என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தி

இதுவரையிலான என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தியாக இதைக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  இதை எழுதியவர் கார்ல் மார்க்ஸ்.

நேற்றைய இரவு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் இறந்துபோயிருக்கிரார்கள். ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களில் எட்டு வயது சிறுமியும் உண்டு என்று ‘கண்ணியமான’ பத்திரிகைகள் அழுத்தி உச்சரிக்கின்றன. ‘நான் உடைந்து போய்விட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்த இசை நிகழ்ச்சியின் பாடகர் Grande. உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நமது மோடியும் அதில் உண்டு.

இந்தத் துயர சம்பவம் எவ்வளவு வேகமாக மறக்கப்படுகிறதோ அதன் வேகத்துடன் மான்செஸ்டர் மக்களின் மன உறுதி ஒப்பீடு செய்யப்பட்டு புகழாரம் சூட்டப்படும். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் சொல்கின்றன.

தெரிவிக்கப்படும் உலகத்தலைவர்களின் கண்டனத்தில் ‘அப்பாவி மக்களின் மீதான தாக்குதல்’ என்பது குறிப்பிடப்பட்டு ‘பயங்கரவாதிகளின் கோழைத்தனம்’ கண்டிக்கப்படுகிறது. இந்த இரண்டு விஷயங்களை மட்டும் எடுத்துக்கொண்டு இந்த சம்பவத்தைப் பற்றி ஆராய்வோம். அப்பாவி மக்கள் கொல்லப்படாத அரசு சார்ந்த தாக்குதல்கள் எதுவும் இந்த உலகத்தில் உண்டா? ஆப்கன் ஊடுருவல் முதல் இப்போதைய சிரியா வரை அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்படாத ஒரு தாக்குதல் சாத்தியமா?

ஆனால், ‘சொந்த மக்களைக் காப்பதாக’ சொல்லிக்கொண்டு ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்திய எல்லா போர்களிலும் கொல்லப்படுபவர்கள் அப்பாவி மக்கள்தான். கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி உள்ளிட்ட முன்னேறிய மேற்குலக மற்றும் அமெரிக்க நாடுகள் ஈடுபட்ட ஆதிக்கப் போர்களில் மாத்திரம் கோடிக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கொல்லப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் இந்த மான்செஸ்டர் தாக்குதலையும், அதில் கொல்லப்பட்டிருக்கிற குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவிப் பொதுமக்களையும் ‘ஒரு எதிர்வினைத் தாக்குதலால் உயிரிழந்தவர்கள்’ என்கிற அளவில் புரிந்துகொண்டு சகித்துக்கொள்ளவேண்டுமா… என்றால் இல்லவே இல்லை! ஆனால் எந்த ஒரு போரிலும் கொல்லப்படுபவர்கள் அப்பாவிகள் எனது எவ்வளவு உண்மையோ அதேபோல சிவில் சமூகம் அப்பாவியாக இருப்பதும் இத்தகைய கொலைகளுக்கு ஒரு காரணம் என்கிற எதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். எந்த ஒரு அப்பாவித்தனமும் அதன் ஒரு கட்டத்தில் ரத்தத்தையே கோருகிறது.

இந்த தாக்குதல் நடந்த உடனேயே, ‘ஒரே அணுகுண்டில்’ மொத்தத் தீவிரவாதிகளையும் அழித்துவிடவேண்டும் என்று சொந்த குண்டு மேலேற கீ போர்டைக் காயடிக்கும் தேசபக்தர்களின் அப்பாவித்தனம் இதற்கு ஒரு உதாரணம். இதில் வலது, இடது, நடுசெண்டர் என எல்லா கீ போர்டும் உண்டு என்பதால் எந்த ஒன்றில் பொருத்திக்கொண்டு அறச்சீற்றமடைந்தாலும் பதில் ஒன்றுதான்.

நிகழும் ஸ்தூலமான வன்முறைக்குப் பின்னால், கொஞ்சம் கொஞ்சமாக குவிக்கப்படுகிற ‘கருத்து வன்முறைக்கு’ பெரும் பங்கு இருக்கிறது என்கிற புரிதலில் இருந்துதான் ‘நமது கோழைத்தனத்தை’ ஆராயவேண்டும். அத்தகைய கோழைத்தனம் எவ்வாறு ஒரு கட்டத்தில் ‘பயங்கரவாதிகளின் கோழைத்தனமாக’ திரள்கிறது என்பதை நாம் அப்போதுதான் புரிந்துகொள்ளமுடியும்.

நாம் நம்பும் ஒன்று, நாம் வழிபடும் ஒன்று, நாம் கைகொண்டிருக்கும் ஒன்று என ‘நாம்’ ‘நம்முடைய’ என்பதைக் குவி மையமாக வைத்திருக்கும் ஒவ்வொரு ‘சார்பு கருத்துநிலையும்’ அதனதன் அளவில் வன்முறையைப் பொதிந்துவைத்திருக்கும் கருத்து நிலையே. சிந்தும் ரத்தத்தின் ஒவ்வொரு துளிக்கும் வண்ணம் சேர்ப்பது நமது ‘கருத்து சாய்வு’ தான்.

இந்த மான்செஸ்டர் தாக்குதலில் நாம் கொல்லப்பட்ட அப்பாவிகளின் பக்கம் நிற்பதும் கொன்ற தீவிரவாதிகளின் பெருமிதத்தின் பின் நிற்பதும் அடிப்படையில் ஒன்றுதான். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக கொலை மனநிலைகள் மாறிப்போயிருக்கின்றன. அதை சாத்தியப்படுத்தியதில் நமது ‘கருத்து மூர்க்கத்துக்கு’ பங்குண்டு.

நான் இஸ்லாமியன், நான் ஹிந்து, நான் கிறிஸ்தவன் என்கிற பெருமித அறைகூவல்கள் எல்லாவற்றின் திரண்ட வடிவம்தான் குண்டு வெடிப்பாக ஒரு கட்டத்தில் தன்னை வெளிப்படுத்துகிறது. இந்த இடம்தான் தனிமனிதர்கள், குறிப்பாக, கொல்லப்படும் அப்பாவிகள் கவனம் செலுத்தவேண்டிய இடம். மிக முக்கியமாக ‘அடையாளம் சார்ந்த பெருமிதங்களை முன்னெடுக்கும்’ தனி மனிதர்கள்.

ஒரு தனித்த அடையாளம் தன்னளவில் சுயத்தைத் தீவிரமாக தக்கவைத்துக்கொள்ள முயல்கிறபோது அதன் இயல்பிலேயே மற்றதை ஒடுக்க எத்தனிக்கும். அதே சமயம் எந்த ஒரு அடையாளமும் அது ஒரு அடையாளமாக நிலைத்திருக்க வேண்டுமெனில் தனது மூர்க்கத்தைக் கைவிடவும் முடியாது.

இங்கு ஒடுக்குபவன் X ஒடுக்கப்படுபவன் என்று நாம் நம்மை யாருடன் பொருத்திக்கொண்டாலும் தன்னியல்பாக நம்மை ஒரு அடையாளத்துடன்தான் பொருத்திக்கொண்டுதான் விசனப்படுகிறோம். இந்த அடையாள நீக்கம் என்பது ஒரு அரசியல் செயல்பாடு. ஆனால் அதுவோ அடிப்படை மானுட அச்சத்தின் மீது தன்னை கவித்துக்கொண்டிருக்கிறது. இதை ஒரு உரையாடலாக வடித்தெடுக்கக் கூட நமது அச்சம் நம்மை அனுமதிப்பதில்லை. எந்த ஒரு அடையாளப் பெருமிதத்துக்குப் பின்னால் இருப்பதும் கோழைத்தனமே. விடுதலைக்கு எதிரானதே அது.

இறந்துபோன ஒரு மான்செஸ்டர் மனிதனுக்காகக் கண்ணீர் விடும் ஒரு அப்பாவி இஸ்லாமியனின் ‘இஸ்லாமிய அடையாளம்’ என்பது என்ன? ஏனெனில் இந்தக் கொலையை நிகழ்த்தும் ஒருவன் தன்னை இஸ்லாமியனாக முன்னிறுத்தி அதைச் செய்கிறபோது இந்த கண்ணீர் விடும் இஸ்லாமியன் அவனுக்கு முழுக்கவும் எதிரானவன் ஆகிவிடுவானா? ‘இல்லை, நான் அவனை இஸ்லாத்துக்கு வெளியில் வைக்கிறேன்’ என்று அப்பாவி இஸ்லாமியன் பிரகடனப்படுத்துகிறபோது அவன் இஸ்லாத்தின் ஒரு தரப்பு மட்டும்தான் அல்லவா?

ஆக, ஒரு சாத்வீக இஸ்லாமியனுக்கும் கொலைத்தொழிலில் ஈடுபடும் இஸ்லாமியனுக்கும் இடையில் ‘இஸ்லாமியன்’ எனும் பொது அடையாளம் செயல்படும் உத்வேகத்தின் பெறுமதி என்ன? ஒரு விதத்தில் இஸ்லாமியன் வெர்சஸ் மற்றவன் எனும் கருத்தில் அது உடைப்பை ஏற்படுத்துகிறது. அடையாளங்களுக்குள் நிகழும் நேர்மறை முரண் அது. அதே சமயம் தனது அடையாளத்தை முழுக்கவும் கைவிடாத ஒரு சாத்வீக இஸ்லாமியனையும் நிகழும் கொலைகளுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிர்ப்பந்தத்தை அது ஏற்படுத்துகிறது. அவனையும் நிகழும் வன்முறையுடன் பிணைத்துவிடுகிறது.

நமது இந்தியச் சூழலில் சிறுபான்மையை ஒடுக்கும் ஹிந்துவுக்கும் இலங்கை போன்ற சூழலில் ஒரு சிங்களனுக்கும் இது பொருந்தும். ஆக, நிகழும் வன்முறைகளுக்கு நாம் பிரதிநிதுத்துவப்படுத்தும் அடையாளத்தின் வழியாக நமது பங்கை உறுதி செய்துவிடுகிறோம். இந்த அரூவமான பங்கேற்பிலிருந்து நாம் எவ்வாறு வெளியேறப்போகிறோம், சமத்துவத்தை எவ்வாறு உறுதிசெய்துகொள்ளப்போகிறோம் என்பதுதான் நவீன சமூகம் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்.

இதை நமது கலைகளில் இலக்கியங்களில் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதுதான் இங்கு நிகழ்த்தப்படவேண்டிய உரையாடல். அடையாளங்கள் அதிகாரத்தின் கூறாக இங்கு நிலைத்துப் போயிருக்கிறது. அடையாள நெகிழ்வு என்பது ஒரு வகையில் அதிகார நீக்கம்தான்.

ஆக, அடையாளங்கள் மேலும் மேலும் நெகிழ்வதை நோக்கி நாம் நகரவேண்டும். அவை ஒன்றை ஒன்று மிகத் தீவிரமாக செரித்துக்கொள்ளவதை நாம் ஊக்குவிக்கவேண்டும். அதன் தூய்மையில் உடைப்பு ஏற்படுவதை அனுமதிக்கவேண்டும். அதைக் கொஞ்சம் கைவிடவேண்டும்.

ஆனால் நாமோ அடையாள நீக்கம் என்பதை பதட்டத்துடன் அணுகுகிறோம். அதனால் வேகமாக சுற்றும் வன்முறைச் சக்கரத்தின் ஒரு சட்டமாக மாறி நிரந்தரமாக நிலைத்துவிடுகிறோம். நமது பௌதிக வாழ்வு முதல் நாம் உருவாக்கி நிறுத்தியிருக்கிற கலைகள் தத்துவங்கள் எல்லாவற்றிலும் இந்த வன்முறையின் சுவடுகள் புனிதத்தின் பெயரால், தனித்துவத்தின் பெயரால் படிந்து கிடக்கின்றன. அதை உரித்தெடுப்பதில் இருக்கிறது குருதியை நிறுத்துவதன் சூட்சுமம்.

கார்ல் மார்க்ஸ்