ஞாவ்

ச்சிண்ட்டு படும் பாட்டை நினைத்து ரத்தக் கண்ணீர் வருகிறது. அந்தச் சின்ன உடம்பு பூராவும் சுமார் 200 காயங்கள் இருக்கும். வெட்டு வெட்டு வெட்டு. கத்தியால் கீறியது போல். கடித்துக் கிழித்தது போல். சில இடங்களில் முடியே போய் விட்டது. ச்சிண்ட்டுவுக்கு சண்டையே போடத் தெரியாது போல. பக்கத்து வீட்டுப் பூனை இதைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று சபதமே செய்திருக்கிறது போல. எவ்வளவுதான் கல்லால் அடித்துப் பார்த்தும் அதன் மீது கல் விழுவதில்லை. அந்த ரவுடிப் பூனை தப்பி விடுகிறது. ச்சிண்டுவின் மீது ஏன் அதற்கு இந்தக் கொலை வெறி என்று புரியவில்லை. அந்த ரவுடிப் பூனைக்குப் பயந்து கொண்டு ச்சிண்டு மாடியிலேயே படுத்துக் கிடந்தது. பிறகு அதற்கும் மலஜலம் கழிக்க வேண்டும் இல்லையா? அதற்காக இறங்கிக் கொல்லைப் பக்கம் வந்தது. அங்கே தான் துணி துவைக்கும் கல் இருக்கிறது. அங்கே பதுங்கியிருந்து தாக்கியது ரவுடிப் பூனை. ச்சிண்ட்டுவின் அலறல் கேட்டு கையில் கம்புடன் ஓடி வந்தேன். காலை ஆறு மணி அப்போது. பக்கத்து வீட்டுக்கு ஓடி விட்டது. அங்கேயும் போனேன். அடித்தே கொன்று விடலாம் என்று. ச்சிண்டுவின் உடம்பில் மேலும் ரத்தம். என்னைப் பார்த்ததும் எதிர் ஃப்ளாட்டுக்கு ஓடியது ரவுடிப் பூனை. ஓடும் போது ஒரு பெரிய கல்லை எடுத்துக் குறி பார்த்து அதன் மீது எறிந்தேன். ஒரு இஞ்ச் பிசகி விட்டது. பட்டிருந்தால் குடல் சிதறியிருக்கும். ஓடிப் போய் எதிர் ஃப்ளாட்டில் குந்திக் கொண்டு என்னையே வெறியுடன் முறைத்தது. அங்கே நான் கல் எறிய முடியாது. வீடுகளுக்குள் கல் போய் விடும். வீட்டுக்குத் திரும்பி வந்து கம்பை எடுத்துக் கொண்டு எதிர் ஃப்ளாட்ஸுக்குப் போனேன். கம்பைப் பார்த்து ஓடி விட்டது. பாவமாக இருந்தது. ஆனால் பாவம் பார்த்தால் ச்சிண்ட்டு செத்து விடும். உடம்பு பூராவும் தோல் பிய்ந்து பிய்ந்து கிடக்கிறது. சண்டை போட்டுப் போட்டு, கத்திக் கத்திக் கத்தி அதன் குரலே மாறி விட்டது. ம்யாவ் ம்யாவ் என்று கத்துவதற்கு பதில் இப்போதெல்லாம் ஞாவ் ஞாவ் என்று கட்டைக் குரலில் கத்துகிறது. டீச்சர்களெல்லாம் மாணாக்கர்களிடம் கத்திக் கத்தி கட்டைக் குரலுக்கு மாறுவார்கள் இல்லையா, அது போல் மாறி விட்டது ச்சிண்ட்டுவின் குரல்.