ஒரு கிடாயின் கருணை மனு

அராத்து சிபாரிசு செய்ததால் ஒரு கிடாயின் கருணை மனு பார்த்தேன். படம் துளிக்கூட கவரவில்லை. வசனம் அபாரமாக இருந்தது என்றாலும் பல காட்சிகள் சலிப்பூட்டக் கூடியதாக இருந்தன. திரைக்கதையை இன்னும் இறுக்கிக் கட்டியிருக்கலாமோ? கதையை இன்னும் சுவாரசியமாகச் சொல்லியிருக்கலாம். ஹீரோ, ஹீரோயின், காமெடியன், டூயட், ஃபைட் என்ற ஃபார்முலா இல்லாததே ஒரு படத்தை நல்ல படமாக ஆக்கி விடாது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒழிவு திவசத்த களி படத்தில் என்ன கதை இருக்கிறது? அஞ்சு பேர் தண்ணியடித்துக் கொண்டே இருப்பார்கள். இடைவேளைக்குப் பிறகுதான் ஏதோ ஒரு ஆக்‌ஷன் வரும். ஆனால் படம் முழுவதும் நமக்கு ஒரு நிமிஷம் கூட சலிப்பு வராது. இத்தனைக்கும் நமக்குப் புரியாத மொழி. சப்டைட்டிலைப் பார்த்துப் படித்துத்தான் புரிந்து கொள்ள வேண்டும். மராத்தி படமான கோர்ட் இன்னொரு உதாரணம். எனவே, சுரேஷ் சங்கையா அடுத்த முயற்சியில் நல்ல படத்தைத் தர வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன்.
 
மாற்று சினிமா முயற்சியில் சுவாரசியமும் முக்கியம். அப்போதுதான் பார்வையாளர்களைத் திரையரங்குக்கு இழுக்க முடியும். நான் இங்கே சுவாரசியம் என்பதை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, Bela Tarr இயக்கிய Turin Horse என்ற படத்தில் முதல் ஒரு முக்கால் மணி நேரத்துக்கு ஒரு கிழவன் ஒரு குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருப்பான். ஓட்டிக் கொண்டே இருப்பான். சிங்கிள் ஷாட் என்று நினைக்கிறேன். துளிக்கூட சலிப்பாக இருக்காது. ஏன் என்று யோசித்தால், விடை கண்டு பிடித்து விட்டால் தமிழில் நல்ல சினிமா உருவாகும்.