டர் ஸ்ரீராம் ஜெயமோகன் எழுதியிருந்த ஒரு கடிதத்தை என் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.  திடீரென்று எனக்கு எண்பதுகளுக்குப் போய் விட்டது போல் இருந்தது.  அந்தக் கடிதங்களின் இணைப்பு இதோ:

http://www.jeyamohan.in/97316#.WPheUn00jIX

மேற்கண்ட கடிதத்தின் தொடர்ச்சியாக செவ்வியலும் இந்திய இலக்கியமும் என்ற கடிதம்:

http://www.jeyamohan.in/97458#.WPhqen00jIV

இந்த விவாதத்தைத் தொடர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  மிக முக்கியமான இந்தக் கடிதக் கட்டுரைகள் பற்றிப் பேசவும் விவாதிக்கவும் இன்று அதிகம் பேர் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது.  கட்டுரையில் ஜெ. குறிப்பிட்டுள்ளது போல் பின்நவீனத்துவத் தத்துவவாதிகள் யாருமே செவ்வியல் இலக்கியத்தை நிராகரித்தது இல்லை.  பின்நவீனத்துவத்தில் subaltern போக்கு இருந்தது.  அவர்களே செவ்வியல் இலக்கியத்தை விமர்சித்தார்கள்.  அந்தப் பிரிவிலிருந்துதான் நானும் புதுமைப்பித்தனை விமர்சித்தேன்.  நிராகரித்தேன் என்றும் சொல்லலாம்.  ஆனால் பெண்ணடிமைத்தனத்தைப் பேசும் குறள்களை எழுதிய திருவள்ளுவரை நிராகரிக்க முடியுமா, சமணர்களை வசைபாடும் மாணிக்கவாசகரை நிராகரிக்க முடியுமா என்ற கேள்விகள் எனக்குப் பிற்பாடுதான் கிடைத்தன.  என் சிந்தனைப் போக்கின் முதிர்ச்சி என்றே அதைக் கொள்கிறேன்.  மற்றபடி, கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ரா., கு.ப.ரா. போன்ற முன்னோடிகளை நான் எந்தக் காலத்திலும் நிராகரித்தது இல்லை.

மீண்டும் சொல்கிறேன், ஃப்ரெஞ்ச் அமைப்பியல்வாதிகள், பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் யாருமே செவ்வியல் இலக்கியத்தை நிராகரிப்பவர்கள் இல்லை.  விமர்சித்தார்கள். அவ்வளவுதான்.

ஜெயமோகனின் குறிப்பிட்ட கட்டுரைகள் பற்றி நீண்ட விவாதங்கள் தேவை.  ஆய்வுபூர்வமாக எழுதப்பட வேண்டும்.  ஆசை இருக்கிறது.  நான் வேறொரு முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  பொதுவாக தமிழில் விவாதம் என்றால் சண்டை என்றே ஆகி விட்டது.  ஜெயமோகனின் கட்டுரை பற்றி என் நண்பர் ஒருவரிடம் பேசிய போது ஜெயமோகனுக்கு என்ன தெரியும் என்றார்.  அவசரமாக வேலை இருக்கிறது; பிறகு பேசுகிறேன் என்று சொல்லிப் பின்வாங்கி விட்டேன்.  இதேபோல் தான் வேறொரு நண்பர் ஜெயமோகனிடம் சாருவுக்கு என்ன தெரியும் என்று சொல்லக் கூடும்.  தமிழில் அறிவுத்தளத்தில் விவாதங்களே நடக்காமல் வெற்றிடம் ஏற்பட்டதற்கு இது போன்ற மனோபாவங்களே காரணம்.  எதிரே இருப்பவன் முட்டாள் என்ற எண்ணம் மெத்தப் படித்தவர்களுக்கு வரக் காரணம் என்ன என்ற கேள்வி எனக்குள் ரொம்ப காலமாகக் குடைந்து கொண்டிருக்கிறது.  உள்ளுக்குள் அடங்க வேண்டும்.  அதற்கு ஒரு தரிசனம் வேண்டும்.  அது இல்லாவிட்டால் வெற்று அகந்தையே மிஞ்சும்.  அதனால் யாருக்குமே பயனில்லை.

ஜெயமோகனின் கட்டுரைகளுக்கு எம்.டி.எம். போன்ற யாரேனும் பதில் எழுதினால் படிக்கக் காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு 1:  இதையெல்லாம் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்தான் செய்ய வேண்டும்.  அவர்கள் வேலைதான் இது.  ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.