22.4.2017
”அநிருத்தன் வாசுதேவனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கிறது. அதேபோல் உங்களுக்கும் கிடைக்கும்; உற்சாகமாக சீக்கிரம் பண்ணுங்கள்” என்று என் மொழிபெயர்ப்பாளர் நண்பரிடம் நான் சொல்லியிருக்கக் கூடாதுதான். என் வாயால் கெட்டேன்.
அப்புறம் நடந்த உரையாடல்:
“அநிருத்தன் சாதாரண ஆள் இல்லை. சல்மா மற்றும் சுகிர்த ராணியின் கவிதைகளுக்கு நடன வடிவம் கொடுத்து அரங்கேற்றியவர். ’மாவு’ போராளி. எல்.ஜி.பி.டி. போராளி. சாகித்ய அகாதமி என்ன, புக்கரே கொடுப்பார்கள். என்னால் இப்போது நடனம் பயில்வது சாத்தியம் இல்லை. இலக்கிய அங்கீகாரத்துக்காக gay-ஆக மாறலாம். ஆனால் குடும்பம் என்னைக் கை கழுவி விடும். எனவே பரிசு வேண்டுமானால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நீங்கள் gay-ஆக மாறி விடுங்கள். ஏற்கனவே நீங்கள் bi-sexual என்று அறிவித்தவர் அல்லவா? இப்போது அதையே கொஞ்சம் modify பண்ணி ‘gay’ என்று சொல்லி விடுங்கள்…”
“பழைய கதையெல்லாம் வேண்டாம். அப்போது என்னை யாருக்கும் தெரியாது. சொன்னேன். இப்போது சொன்னால் டின் கட்டி விடுவார்கள். மேலும், அறுபத்து நாலு வயதில் gay என்று சொன்னால் அது அறமும் ஆகாது.”
என் மொழிபெயர்ப்பாளர் பிரபல ஆங்கிலப் பத்திரிகையாளர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரி அல்ல. இந்தியாவில் – ஏன், உலக அளவிலேயே – புத்திஜீவி, எழுத்தாளர், கலைஞர் என்றால் இடதுசாரியாக இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால் என் மொழிபெயர்ப்பாளரோ இடதுசாரிகளால் வலதுசாரி என்றும், வலதுசாரிகளால் துரோகி என்றும் தூற்றப்படுபவர். சரியாக மோடி புராணம் பாடாததால் துரோகிப் பட்டம் கிடைத்தது தனிக்கதை. நானோ தமிழ்ச் சூழலில் எல்லோராலும் வெறுக்கப்படுபவன். அல்லது, உதாசீனப்படுத்தப்படுபவன். உதாரணமாக, பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற புத்தகத்தை எழுதினேன். இரண்டு ஆண்டு காலம் வேறு எந்த வேலையும் செய்யாமல் க.நா.சு., சி.சு. செல்லப்பா, எம்.வி. வெங்கட்ராம், தி.ஜானகிராமன், கு.ப.ரா., சார்வாகன், அசோகமித்திரன், தஞ்சை ப்ரகாஷ் என்று எல்லோரைப் பற்றியும் மிக விரிவாக எழுதினேன். அந்த நூலுக்கு ஒரு மதிப்புரை கூட இன்னும் வந்தபாடில்லை. என் எழுத்தைத்தான் புறக்கணிக்கிறீர்கள்; வெறுக்கிறீர்கள். அதை நான் புரிந்து கொள்கிறேன். அப்படி நீங்கள் செய்வதுதான் எனக்குக் கொடுக்கும் அங்கீகாரம் என்று நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் தமிழின் முன்னோடிகளைப் பற்றி எழுதியதையும் எப்படி நீங்கள் புறக்கணிக்கலாம்?
இந்தச் சூழ்நிலையில்தான் ஆங்கிலத்துக்குப் போனேன். ஆனால் அங்கே அதற்காக gay-ஆக மாற வேண்டும், ’மாவு’ போராளியாக வேண்டும் என பயமுறுத்துகிறார்கள். இருந்தாலும் ஒரு கர்மயோகியைப் போல் நம்முடைய எழுத்து சர்வதேசத் தரத்தில் இருந்தால் அங்கீகாரம் தேடி வரும் என்றேன் நண்பரிடம்.
”ஆமாம், அது மாவு போராளி? எங்கள் ஊரில் மாவு என்றால் வேறு பொருள்” என்று கேட்டதற்கு நண்பர் சொன்னார், மனித உரிமையின் சுருக்கம் என்று. உடனே அவர் கேட்டார், அது என்ன உங்கள் ஊரில் வேறு பொருள்?
சொன்னால் பெரிய மதக் கலவரமே வரும் என்று தயங்கினேன். வற்புறுத்திக் கேட்டார். குன்ஸாகச் சொன்னேன். அதாவது, circumcise செய்யாவிட்டால் முனைப் பகுதியில் மாவு போல் சேரும். அதனால் மாவு.
மொழிபெயர்ப்பாளர் என்றதும் இரண்டு விஷயங்கள் ஞாபகம் வருகிறது. ஒரு பெண் மொழிபெயர்ப்பாளர் என்னிடம் ஒன்றரை லட்சம் பணம் வாங்கிக் கொண்டு மொழிபெயர்த்தார். எப்படி? கையடிசுச்சுக் கையடிச்சே செத்துருவேன் போல்ருக்கே என்று கட்டைப் பிரம்மச்சாரி கதாபாத்திரன் ஒன்று என் நாவலில் கதறுகிறது. மொழிபெயர்ப்பாளர் hand clapping என்று மொழிபெயர்த்தார். கையடித்தல் என்பது கர மைதுனம் என்று அவருக்குப் புரியவில்லை. என்னையும் கேட்கவில்லை. இதைப் பற்றிச் சுட்டிக் காட்டிய போது என் ஆங்கிலத்தையா குறை சொன்னாய், நான் ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கிலம் படித்தவள் என்று என்னைப் பயங்கரமாக சாபம் விட்டார். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அந்தச் சமயத்தில்தான் ஒரு பல்கலைக்கழக வேந்தர் ஏதோ பண மோசடியில் ஜெயிலுக்குப் போனார். அதைச் சுட்டிக் காட்டி, ”அவர் கல்லூரியில் நான் பணியாற்றியபோது ஒரு மாதம் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார். அதன் பலன் தான் இப்போது அனுபவிக்கிறார்” என்றார். இந்த விஷயத்தை அவர் ரொம்ப முன்னாலேயே என்னிடம் சொல்லியிருந்தார். அதை இப்போது மீண்டும் சுட்டிக் காட்டினார். சரி மேடம், நான் தான் பணம் முழுவதையும் கொடுத்து விட்டேனே.
பணம் கொடுத்தால் ஆயிற்றா? என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். என் வயிறு எரிகிறது. என் ஆங்கிலத்தைக் குறை சொல்லி விட்டீர்கள். என் நண்பர் என்பதால் சாபம் விடவில்லை.
இதேபோல் இன்னொரு ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பாளரும் ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, படு கேவலமாக மொழிபெயர்த்துக் கொடுத்ததால் அதைக் குப்பையில் போட்ட போது என்னை சபித்தார்.
சமீபத்தில் என் வழக்கப்படி, ஒரு ஜோதிடரைச் சந்தித்தேன். என் கடந்த காலத்தைப் பிட்டுப் பிட்டு வைத்தார். அதுதான் எனக்கே தெரியுமே? அதை அவர் சொல்வதற்கு நாம் ஏன் கட்டணம் கொடுக்க வேண்டும்? நடப்பு மேட்டருக்கு வருவோம். ஏன் எனக்கு எல்லாமே கடைசி வரை நன்றாகப் போய், பலன் கைக்கு எட்டும் போது தவறி விடுகிறது?
இரண்டு பெண்களின் சாபம் என்றார் சோதிடர்.
பெருமாளிடம் ஒரு பிரார்த்தனை: இப்படியே நீர் செய்து கொண்டிருந்தால் அப்புறம் நான் நாஞ்சில் சம்பத் அளவுக்குப் போய் விடுவேன். அப்புறம் என் குழந்தை இப்படிப் பாழாய்ப் போய் விட்டதே என்று என் அம்மா ரங்கநாயகியிடம் புலம்பாதீரும், சொல்லி விட்டேன்.