பிரார்த்தனை

அவந்திகா மும்பையில் இருக்கிறாள். காயத்ரியும் அவர் கணவர் ராமசுப்ரமணியனும் மும்பையில். ஸ்ரீராமும் ஊருக்குப் போய் விட்டார். ஸ்ரீராம் எந்த ஊர் என்று இன்னமும் மனசில் தங்க மாட்டேன் என்கிறது. ஆக, கைத்துணைக்கு யாருமே வீட்டில் இல்லை. ராம்ஜியின் வீடு திருவான்மியூரில் இருக்கிறது. அவரை அலைக்கழிக்க முடியாது. ஏன் இத்தனை யோசனை என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் திடீரென்று ஆஞ்ஜைனா. ஏதாவது அவசரம் என்றால், மருத்துவமனைக்கு எப்படிப் போவது என்று யோசனையாய் இருக்கிறது.

ச்சிண்ட்டுவை பக்கத்து வீட்டுப் பூனை கடித்து விட்டது. ச்சிண்ட்டுவின் உயிர் ஓலம் வீட்டை அதிரச் செய்தது. விழுந்தடித்து ஓடி பக்கத்து வீட்டு ரவுடிப் பூனையை விரட்டினேன். ச்சிண்ட்டுவின் உடம்பெல்லாம் ஒரே காயம். சுமார் இரண்டு வாரமாக இதே ரகளை. பக்கத்து வீட்டுப் பூனை ச்சிண்ட்டுவைக் கடித்தே கொன்று விடும் போலிருக்கிறது. அந்த ரவுடிப் பூனை என் கையில் கிடைத்தால் கொன்று விடுவேன். இப்படி எழுத கை நடுங்குகிறது. மகாத்மாவைப் படித்துக் கொண்டிருக்கும் நானா இப்படி? ஆனால் ச்சிண்ட்டு பக்கத்து வீட்டுப் பூனையிடம் கடிபட்டே செத்து விடும் போலிருக்கிறது. என் வீடு அதற்கு சொர்க்கம். ஆனால் சொர்க்கம் என்பதற்காக சிறைபோல் இங்கேயே அடைந்து கிடக்க முடியுமா?

ச்சிண்ட்டுவின் உடம்பில் அரிவாளால் வெட்டியது போல் குறுக்கு நெடுக்காக பற்களாலும் நகங்களாலும் கடித்த கோடுகளைப் பார்த்து நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தேன். கோடுகளில் ரத்தம் வழிந்தது. அதைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. ஏசியைப் போட்டு, மின்விசிறியையும் தட்டி விட்டு அப்படியே கண்களை மூடியபடி பத்து நிமிடம் அமர்ந்திருதேன். வலி குறைந்தது.